Maithili language Children Story Diptipwa Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை டிப்டிப்வா



ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கிழவி வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரு குதிரை இருந்தது. அதை தன் சொந்த பிள்ளை போல் அன்பாக வளர்த்து வந்தாள். காட்டின் செழிப்பான புற்களைத் தின்று குதிரை நல்ல வாட்டசாட்டமாக வளர்ந்தது. கிழவி இரவு நேரத்தில்  குதிரையை தன் குடிசைக்கு அருகில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டு, அதன் கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்து விட்டுத் தூங்கச் செல்வாள். காட்டில் கிழவிக்கு குதிரை நல்ல துணையாக இருந்தது.

ஒரு நாள் ஒரு திருடன் இந்தக் குதிரையைப் பார்த்துவிட்டான். அதை திருட முடிவு செய்தான். அதே சமயம் காட்டில் வசித்த புலி ஒன்றும் இந்த குதிரையை அடித்துத் தின்ன வேண்டும் என்று முடிவு செய்தது. புலிக்கும், திருடனுக்கும் அறிமுகமும் கிடையாது. ஒருவரது நோக்கம் மற்றவருக்குத் தெரியவும் தெரியாது. 

ஒரு நாள் வானம் கடுமையாக இருண்டது. காட்டுப் பகுதி முழுக்க மேகங்கள் சூழ்ந்தன. கடுமையான இடி, மின்னல், மழை. குதிரை கிழவியின் குடிசைக்கு அருகில் உட்கார்ந்திருந்தது.

இந்த மழை நேரம் தான் சரியான சந்தர்ப்பம் என்று புலியும், திருடனும்  முடிவு செய்தார்கள். தனித் தனியாகத்தான் என்றாலும், இருவருமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குடிசைக்கு அருகில் வந்தார்கள். எதிர் எதிர் திசையில் நின்று  குதிரையைத் தாக்க சந்தர்ப்பம் பார்த்து நின்றார்கள்.

திருடனும், புலியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், கிழவிக்கு ஏதோ ஆபத்து என்று மனதுக்குள் தோன்றியது. நீண்ட காலமாக காட்டில் தனியாக வசிப்பதால் அவளுக்கு இது போன்ற முன்னுணர்வு உண்டு.  கடுமையான வானிலையை, எதிரிகளை சமாளிக்கும் அறிவாற்றலும் உண்டு. கிழவி  வீட்டின் ஒரு புறம் திருடனும், மறுபுறம் புலியும் இருப்பதைப் பார்த்துவிட்டாள். அமைதியாக தனது குதிரையைக் காப்பாற்ற யோசனை செய்தாள். 

திருடன், புலி இருவருமே தமது இரை மேல் கவனமாக இருந்தார்கள். பெரிய மின்னல் ஒன்று வெட்டும் போது, குதிரை மீது பாயலாம் என்றிருந்தார்கள். திடீரென கிழவி, உரத்த குரலில், ‘எனக்கு புலிக்கும் பயமில்லை, திருடனுக்கும் பயமில்லை. டிப்டிப்வாவிற்குத் தான் பயம்,‘ என்றாள்.

புலிக்கும், திருடனுக்கும் இதைக் கேட்டதும் குழப்பம். ‘டிப்டிப்வா என்றால் என்ன? எனக்கு பயப்பட மாட்டாளாம். டிப்டிப்வாவிற்கு பயப்படுவாளாம். அப்படியானால் அந்த டிப்டிப்வா என்பது ஏதாவது கொடிய விலங்காக அல்லது பிசாசாக இருக்க வேண்டும்,‘ என்று இருவருமே நினைத்தார்கள்.  

அப்போது ஒரு மின்னல் வெட்டியது. அந்த வெளிச்சத்தில் குதிரை இருக்கும் இடத்தைக் குறி வைத்து புலி பாய்ந்தது. திருடன் அதே சமயம் குதிரையை நோக்கி சுருக்குக் கயிற்றை வீசினான்.  அந்த நேரம் பார்த்து புலி பாய்ந்த போது, சுருக்கு புலியின் கழுத்தில் விழுந்தது.

தன் மீது சுருக்குக் கயிற்றைப் போட்டு இறுக்குவது அந்த டிப்டிப்வாதான் போல என்று புலி நினைத்தது.  மையிருட்டில் ஒன்றும் தெரியவில்லை.  இருட்டில் தான் கயிற்றைப் போட்டது குதிரை மேல்தான் என்று நினைத்த திருடன், அதன் மேல் ஏறி உட்காருவதாக நினைத்து, புலி மீது ஏறி உட்கார்ந்தான். 

டிப்டிப்வாதான் தன் மேல் ஏறி உட்காரப் பார்க்கிறது என்று நினைத்த புலி திமிறியது. அடுத்த மின்னல் வெட்டியபோது தான் ஒரு புலி மீது அமர்ந்திருப்பதைப் பார்த்த திருடன், சட்டென்று குதித்து ஒரு மரப் பொந்திற்குள் ஒளிந்து கொண்டான்.

புலி காலை விடியும்வரை ஓடிக் கொண்டே இருந்தது. புலி ஓடுவதைப் பார்த்த நரி ஒன்று, ‘ புலி மாமா ! ஏன் பதட்டமா இருக்கீங்க? நீங்க தான் எங்க தலைவர். நீங்களே இப்படி பயந்த மாதிரி ஓடினா, நாங்க என்ன செய்யறது?‘ என்றது.

புலி நின்று, ‘நரியே ! என்னை டிப்டிப்வா தாக்கி விட்டது. என்னவோ, என்னை விட்டுவிட்டு, ஒரு மரப்பொந்தில் போய் உட்கார்ந்து விட்டது. நான் தப்பி ஓடி வருகிறேன்,‘ என்றது.  நரி,‘ மாமா, பயப்படாதீங்க. நாம ரெண்டு பேரும் சேந்து போய் அந்த டிப்டிப்வாவை மரப் பொந்திலிருந்து வெளிய வர வைப்போம். அதை அடிச்சு சாப்பிடுவோம்,‘ என்றது.

இருவரும், திருடன் ஒளிந்திருந்த மரப் பொந்திற்கு அருகே வந்தார்கள். டிப்டிப்வாவை பயமுறுத்த, நரியை அதன் வாலை பொந்திற்குள் விடுமாறு புலி சொன்னது. நரி தன் வாலை பொந்தில் விட்டது. திருடன் அதை இறுக்கப் பிடித்துக் கொண்டான். 

‘உங்க கைய உள்ள விட்டு டிப்டிப்வாவ பயமுறுத்துங்க,‘ என்றது நரி. ஆனால் புலியோ, பயந்து போய் ஓட்டம் பிடித்தது.  திருடன் நரியின் வாலைப் பிடித்து பலமாக இழுக்க வால் அறுந்து அவன் கையோடு வந்தது.

வாலை இழந்த நரி பல நாட்களுக்கு காட்டில் பரிதாபமாகத் திரிந்தது. காலப் போக்கில் காயம் ஆறிவிட்டாலும், காட்டில் மற்ற மிருகங்கள் எல்லாம் அதை கேலி செய்தன. காலம் இப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் நரி அதன் மேல் இரக்கப்பட்டு, காதல் கொண்டு, அதை கல்யாணம் செய்து கொண்டது.

சில மாதங்களில் பெண் நரி ஐந்து குட்டிகளைப் போட்டது.  பெண் நரி எங்களை உன் வீடுக்கு அழைத்துப் போ என்று சொல்ல, நரி மலையில் இருந்த ஒரு குகைக்கு அழைத்துச் சென்று, இதுதான் என் வீடு, இங்கே இருப்போம், என்றது.

பெண் நரி உள்ளே நுழையும் போது அங்கே ஒரு வினோதமான வாசனை அடித்தது. ‘இதென்ன புலி வாசனை அடிக்குது. இதப் போயி உங்க வீடுன்னு சொல்றீங்க?‘ என்றது பெண் நரி.

‘ அன்பே ! இது புலிக் கறியின் வாசனை. நா அப்பப்ப புலிய வேட்டையாடி சாப்பிடறது வழக்கம்,‘ என்றது நரி.

இந்த குகையில் வசிக்க ஆரம்பித்த சில நாட்களில், ஒரு புலி குகையை நோக்கி வருவதை நரி பார்த்தது. முன்பு யாருக்காக நரி தனது வாலை இழந்ததோ, அதே புலி. நரிக்கு பயமாகி விட்டது.  உண்மையில் அந்தப் புலியின் குகையில்தான் நரியின் குடும்பம் இப்போது வசித்து வந்தது. நரி தன் மனைவியிடம் உண்மையைக் கூறிவிட்டது.

ஆனால், பெண் நரி நல்ல தந்திரசாலி. அது ஒரு யோசனை செய்தது. அதன்படி தன் குட்டிகளைப் போட்டு அடித்தது. குட்டிகள் அழுதன.  நரி சத்தமாக, ‘ குட்டிக ஏன் அழுகுது?‘ என்று கேட்டது. பெண் நரி, ‘இதுங்களுக்கு ரொம்ப சேட்டையா போச்சு. கொடுத்தத சாப்பிடாம எங்களுக்கு புலிக் கறிதா வேணும்னு பிடிவாதம் செய்யுதுங்க. இந்த நேரத்துல புலிக் கறிக்கு எங்க போறது ? அதுதா கோபத்துல ரெண்டு கொடுத்தேன்,‘ என்றது சத்தமாக.

வாசலில் நின்ற புலி, ‘குட்டிகள் எனது கறி வேண்டும் என்று கேட்கின்றனவாம். இது நிச்சயமாக அந்த டிப்டிப்வா வின் குட்டிகள்தான். இங்கே நின்றால் ஆபத்து,‘ என்று ஓடிவிட்டது.

வழியில் வேறொரு நரியைப் பார்த்து அதனிடம் இந்தக் கதையைச் சொன்னது. அந்த நரி,‘ கவலைப்படாதீர்கள். உங்கள் குகையில் இருப்பது நம்ம நரி அண்ணன்தான். நா சொன்னா குகைய காலி பண்ணீறுவாங்க,‘ என்று தைரியம் சொல்லி, மீண்டும் குகைப் பக்கம் அழைத்து வந்தது.

பயந்த புலி வாலை கால்களுக்கு நடுவில் சொருக்கிக் கொண்டு, நரியின் பின்னால் சென்றது.  நரியோடு, புலி வருவதைப் பார்த்த பெண் நரி இப்போது மீண்டும் ஒரு தந்திரம் செய்து, கணவன் காதில் ஏதோ சொன்னது. 

நரியும், புலியும் குகை வாசலுக்கு வந்ததும், கணவன் நரி சத்தமாக,‘ பிள்ளைங்க அழுகுது, அஞ்சு புலிய ஏமாத்திக் கூட்டிக்கிட்டு வான்னு சொன்னா, இப்படி ஒரு புலி மட்டும் கூட்டிட்டு வந்து நிக்கறயே தம்பி ..  எனக்கு வர்ற கோபத்துக்கு உன்ன சும்மா விடமாட்டேன்,‘ என்றது. 

அடுத்த நிமிடம் புலி அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தது. வாலறுந்த நரி தன் குடும்பத்தோடு ஜாலியாக அந்த குகையில் வசித்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *