மக்கள் இசை கட்டுரை – இரா.இரமணன்

மக்கள் இசை கட்டுரை – இரா.இரமணன்




நமது கிராமப்புறங்களில் ஏற்றம் இறைப்போர், களை எடுப்போர், துணி துவைப்பவர், விறகு வெட்டுவோர் களைப்பு தெரியாமல் இருக்க பாடுவதைக் காணலாம். இதை பல கவிஞர்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்திருப்பார். வால்ட் விட்மன் (Walt Whitman, மே 31, 1819 – மார்ச் 26, 1892) என்கிற அமெரிக்கக் கவிஞர் அவரது புகழ்பெற்ற ‘புல்லின் இதழ்கள்’ கவிதை தொகுப்பில் தச்சர்கள், பொறியாளர்கள், கொத்தனார்கள், மரம் வெட்டுபவர்கள், படகோட்டிகள், காலணி செய்வோர் அடிமைகள், இந்தியர்கள், படைவீரர்கள், தாதியர், பணிப்பெண்கள், ஓட்டுனர்கள், பயணிகள், மாணவர்கள், காவல்துறையினர், குற்றவாளிகள், குழந்தைகள், ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் பலரை வணங்குகின்றார் என்கிறார் லாரி எஸ்.சு. ( ‘வால்ட் விட்மனின் அமெரிக்கக் கனவு’கட்டுரை). தனது ‘அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன்’ என்கிற பாடலில் இத்தகைய மனிதர்கள் பாடுவதை விவரிக்கிறார். பாரதியாரும் தனது குயில் பாட்டில் இப்படிப்பட்ட இசையை பதிவு செய்திருக்கிறார். அவர் விட்மன் போன்ற மேலைநாட்டுக் கவிஞர்களை பயின்றவர். இருவரும் மக்கள் இசையை ரசிப்பதை இந்த இரு பாடல்களில் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவின் பாடல் கேட்கிறேன்
வால்ட் விட்மன் .

அமெரிக்கா பாடுவதைக் கேளீரோ .
பலவித மகிழ்ச்சிப் பாடல்
நான் செவி மறுக்கிறேன்…
மகிழ்ச்சியும் வலியதுமாய்
ஒவ்வொருவரும் அவரவருக்கானதை.

பொறியாளர்களின் இசை
பலகை, மரத் துண்டுகளை அளக்கும்
தச்சன் பாடும் பாடல்.
தன் படகில் அவனுக்கேயானதை

பாடும் படகோட்டி.
கப்பலின் தளத்தில்
மாலுமியின் பாடல்.

அமர்ந்து பாடும்
காலணி தைப்போர்.
நின்று பாடும்
தொப்பி விற்பவர்
மரமறுப்போரின் இசை.
வயல்நோக்கி செல்லும் கருக்கிருட்டிலும்
உச்சிவெயில் உணவு நேரத்திலும்
அந்திக் கருக்கலிலும்
உழவடிப்பவனின் பாடல்.

தாயின் இனிய தாலாட்டு..
வேலையினூடே பாடும்
இளைய மனையாட்டியின் இசை.
தைக்கும்போதும் துவைக்கும்போதும்
பெண்ணொருத்தி பாடும் பாடல்.
ஒவ்வொருவரும்
வேறு எவருக்குமல்லாத
தமக்கேயான
பாடலைப் பாடுவர்.

பகலில்
பகலுக்கு பொருத்தமானது.
இரவில்
கட்டுடல் கொண்ட இளையோர்
நட்புடன்

தம் இனிய பாடல்களை
உரத்து பாடும் குழுப் பாடல்கள்.

I Hear America Singing

Walt Whitman

I hear America singing, the varied carols I hear,
Those of mechanics, each one singing his as it should be blithe and strong,
The carpenter singing his as he measures his plank or beam,
The mason singing his as he makes ready for work, or leaves off work,
The boatman singing what belongs to him in his boat, the deckhand singing on the steamboat deck,
The shoemaker singing as he sits on his bench, the hatter singing as he stands,
The wood-cutter’s song, the ploughboy’s on his way in the morning, or at noon intermission or at sundown,
The delicious singing of the mother, or of the young wife at work, or of the girl sewing or washing,
Each singing what belongs to him or her and to none else,
The day what belongs to the day—at night the party of young fellows, robust, friendly,
Singing with open mouths their strong melodious songs.

*****************

குயில் பாட்டு (. குயிலின் காதற்கதை அடி (28-41)
பாரதியார்.

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சம் பறிகொடுத்தேன்

வால்ட் விட்மன் (Walt Whitman, மே 31, 1819 – மார்ச் 26, 1892) ஒரு அமெரிக்கக் கவிஞர், இதழாளர் மற்றும் கட்டுரையாளர். அமெரிக்க கவிதையுலகின் பெரும் புள்ளிகளில் ஒருவர். அமெரிக்க புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் (long island) பிறந்த விட்மன் இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார். 1842ல் ஃபிராங்க்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார். 1855ல் அவருடைய மிக முக்கிய கவிதைப் படைப்பான லீவ்ஸ் ஆஃப் கிராஸ் (புல் இலைகள், Leaves of Graves) வெளியானது. சொந்த செலவில் முதலில் இதனை பதிப்பித்த விட்மன் 1892ல் இறக்கும் வரை இதனை திருத்தி எழுதி வேறு பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே லீவ்ஸ் ஆஃப் கிராஸ் உருவாகக் காரணமாயிற்று. பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதால் இந்நூல் வெளியான காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார். அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.(விக்கிப்பீடியா)

–  இரா.இரமணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *