நூல் அறிமுகம்: தமிழில் சுரா எழுதிய “மாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள்” – பா.அசோக்குமார்

 

உலக புகழ்பெற்ற மாக்சிம் கார்க்கியின் மூன்று முத்தான கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுரா அவர்கள் அழகுத் தமிழில் மிகச்சிறப்பாக மூல நூலின் இயல்பு குறையாமல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்று நிச்சயமாகக் கருதலாம்.

1.மாஷ்கா:

மாஷ்கா என்ற ஒரு பெண்மணியை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ள கதையே இது. மூன்றே மூன்று கதாபாத்திரங்களை மட்டும் பிரதானமாகக் கொண்டு மிக நேர்த்தியாக மனித வாழ்வின் யதார்த்தத்தை காட்சிப்படுத்தியுள்ளார் மாக்ஸிம் கார்க்கி.

கால்கள் ஊனமான நிலையில் இருண்ட அறையில் ஒரு பெட்டியின் மேல் மட்டுமே காலமெல்லாம் வாழும் நிலையிலுள்ள சின்னஞ்சிறு சிறுவனின் மூலமே கதையானது நகர்த்தப்பட்டுள்ளது. குடிபோதையில் நாள்தோறும் தெருவில் சேறு சகதியில் உழன்று யாரேனும் ஓர் ஆடவருடன் வீட்டிற்கு வந்து தனது பணத்தேவைகளை பூர்த்தி செய்யும் விபச்சாரி(?)யே இந்த மாஷ்கா.

“லியாங்கோ”என்ற ஊனமிகு சிறுவனை பற்றிய கவலையாலும் அவனை கவனிப்பதற்காகவே மாஷ்கா அவ்வாறு வாழ்ந்து வருகிறாளா என்பதும் கேள்விக்குறியே. அன்றாடம் தன் தாயுடன் வந்து இரவு மட்டும் தங்கிச் செல்லும் ஆடவர்கள் பற்றிய கதையை அன்று புதிதாக வந்த ‘லியாங்கோ’ என்று அதே பெயர் கொண்ட மனிதரிடம் விவரிப்பது நம் கண்களை ரணமாக்கி துன்பக்கடலில் ஆழ்த்துவதாகவே உள்ளது.

அந்த மனிதன் தன் பெயரைக் கூட குறிப்பிட விரும்பதாகவே எண்ணம் உதித்ததைத் தவிர்க்க இயலவில்லை. அதிலும் அந்தச் சிறுவன் ‘விளக்கை அணைத்து விடட்டுமா?’ என்று இருமுறை வினவுவது துயரத்தின் உச்சமின்றி வேறென்னவென்று உரைப்பது?

சிறு சிறு பெட்டிகளில் பூச்சிகளையும் வண்டுகளையும் பிடித்து வைத்து அந்த சத்தத்திலேயே (இசைக்கச்சேரியில்) மகிழ்ந்து, மங்கலான சாளரக் கண்ணாடி வழியே தூரத்தில் தெரிவதாகக் கற்பிதங்கொண்டு கோதுமை சமவெளிகள் பற்றிய கற்பனையுடனும் வாழும் லியாங்கோவின் வாழ்வுமுறை நம்மை இனம்புரியாத துயர வானில் தத்தளிக்க வைப்பதாகவே உள்ளது. அந்த கண்ணாடியைத் துடைக்கச் சொல்லி, அச்சிறுவன் நாளும் கெஞ்சியும் மாஷ்கா துடைக்காமல் இருப்பது, கண்ணாடி கறை மறைந்து தனது கறை வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இருக்குமோ?

மற்ற மனிதர்களைப் போல் இல்லாமல் வித்தியாசப்பட்டு காணப்படும் லியாங்கோவை அங்கேயே தனது தாயுடனும் தன்னுடனும் இருக்கச் சொல்லும் போது நம்மை அறியாமலேயே அந்த பையனின் மீது பரிவும் பாசமும் மேலிடும் வண்ணமே உள்ளது. முடிவில் அந்த மனிதன் எடுக்கும் முடிவு ரம்மியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாஷ்கா என்ற பெண்ணின் வாழ்வை மிக எதார்த்த முறையில் சொல்லி மனித மனங்களின் குறிப்பாக ஆண்களின் கொடூர எண்ணத்தை, நடத்தையை தோலுரித்துக் காட்டுவதாகவே இந்த மாஷ்கா கதை மிளிர்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...

2.புகைவண்டி நிலையத்தில் வாழ்க்கை:

நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் ரயில்கள் இயங்கும் கிராமப்புற ரயில்நிலையத்தில் நடைபெறுவதாக அமைந்த கதையே இது. அங்கு வேலை பார்த்து வசித்துவரும் ஏழு நபர்களை கொண்டு பின்னப்பட்டுள்ள சுவாரசியமான கதை.

பகல் 12 மணிக்கு வந்து சென்ற ரயிலுக்கு பின் அடுத்து வரும் நான்கு மணி ரயிலுக்கான இடைப்பட்ட நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டரும் அவருடைய உதவியாளரும் நடத்தும் சம்பாஷணைகள் சுவாரசியமும் தத்துவமும் நிறைந்தவை. ஸ்டேஷன் கார்ட் மற்றும் சுவிட்ச் மேன்களில் ஒருவனான பட்டாளக்காரனுக்கும் இடையேயான உரையாடல் கேலி கிண்டலுடன் தொடங்கி கொந்தளிப்பான கோபதாபங்களுடன் நிறைவடையும் இயல்பை கொண்டதாகவே உள்ளது.

மற்றொரு ஸ்விட்ச் மேனான ‘கோமோஸோவ்’க்கும் அங்கு அவர்களுக்கெல்லாம் சமையல் செய்து தந்து பணிப்பெண்ணாக பணிபுரியும் 40 வயது கன்னிப்பெண் “அரீனா”க்கும் இடையேயான புதிதாக முளைக்கும் உறவு முறையும் அதற்காக ஸ்டேஷன் மாஸ்டரும் மற்றவர்களும் எடுக்கும் முடிவுமாஇ நகர்கிறது இந்த கதை.

எல்லா இடங்களிலும் பெண்களின் மீது ஆண்கள் நிகழ்த்தும் காழ்ப்புணர்ச்சியும் பெண்களையே பலிகடா ஆக்கி வரும் மேதாவித்தனமும் இங்கும் தொடர்வதே நம்மை சிந்திக்க வைப்பதாக உள்ளது. இறுதிக்காட்சியில் பணிப்பெண் அரீனா எடுக்கும் முடிவு நாம் சிந்திப்பது போலவே நிகழ்ந்தாலும் ஒரு நாள் முழுவதும் சுட்டெரிக்கும் கோதுமை வயலிலேயே படுத்திருந்து வானத்தை பார்த்து தன் வாழ்வை எண்ணிப் பார்க்கும் தருணம் மிகவும் ரணகளமான பதிவாகும்.

இந்த கதையில் சிற்சில தத்துவங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில:

“சீட்டு விளையாட்டு அதை விளையாடும் மனிதரின் மன ரீதியான வறுமையை வெளிப்படுத்துகிறது”
– சோப்பான் ஹவர் .

“மனப் பாதிப்பு விரக்தியின் தாய்”
– பராற்றின்ஸ்கி

“வாழ்க்கை கஞ்சத்தனமானது.
எல்லா நேரங்களிலும்
பழையதில் இருந்துதான்
வாழ்க்கை
புதியதைப் படைக்கிறது”
– ஃபொஃபானோவ்

Revolutionary Writer Maxim Gorky's NYC Sex Scandal | JSTOR Daily

3. வாசகன் :

மிக மிக முக்கியமான கதையாகவே இந்தக் கதையை நான் கருதுகிறேன். புதிதாக படைப்புகள் படைக்க விரும்பும் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் இந்த கதையை வாசிப்பது மிக மிக அவசியம் என்று முன்னுரையில் கூறியிருப்பது மிகமிக உண்மையான ஒன்றாகவே தோன்றுகிறது.

ஒரு படைப்பாளி ஒரு புதிய மனிதன் ஒருவனிடம், முன் அறிமுகம் இல்லாத ஆச்சரிய மனிதனிடம் உரையாடுவது போலவே இந்த கதையானது நகர்கிறது. அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல்… உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் அந்த புதிய மனிதன் எழுப்பும் வினாக்கள் மூலம் படைப்பாளனை சிந்திக்கத் தூண்டுவதாகவே உள்ளது இந்த கதைக்களம்.

படைப்பாளன் கூனிக்குறுகி நிற்கும் வண்ணம் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்த இயலாமல் தயங்கும் நிலையை மிக நேர்த்தியாயா லாவகமாக வாசகரிடையே கடத்தியுள்ளார் எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அவர்கள். இதைப்படிக்கும் ஒவ்வொரு வாசகரும் நாம் படிக்கும் ஒவ்வொரு படைப்பிலும் இந்த வினாக்களை எழுப்பினார்கள் எனில் நம் ரசனையின் தரம் உயரும் என்று உறுதியாக நம்பலாம்.

இந்த கதையைப் படித்து விட்டு புதியன படைக்க விரும்பும் படைப்பாளர்கள் யாவரும் சமூகத்திற்கு உயர்ந்த மேன்மைமிகு நல்விருந்து படைக்கும் தரமான படைப்புகளை வழங்கி வரலாறு படைப்பார்கள் என்று நிச்சயமாகக் கூறலாம்.

புதிய மனிதன் தன்னை வாசகனாக அறிமுகப்படுத்தி வாசகனாகவே அவரை விட்டு விலகிச் சென்றாலும் நம் மனது ஏனோ அவன் படைப்பாளனின் மனசாட்சியே என்று கண்டுணர்ந்து தெளிவதே கண்கூடு.
இந்தக் கதையில் சுரா அவர்களின் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு சற்று சிரமமாக இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. இந்த கதை கற்பனாவதத்துடன் கூடிய தத்துவ விவரணைகளுடன் நடைபெற்ற கதைக்களமாக அமைந்திருந்தது என்பதால் அவ்விதம் எனக்கு தோன்றி இருக்கக்கூடுமோ என்ற ஐயமும் எழாமலில்லை.

நல்லதொரு நூல் தொகுப்பு. முத்தான மூன்று கதைகள்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.

நன்றி.

Maksim Karkkiyin Moondru Kathaikal - மாக்ஸிம் ...

மாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள்
தமிழில்: சுரா
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள்:96
₹.50

💐 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.