Maithili language Children's Story: Kiliyum Athan Thaththavum Translated in Tamil By C. Subba Rao. Book Day And Bharathi TV



கிளியும், அதன் தாத்தாவும்…

ஒரு ஊரில் ஒரு வேடன் இருந்தான். அவன் பறவைகளைப் பிடித்து அக்கம் பக்கத்து கிராமத்தாரிடம் விற்றுப் பிழைத்து வந்தான். தினமும் காலையில் காட்டிற்குச் சென்று, வேட்டையாடிவிட்டு மாலையில் வீட்டிற்கு வருவான்.

ஒரு நாள் அவனுக்கு எந்தப் பறவையும் சிக்கவில்லை. காட்டின் பல இடங்களிலும் வலையை விரித்து வைத்துப் பார்த்தும் எதுவும் சிக்கவில்லை. ‘இன்று அரிசியும், காய்கறிகளும் எப்படி வாங்குவது? குழந்தைகளின் பசிக்கு என்ன தருவது?‘ என்று கவலைப்பட்டபடி வீட்டை நோக்கி நடந்தான்.

அப்போது, தரையில் விழுந்து கிடந்த பழங்களைக் கொத்திக் கொண்டிருந்த சின்ன கிளிக்குஞ்சு ஒன்றைக் கண்டான். உடனே அதைப் பிடித்து தன் பைக்குள் போட்டுக் கொண்டான். ‘ இது மிகவும் சிறியது. இதை யாரும் வாங்க மாட்டார்கள். சில நாட்கள் இதை கூண்டில் வைத்து வளர்த்து, இது வளர்ந்த பிறகு விற்றால் நிறைய காசு கிடைக்கும்,‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். கிளிகளை யாரும் சாப்பிடுவதில்லை என்பது அவனுக்குத் தெரியும்.  ஆனாலும், குழந்தைகளுக்கு விளையாட்டுத் துணைக்காக வாங்கிக் கொள்வார்கள் என்று நினைத்தான்.

வீட்டிற்கு வந்து கிளியை அழகான ஒரு கூண்டில் வைத்தான். சின்னக் கிண்ணத்தில் நிறைய தானியங்களை இரையாக வைத்தான். ஆனால் குட்டிக் கிளியோ அழுது கொண்டிருந்தது. பாவம், தன் அம்மா, அப்பாவை நினைத்து ஏங்கியது போலும். அது எதையும் சாப்பிடவில்லை.

அதே சமயம், காட்டில் அதன் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் கிளிக்குஞ்சைக் காணவில்லையே என்று பதறின. அவை அங்குமிங்கும் பறந்து ஒவ்வொரு மரப் பொந்தாகத் தேடின. ஆனால் எங்கும் கிளிக்குஞ்சைக் காணவில்லை. கிளிக்குஞ்சு கிடைக்காததால், காட்டில் எந்தக் கிளியும் அன்றிரவு தூங்கவில்லை.

தனது அனுபவத்தில் பல வேடர்களைப் பார்த்திருந்த தாத்தா கிளிக்கு ஒரு யோசனை தோன்றியது.  அது மற்ற கிளிகள் அனைத்தையும் அழைத்து, ‘ நீங்கள் எல்லோரும் கீக்கீ என்று கத்தியபடி அக்கம் பக்கத்து கிராமங்களில் பறந்து சென்று தேடுங்கள். நம் குஞ்சு ஏதாவது ஒரு கிராமத்தில் யார் வீட்டிலாவது தான் இருக்கும். அதற்கு நம் குரல் அடையாளம் தெரியும் என்பதால் அது பதில் சொல்லும். அப்போது அது இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம்,‘ என்றது.



இப்படிச் சொல்லிவிட்டு, சில கிளிகளை அழைத்துக் கொண்டு அதுவும் ஒரு கிராமம் நோக்கி கீக்கீ என்று கத்தியபடியே பறந்தது. மதியம் தற்செயலாக வேடன் வீட்டருகே இருந்த ஒரு மரத்தில் ஓய்வெடுக்க உட்கார்ந்தது. அப்போதும்  அது கீக்கீ என்று கத்திக் கொண்டே இருந்தது. வேடனின் வீட்டிற்குள் கூண்டில் இருந்த குஞ்சுக் கிளிக்கு தாத்தாவின் குரல் கேட்டது. உடனே அது தனது கூண்டிலிருந்து பதில் குரல் தந்தது.

தாத்தா கிளி தன் பேரனுக்கு அருகே பறந்து சென்றது. இரண்டும் கீக்கீ என்று கிளி மொழியில் பேசிக் கொண்டன. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் எல்லாம் கூண்டைச் சுற்றிக் கூடிவிட்டார்கள். இதுவரை சோகமாக இருந்த குஞ்சுக் கிளி இப்போது உற்சாகமாகக் கூவிக் கொண்டு நடனமாடியது. இதைப் பார்த்த குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி.

சிறிது நேரம் கழித்து, கத்திக் கொண்டே இருந்த பெரிய கிளி மயக்கம் போட்டு அப்படியே விழுந்தது. கிராமத்தினர் அதிக வெயில் காரணமாக அது மயங்கிவிட்டது போல என்று நினைத்தார்கள். அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் தெளித்தார்கள். சற்று காற்று வரும்படி தள்ளி நின்றார்கள். சிறிது நேரத்தில் கிளி மயக்கம் தெளிந்து எழுந்தது. பறந்து சென்றது. 

கிராமத்தினர் இது பற்றியே பேசிக் கொண்டிருந்த போது, கூண்டில் இருந்த சின்னக் கிளி மயங்கி விழுந்தது. இரண்டு கால்களும் வானத்தை நோக்கி இருப்பது போல மல்லாந்து கிடந்தது. வேடன் வேகமாக கூண்டைத் திறந்து. அதை வெளியே எடுத்துப் போட்டான். குழந்தைகள் அதன் மேல் சற்று தண்ணீரைத் தெளித்தன.  சற்று காற்றோட்டமான நிழலான இடத்தில் கிளியைப் படுக்க வைத்தன.

அரை மணி நேரம் அப்படியே அசையாமல் கிடந்த கிளிக்குஞ்சு திடீரென்று எழுந்து கீக்கீ, கீக்கீ என்று கத்தியபடி பறந்து சென்றுவிட்டது.

கிராமத்தின் வயதான தாத்தா,‘ அப்போது வந்த கிளி இதன் தாத்தா கிளியாக இருக்க வேண்டும்.  அது இந்தக் குஞ்சிற்கு கூண்டிலிருந்து தப்பிச் செல்ல யோசனை சொல்லிக் கொடுத்திருக்கிறது.  மயக்கம் போட்டு விழுந்தது போல் நடித்து, நீயும் அப்படியே செய் என்று இதற்கு சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறது,‘ என்றார்.

குழந்தைகள் கைதட்டிச் சிரித்தார்கள்.

தமிழில் ச. சுப்பாராவ்

குறிப்பு: மைதிலி என்பது பீஹார் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அந்த மொழியின் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு தொகுப்பு 70-80 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதில் ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “மைதிலி மொழியின் சிறார் கதை: கிளியும், அதன் தாத்தாவும் – தமிழில் ச. சுப்பாராவ்”
  1. அருமையான கதை. எளிய மொழிபெயர்ப்பு. நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.. அனைத்து கதைகளையும் படிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.

  2. ஆசிரியரின் சிறார் மொழிபெயர்ப்பு கதைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.கிளி கதை ரொம்ப நல்லா இருக்கு. புக்டே க்கும் ஆசிரியருக்கும் மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *