இரகசியமாய்
சொல்லித்தான்
கொடுக்கின்றன
அடைக்கலமாகக் கருதாமல்
அன்னையின் இல்லம் போல்
கருதும்
பறவைகள்!
செய்முறையாகப்
பறந்து காட்டியும்
அழைத்தும் பார்க்கின்றன…
ஆயிரமாயிரம்
இலை இறகுகள் இருந்தும்
பறக்கக் கற்றுக் கொள்வதேயில்லை
மக்கு மரம்!
கோபத்தில்
சப்தமிட்டும்,
எச்சமிட்டும்
கொத்தியும்
பறத்தலைக்
கற்றுக்கொடுக்கின்றனப்
பறவைகள்!
காற்றும்
தன் பங்கிற்கு
இறகுகளை
எப்படி அசைக்க வேண்டுமென
சொல்லிக் கொடுத்தும்;
எதன் பேச்சையும்
கேட்கவோ; கற்றுக்கொள்ளவோ
முன் வராத போதுதான்
காற்று
கன்னத்தில் அறைந்து
தள்ளியும் விடுகிறது
சில நேரம்!
கற்றலின்
அவசியம் உணராமல்போனால்
கட்டைக்காகவும்
கரிக்காகவும்
வெட்டுப்பட்டுத்தான்
ஆக வேண்டும்
மக்கு மரம்!