மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கழுதையும், நாயும் – தமிழில் ச. சுப்பாராவ்

Maithili language Children's Story Donkey And Dog Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கழுதையும், நாயும்கழுதையும், நாயும்

ஒரு ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருந்தார். அவரிடம் ஒரு கழுதையும், ஒரு நாயும் இருந்தன. அவை இரண்டும் அவரிடம் மிக விசுவாசமாக இருந்தன. கழுதை தினமும் சலவை செய்ய வேண்டிய துணிகளை ஆற்றுக்குச் சுமந்து செல்லும். சலவை செய்த துணிகளை வீட்டிற்கு சுமந்து வரும். நாய் தன் எஜமானரின் பொருட்கள் திருட்டு போகாமல் பாதுகாக்கும்.

ஒரு நாள் அந்த சலவைத் தொழிலாளி நாய்க்கு சாப்பாடு வைக்காமல் தூங்கிவிட்டார். நாய்க்கு கடும் பசி.  பசி வயிற்றைக் கவ்வ, தூக்கம் வராமல்  புரண்டு கொண்டிருந்தது.

நல்ல நடுநிசி. கிராமமே உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு திருடன் சலவைத் தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து விட்டான். ஆனால் நாய் குரைக்கவில்லை. 

பக்கத்தில் இருந்த கழுதை, நாயிடம் மெதுவான குரலில், ” திருடன் நுழைகிறானே ? நீ ஏன் குரைக்கவில்லை ? நீ குரைக்காவிட்டால், எஜமானர் தூக்கத்திலிருந்து எழ மாட்டார். பொருட்கள் எல்லாம் களவு போய்விடுமே,” என்று மெல்லிய குரலில் சொன்னது.

நாய், ” நான் ஏன் குரைக்க வேண்டும்? அந்த ஆள் எனக்கு சாப்பாடு போடவில்லை. என்னை பட்டினி போட்டதற்கு அனுபவிக்கட்டும்,” என்றது கோபமாக.

கழுதை, ”இப்படி நன்றி மறந்து பேசாதே. அவர் தானே இத்தனை வருடங்களாக உனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தவர். இன்று என்னவோ மறந்து விட்டார் பாவம். அதற்காக நீ உன் கடமையிலிருந்து தவறக் கூடாது,” என்றது.

ஆனால் நாயோ கோபம் குறையாமல்.” வாயை மூடு. கடமை பற்றி எனக்கு உபதேசம் செய்யாதே ! எனக்கு எப்படி பசிக்கிறது தெரியுமா? வெறும் வயிற்றோடு கடமையைச் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்,“ என்றது.

ஆனால், கழுதைக்கு மனம் ஆறவில்லை. திருடன் திருடிக் கொண்டு ஓடிப் போகும் முன், எப்படியாவது எஜமானரை எழுப்விட வேண்டும் என்று நினைத்தது. ” நீ குரைக்காவிட்டால் பரவாயில்லை. நான் கத்தி, எஜமானரை எழுப்புகிறேன்,” என்றது.

”முட்டாள் கழுதையே ! அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். என் வேலையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் உனக்குத் தான் பிரச்சனை,“ என்றது நாய்.

ஆனால், நாயின் பேச்சைக் கேட்பது எஜமான துரோகம் என்று கழுதை நினைத்தது.  அது உரத்த குரலில் கத்த ஆரம்பித்தது.

சலவைத் தொழிலாளிக்கு அன்று மிகவும் களைப்பு. கடுமையான உடல் வலி.  நட்ட நடு ராத்திரியில் கழுதை கத்துவதைக் கேட்டு எழுந்தவுடன், தூக்கம் கெட்டுப் போனதில் அவருக்கு கடும் கோபம் வந்தது. துணிகளை அடித்துத் துவைக்கும் கட்டையை எடுத்து கழுதையை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டார். 

சலவைத் தொழிலாளி எழுந்ததைப் பார்த்த திருடன், கைக்குக் கிடைத்த பொருட்களை சுருட்டிக் கொண்டு. இருளில் நழுவி விட்டான்.  அடி வாங்கியதில் கழுதைக்கு முதுகு முழுவதும் ரத்த காயம். ஒரு கால் வேறு உடைந்துவிட்டது.

”முட்டாளே ! அவரவர் தனக்கு என்ன வேலையோ அதைத் தான் பார்க்க வேண்டும்.  தேவையில்லாமல் அடுத்தவர் வேலையில் தலையிட்டால், இப்படித் தான் ஆகும். நான் சொன்னதை நீ கேட்கவில்லை. நன்றாகத் துன்பப்படு,“ என்றது நாய்.

ஆனால், உண்மையில் துன்பத்தில் ஆழ்ந்தது சலவைத் தொழிலாளிதான்.  சேர்த்து வைத்த பொருட்களும் நிறைய திருட்டுப் போய்விட்டன. கால் ஒடிந்த கழுதையால் பொதி சுமக்கவும் முடியாமல் போனது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.