பி.சுகந்தி
அகில இந்திய துணைச் செயலாளர்,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

பசி, பட்டினி, ஓய்வின்மை இவற்றை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலை, ஓய்வு, உறக்கம், வாக்குரிமை என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பெண்கள் வீதிகளில் இறங்கி வெற்றி பெற்ற நாள் தான் சர்வதேச மகளிர் தினம்.

உலகம் முழுவதிலும் 18-ம் நூற்றாண்டுகளில் தொழில் புரட்சிகள் ஏற்பட்டு ஆண்களுக்கு நிகராய் பெண்களும் தொழிற்சாலைகளில் உழைத்தனர். ஆண்களை விட இன்னும் கூடுதலாக உழைத்தனர். ஆனாலும் அவர்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை.

10 ,16 மணி நேரம் எந்திரங்களை போல இயங்கிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க உலகம் முழுவதிலும் பெண்களுக்கான ஒரு தினத்தை கொண்டாட வேண்டும் என ஜெர்மனியைச் சார்ந்த சோஷலிச ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர். கிளாரா ஜெட்கின் முதன் முதலில் அறிவித்தார்.

1910-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற சர்வதேச சோசலிச பெண்கள் மாநாட்டில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் உலக மகளிர் தினமாக ஒரு தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அத்தகைய தீர்மானமே இன்று மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

பெண் விடுதலை சாத்தியம் தானா?

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும் பெண் விடுதலை உலகமெங்கும் சாத்தியமானதா? எப்போது பெண் விடுதலை சாத்தியப்படும்? பொருளாதார சுதந்திரம் மட்டும் பெண்களுக்கு விடுதலை தந்து விடுமா? முரண்பாடுகள் நிலவும் இந்த சமூகத்தில் அனைத்து பெண்களின் நலன்களும் ஒரே மாதிரியாக இருக்குமா? பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், அரசியல் என அனைத்திலும் பெண்களுக்கு சம உரிமைகள் எப்போது கிடைக்கும்?

இப்படி பல கேள்விகளுக்கு தலைசிறந்த தொழிற்சங்கவாதி அலெக்ஸாண்ட்ரா குலந்தாய் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பதிலளித்து விட்டார். ஆண்களின் உலகைப் போலவே பெண்களின் உலகமும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. எனவே ஒரு பகுதியினரின் நலன்களும், எதிர்பார்ப்புகளும் மற்ற பகுதியினரிடமிருந்து வேறுபடுகிறது. பெண் விடுதலை என்ற கோஷத்தை முன்வைக்கும் ஒரு பணக்கார பெண்ணும், உழைக்கும் பெண்ணும் எதிர்பார்க்கும் சமூகம் என்பது வேறு வேறானது. உழைக்கும் பெண் சுரண்டலற்ற ஒரு சமூகத்தை எதிர்பார்க்கிறாள். புரட்சிகரமானவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ஒரு பெண்ணியவாதி சமூக ,பொருளாதார அமைப்பை மாற்றி அனைவருக்கும் பொதுவான சமத்துவ அமைப்பை எதிர்பார்ப்பதில்லை. ஆகையால் வர்க்க சுரண்டலை தகர்க்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. பெண் விடுதலையும், மானுட விடுதலையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று அன்றே அவர் கூறினார்.

புரட்சிக்கு முன் சோசலிச நாடுகளில் பெண்களின் நிலைமை

சோசலிச புரட்சி நடந்த நாடுகளில் புரட்சிக்கு முன்பு பெண்கள் இருந்த நிலை குறித்த பல்வேறு ஆய்வுகள் உள்ளன. முன்னாள் சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கியூபா, முன்னாள் ஜெர்மனிய ஜனநாயக குடியரசு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகிய நாடுகள் சோசலிச அமைப்பை உருவாக்கி பல பிரமிக்கத்தக்க சாதனைகளை புரிந்த நாடுகளாகும். இன்று பல சிதைவுகள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்நாடுகள் சோசலிச கட்டுமானத்தின் மூலம் சாதித்தவற்றை அழிக்க இயலாது. முன்னால் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள வயதான பெண்கள் மீண்டும் அதே சோசலிச கட்டமைப்பு வர வேண்டும் என விரும்புகிறார்கள். சமூக மாற்றம் நடைபெற்ற நாடுகள் அனைத்திலுமே புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்பட்டு வந்தனர். ரஷ்யாவில் 1897-இல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அங்கு பெண்களின் கல்வி அறிவு வெறும் 13% மட்டுமே என்கிறது. தொழிற்சாலைகளில் 12 முதல் 14 வயது சிறுமிகள் 18 மணி நேரம் கடுமையாக உழைத்தனர். தொழில் வளர்ச்சி சிறுமிகளையும், பெண்களையும் வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து நூதனமான முறையில் அடிமைகளாக்கியது. கிராமங்களில் சொத்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. பெண்கள் ஆண்களின் சொத்தாகவே கருதப்பட்டனர்.

மக்கள் சீனத்தில் புரட்சிக்கு முன் பெண்கள் அடிமைகளாகவே கருதப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியில் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்கள் போக பொருளாகவே நடத்தப்பட்டனர். வியட்நாம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான் இருந்தது. உயர் குடும்பங்களை சார்ந்த பெண்கள் மட்டுமே பொது வெளியில் தென்பட்டனர்.

கியூபாவில் பெண்களை புரட்சியில் ஈடுபட வைப்பதென்பது புரட்சிக்குள் ஒரு புரட்சியாக இருந்ததாக பிடல் காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். பழமையில் ஊறிப்போன பெண்களை புரட்சி பணியில் ஈடுபட வைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. .வீட்டுக்கு வெளியே சென்று உழைத்த பெண்கள் பொருளாதார நெருக்கடியினால் வேலை செய்தார்களே தவிர, பெண் விடுதலை பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் வேலை செய்யவில்லை. புரட்சிக்கு முன்பு ஏராளமான பெண்கள் பாலியல் தொழிலால் சுரண்டப்பட்டனர். பெண்கள் நர்ஸூகளாக, ஆசிரியர்களாக, குமாஸ்தாக்களாக பணியாற்றினார்களே தவிர, அவர்களுக்கு அதிகாரம் இல்லை. புரட்சிக்குப் பின்னர் பெண்களுக்கான கூட்டமைப்பு துவங்கப்பட்டது. அதன் நோக்கம் பெண்களுக்கான உரிமைகளை பெற்று தர வேண்டும் என்பதைவிட பெண்களை சோசலிச கட்டுமான பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பதாக இருந்தது.

*புரட்சியில் பெண்களின் பங்களிப்பு*

உலகில் புரட்சி நடந்த பல்வேறு நாடுகளில் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. சோவியத் யூனியனில் புரட்சியில் பங்கு பெற்ற பெயர் தெரியாத பல கதாநாயகிகள் ஏழைகள். கிராமங்களில் இருந்தவர்கள், சூறையாடப்பட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள், கிழிந்த பாவாடை, தலையில் சிவப்பு ஸ்கார்ப். குளிரில் இருந்து தப்பிக்க ஒட்டு போட்ட கோட் போட்ட இளம்பெண்கள், மூதாட்டிகள், ராணுவ வீரர்களின் மனைவிகள், கூலித் தொழிலாளிகள், வீட்டோடு இருக்கும் பெண்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி, சோவியத் புரட்சியில் பெண்களின் பங்கு மகத்தானது. சுயநலமின்றி மகிழ்ச்சியுடன் ஒரே நோக்கத்தோடு பங்கேற்றனர். ராணுவத்தில் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றினர். பெண்கள் பல நூற்றாண்டுகளாக கிராமங்களில் நிலவிய நிலபிரபுத்துவத்தை ஓட ஓட விரட்டினர். அலை அலையாக பெண்கள் திரண்டு கடல் போல் வந்தனர். பெண்கள் செங்கொடியையும், கம்யூனிசத்தையும் தூக்கிப் பிடித்தனர். இப்பெண்களை ஒன்று திரட்டுவதில் அலெக்ஸாண்ட்ரா கொலந்தாய், குரூப்ஸ்கயா (புரட்சியாளர் லெனினின் இணையர்) உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் பங்கு மகத்தானது. பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது என்பதை சோவியத் புரட்சி நிரூபித்தது. புரட்சிக்கு பின்னரும் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்.

வியட்நாம் புரட்சியை வழிநடத்திய ஹோச்சிமின் போன்றவர்கள் பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சியை தொடர இயலாது என்பதை உணர்ந்து பெண்களைத் திரட்டினர். வியட்நாம் சமூக அமைப்பில் தாய் வழி சமூகத்தின் சுவடுகளைக் காண முடிந்தது. 1930-ல் வியட்நாம் தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டது. பெண்களின் சங்கம், பெண்கள் பங்களிப்பில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் குறித்து வலியுறுத்தியது. வியட்நாம் புரட்சியில் மட்டுமின்றி அந்நாடு ஒவ்வொரு முறை போரை சந்திக்க நேரிட்ட போதும் பெண்கள் ஆண்களுக்கு சமமாக போரில் பங்கேற்றனர். துப்பாக்கி ஏந்திய போராட்டம், கொரில்லா தாக்குதல் என இவர்கள் சளைக்கவில்லை. வயல்வெளிகளில் உணவு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டே எதிரிகளை தாக்கவும் செய்த வீராங்கணைகள் இப்பெண்கள் .

1945 முதல் 75 வரை 30 ஆண்டுகள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமங்களை காவல் காப்பது, தகவல் தெரிக்கும் நபர்களாக செயல்படுவது, பிரச்சாரம் செய்வது, ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பது என பெண்கள் ஆற்றிய பணிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. தாய்மார்களாக, மனைவிகளாக, சகோதரிகளாக அனைத்து பாரம்பரிய பணிகளை செய்து கொண்டே, நாட்டைக் காக்கும் பணிகளையும் செய்து வந்தனர்.

*சீனப் புரட்சி*

சீனா அதிகம் கிராமங்களை கொண்ட நாடு. பெண்கள் கடுமையாக உழைத்த போதிலும் சம உரிமைகள் இல்லை. கிராமப்புறங்களில் பெண்கள் நிலப்பிரபுக்களை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தினர். நகரங்களில் இளம் பெண்கள், மாணவிகள் பெரும் எண்ணிக்கையில் புரட்சியில் பங்கேற்றனர். அடிமை நிலையில் இருந்து அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக புரட்சி அமைந்தது. கிராமப்புறங்களில் பெண்கள் பங்கேற்கும் கூட்டங்களில் தன்னுடைய கசப்பான அனுபவங்களை பேச அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு நியாயம் வேண்டி பெண்கள் பேசுவதற்கு முடிந்தது. 1927-ல் துவங்கி ஏராளமான பெண்கள் சீனாவில் பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் பெருமளவில் போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

கிழக்கு ஜெர்மனி மற்றும் இதர கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் புரட்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அந்த நாடுகளிலும் பெண்களின் உரிமைகளுக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பணக்கு பெற முடிந்தது.

சோசலிச நாடுகளில் பெண்கள்

சோவியத் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த அலெக்ஸாண்டரா கொலந்தாய் உலகுக்கே முன்மாதிரியான சட்டங்களை இயற்றி பெண் விடுதலைக்கான வலுவான சமூக அடித்தளத்தை உருவாக்கியவர். பழைய அமைப்புகள் எல்லாவற்றையும் தகர்த்து புதிய சமுதாயம் படைக்கத் தயாரானால், குடும்ப அமைப்பை மட்டும் தொடக்கூடாது என்று பதறுகின்றவர்களை கடுமையாக விமர்சித்தவர் இவர். பெண்களின் பணிகள் புதிய சோசலிச சமூகத்தில் சமூகமயமாக்கப்படுவதை உறுதிப்படுத்தினார். அங்கு கல்வி நிறுவனங்கள் பெண்களின் திறனை வளர்க்க உதவுவதாக மாற்றப்பட்டன. கற்பதற்கான நேரம் பெண்களுக்கு கிடைக்கும் இடத்தில், பொது அடுக்களை, பொது சாப்பாட்டறை, பொது சலவையகம், பராமரிப்பு வசதி பொது குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றை உருவாக்குவதை சட்டம் ஆக்கினார். எதெல்லாம் பெண்களின் வேலை என்று குடும்ப அமைப்பு திணித்து வைத்ததோ அதையெல்லாம் அரசின் வேலையாக மாற்றினார். மாமேதை லெனின் வார்த்தைகளில் சொன்னால் நச்சரிக்கும் வீட்டு வேலையில் இருந்து பெண்களை விடுதலை செய்ய சட்டபூர்வமான ஏற்பாடுகளை செய்தார் அவர்.

சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி மேலை நாடுகளில் பெண்களிடையே புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சம வேலைக்கு சம ஊதியம், பணியிடங்களில் பாதுகாப்பு சட்டங்கள், மகப்பேறு வசதி, தொழிற்சங்கத்தில் பெண்களின் பிரச்சனைகளை விவாதிப்பதில் முக்கியத்துவம் போன்றவை குறிப்பிடத்தக்க ஒன்றாக, சோசலிச சோவியத்தில் நிலவியது. மேலும் திருமண உறவுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமைகள், பெண்களுக்கு விவாகரத்து கோரும் உரிமை, திருமணம் செய்து கொள்ளும் உரிமை போன்றவை உறுதி செய்யப்பட்டன. பெண்களின் இரட்டை சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்பட்டன. அனைத்திற்கும் மேலாக கல்வியில் அதிகம் குறிப்பாக கணிதம், அறிவியல், மருத்துவ கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. 1975-ல் கல்லூரிகளில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பெண் மருத்துவர்கள் எண்ணிக்கை ஆண் மருத்துவர்களை காட்டிலும் அதிகமாக இருந்தனர்.

அறிவியல் துறையிலும், பொறியியல் துறையிலும் பெண்கள் பிரகாசிக்கத் துவங்கினர். வான்வழி ஆய்வில் கூட அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றினர். எனவே தான் முதன் முதலில் ஒரு பெண்ணை (வாலன்டிணா தெரஸ்கோவா) விண்வெளிக்கு அனுப்ப முடிந்தது. விளையாட்டு துறையில் உலக அளவில் இப்பெண்கள் பல சாதனைகளை படைத்தனர். சோவியத் யூனியன் சிதைந்த பின்னரும் விளையாட்டுத் துறையில் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் முன்னணியில் இருப்பதற்கு காரணம் சோசலிச அரசு கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் கொடுத்தது தான். குழந்தைப் பருவம் முதல் அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து, அதில் முன்னேற, கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்பு வசதிகளும் இத்தகைய சாதனைகளை அவர்கள் செய்வதற்கு வழிவகை செய்தது. சோசலிச கட்டுமானம் இல்லாமல் இத்தகைய சாதனைகள் சாத்தியமில்லை.

கியூபா

கியூபாவில் புரட்சிக்கு பின் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட்டது. தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பிரத்தியேக பயிற்சிகள் குறிப்பாக கல்வி கட்டமைக்கப்பட்டு நாட்டின் உற்பத்தியில் பெண்களின் பங்கை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கியூபாவில் கணவனும், மனைவியும் குடும்ப வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. விவாகரத்து ஆண் பெண் இருவருக்கும் சமத்துவமான உரிமைகளை கொடுத்தது. கியூபாவில் ஒரு மாத காலத்தில் விவாகரத்து வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1960-களிலேயே, மிக ஆரம்ப நிலையிலேயே கியூபப் பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பெண்களை வேலைவாய்ப்பிற்குள் கொண்டு வந்து அவர்களை மேலாளர் நிலைக்கு உயர்த்துவது, கியூபப் பெண்கள் கூட்டமைப்பின் முன்னுரிமையாக எப்போதுமே இருந்து வருகிறது. இது அன்றாடப் பொருளாதார சமூகக் கண்ணோட்டத்தில், பெண்களை மேலும் சுதந்திரமானவர்களாக வாழ வழிவகுக்கிறது.

பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்கும் விகிதம் 39.3%. வேலைக்குப் போகும் பெண்களின் கல்விநிலை உயர்ந்து கொண்டே வருகிறது. 53.1% பேர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும், 34.2% பேர் பல்கலைக் கழக அளவிலான கல்வியும் பெற்றிருக்கிறார்கள்.

பெண் மேலாளர்கள் 38.6%, தொழில்நுட்பவியலாளர்களில் 66.6%, நிர்வாகப் பணிகளில் 69%, சேவைத் துறையில் 45.4%, தொழிலாளர்களில் 16.7% பெண்கள். பொது மருத்துவம் மற்றும் சமூக உதவித் திட்டங்களில், 70.95% பயனாளிகளாகப் பெண்கள் உள்ளார்கள். கல்வியில் 68.9%, அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் 49.3%, பண்பாடு மற்றும் விளையாட்டில் 43.6% பெண்கள் பங்கேற்பு உள்ளது. மொத்த விவசாயிகள் 25%. இவர்களில் 13% நேரடி உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். 42% பெண்களால் விவசாய அமைப்பின் அறிவியல் திறன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் கியூபப் பெண்கள் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள். மக்கள் அதிகார தேசிய சபை எனும் அவர்களது நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளில் 52.3% பேர் பெண்கள். மாகாண சபைகளில் 53.3% பேர் பெண்கள்.

4 பெண் ஆளுநர்கள், 12 பேர் பெண் துணை ஆளுநர்கள் கியூபாவில் இருக்கிறார்கள். நகர்மன்ற சபைகளில் 88 பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். இது மொத்தத்தில் 52.7% ஆகும். 58 பெண் மேயர்கள் உள்ளனர். இது மொத்தத்தில் 35.4% ஆகும்.

ஜெர்மன் ஜனநாயக குடியரசில் 1949- 89 இந்த குறுகிய காலத்தில் பெண்கள் நிலை பெரிதும் மேம்படுத்தப்பட்டது. பெண் விடுதலை பெற பொருளாதார சுதந்திரம் தேவை என்பதை கணக்கில் கொண்டு, பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த சோசலிஸ்ட் யூனிட்டி கட்சி மூன்று முக்கிய நோக்கங்களை கொண்டிருந்தது.

1.ஆண் பெண் சமத்துவம்.
2.உழைக்கும் பெண்களை உயர்த்துதல்.
3.தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரத்தியேக பாதுகாப்பு அளித்தல்.

இவையே அந்த அரசின் நோக்கமாக இருந்தன. முதல் பத்தாண்டுகளில் பெண்களை அந்நாட்டில் உழைக்கும் சக்தியுடன் இணைக்கும் பணியினை மேற்கொண்டனர். உலகப்போரின் காரணமாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் உழைப்பு சந்தைக்குள் வந்துவிட்டனர். பெண்களுக்கான நிறைய சட்டங்கள் இந்த காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கான கமிட்டிகள் அமைக்கப்பட்டன. பாசிச எதிர்ப்பு பிரச்சாரம், கலாச்சார விழிப்புணர்வு போன்றவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட்டன. ஜனநாயக மகளிர் சங்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பெண்களை ஒன்று திரட்டி அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பணியை மேற்கொண்டனர். ஆண் பெண் சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல தொழிற்சங்கங்கள் நல்ல வாய்ப்பை அமைத்தது. தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையில் 37% பேர் பெண்கள் என்ற நிலை அதிகரித்தது.

வியட்நாம்

வியட்நாமில் புரட்சிக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே நிர்வாகத் துறையில் மிக அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருந்ததற்கு காரணம், சோசலிச அடித்தளம் ஆகும். சம வேலைக்கு சம ஊதியம், உழைக்கும் பெண்களுக்கு சாதகமான ஏராளமான சட்டங்கள், திருமணம் மற்றும் குடும்ப சட்டம் போன்றவை பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்டன.

மக்கள் சீனா

மக்கள் சீனத்தை பொருத்தவரை மாவோ தலைமையில் அரசு அமைந்தவுடன் பாலின சமத்துவ கருத்துக்கள் முன்னிறுத்தப்பட்டன. பெண் வெறும் போகப் பொருள் அல்ல என்பதை உணர்ந்து பாலியல் தொழிலை ஒழிக்க கறாரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. 2018 மார்ச் மாதம் பெண்களின் சரித்திர மாதம் என அனுசரிக்கப்பட்டது.

விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை, வயது வந்த இருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் மூன்றாவது நபர் நுழைந்து, அதை தடுக்க இயலாதபடி சட்டம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம், திருமணத்திற்கு பின் சேரும் சொத்துக்களில் ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் ஓரளவு ஆளுமை பெற்றவர்களாக இருந்தனர். 1950-லேயே பெண்களுக்கு விவாகரத்துக்கு உரிமை அளிக்கப்பட்டது. 2005-ல் குடும்ப வன்முறை குற்றமயமாக்கப்பட்டு விட்டது. பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டது. எனவே, இத்தகைய சம்பவங்கள் குறைய துவங்கின. பெண்கள் இரவிலும் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நிலை சீனாவில் வந்தது. சீன மக்கள் தொகை அதிகம் என்பதால் குடும்ப கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டது. அப்படி பிரச்சாரம் செய்யும் போது கூட கணவன் மனைவி இருவரையும் அழைத்துப் பேசி அதன் அவசியத்தை உணர்த்தினர். பெண்ணை மட்டும் மையமாக வைத்த குடும்ப கட்டுப்பாடு நடத்தப்படவில்லை. கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சில பெண்கள் உலகில் முன்னணியில் இருந்தனர். உழைப்பு சந்தையில் பெண்களின் மதிப்பு கணிசமாக இருந்தது. 1997-ல் கொண்டுவரப்பட்ட அர்பன் துபாயோ திட்டம் அனைவரையும் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டது. மக்கள் சீனத்தில் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி குடிபெயர்தல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. குடிபெயரும் பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அரசியலில் பெண்களின் பங்கு 30.4% என தெரிகிறது. எனவே இதில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதை அரசு உணர்த்துகிறது.

எந்தப் பாதை?

சோசலிச சமூக அமைப்பே பெண்களுக்கு சாதகமானது. சோசலிச நாடுகளில் அனைத்து வளங்களும் பொதுவுடமை ஆக்கப்படுகின்றன. ஆண் பெண் பாகுபாட்டை சோசலிச கட்டமைப்பு ஏற்பதில்லை. சோசலிச புரட்சி, பெண்களை பொதுவெளிக்குள் கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் காண முடிகிறது. புரட்சி முடிந்த உடனேயே சமத்துவம் வந்துவிடாது என்பதை லெனின், மாவோ, காஸ்ட்ரோ, ஹோசீமின் போன்ற தலைவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால் பாலின சமத்துவத்திற்கு அடிப்படை தேவைகள் என்னவோ அவற்றை செய்ய முயன்றனர். அதற்கான சட்டங்களை கொண்டு வந்தனர். அமுல்படுத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர். சோசலிசம் என்பது பொருளாதார சமத்துவத்தை மட்டும் நிலைநிறுத்துவது அல்ல. அது சமூக சமத்துவத்தையும் உள்ளடக்கியது. சமூக சமத்துவத்தின் வழியாக பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவதை குறிக்கோளாக கொண்டது.

சுரண்டலில்லாத ஒரு அமைப்பில் மட்டுமே மனிதர்கள் சுதந்திரமாக வாழ இயலும். பெண் விடுதலை மானுட விடுதலையோடு இணைந்தது. மனிதகுல விடுதலையை சோசலிசம் மட்டுமே சாத்தியமாக்கும். அத்தகைய சமூகத்தை காண தொடர் போராட்டங்களை நடத்த மகளிர் தினத்தில் உறுதியேற்போம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *