மலடித்தாய் சிறுகதை – சீ.விஷ்ணு

மலடித்தாய் சிறுகதை – சீ.விஷ்ணு
அம்மா….

சத்தம் கேட்டதும் வெடுக்கென விழித்தாள் நீலா. ஐயோ! குழந்தை எந்திரிச்சிட்டா போலயே! பசியால அழுவுறா. பால் குடிச்சாதான் அமைதியா இருப்பா, இல்லைனா அழுதுக்கிட்டே இருப்பாளே.

எந்திரிச்சு முகத்தைக் கூட கழுவாம, நேரா போயி தொழுவத்துல இருக்குற ‘லஷ்மி’ய அவிழ்த்து விட்டுட்டு வேலைய பார்க்கணும்னு நெனச்சபடியே வெளியே வந்தாள்.

ஆனால், லஷ்மியோ ரொம்ப யதார்த்தமா கயித்த அவிழ்த்துக்கிட்டு போயி தன்னோட தாயோட விளையாடுறத பார்க்கிறாள்.

அடிப்பாவி! நீ தான் அறுந்த வாலாச்சே, அப்புறம் என்ன? நீ அடங்கவே மாட்ட… செல்லமாய் திட்டிக் கொண்டே தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஏன்னா, இராத்திரி அவ போட்ட முடிச்சு அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்துச்சி போல… பார்க்கிறாள்…

அடச்சே! இந்த லஷ்மிதான் எவ்ளோ அழகு. அந்த காப்பி கலர் தோள்’ல வெள்ளையா இருக்கிற அந்த அழகான கோடு. அவ பார்க்கிற பார்வ, ஓடும்போது யாரையும் கவனிக்கிறது இல்ல. எதுக்கும் பயம் இல்ல…

இதெல்லாம் சாதாரணமா எல்லா கன்னுக்குட்டிக்கும் பொதுவாவே இருக்கும்னாலும் அது என்னமோ? இவளுக்கு மட்டும் அது புதுசாவும் இருந்துச்சி. அழகாவும் இருந்துச்சி.

சிரிச்சுக்கிட்டே லஷ்மி கிட்டே போறா.

அடிப்பாவீ… எப்படி டீ அவுத்துக்கிட்டு வந்துட்டே? வர வர நீ சரியில்லை பாரு, யாருக்கும் அடங்க மாட்ற… இதெல்லாம் நல்லதுக்கில்லே… செல்லமாய் கோபித்தபடியே லஷ்மியின் தலையை வருடிக் கொண்டே தாய்ப்பசுவின் அருகே விட்டுவிட்டு நகர்ந்தாள். ஆனால், லஷ்மி தன் தாயிடம் செல்வதை தவிர்த்து இவளை பின் தொடர்ந்தது.

என்னாடி உன் பிரச்ன..? போ. போயி பால குடிச்சிட்டு விளையாடு. அம்மாவுக்கு வேல இருக்குதுல்ல.

என்ன? சொல்ற பேச்சை கேக்கவே மாட்ற நீ.

அடிவாங்க போற….

போக சொன்னாலும், லஷ்மி போனா போறது அவ மட்டுமல்ல தன் சந்தோஷமும் கூடவே சேர்ந்து போயிடும்ன்றது அவளுக்கு நல்லாவே தெரியும்.

ஆனாலும் சலிச்சுக்குற மாதிரி சரி. சரி வாடி சாணி தெளிச்சு கோலம் போடலாம்.

அவள் என்னதான் கோலம் போட்டாலும் அது என்னமோ லஷ்மி மேல இருக்குற அந்த வெள்ள கோடு மாதிரி அவ்ளோ அழகா இருக்குறது இல்ல.

திடீரென என்ன ஆச்சோ தெரியல. துள்ளி குதித்துக் கொண்டே ஓடினாள். நேரே எதிர்ல இருந்த வேப்ப மரத்த ஒரு சுத்து சுத்திட்டு வேகமா ஓடி வந்து போட்ட கோலம் சரியில்லன்ற மாதிரி கோலத்து மேல ரெண்டு ரவுண்டு அடிச்சு மீண்டும் துள்ளி குதிச்சு கோலத்த அலங்கோலமாக்கிட்டு அவ ஓடும்போது அந்த அழகு இருக்கே.

அடிப்பாவீ ! உண்மையிலேயே நீ அழகுதான்டீ…

ஆனால், லஷ்மியோ ஓட்டத்த நிறுத்துறதா தெரியல. பக்கத்துல கவுத்து வெச்சிருந்த அந்த எவர்சில்வர் பாத்திரங்கள உதச்சு தள்ளிட்டு நேரா ஓடி போயி தன் தாயோட மடிய முட்டி முட்டி காம்பு வழியா பால உறிஞ்சுறப்போ….

தன் குட்டிக்காக தன்னோட இரத்தத்தை பாலா மாத்துன அந்த தாய்ப்பசு பாலை சுரக்குற நேரம்…

லஷ்மி தாயோட மடியை முட்டிக் கொண்டே தன்னோட ஓரக்கண்ணால திரும்பி பார்க்குறா ! பால் சுரந்தது. அது பசுவின் மடியில் மட்டும் அல்ல.

என்னமோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், கண்களில் வழிந்த நீரை துடைத்தும் துடைக்காமலும் தன் முந்தானையில் முகத்தை மூடிக் கொண்டாள்.

ஆம்! லஷ்மி என்னோட மகள் தான். என்னோட மகளே தான்.

ஆனா என்ன செய்ய? நான் அவள பெத்து எடுக்கலியே எனக்கும் ஒரு பிள்ளை இருந்திருந்தா அதுவும் இப்படி தான் இருந்து இருக்கும் இல்லியா?

பசுவின் காம்பில் பால் பீறிட்டுக் கொண்டு இருந்த அதே நேரத்தில் இவளுக்கோ இரத்தம் பீறிடுவதுபோல இருந்தது.

இது என்னமோ புதுசு மாதிரி தோணுனாலும் அவளுக்கோ ஒரு கன்னித்தீவு கதை போலதான் முடிவில்லாம தொடர்ந்துக்கிட்டு இருக்குது

லேசா சூரியன் வெளியே வர்ற நேரம். கையில் வெற்றிலைப் பாக்குடன் வெளியே வந்தாள் இராசாத்தி அம்மாள். நீலாவின் மாமியார்,

எழுந்து பல்லை கூட வெளக்காம வெத்தல போடுற பழக்கம் அவளோடது. உரல்ல போட்டு இடிச்ச பாக்குடன் வெற்றிலையில் கொஞ்சம் சுண்ணாம்பை தடவி, அத இலாவகமா மடிச்சி வாயில் போட்டுக் கொண்டே கேட்கிறதா…. அடிப்பாவிகளா, எங்கட் நடக்கும் இது மாதிரி அநியாயம் எல்லாம். எம் புள்ள இராத்திரி பகலா கண் முழிச்சு, கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சேர்த்த பொருள் எல்லாம் எப்படி சிதறி கெடக்குது பாருங்கடீ….

இந்த வீட்டுல ஏதாச்சும் புள்ள குட்டிங்க இருந்து அதுக இப்படியெல்லாம் பண்ணுனா கூட பரவாயில்ல. இங்கதான் எதுக்கும் வழியில்லியே…

அங்க பாரு. கோலமா அது? எப்படி போட்டு அழிச்சு வச்சிருக்கா பாரு. நேத்திக்கு தாலி கட்டிக்கிட்டவகூட இன்னிக்கு புள்ளையோட வந்து நிக்குறா. ஆனா இங்க பாரு, எதுக்கும் வழியில்லாம நிக்குது.

மீண்டும் சொன்னாள்… இந்த வீட்டுல ஏதாச்சும் புள்ள குட்டி இருந்து அதுக இப்படியெல்லாம் பண்ணுனா கூட பரவால்ல. இங்க தான் எதுக்கும் வழி இல்லியே…

தண்ணி புடிக்க வந்த பொம்பளைங்க அத்தனை பேரும் இவளோட பிதற்றலை என்னமோ உபதேசம் மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒண்ணுமே நடக்காதது மாதிரியே தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டே கலைந்து சென்றார்கள்.

இத்தனை பேர் நடுவில் தான் அவமானப்பட்டதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தன் மகள் லஷ்மியை மகள் இல்லை என்பதுபோல பேசியதை தான் அவளால் துளியும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நினைச்சத சாப்பிடுற அளவுக்கு வசதி இருந்தாலும் அவளுக்கு என்னமோ அது எல்லாமே அவளுக்கு கசாயமா தான் தெரிஞ்சுது.

எதையும் ஒழுங்கா சாப்பிட முடியறது இல்லே. அவள் கண்களில் அந்த கனவு. அதுவும் ஒரு பிள்ளைய பெத்து மாமியார் மூஞ்சிலே கரிய பூசனும், இத்தனை நாளா தான் அனுபவிச்ச கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்… என்னென்னமா தோன்றியது. இருந்தாலும் என்ன செய்ய?

…ம்ம்ம் பெருமூச்சு விட்டபடியே, லஸ்மி குடிச்சதுபோக மீதி பாலை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

அவரு எந்திரிச்சு இருப்பாரே… காப்பி போட்டு குடுக்கணும். இந்த காப்பி தூளை வேற எங்கே வெச்சேன்னு தெரியலியே… வர வர இப்போ எல்லாம் மறதி அதிகமா ஆயிடுச்சி. எந்த பொருளை எங்கே வெக்கிறோம்னு தெரிய மாட்டேங்குது. போறாத கொறைக்கு இந்த பொம்பள வேற கத்த ஆரம்பிச்சிருவா.

எம் புள்ளைக்கு காப்பி கூட நேரத்துக்கு போட்டு தர மாட்டேங்குறான்னு ஏற்கெனவே கம்ப்ளெய்ன்ட் வேற.

திடீரென்று தன்னைத் தானே தலையில் கொட்டிக் கொண்டு அடச்சே! இத இங்க வெச்சிட்டு எங்கெங்கேயோ தேடிக்கிட்டே இருக்கேனே? என்று சொல்லிக் கொண்டே அந்த பச்சை கலர் டப்பாவில் இருந்து காப்பி தூளை எடுத்தாள்.

பாலை அடுப்பில் வைத்துவிட்டு திடீரென ஏதோ தோன்றியவள் போல, இந்த லஷ்மிய வேற கட்டாம வந்துட்டோமே, அவ வேற ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பாளே…

வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள். அப்பாடா! அன்று என்னமோ தெரியவில்லை. லஷ்மி தாயை விட்டு ஒரு அடி கூட நகரவே இல்லை. அங்கேயே நின்னுக்கிட்டு இருந்தா.

பார்த்து சிரித்துக் கொண்டே சமையலறையில் நுழைந்தாள். ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்தது. அவனும் வேலைக்கு கிளம்பிவிட்டான்.

ஆனால் அதுக்கு அப்புறம், இன்று நாள் எப்படி போகப் போகிறதோ என்ற எண்ணத்தோட வெளியே எட்டிப்பார்க்கிறாள். சின்னஞ்சிறு குழந்தைகள் வெள்ளை நிற சட்டையும் காக்கி நிற ட்ரவுசரும் போட்டுக் கொண்டு துள்ளி குதித்தபடியே பள்ளிக்கூடத்துக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஓடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் கால் தடுக்கி கீழே விழுந்து அம்மா…. என்று கத்தினான். அவ்வளவுதான் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு அலறியடித்தபடியே ஓடினாள். விழுந்தவனை தூக்கிவிட்டு, ஏன்டா கண்ணா… பார்த்து போகலாம்ல பாரு எப்டி அடிப்பட்டு இருக்குது.

அடுத்த சில நொடிகளில் ஒரு நர்ஸாகவே மாறிவிட்டாள். ஏதோ ஒரு ஆயின்மென்டை எடுத்து அவன் கை, கால்களில் அடிப்பட்ட இடங்களில் தடவி தன் முந்தானையை கிழித்து கட்டு போட்டுவிட்டு பார்த்து போ கண்ணா! என்று சொல்லி அவனை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தாள்.

அவனும் அழுதுக் கொண்டே ஒரு கையில் கண்களை துடைத்துக் கொண்டே கிளம்பினான். கொஞ்ச தூரம்… ஒரு பத்தடி போய் இருப்பான். அவனுக்கு என்ன தோணுச்சோ தெரியல, திடீரென திரும்பி பார்த்து கண்களை துடைத்துக் கொண்டு அழுகையை நிறுத்திவிட்டு, அம்மா… போயிட்டு வர்றேன்னு அவன் சொல்லிக் கொண்டே மீண்டும் நடையை கட்டுகிறான்.

அதே நேரத்தில்…. அவன் என்னமோ அழுகையை நிறுத்திவிட்டான். ஆனால்……

ஆம் இவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அது என்னவோ தெரியவில்லை. இன்றுதான் அந்தப் பையனை பார்த்தாள். அவன் யாருடைய மகன் என்பது கூட அவளுக்கு சரியாக தெரியவில்லை. ஆனாலும் அவனிடம் அவளுக்கு ஏதோ ஒருவித ஈர்ப்பு இருந்தது.

தட்டில் போட்ட ரெண்டு இட்லியை கூட சாப்பிட முடியாமல் ஒன்றரை இட்லியை மிச்சம் வைத்துவிட்டாள். ரொம்ப நேரமாகியும் அவள் மனதில் அந்த பையன் மட்டுமே உலாவிக் கொண்டு இருந்தான்.

ஒரு எறும்பு தண்ணில விழுந்து இருந்தா கூட, ஐயோ! எறும்பு தண்ணில விழுந்திருச்சேன்னு பரிதாபப்பட்டு அத எடுத்து வெளியே விட்டு அது உயிரோட இருந்தா நிம்மதி பெருமூச்சு விடுற பழக்கம் அவளுக்கு. அப்படியிருக்க, கண்ணெதிரே ஒரு குழந்தை அடிப்பட்டு அழுதுக் கொண்டே போனால் அவளது மனநிலை எப்படி இருக்கும்?

தண்ணீர் கூட குடிக்க முடியாமல் ஏதோ ஒருவித தவிப்புக்கு உள்ளானாள். அவளது தவிப்புக்கு காரணம் அந்த பையன் மட்டும் அல்ல. இன்னைக்கு சாயங்காலம் பக்கத்து வீட்டில் இருக்கும் தன் மக பெரிய மனுசி ஆயிருக்கா. அது சடங்கு செய்யப் போறாங்க.

தன்னை அந்த சடங்கில் யாராவது அவமானப்படுத்தி விடுவார்களோ என்ற பயமும் அவளை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது.

ஒரு வேளை தனக்கு குழந்தை இல்லாததால் தன்னை சடங்கில் ஏதும் செய்யவிடமாட்டார்களோ என்று தனக்குள்ளேயே குமுறிக் கொண்டாள்.

இதை நினைத்துக் கொண்டே இராத்திரி முழுக்க அவளுக்கு தூக்கம் வரவே இல்லை.

இது ஒரு நாள், ரெண்டு நாள் கவலை இல்ல, கல்யாணம் ஆகி பத்து வருசத்துக்கு மேல் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கல.

நான் போகாத கோவில் இல்ல. வேண்டாத தெய்வமில்ல. பெரியவங்க, மருத்துவச்சின்னு எல்லாரும் சொன்ன எல்லாத்தையும் செஞ்சு பார்த்தாச்சு. ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்குறதா இருக்குது. இதை எல்லாம் பார்க்கும்போது ஒரேயடியா நான் செத்துடலாம்னு கூட தோணுது. ஆனா அவரை நினைச்சா தான் கஸ்டமா இருக்கு. நான் இல்லாம அவரை… யோசிச்சு கூட பார்க்க முடியல.

நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கு என்ன குறை? எதுவும் புரியவில்லை.

ஒரு வழியா சாயங்காலமும் ஆனது.

காலைல இருந்து இது வரைக்கும் அவ சாப்பிட்டது என்னமோ அந்த அரை இட்லி மட்டுமே.

நீலா… இங்கே வாடி. அக்காவின் குரல் கேட்டது.

என்னக்கா?

பாப்பா சடங்குக்கு எல்லாரையும் ஏற்கெனவே கூப்பிட்டாச்சு. இருந்தாலும் மறுபடியும் ஒரு தடவ போயி சொல்லிட்டு வந்துட்டா நல்லா இருக்கும். வாடி போயி கூப்பிட்டுட்டு வர்லாம்.

அவ இப்படி சொன்னதும் இவளுக்கு அது என்னமோ ரொம்ப பெரிய வெற்றி கிடைச்ச மாதிரி இருந்துச்சி. அவள் தொண்டையில் இருந்து ஏதோ ஒன்று நேராக ஓடி வந்து வயிற்றில் விழுந்தது போல இருந்தது. தொண்டையின் ஈரம் அதிகமானது.

அந்நேரத்தில் அவளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இருக்கே அக்காளும் தங்கையும் ஜோடியாக எல்லோருடைய வீட்டுக்கும் சென்று அழைத்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒவ்வொரு வீட்டிலும் அவள் சென்று என் பொண்ணு சடங்குக்கு வந்திடுங்க வந்திடுங்கன்னு குழந்தை மாதிரி ஒவ்வொரு தடவை சொன்னதையும் நினைச்சுப் பார்த்து தனக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறாள்.

கடந்த சில வருடங்களில் அவள் கலந்துக் கொள்ளும் முதல் நல்ல விசேசம் இது தான். ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் அவள்.

சடங்கு ஆரம்பிச்சிடுச்சி

அந்த பல்லு போன கிழவி ஒருத்தி, யாருடி மொதல்ல சடங்கு செய்யுறது. அம்மாங்காரன் சீர் எங்கடீ… வாங்கடீ சீக்கிரம் என்று அவள் கூவலிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில் மூலையில் சென்று ஒளிந்துக் கொண்டிருந்த இவளை அவள் அக்கா கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அம்மாங்காரன் சீர் இங்கேயே தான் இருக்கு. ஆனா எம் பொண்ணுக்கு… ம்ஹீம், எங்க பொண்ணுக்கு என் தங்கச்சி நீலா தான் முதல் சடங்கு செய்வா என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த மஞ்சள், சந்தனம் கலந்த தண்ணீரை ஒரு செம்பில் எடுத்து அவள் கையில் கொடுத்தாள். யாரோ ஒருத்தர் கிட்டே சைகையில் ஏதோ சொன்னாள். உடனே அவர்களும் ஒரு சல்லடையை எடுத்து வந்து கொடுத்தார்கள்.

…ம்ம் அந்த மணக்கட்டையை எடுத்து இப்படி போடு. தன் மகளை அந்த மணக்கட்டையின் மீது உட்கார வைத்துவிட்டு தானே சல்லடையை மகள் தலை மீது தூக்கி பிடித்தாள்.

ம்ம் ஊத்துடி தண்ணிய.

கையில் நடுக்கத்துடனே அவள் தண்ணீரை ஊற்றும்போது அவர்கள் கலந்தது என்னமோ மஞ்சளும் சந்தனமும் தான். ஆனால் அது ஏனோ சற்று உப்பாகவே இருந்தது.

ஆம், தண்ணீரோடு அவள் கண்ணீரும் கலந்திருந்தது.

சடங்கு முடிந்ததும் இந்த ஊர் நரிகளின் ஓலம் அவளது செவிகளை பதம் பார்க்கத் தொடங்கியது.

இந்த ஊர்ல இது வரைக்கும் நடந்த எந்தவொரு விசேசத்துலயும் குழந்தை இல்லாத யாரும் எந்த சடங்குலயும் கலந்துக்கிட்டதே கிடையாது. ஆனா, இங்கே என்னடான்னா இவளை போயி முதல் சடங்கை செய்ய சொல்றாளே? இவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? ஆளுக்காளு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

ஒரு சிலரோ வெளிப்படையாக பேச முடியாமல் ஜாடைக் காட்டி பேச ஆரம்பிச்சிட்டாங்க. இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க, எவளோ ஒருத்தி, இவ போயி மொத சடங்க செய்றா. அந்த பொண்ணுக்கும் குழந்தை பிறக்காம போயிட போகுது என்றாள். அவ்வளவுதான். இவளுக்கு கண்களில் நீர் சாரை சாரையாய் கொட்டியது. அடி வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது. தான் ஏதோ பெரிய பாவத்தை செய்துவிட்டதை போல தன்னைத் தானே நொந்துக் கொண்டாள்.

தன்னை அவர்கள் அவமானப்படுத்தியது கூட அவளை பாதிக்கவில்லை. ஆனால், அவர்கள் சொன்னது போல தன் மகளுக்கும் தன்னை போலவே குழந்தை பிறக்காமல் போய் விட்டால்…

ஐயோ, பெரிய தப்பு பண்ணிட்டோமோ? இல்ல ரொம்ப பெரிய பாவத்தை செஞ்சிட்டோம். இப்படி அவள் என்னென்னமோ யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

முதன் முதலாக ஒரு சடங்கிற்கு சென்ற அவளுக்கு இந்த ஊர் மிக சிறப்பாக வரவேற்பு அளித்ததை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

வீட்டிற்குள் வந்ததும் தனியாக சென்று ஒரு மூலையில் அமர்ந்து விட்டாள்.

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டு இருந்தது. அவள் மாமியாரும் புருசனும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள். அது என்னவென்று இவளுக்கு சரியாக புரியவில்லை. ஆனால் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.

எழுந்து வெளியே வந்தாள்.

ஆத்தாளும் மகனும் ஏதோ விவாதத்தில் எதிரும் புதிருமாக வாதிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இவளை பார்த்ததும், திடீர் அமைதி…!

இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? ஊர் உலகத்துல நடக்காததையா சொல்லிட்டேன். இழுத்துக் கொண்டே போனாள் ராசாத்தி…

அம்மா! போதும் நிறுத்து.

நீ என்னடா அவளுக்கு பயந்துக்கிட்டு, இப்போ அவ என்னதான் சொல்றான்னு நேராவே கேட்டிடு.

நீ கேட்குறீயா? இல்ல நான் கேட்கட்டுமா?

இவன் இருவரையும் மாறி மாறி பார்க்கிறான். என்ன செய்வதென்றே புரியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு நிற்கிறான்.

இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது புரியாமல் முழித்தபடியே நிற்கிறாள் அவள்.

ஆத்திரத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தவள் போல பேச ஆரம்பித்தாள்.

நீ என்னடா கேட்குறது? நானே கேட்குறேன்.

ஏண்டியம்மா. உன்னால தான் ஒரு புள்ளய பெத்து குடுக்க முடியல. நீ பேசாம உங்க அம்மா வீட்டுக்கு போயிடு. நான் இவனுக்கு வேற பொன்னு பார்த்து கட்டி வெக்க போறேன்.

எதுவா இருந்தாலும் சீக்கிரமா முடிவு பண்ணி விடியறதுக்குள்ள சொல்லிடு.

அப்ப தான் நாளைக்கு போயி பொண்ணு வீட்டுல பேச முடியும்.

இவள் சொல்லி முடிக்கக் கூட இல்லை. நின்றுக் கொண்டு இருந்தவள் அப்படியே சரிந்தாள்.

ஓடிவந்து அவன் அவளை நிமிர்த்தி உட்கார வைத்தான். முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான்.

எதுவுமே நடக்காதது போலவே ஒய்யாரமாக சென்று கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டே சொன்னாள்… இந்த நடிப்புக்கு ஒன்றும் குறை இல்ல.

காலைல, விடியற வரைக்கும் நல்லா யோசிச்சுக்கம்மா… எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும்.

சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்தாள்.

ஆனால் எப்போதும் போலவே இந்த இரவும் அவளுக்கு உரக்கம் இல்லாமலே தொடர்ந்தது. விடியவே கூடாது என்ற எண்ணத்துடன்.

ஆனால் விடிந்தது, பொழுது மட்டுமல்ல.

ஆம். மறுபடியும் அம்மா… என்ற சத்தம். வேற யாரு? நம்ம லஷ்மிதான். தங்கச்சி வர போற சந்தோஷத்துல துள்ளிக் குதித்து ஓடி வர்றா,
அம்மாவ பார்க்க.

இனி தினமும் கேட்கப் போகிறான், அம்மா என்கிற
சத்தத்தை. லஷ்மியிடமிருந்து மட்டுமல்ல.

– சீ.விஷ்ணு
எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
சிறுபுழல்பேட்டை,
கும்மிடிப்பூண்டி,

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

  1. Subbiah M

    After reading this story.I can surely tell that my present History teacher is a fantabulous writer 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *