Subscribe

Thamizhbooks ad

நூல் மதிப்புரை: மக்கள் மொழியில் ஒரு மறுவாசிப்பு – ச.சுப்பாராவ்

 

ஏதோ ஒரு ஆசையில் வாங்கி வைத்திருந்தாலும், நீண்ட நாட்களாக பூமணியின் கொம்மையை வாசிக்காமலேயே வைத்திருந்தேன். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை விட்டால், இத்தனை பெரிய நாவலை வாசிக்க என்றுமே நேரம் கிடைக்காது என்று கையில் எடுத்தேன்.

பொதுவாக, மறுவாசிப்பு என்றால், ஒரு குறிப்பிட்ட பாத்திரம் அல்லது ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்துப் புனைவதாக இருந்தால்தான் சுவையாக இருக்கும் என்று நானாக ஒரு விதியை மனதில் வைத்துக் கொண்டிருந்தேன். முழு கதையையும்தான் வியாசன் எழுதிவிட்டானே, பிறகு இன்னொருவர் எதற்கு அதையே திரும்பவும் முழுவதுமாக எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றும். இருப்பினும், பூமணி என் மனம் கவர்ந்த படைப்பாளி என்பதாலும், பாரதம் என் மனம் கவர்ந்த கதை என்பதாலும் வாங்கி வைத்திருந்ததை இப்போது தான் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் மறுவாசிப்பு பற்றிய எனது மேற்சொன்ன முன்முடிவையும் மாற்றிக் கொண்டேன். நல்ல படைப்பாளி முழுவதையும் எழுதலாம். எழுதி ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் ஒரு புது வெளிச்சம் பாய்ச்சலாம். தவறில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

கொம்மையின் சிறப்பு அதன் பேச்சு மொழி. கிருஷ்ணனும், அர்ச்சுனனும் கோவில்பட்டி கரிசல் மண்ணின் மொழியில் பேசும்போது இன்னும் நமக்கு நெருங்கி வருகிறார்கள். அவர்கள் தலையைச் சுற்றியுள்ள அந்த ஒளி வட்டம் மறைந்து சாதாரண மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். புராணப் பாத்திரங்களில் ஏற்றி வைக்கப்பட்ட புனிதங்களை தேய்த்து நீக்கி, அவர்களை என் போன்ற, உங்கள் போன்ற மனிதர்களாக பேச விடுவது பெரிய ரிஸ்க்கான வேலை. அதை மிக எளிதாக, இயல்பாக, நம்பும்படி செய்திருக்கிறார் பூமணி.

கிருஷ்ணனும், அர்ச்சுனனும் மாமன் மச்சானாக கேலியும், கிண்டலுமாகப் பேசுகிறார்கள். அர்ச்சுனன் கிருஷ்ணனை போடா மாட்டுக்காரப் பயலே என்கிறான். வாடா கிச்சு என்கிறான். அர்ச்சுன்னை போடா அச்சு என்கிறான் கிருஷ்ணன். அதை நாமும் மிக இயல்பாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கதையின் நடை போய்க் கொண்டே இருக்கிறது. இந்த அற்புதமான நடையில் கீதையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய புனிதத்தை போகிற போக்கில் தட்டி விட்டுப் போகிறார் பூமணி.

போர்க்களத்தில் அர்ச்சுனனும் கிருஷ்ணனும் பேசுவதை பூமணியின் மொழியில் சொல்கிறேன். கேளுங்கள்.

“மச்சான், கண்ணக் கெட்டிக் காட்ல வுட்ட மாதிரி இருக்குது. அப்படிப்பட்ட எடத்துல தேரக் கொண்டு வந்து நிறுத்தீருக்கயே.. இது ஒனக்கே நல்லா இருக்கா.“

“அடே போர்க்களத்துல நின்னுக்கிட்டுப் பொலம்புறது அவமானம். திடீர்னு ஒனக்கு என்னதான் ஆச்சு..“

“புத்தி பேதலிக்குது மச்சான். சுத்தி நிக்கிற அத்தன பேரும் நமக்கு ஒறவுக்காரங்க. அங்க பாரு. பிதாமகர் துரோணர் கிருபர் மாமன் சகோதரன் நண்பன் மாமனார் இவங்கடோடயா சண்ட போடச் சொல்ற. காண்டீபம் ஏந்துற கையி நடுங்குதே. நா என்ன செய்யட்டும் மச்சான்“

“ஒன்ன நம்பி எத்தன சேனைக நிக்கிது பாரு. அவங்களுக்கு என்ன பதில் சொல்லப்போற. எதிரிக அத்தன பேரையும் கொன்ன குமிச்சிருவன்னு வாய் கிழியப் பீத்திட்டு வந்தயே. இப்ப என்ன ஆச்சு..“

இப்படியே பேச்சு போகிறது. கடைசியில்

கிருஷ்ணன் சிரிச்சுக்கிட்டே மூச்சுப் பிடிச்சு அர்ச்சுன்ன் காதுல எதையோ ஓதுறான். அவனும் பொறுமையாக் கேட்டுக்கிறான். அதோட சரி. கோபதாபமெல்லாம் அடங்கீருச்சு. அர்ச்சுன்ன் கிருஷ்ணன் முதுகுல ஒரு பொய்யடி குடுக்கான்.

உண்மையிலேயே மாட்டுக்காரன் மாயக்காரந்தாண்டா.

கொம்மை | KOMMAI: நாவல் | NOVEL (Tamil Edition) eBook ...

பூமணி காட்டும் கீதோபதேசம் இவ்வளவுதான்.

கர்ணனை அர்ச்சுன்“ன் கொல்வதும் இப்படித்தான் எந்த பில்டப்பும் இல்லாமல் வருகிறது. கிருஷ்ணன் அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாக வாங்கும் கதையெல்லாம் இல்லை. பள்ளத்தில் தேர்ச்சக்கரம் சிக்குகிறது. இறங்கி தேர் சக்கரத்தைத் தூக்க முயல்கிறான் கர்ணன்.

“மாப்பிள இந்தச் சந்தர்ப்பத்த நழுவவுடாத. அவனக் கொல்லுடா,“ என்கிறான் கிருஷ்ணன்.  “மச்சான் ஆயுதமில்லாற அப்பவியக் கொல்லச் சொல்றயே,“ என்கிறான் அர்ச்சுனன்.  “ஆமா, பெரிய யோக்கியன் பேச வந்துட்டான். அண்ணைக்குப் பாஞ்சாலி இருந்த நெலமையவிட இது ஒண்ணும் மோசமானதில்ல,“ என்று கிருஷ்ணன் சொல்லவும் அர்ச்சுனன் அம்பை விடுகிறான். கர்ணன் காலி. நிஜமாகவே இப்படித் தான் நடந்திருக்க வேண்டும்.

மறுவாசிப்பு நூல்கள் பற்றி புத்தகம் பேசுது இதழில் மீண்டெழும் மறுவாசிப்புகள் என்ற தொடரை எழுதிய காலத்தில் நான் ஏராளமான மறுவாசிப்புகளை தீவிரமாக வாசித்திருக்கிறேன். அவற்றில் கிடைக்காத ஏராளமான புதுத் தகவல்கள் கொம்மையில் கொட்டிக் கிடப்பது எனக்கு உண்மையாகவே வியப்பாக இருக்கிறது.

சுக்ராச்சாரியாரின் மகளை நாம் ய்யாதி மூலம் அறிவோம். பூமணி அவருடைய மகன்களின் பெயரைத் தருகிறார். நமக்கு பிரகலாதன் மட்டும்தான் தெரியும். ஆனால் அவனுக்கு அனுகிலாதன், சமகிலாதன், கிலாதரன் என்று மூன்று சகோதரர்கள் இருப்பதை கொம்மை சொல்கிறது.

நமக்கு இ.டும்பியை, கடோத்கஜனைத் தெரியும். ஆனால் இடும்பி எங்ஙனம் காலம் முழுவதும் தனியாக எப்படி இருந்திருப்பாள்? இதை இதுவரை யாரும் யோசித்ததே இல்லையே. பூமணி அவளது குடும்ப விபரங்களைத் தருகிறார். கமடன் என்பவை அவள் மணக்கிறாள். சுங்கன், துங்கன் என்று இரு புதல்வர்கள் பிறக்கிறார்கள். கடோத்கஜன் மனைவியின் பெயர் பர்வதனி. அவனுக்கு அஞ்சனபர்வன், அஞ்சனவர்மன், மேகவர்ணன் என்று மூன்று புதல்வர்கள். மேகவர்ணனை விட்டு விட்டு அனைவரும் பாரதப் போரில் கலந்து கொண்டு உயிர் விடுகிறார்கள்.

எழுத்தாளர் பூமணி

பாரதக் கதை முழுவதையும் சொல்லிச் செல்வது என்றாலும் கொம்மை முக்கியமாக பாரதத்தில் வரும் அபலைப் பெண்களின் குரலைத்தான் உரக்க ஒலிக்கிறது. சக்களத்திகளான கங்கையும், சத்தியவதியும் பேசும் 15வது அத்தியாயம், வனவாசத்தில் திரௌபதியும், சகாதேவனும் (திரௌபதி சகாதேவனை செல்லமாக வாடா, போடா என்று பேசுகிறாள்) மனம்விட்டுப் பேசும் 108வது அத்தியாயம் இரண்டும் கிளாசிக். இந்த இரு அத்தியாயங்கள் இல்லாவிட்டாலும் கதை நகரும். உண்மையில் இந்த இரண்டும் மூலப் பிரதியில் இல்லை. ஆனால் அபலைகளை மனம் விட்டுப் பேசவிடுவதற்காக,  –  பேசவிட என்று சொல்வதைவிட புலம்பவிட என்று சொல்லலாம் – இந்த அத்தியாயங்களை  ஒட்டுப் போட்டது போல் இல்லாமல், திடீரென்று வரும் ஆசிரியர் கூற்று போல் இல்லாமல், மிக அழகாக, இயல்பாக சேர்த்திருக்கிறார்.

பாண்டவ, கௌரவ சகோதரர்களின் ஒரே சகோதரி துச்சலை. அவள் பற்றி யாரும் எந்த மறுவாசிப்பாளனும் கவலைப்பட்டதில்லை. அவள் சிந்து நாட்டு அரசன் ஜெயத்ரதனின் மனைவி. ஜெயத்ரதனுக்கு அபிமன்யு கொலையில் பெரிய பங்கு உண்டு. அவன் அர்ச்சுனால் பழிவாங்கப் படுகிறான் என்பதைத் தாண்டி துச்சலை பற்றி யாரும் இதுவரை கவலைப்பட்டதில்லை . நாவலின் இறுதியில் துச்சலைக்கு ஒரு அத்தியாயமே இருக்கிறது.

மகாபாரதம் ஒரு மாகசமுத்திரம். அதில் அலையாடும் பெண்களை அணுகப் பேரச்சம். அவர்களுடன் உரையாட மலைப்பு என்று முன்னுரையில் பூமணி சொல்லியிருக்கிறார். உண்மையில் அவர் அந்தப் பெண்களுடன் உரையாடுவதைப் பார்த்து நாம் தான் மலைத்துப் போய் நிற்கிறோம்.

கொம்மை – பூமணி

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு -2018

பக்கங்கள் – 600. விலை – ரூ 555.00

 

Latest

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக...

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலையாப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு பணியாளராக) வேலை செய்து, அங்கு பரவிய தொற்று நோயால் உயிரை இழந்து தான் செய்த பணியை தன் மகன் சுடலைமுத்துவிற்கு...

தொடர்: 24 : பிணைக்கைதி மீட்பும்,பாலஸ்தீன ஆதரவும்- அ.பாக்கியம்

பிணைக்கைதி மீட்பும் பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது. அரபு நாடுகளை  எண்ணெய் வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here