Maithili language Children's Story: Muttal Siruvan Translated in Tamil By C. Subba Rao. Book Day And Bharathi TV



முட்டாள் சிறுவன்

ஒரு ஊரில் ஒரு ஏழைப் பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் பலாய் பதூரா என்றாலும், எல்லோரும் அவனை சுதுவா என்று அழைப்பார்கள். சுதுவா என்றால் போஜ்புரி – மகாஹி மொழியில் மூடன் என்று அர்த்தம். சுதுவா மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன். அவனது அம்மா அவன் மீது மிகவும் அன்பாக இருப்பாள். அவனை வெயிலில் கடுமையாக உழைக்க விடமாட்டாள். இதனால், அவன் உலகம் தெரியாத முட்டாளாக இருந்தான்.

அவனுக்கு பதினைந்து வயது ஆகிவிட்டாலும் கூட, அவன் அம்மா அவன் அடுப்பங்கரையில் சுட்டுக் கொண்டுவிடக் கூடாது என்று பயப்படுவாள். அவள் தான் உடைகளைப் போட்டு விடுவாள். அவனுக்கு பிடித்த பால் சோற்றை வெல்லம் கலந்து ஊட்டிவிடுவாள். அவன் பெரியவர்களுடன் சேர்ந்து வேலைக்குப் போகாமல், சிறுவர்களுடன் சேர்ந்து கோலிக் குண்டு விளையாடிக் கொண்டு பொழுது போக்கினான்.

ஒருநாள் அவன் ஐந்து மைல் தள்ளி இருந்த தன் பாட்டி வீட்டுக்குப் போக ஆசைப்பட்டான். ‘ நீ சின்னப் பையன். நீ எங்குமே போனது கிடையாது. எங்காவது வழி தவறிவிடுவாய், அவ்வளவு தூரம் எல்லாம் நான் அனுப்ப மாட்டேன்,‘ என்றாள் அம்மா.

ஆனால் சுதுவா பிடிவாதம் பிடித்தான். ‘நான் என்ன பால் குடிக்கும் பாப்பாவா? ஒன்றுக்கு, இரண்டுக்கு எல்லாம் நான் தனியாகத் தானே போகிறேன். நானே தான் குளித்துக் கொள்கிறேன். பாட்டி வீட்டுக்கு தனியாக ஏன் போகக் கூடாது?‘ என்று பிடிவாதம் பிடித்தான்.

கடைசியில் அம்மா சரியென்றாள். மறுநாள் காலையில் போகலாம் என்றாள். சுதுவாவிற்கு பரபரப்பில் அன்றிரவு தூக்கமே வரவில்லை. முன்பொரு முறை அம்மாவுடன் போன போது பாட்டி கொடுத்த பொம்மையைப் பற்றி நினைத்துக் கொண்டே படுத்திருந்தான்.



காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்பினான். அம்மாவிடம் வழி கேட்டான். அம்மா அவனது கிராமத்திலிருந்து சென்ற பாதையைக் காட்டித் தன் விரலால் காட்டி, ‘ உன் மூக்குக்கு நேராக உள்ள பாதையில் நேராகப் போ. எங்கும் அதிலிருந்து மாறாதே. அப்படியே போனால் மூன்று, நான்கு மணி நேரத்தில் போய் விடலாம்,‘ என்றாள்.
சுதுவா நடக்க ஆரம்பித்தான்.

ஓரிரு மணி நேரம் நடந்த பிறகு அவனுக்கு நேர் எதிரே ஒரு உயரமான பனை மரம் நின்றது. அவனுக்கு குழப்பமாகப் போய் விட்டது. அம்மா நேராகத்தான் போகச் சொல்லியிருக்கிறாள். ஆனால் இங்கே மூக்குக்கு நேராக பனை மரம் நிற்கிறதே? என்ன செய்யலாம் ? என்று யோசித்தான்.

மரத்தில் ஏறி அந்தப் பக்கமாக இறங்கி விடலாம் என்று முடிவு செய்தான். மரத்தில் ஏறினான். மேலே அதன் ஓலைகள் பெரிய கூடாரம் போல் கவிழ்ந்து இருந்தன. மறுபுறம் இறங்குவதற்காக சுதுவா ஒரு பெரிய ஓலையைப் பிடித்துத் தொங்கினான். ஆனால் அந்த ஓலையிலிருந்து மரத்திற்குத் தாவத் தெரியவில்லை. அப்படியே கையை விட்டு விட்டுக் குதிக்கவும் பயமாக இருந்தது. யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்று அப்படியே தொங்கிக் கொண்டே இருந்தான்.

அப்போது, தூரத்தில் ஒருவன் ஒரு யானை மீது வருவது தெரிந்தது. உடனே சுதுவா, ‘ பாகன் மாமா ‘ எனக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள்,‘ என்று கத்தினான்.

பாகன் யானையை மரத்தின் கீழ் நிறுத்தி யானை மீது எழுந்து நின்று தொங்கிக் கொண்டிருக்கும் சுதுவாவின் கால்களைப் பிடித்தான். அப்போது பெரிய காற்று வீச, பனை ஓலைகள் சரசரத்தன. அந்த சத்தத்தில் மிரண்ட யானை ஓடிப் போய் விட்டது. இப்போது சுதுவா பனையோலையைப் பிடித்துத் தொங்க, அவன் காலைப் பிடித்துக் கொண்டு, யானைப் பாகன் தொங்கினான்.

அப்போது ஒட்டகத்தின் மீது ஒருவன் வந்தான். சுதுவா அவனிடம் உதவி கேட்டான். அவன் ஒட்டகத்தை மரத்தின் கீழ் நிறுத்தி, எழுந்து நின்று பாகனின் காலைப் பிடிக்கும் போது. மரத்தின் சலசலப்பில் ஒட்டகம் ஓடிப்போனது. இப்போது, பாகனின் காலைப் பிடித்துக் கொண்டு, ஒட்டகக்காரன் தொங்கினான்.



அப்போது அரண்மனைப் பாடகி ஒரு தேரில் வந்தாள். அவளிடம் உதவி கேட்டார்கள். அவள் ஒட்டகக்காரனின் காலைப் பிடிக்கும் போது, மரத்தின் சரசரப்பில் குதிரைதேரோடு ஓட, அவளும் இப்போது தொங்கினாள்.

உதவிக்கு யாரும் இல்லாமல் இந்த நால்வருக்குள் சண்டை வந்து விட்டது. ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது சுதுவா சமாதானம் செய்வதற்காக ஒரு யோசனை சொன்னான். ‘பாடகியே ! எல்லோரும் பதட்டமாக இருக்கிறோம். நீ சற்று பாடினால் எல்லோருக்கும் பதட்டம் குறையும்,‘ என்றான்.

பாடகிக்குக் கோபம் வந்துவிட்டது. ‘ உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உனக்கு பாட்டு கேட்கிறதா? நீ சரியான லூசு !‘ என்றாள்.

சுதுவா, ‘ கோவப்படாதே. உனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். எனக்கு பிராகா பாடத் தெரியும். (பிராகா என்பது பீஹார், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட் பகுதிகளில் பிரபலமான நாட்டுப் புறப் பாடல் வகை ) நான் பாடுகிறேன்,‘ என்றான்.

விரல்களால் இரு காதுகளையும் அடைத்துக் கொண்டுதான் பிராகாவைப் பாடுவார்கள். எனவே சுதுவா தன் காதுகளை அடைத்துக் கொள்வதற்காக, பனையோலையிலிருந்து கையை எடுக்க நால்வரும் கீழே விழுந்தார்கள். பாகனும், ஒட்டகக்காரனும் பலசாலிகள். அவர்கள் சற்று முணகலுடன் எழுந்து நடந்து சென்றார்கள். ஆனால் பாடகிக்குத் தான் காலில் நல்ல அடி.

சுதுவாவாலும் எழுந்து நிற்க முடியவில்லை எப்படியோ கஷ்டப்பட்டு எழுந்து நின்றான். பாடகி, ‘உன்னால்தான் எனக்கு இந்த நிலை. எனவே என்னை விட்டுப் போகாதே. கடைக்குப் போய் எண்ணெய் வாங்கி வந்து என் காலில் தேய்த்து விடு. அப்போது தான் எனக்கு கால் சரியாகும்,‘ என்றாள்.



சரி என்றான் சுதுவா. பாடகி காசும், சின்ன சட்டி ஒன்றும் தந்தாள். அதை எடுத்துக் கொண்டு சுதுவா கடைக்குப் போனான். கடைக்காரரிடம் காசைத் தந்து எண்ணெய் கேட்டான். அவரும் சட்டி நிறைய எண்ணெய் தந்தார். சுதுவா இன்னும் கொஞ்சம் எண்ணெய் வேண்டும் என்றான்.

கடைக்காரர்,‘ உன் சட்டி நிறைந்து விட்டதே. நான் இன்னும் கொஞ்சம் எண்ணெய் தந்தால், எப்படி எடுத்துப் போவாய் ?‘ என்றார்.

சுதுவா சட்டென்று சட்டியைக் கவிழ்த்துவிட்டு, சட்டியின் பின்புறம் எண்ணெய் ஊற்றித் தருமாறு காட்டினான். கடைக்காரர் இவன் பெரிய முட்டாள் என்று தெரிந்து கொண்டு, சட்டியின் பின்னால் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி சுதுவாவை விரட்டி விட்டான்.

சட்டியின் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்துக் கொண்டு பாடகியிடம் வந்தான் சுதுவா. எண்ணெயைத் தடவுகிறேன் என்றாள். ‘ என் பணத்தை வீணடித்துவிட்டு, சட்டியின் பின்னால் கொஞ்சமாக எண்ணெயை வாங்கி வந்திருக்கிறாய். இதை வைத்து என் காலை எப்படி நீவி விட முடியும்? போய் தொலை. நான் எப்படியோ எழுந்து கொள்கிறேன். நீ பக்கத்தில் இருந்தால் இன்னும் தொல்லை தான்,‘ என்று திட்டினாள்.

சுதுவாவிற்கு அவள் ஏன் திட்டுகிறாள் என்று புரியவில்லை. பாட்டி வீட்டிற்குப் போகவும் வழி சரியாகத் தெரியவில்லை. பேசாமல் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தமிழில் ச. சுப்பாராவ்

குறிப்பு: மைதிலி என்பது பீஹார் பகுதியில் பேசப்படும் ஒரு மொழி. அந்த மொழியின் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு தொகுப்பு 70-80 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதில் ஒரு கதையின் மொழிபெயர்ப்பு.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *