உ.வாசுகி,
அகில இந்தியத் துணைத் தலைவர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
முற்போக்கு இயக்கங்களும் குழுக்களும் கடும் சவால்களை சந்திக்கும் காலகட்டமாக இன்றைய காலகட்டம் உள்ளது. சாதி, வர்க்கம், பாலினம் என்று அனைத்து மட்டங்களிலும் ஒடுக்கு முறைகளை சந்திக்கும் பெண்களின் சமத்துவத்திற்காக பாடுபடும் பெண்கள் இயக்கங்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல.
பல்வேறு வகைப்பட்ட பெண்கள் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் உள்ளன. பெண்கள் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக மட்டும் செயல்படும் அமைப்புகளும் உண்டு. நாங்கள் அரசியல் அமைப்பு அல்ல என்று அறிவித்து, பெண்களின் பிரச்சனைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக பார்க்கும் அமைப்புகளும் உண்டு. பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம் மட்டுமே காரணம் என வாதிடும் அமைப்புகள் உண்டு. மத அடிப்படைவாத அமைப்புகள், சாதி அமைப்புகள், மதவெறி அமைப்புகள் நடத்தும் பெண்கள் அமைப்புகள் உண்டு. பல்வேறு அரசியல் கட்சிகளின் மகளிர் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்கு பின்னே ஆணாதிக்கம், நில உடைமை கண்ணோட்டம், முதலாளித்துவம் உள்ளிட்ட முறைமைகளும், அவற்றின் கருத்தியலும் உள்ளன என்பதை பெரும்பாலும் இடதுசாரி பெண்கள் அமைப்புகளே முன்வைக்கின்றன. பெண் உரிமைக்கான போராட்டம் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தோடு இணைந்தது. சமூக மாற்றத்திற்காக போராடும் பல்வேறு அமைப்புகளோடு பெண்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டாக குரல் கொடுக்க வேண்டும். அரசியல் பொருளாதாரம், சமூகம் பண்பாடு என அனைத்து தளங்களிலும் பெண் சமத்துவத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. பெண் அடிமைத்தனம் உருவான வரலாற்றை எங்கல்ஸ் அவர்கள் “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் விளக்குகிறார். வர்க்க சமூகமும் பெண் அடிமைத்தனமும் ஒத்திசைந்து உருவானதாக அவர் முன் வைக்கிறார். எனவே அரசியல் பொருளாதார பண்பாட்டுச் சூழலில் இருந்து பெண்கள் பிரச்சனைகளையும், ஒடுக்குமுறையையும் விலக்கி வைத்து பார்க்க முடியாது.
பாலின சமத்துவம் குறித்த கண்ணோட்டம்
பெண் சமத்துவத்தை நிலை நிறுத்த மனமாற்றங்கள் தேவை என்றாலும் கூட, அந்த மன மாற்றத்தை உருவாக்கவே திட்டவட்டமான சமூக, பொருளாதார சூழல் தேவைப்படுகிறது. சோசலிச சமூக முறைமையில் தான் அதற்கேற்ற சமூக சூழல் (material condition) உருவாகிறது. ஆனால் அங்கும் சோஷலிச அரசு உருவான உடனேயே எல்லா மாற்றங்களும் வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. உறுதியான ஒரு கருத்தியல் போராட்டத்தை சோஷலிச அரசுகள் கடந்த காலத்தில் நடத்தியதன் விளைவாகத்தான் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கியூப குடும்ப கோட்பாட்டு சட்டம் இதற்கோர் உதாரணம். பாலின சமத்துவத்துவத்தை உறுதிசெய்கிற கியூப குடும்ப கோட்பாட்டு சட்டம், கியூப மக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உருவாக்கப்பட்டது; இறுதி வரைவு வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே சட்டமாக்கப்பட்டது.
பெண்கள் உரிமைகள் குறித்த மாறுபட்ட கண்ணோட்டங்களும் போக்குகளும் சர்வதேச அளவிலும் நிலவுகின்றன. 1980களில் கனடா நாட்டின் மான்ட்ரியால் நகரத்தில் நடந்த பெண்கள் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதிநிதியாக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாநாட்டில் முதல் கட்டமாக சுற்றுக்கு விடப்பட்ட குறிப்பில் வன்முறை எதிர்ப்பு அம்சங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. பொருளாதார பிரச்னைகள் அதிகம் இடம் பெறவில்லை. நான் உட்பட மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதிகள் முதல் அமர்விலேயே, வறுமையே ஒரு வன்முறை என சுட்டிக்காட்டிய பிறகுதான், பொருளாதார அம்சங்கள் இணைக்கப்பட்டன. குடும்ப அமைப்பு ஜனநாயக படுத்தப்பட வேண்டும், ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பு முறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஜனநாயக மாதர் சங்க சார்பாக முன்வைக்கப்பட்டு மாநாட்டு தலைமை குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது புதிய அனுபவமாக இருந்தது. பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என மாநாட்டு தலைமை குழு குறிப்பிட்டது. எந்தப் பெண்களின் நலனுக்காக இதை நீங்கள் முன் வைக்கிறீர்களோ, அந்த பெண்களுக்கே பொருளாதார தடையின் காரணமாக பிரச்சனைகள் வரும், எனவே அந்த வரியை நீக்க வேண்டும் என கடைசி வரை போராடி, முடியாத பட்சத்தில் ஆட்சேபணையை பதிவு செய்தோம். தன்பாலின உணர்வாளர்கள் அமைப்புகள் கணிசமாக வந்திருந்தன. அவர்களது கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்ட போது இந்தியா போன்ற நாடுகள் அதனை நியாயம் எனக் கூறினாலும், இசுலாமிய நாடுகளில் இருந்து வந்த பெண்கள் அமைப்புகள் அதில் கையெழுத்திட மறுத்தன. எனவே இதர கோரிக்கைகளை பட்டியலிட்டு அதன் கீழே கையெழுத்திடலாம், தன்பாலின உணர்வாளர்களின் கோரிக்கைகளை அடுத்து பட்டியலிட்டு அதை ஏற்பவர்கள் தனியாக கையெழுத்திடலாம் எனவும் சமரசம் செய்ய வேண்டி வந்தது. தற்போது தன்பாலின உணர்வாளர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது சட்டமாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கியூபாவில் நிறைவேற்றப்பட்ட குடும்ப கோட்பாட்டு சட்டமும் தன்பாலின உணர்வாளர்களின் சமத்துவ வாழ்க்கையை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
எந்தப் பாதையில் பயணிக்கிறது இந்தியா?
நவீன தாராளமய பொருளாதார பாதையைத்தான் அண்மைக்கால அரசாங்கங்கள் இந்தியாவில் பின்பற்றி வருகின்றன. தற்போதுள்ள பாஜக அரசாங்கம் அந்தப் பாதையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இது பெண்களின் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமத்துவத்திற்கான அடித்தளத்தையே நசுக்குகிறது. முழு வீச்சிலான எதேச்சாதிகார நடவடிக்கைகளில் இந்த அரசு இறங்கி வருகிறது. விமர்சிக்கவும் வேறுபட்ட கருத்துக்களை சொல்வதற்குமான வெளி சுருங்கிக் கொண்டே வருவது, பெண் செயல்பாட்டாளர்களையும் பாதிக்கிறது. உள்ளூர் பிரச்சனைகளுக்கான இயக்கம், இந்த வலதுசாரி அரசியலை எதிர்ப்பதன் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும்.
முதலாளித்துவ சமூக அமைப்பில் அனைத்தும் வணிகமயம்தான். கர்ப்பப் பை, சினை முட்டை உட்பட. வாடகை தாய் முறையை வணிகமாக்க கூடாது என சட்டம் இருந்தாலும், நடைமுறை வேறுமாதிரி தான் உள்ளது. சினை முட்டை விற்பனையை ஒழுங்குபடுத்த சட்டம் இன்னும் வரவில்லை. இது போன்ற பிரச்சினைகளில் ஏழை பெண்களே பாதிக்கப்படுகிறார்கள்.
அரசு வங்கிகள் தரப்பில் இருந்து முறையான கடன் வசதிகள் எளிதாக கிடைப்பது இல்லை. எனவே நுண்நிதி நிறுவனங்களையே கடனுக்காக பெண்கள் சார்ந்து இருக்கிறார்கள். ஏற்கனவே அதீதமான வட்டி விகிதம் இருந்த நிலையில், அண்மையில் ரிசர்வ் வங்கி வட்டிக்கான உச்சவரம்பை நீக்கிவிட்டது. பெரும் கடன் வலையில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். கடன் மற்றும் வட்டி தவணையை பெறுவதற்காக இந்நிறுவனங்களின் முகவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதனால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட பெண்களும் உண்டு.
குடும்பக் கட்டமைப்பு புனிதமானது, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்கிற வலதுசாரி கருத்தியல் மிக ஆழமாக பரவிக் கிடக்கிறது. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை கூட பலராலும் பயன்படுத்த முடிவதில்லை. குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவது என்கிற விவாதம் கூட பெரிதாக முன்னுக்கு வருவது கிடையாது.
ஒருபுறம் சாதி மறுப்பு காதல்/ திருமணம் செய்தால் சாதி ஆணவ கொலையும், மறுபுறம் காதலை நிராகரித்தால் கொல்லப்படுவதும் சமகாலத்தில் நடந்து வருகிறது. சாதிப் பெருமிதமும், பெண் தன் உடமை என்ற ஆணாதிக்க கண்ணோட்டமும் இதற்குப் பின்புலமாக அமைகின்றன.
இணையதள குற்றம் இக்கால கட்டத்தின் முக்கிய சவாலாகும். பெண்கள் சுயமாக துணிச்சலாக தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் முன் வைப்பது நசுக்கப்படுகிறது. மோசடி செய்து வன்கொடுமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் இது களம் அமைத்துக் கொடுக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் வல்லுறவு பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக விளங்குகிறது. குடி மற்றும் போதைப் பழக்கம் பாலியல் வன்முறையை, குறிப்பாக கும்பல் பாலியல் வன்முறையை ஊக்கப்படுத்துகிறது. மீ டூ இயக்கம், நடந்த பாலியல் துன்புறுத்தலைக் கூட உடனடியாக வெளியே சொல்ல முடியாத சமூகச் சூழலைத் தான் பிரதிபலித்தது. பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன. பாதுகாப்பு விடுதிகள் பலவும் அனுமதி பெறாமல், ஆளும் கட்சி பிரமுகர்கள் அதிகார வர்க்கம் காவல்துறையின் உதவியோடு, அங்கு தங்குபவர்களை பாலியல் பண்டமாக பயன்படுத்துவதும், அவர்களது உறுப்புகளை விற்பதுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தற்போதைய ஆட்சியில் தலித் பெண்கள் மீதான வன்முறையும் சிறுபான்மை பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்து வருகிறது. கருத்தியல் ரீதியாக ஆணாதிக்க சிந்தனைகள் வலுப்பெற்று வருகின்றன. மனுவாத கருத்துக்கள் வலிந்து திணிக்கப்படுகின்றன. வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் சாதி பஞ்சாயத்துகளே தீர்மானிக்கும் சக்தியாக இயங்குகின்றன. சாதியமும் மதவெறியும் பெண்களையும் கூறு போடுகின்றன. பெண்கள் ஒற்றுமை இதில் சிதைக்கப்படுகிறது.
பயணிக்க வேண்டிய பாதை
இவற்றையெல்லாம் தாண்டித்தான் தனிப்பட்ட முறையிலும், இயக்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்களுக்கான குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அமைப்பு ரீதியாக ஒன்று திரள்வது மிக அடிப்படையான தேவை. களத்தில் மட்டுமல்ல, கருத்தியல் ரீதியான போராட்டத்தை கூர்மைப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அவசியமாகிறது. பெண்கள் அமைப்புகளுடன் ஒருபுறமும், வர்க்க வெகு ஜன அமைப்புகளோடு மறுபுறமும் கூட்டு மேடைகளை உருவாக்கி மிக அழுத்தமாக பெண்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. பெண்கள் பிரச்சினைகளும் அரசியல் பிரச்சனைகள் தான், பெண்ணுரிமையும் மனித உரிமையே என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. அரசு, கல்வி நிலையங்கள், மத நிறுவனங்கள், ஜனநாயக அமைப்புகள், குடும்பம் என அனைத்து மட்டங்களிலும் பெண் சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டி உள்ளது.
வரலாற்றின் வழிநெடுகிலும் பெண்கள் போராளிகளாக செயல்பட்ட விவரங்கள் உள்ளன. தேச விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் ஆறில் ஒருவர் பெண்ணாக இருந்திருக்கிறார்கள். சாராய எதிர்ப்பு இயக்கம், சிப்கோ இயக்கம், விவசாய தொழிலாளிகளின் போராட்டம், தொழிற்சங்க இயக்கங்கள் என்று பல மட்டங்களில் பெண்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்கள்.
எத்தனையோ சவால்களை சந்தித்து முன்னேறி உள்ள இந்தியப் பெண்கள் இயக்கம், இப்போது வருகிற சவால்களையும் நிச்சயம் எதிர்கொள்ளும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.