மைதிலி மொழியின் சிறார் கதை: குள்ள நரியும், ஒட்டகமும் – தமிழில் ச. சுப்பாராவ்

Maithili language Children's Story: Kulla Nariyum Ottagamum Translated in Tamil By C. Subba Rao. Book Day And Bharathi TVகுள்ள நரியும், ஒட்டகமும்

ஒரு காட்டில் ஒரு குள்ள நரியும், ஒட்டகமும் வாழ்ந்து வந்தன. இரண்டும் நல்ல நண்பர்கள். குள்ள நரி குட்டியாக இருக்கும். நல்ல சுறுசுறுப்பு. ஒட்டகத்திற்கு பெரிய உருவம். அதனால் எல்லாமே சற்று நிதானமாகத்தான் செய்யும்.

ஒரு நாள் மாலைப் பொழுதில், இருட்டும் நேரத்தில், குள்ள நரி தன் நண்பன் ஒட்டகத்திடம், ‘ நண்பா ! சில மைல் தூரத்தில் ஒரு வயலில் நிறைய வெள்ளரிக் காய்களும், தண்ணீர் பழங்களும் இருக்கின்றன.  நாம் அங்கு போனால் திருப்தியாகச் சாப்பிடலாம்,‘ என்றது.

‘ஆஹா.. நல்ல யோசனை.  சீக்கிரமாக அங்கே போவோம்,‘ என்றது ஒட்டகம். இரண்டும் அந்த வயலை நோக்கி நடந்தன.

வழியில் ஒரு பெரிய ஆறு  வந்தது. ‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் குட்டியான விலங்கு. என்னால் எப்படி ஆற்றைக் கடக்க முடியும்? நான் ஆற்றின் சுழலில் சிக்கிவிடுவேனே,‘ என்றது குள்ள நரி.

‘கவலைப்படாதே நண்பா… என் முதுகில் உட்கார்ந்து கொள். நான் உன்னை பத்திரமாக அக்கரையில் சேர்க்கிறேன்,‘ என்றது ஒட்டகம். குள்ள நரி ஒட்டகத்தின் முதுகில் உட்கார்ந்து கொள்ள, ஒட்டகம் எளிதாக ஆற்றில் நீந்தி அக்கரையை அடைந்தது.

சிறிது தூரத்தில் அந்த வயல் இருந்தது. குள்ள நரி சொன்னது போலவே வெள்ளரிக் காய்களும், தண்ணீர் பழங்களும் ஏராளமாகக் காய்த்திருந்தன. குள்ள நரிக்கு குட்டி வயிறு என்பதால், சீக்கிரம் அதன் வயிறு நிறைந்து விட்டது. ஒட்டகத்திற்கு பெரிய வயிறு என்பதால், அதற்கு வயிறு நிரம்ப அதிக நேரமானது.

குள்ள நரி, ‘ எனக்கு வயிறு நிறைந்து விட்டது. ரொம்ப ஜாலியாக இருக்கிறது.  ஹு….ஹு….  என்று ஊளையிட வேண்டும் போல இருக்கிறது,‘ என்றது.  

‘தயவு செய்து ஊளையிடாதே.  காவலாளி வந்து விடுவான். எனக்கு இன்னும் வயிறு நிறையவில்லை.  இந்த வயலை விட்டு நாம் வெளியேறியதும்,  உன் இஷ்டம் போல ஊளையிடலாம்,‘ என்றது ஒட்டகம்.ஆனால், தனது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத குள்ள நரி,  உரத்த குரலில் ஊளையிட ஆரம்பித்தது. அதைக் கேட்டதும், பக்கத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி ஓடி வந்தான்.  தனது பயிர்களை ஒட்டகம் மேய்வதைப் பார்த்து தடியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தான். குட்டியாக இருக்கும் குள்ள நரி பதுங்கி ஓடிவிட்டது. ஒட்டகத்திற்கு சரியான அடி. பாவம் !

அது உடல் முழுக்க காயங்களுடன், அழுது கொண்டே, தனது காட்டை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தது.

ஆற்றங்கரையில் குள்ள நரி ஒட்டகத்திற்காகக் காத்திருந்தது.  வலியில் முனகிக் கொண்டே ஒட்டகம் அங்கு வந்ததும்,  ‘என்னை அக்கரையில் பத்திரமாக விட்டு விடு,‘ என்று சொல்லிக் கொண்டே, ஒட்டகத்தின் முதுகில் தாவி ஏறி உட்கார்ந்து கொண்டது குள்ள நரி.

ஒட்டகம் எதுவும் சொல்லவில்லை. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்தவுடன், ‘ எனக்கு அடி வாங்கியதில் கை, கால் எல்லாம் ஒரே வலி.  சிறிது நேரம் இந்த ஆற்று நீரில்  விழுந்து புரண்டால்தான் அசதி போகும்,‘ என்றது.

குள்ள நரிக்கு பயம் வந்துவிட்டது. ‘ நண்பா.. நான் எவ்வளவு சின்னவன் என்று உனக்கே தெரியும். நீ தண்ணீரில் விழுந்து புரண்டால், நான் ஆற்றில் முழ்கிவிடுவேனே. அதனால், அப்படி ஏதேனும் செய்யாதே .‘ என்றது.  ‘நான் ஏன் உனக்காகக் கவலைப்பட வேண்டும்? உனக்கு என் மீது அக்கறை இருந்திருந்தால், நீ ஊளையிட்டிருக்க மாட்டாய்.  காவலாளியும் எழுந்து வந்து என்னை அடித்திருக்க மாட்டான். இப்போது, என் உடல் வலி தீர நான் குளிக்கத் தான் வேண்டும்,‘ என்றது ஒட்டகம்.

சொல்லிவிட்டு, அப்படியே தண்ணீரில் விழுந்து ஜாலியாகப் புரள ஆரம்பித்தது.  அதன் முதுகில் உட்கார்ந்திருந்த குள்ள நரி தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தது. வேகமான ஆற்று நீரின் வெள்ளம் குள்ள நரியை இழுத்துச் சென்றது.

சிறிது நேரம் உடல் வலி தீர குளியல் போட்ட ஒட்டகம் மெதுவாக தன் இருப்பிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தது.

தமிழில் ச. சுப்பாராவ்

குறிப்பு: மைதிலி என்பது பீஹார் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அந்த மொழியின் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு தொகுப்பு 70-80 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதில் ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.