மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: மால்புவா கதை – தமிழில் ச. சுப்பாராவ்

Maithili language Children's Story: Malpua Translated in Tamil By C. Subba Rao. Book Day And Bharathi TV are Branches of Bharathi Puthakalayamபல நூற்றாண்டுகளாகவே கங்கைச் சமவெளியின் கிராமப்புறங்களில் மால்புவா என்ற இனிப்புப் பலகாரம் மிகவும் புகழ்பெற்றதாகும். திருமணமாகி கணவன் வீடு வரும் பெண் கொண்டு வரும் சீர்வரிசையில் மால்புவா மிக முக்கியமானது. ஹோலிப் பண்டிகை, ராம நவமி, தீபாவளி என்று எந்த விசேஷ நாள் என்றாலும் மால்புவாவைத்தான் முக்கியமாக செய்வார்கள். இந்த இனிப்பு வடஇந்திய கிராமப்புறங்களின் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்ததாகும்.

ஆனால், கிராமப்புற ஏழைகளுக்கு இதைச் செய்து சாப்பிடுவது எட்டாக்கனி. அதை செய்வதற்கு கோதுமை மாவு, பால், சர்க்கரை, நெய், முந்திரி, ஏலக்காய் என்று விலையுயர்ந்த பண்டங்கள் தேவைப்படும். சொந்த நிலம் இல்லாமல் விவசாயக் கூலியாக இருக்கும் ஏழைகளுக்கு தினமும் ஒரு வேளை சாப்பிடுவதே பெரிய போராட்டம் என்பதால் மால்புவாவை அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது. ஏதாவது விசேஷ நாட்கள் என்றால், தங்கள் உயர்சாதி எஜமானர்களின் தயவில்தான் அந்த விசேஷத்தை அவர்களால் கொண்டாட முடியும்.

ராமராஜும், அவன் மனைவி தானியாவும் இப்படிப் பட்ட ஏழை விவசாயக் கூலிகள். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்தாலும், ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்பாக இருப்பார்கள். நாள்தோறும் எஜமானரின் நிலத்தில் உழைத்து விட்டு, ராம்ராஜ் என்ன கொண்டு வருகிறானோ, அதை வைத்து தானியா மிக அன்பாக அவனுக்காக உணவு சமைப்பாள். சமைத்ததை கணவனுக்கு நிறைய கொடுத்து விட்டு தான் குறைவாக சாப்பிடுவாள்.ஒரு நாள் ராமராஜுவிற்கு மால்புவா சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. ‘ போன ஹோலியின் போதே நம் எஜமானரின் அப்பா இறந்து போனதால் அவர் ஹோலி கொண்டாடவில்லை. அதனால் நாமும் மால்புவா சாப்பிட முடியாமல் போனது. இப்போது திடீரென்று எனக்கு மால்புவா சாப்பிட வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது,‘ என்றான் தானியாவிடம். ‘எப்படியாவது கொஞ்சம் கோதுமை மாவு, சர்க்கரை, பால், நெய் எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள். நான் எஜமானி அம்மாவிடம் கேட்டு கொஞ்சம் ஏலக்காயும், முந்திரியும் வாங்கி வருகிறேன். எனக்கு மால்புவா செய்யத் தெரியும். சுவையாக செய்து தருகிறேன்,‘ என்றாள்.
ராம்ராஜ் அன்று வழக்கத்தை விட அதிக நேரம் கடுமையாக உழைத்து எப்போதும் வாங்கும் கூலியை விட அதிகமாக கூலி வாங்கினான். தானியா சொன்ன சாமான்களை வாங்கிக் கொண்டு வந்தான். அவன் வாங்கி வந்த சாமான்களை வைத்து ஐந்து மால்புவா தான் தயாரிக்க முடிந்தது. இப்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் உள்ள மால்புவாவை எப்படி பிரித்துக் கொள்வது என்று இருவருக்கும் சண்டை வந்தது.

‘எனக்கு மூன்று. உனக்கு இரண்டு,‘ என்றான் ராம்ராஜ்.

எப்போதும் கணவனுக்கு அதிகமாகத் தரும் தானியாவிற்கு, தன் திருமணத்திற்குப்பிறகு வெகு காலம் கழித்து செய்த இனிய மால்புவாவை விட்டுத்தர மனமில்லை. ‘நான் தான் மாவு பிசைந்தேன். அடுப்பின் வெக்கையில் உட்கார்ந்து செய்தேன். நான் தான் முந்திரி, ஏலக்காய் எல்லாம் ஏற்பாடு செய்தேன். எனவே, எனக்குத் தான் மூன்று,‘ என்றாள் அவள். ‘நான் மாவும், சர்க்கரையும், நெய்யும் வாங்கி வராவிட்டால், நீ எப்படி மால்புவாவை தயாரித்திருக்க முடியும்? அவற்றை வாங்குவதற்கான பணத்திற்காக நான் நாள் முழுவதும் அப்படிப் பாடுபட்டேன். அதுவும் போக, நான்தான் முதலில் மால்புவா செய்ய வேண்டும் என்ற யோசனையைச்சொன்னவன். நீ ஒரு பணிவுள்ள மனைவியாக எனக்கு மூன்று மால்புவாவைக் கொடு.‘ என்றான்.

இந்த வாக்குவாதம் பெரிய சண்டையாக மாறிவிட்டது. மால்புவா ஆறிப் போய், அதன் சுவை குறைய ஆரம்பித்தது. இன்னும் சண்டை முடியவில்லை. இருவரும் எனக்குத் தான் மூன்று என்று கத்திக் கொண்டே இருந்தனர். ஒரு சாதாரண மால்புவாவிற்கான ஆசையில் அவர்களது நீண்ட நாள் அன்பு காணாமல் போனது.
மணிக்கணக்காகச் சண்டை போட்ட இருவரும் கடைசியில் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இருவரும் வாய் திறந்து பேசக் கூடாது. யார் முதலில் பேசுகிறார்களோ, அவர் தோற்றவர். அவருக்கு இரண்டு மால்புவா. கடைசி வரை பேசாமல் இருந்து ஜெயித்தவருக்கு மூன்று.

இப்படி முடிவானதும் இருவரும் பேசாமல் அமைதியானார்கள். இரவு ஆகிவிட்டது. கிராமத்தினர் எல்லோரும் தூங்கப் போய்விட்டார்கள். கணவன் மனைவி இருவரும் வெறும் வயிற்றோடு படுத்துக் கொண்டார்கள். ஆசை ஆசையாய் செய்த மால்புவா, அநாதையாகக் கிடந்தது.மறுநாள் காலையில் ராம்ராஜின் வீடு பூட்டிக் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். விடிந்து வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்தது. மதியமானதும் கிராமத்தினருக்கு ராமராஜுக்கும், தானியாவிற்கும் என்ன ஆனதோ? என்று பயமாகிவிட்டது. ராமராஜின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, கதவைத் தட்டினார்கள்.

எவ்வளவு தட்டியும் எந்த பதிலும் இல்லை. ஊர்க்காரர்களுக்கு சந்தேகம் அதிகமாகி விட்டது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். உள்ளே ராமராஜும், அவன் மனைவியும் தம் படுக்கையில் படுத்துக் கிடந்தார்கள்.

இருவரும் எவ்வளவு தட்டி எழுப்பினாலும் எழவில்லை. ஒருபதிலும் இல்லை. சரி, இவர்கள் செத்துப் போய்விட்டார்கள் என்று நினைத்த கிராமத்தினர் அவர்களது இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்.

கணவன், மனைவி இருவருக்கும் சிதை ஏற்பாடு செய்தார்கள். பிறகு நான்கு நான்கு பேராகச் சேர்ந்து அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று சிதையில் படுக்க வைத்தார்கள்.

தீ வைக்கப் போகும் போது, ராம்ராஜ் , ‘ முட்டாள் பெண். நான் முதலில் பேசி தோற்றுப் போய் விடுகிறேன். மூன்று மால்புவாவிற்காக உயிரோடு எரிந்து போக முடியுமா?‘ என்றான். மனைவியானவள், சிதையில் படுத்தவாறே, ‘நீ தோற்றுப் போனாய். எனக்குத் தான் மூன்று மால்புவா,‘ என்றாள். ஊர்க்காரர்கள் இருவரையும் நன்றாகத் திட்டி வீட்டுக்கு விரட்டிவிட்டார்கள்.

ஊர்க்காரர்கள் இந்த முட்டாள் கணவன், மனைவியைப் பார்த்து திகைத்து நிற்க, இருவரும் பதினாறு மணி நேரத்திற்கு முன்பாகச் செய்து, ஆறி சுவையில்லாமல் போன மால்புவாவைத் தின்ன ஆரம்பித்தார்கள்.

———————————————————————–
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – மால்புவா என்பது இப்போதும் பீஹார் பகுதியில் மிகவும் பிரபலமான இனிப்பு. நம் ஊர் அப்பம் போன்றதுதான். அப்பத்தை செய்து ஜீனிப் பாகில் குலோப் ஜாமுன் போல் ஊற வைப்பார்கள். யுட்யூப்பில் மால்புவா செய்முறை தமிழிலேயே உள்ளது.

தமிழில் ச. சுப்பாராவ்

குறிப்பு: மைதிலி என்பது பீஹார் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அந்த மொழியின் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு தொகுப்பு 70-80 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதில் ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.