மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: நரி கற்ற பாடம் – தமிழில் ச. சுப்பாராவ்

Maithili language Children's Story Nari Katra Paadm Translated in Tamil By C. Subba Rao. மைதிலி மொழி மொழிபெயர்ப்புக் கதை: நரி கற்ற பாடம்நிறைய பனை மரங்கள் இருந்த ஒரு காட்டில் ஒரு நரியும், ஒரு குரங்கும் வாழ்ந்து வந்தன. அந்த பனை மரங்களில் நிறைய இனிப்பான நுங்குகள் பழுத்துத் தொங்கின. மேல் தோலை நீக்கிவிட்டால் உள்ளே மிக இனிப்பான பனி போன்ற நுங்கு இருக்கும்.

மரத்திற்கு மரம் தாவுவதில் திறமையுள்ள குரங்கு அந்த மரங்களில் ஏறி ஜாலியாக நுங்குகளைத்  தின்றது. நரி மரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து குரங்கு தூக்கிப் போட்ட பழங்களின் மிச்சங்களைத் தின்றது.  நரிக்கு முழு நுங்கைத் தின்ன வேண்டும் என்று மிகவும் ஆசை.

ஒரு நாள் குரங்கு மரத்தில் உட்கார்ந்து நுங்கு தின்று கொண்டிருக்கும் போது, நரி, ‘ குரங்கு அண்ணா ! எனக்கு ஒரு முழு நுங்கைத் தின்ன வேண்டும் என்று ஆசை. நீங்கள் மேலிருந்து ஒரு முழு பனம்பழத்தைத் தள்ளி விட்டால் நன்றாக இருக்கும்,‘ என்றது.

நுங்கைச் சுவைத்துக் கொண்டிருந்த குரங்கு, ‘ நீ ஏன் நுங்கு சாப்பிட என்னை நம்பி இருக்க வேண்டும்? தினமும் பழுத்த பழங்கள் தாமாகவே கீழே விழுகின்றனவே.  பழம் விழுவதற்காக மரத்தடியில் காத்து நின்றால் போதும். உனக்கு நுங்கு கிடைத்துவிடும்,‘ என்றது.

மறுநாள் காலை விடிந்ததும், நரி ஒரு உயரமான பனை மரத்திற்குக் கீழே காத்து நின்றது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய பனம்பழம் நேராக அதன் தலை மீது வந்து விழுந்தது.  வலியில் துடித்துக் கொண்டு, ஊளையிட்டபடி, நரி ஓடியது. தலையின் காயம் ஆறுவதற்காக சில நாட்கள் ஒரு புதரில் படுத்து ஓய்வு எடுத்தது. இனி பனை மரம் பக்கம் போகவே கூடாது என்று முடிவு செய்தது.

Fox, Helical, Helix, Line Art Animals, Misc, Ornament

சில நாட்கள் கழித்து நிறைய மாமரங்கள் இருந்த ஒரு கிராமத்திற்குப் பக்கமுள்ள காட்டிற்குச் சென்றது நரி. அப்போது மாம்பழங்களின் காலம். நரி ஒவ்வொரு தோப்பாகச் சென்று, தோப்பின் காவலாளிகள் தூங்கும் நேரமாகப் பார்த்து கீழே விழுந்து கிடக்கும் மாம்பழங்களை  வயிறு முட்டத்  தின்று விட்டு, தோல், கொட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு வர ஆரம்பித்தது.

இப்படி பல நாட்கள் நடந்தது. ஒரு நாள் நரி மாம்பழத்தைத் தின்னும் போது, அந்த  மாம்பழத்தில் இருந்த வண்டு ஒன்று நரியை நன்றாகக் கொட்டி விட்டது.  வண்டு சரியாக நரியின் நாக்கில் கொட்டிவிட்டதால், நரிக்கு வலி தாங்க முடியவில்லை. புரண்டு புரண்டு, ஊளையிட்டது. தோப்பின் காவலாளிகள் எழுந்து வந்து நரியை நன்றாக அடி வெளுத்து விட்டார்கள்.

நரி எப்படியோ தப்பி ஓடிவிட்டது. ஆனால் வாய் வீங்கி விட்டது.  மற்ற நரி நண்பர்கள் எல்லாம் வந்து, அதன் நாக்கு காயத்தை அவ்வப்போது நக்கி நக்கி உதவியதில் காயம் சில நாட்களில் ஆறிவிட்டது.

நாக்கு சரியானதும், நரி, இனி மேல் உணவுக்கு யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். திருடித் தின்ன மாட்டேன். நானே வேட்டையாடி மட்டுமே சாப்பிடுவேன் என்று உறுதி பூண்டது. 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.