நந்தன் கனகராஜ் (Nandhan Kanagaraj) எழுதிய மலைச்சி (Malaichi) - நூல் அறிமுகம் - தமிழ்வெளி பதிப்பகம் https://bookday.in/

மலைச்சி (Malaichi) – நூல் அறிமுகம்

மலைச்சி (Malaichi) – நூல் அறிமுகம்

நெடுநீளமய்ப் பாயும் நதியாய் உரைநடையும் சுழன்று சுழன்று மோதும் கடலலையாய்க் கவிதையும் இலக்கியத்தை அழகு படுத்துகின்றன. நதி நிலவளத்தை உறுதிப் படுத்துகின்றது என்றால், கடலலை வானத்துக்கு மேகத் திட்பத்தை அனுப்பி மழைப் பொழிவைத் தந்து நதிதாகம் தீர்க்கிறது. கவிதையோடு கலந்த உரைநடையும் உரைநடை வாசலில் கோலமிடும் கவிப் பூக்களும் இலக்கிய வலிமையின் ஆதாரங்கள். அதன் வழியே சிந்தனை வளமும் செயலூக்கத் திறனும் உயர்கின்றன.

நவீன கவிதை என்பது சந்தம் விலக்கி உரைநடைச் சாயலைத் தன்னகத்தே கொண்டு புதுவிதமான வாசிப்பு அனுபவத்தைத் தருபவை. உரைநடைச் சாயல் இல்லாமல் கவித்துவ வானில் வட்டமிடுபவை நந்தன் கனகராஜின் கவிதைகள். மண்ணுக்கும் விண்ணுக்கும் இடைப்பட்ட விசும்புவெளியில் குடிகொண்டிருக்கும் அனைத்தைப் பற்றியும் பேசுகின்றன அவரின் படைப்புகள்.

இயற்கையியல் வழிப்பட்ட வாழ்க்கையியல் வரலாறும், அந்த வரலாற்றை வாந்த்தெடுக்கும் மானுட சிந்தனையும்தான் பிரபஞ்சத்தின் அஸ்திவாரங்கள். அதன்மீது எழுப்பப் பட்டிருக்கிற மகத்தான மாளிகையாய் இந்த “மலைச்சி” கம்பீரம் காட்டுகிறது. வாழ்வெனும் நிலப்பரப்புக்குள் மேடுகளும் பள்ளங்களும் இருக்கின்றனவே என்று ஆதங்கப் படுவதை விட்டுவிட்டு, அவற்றைச் சமப் படுத்த என்ன வழி என்று கேட்கிற ஆன்மீக ஒலி ஒவ்வொரு கவிதையிலும் ரீங்காரம் கொண்டிருக்கிறது. மலைச்சியும் வெள்ளைச்சேலைக் கிழவியும் காட்சிப் படிமங்களாய் ஒவ்வொருவர் பார்வையிலும் நிறைசூலிகளாய் நின்றபடி விஸ்தாரப் பார்வையை வீசுகின்றனர். தேவையை நெருங்க முடியாதவர்களும் தேவைக்கும் அதிகமாய் சேமிப்புக் கிடங்குகளை வைத்திருப்பவர்களும் இணைந்தும் விலகியும் வாழும் ஓர் ஆற்றங்கரை நாணல்களாய் அசைந்தாடிக் கொண்டிருக்கும் தாத்பர்யத்தைப் பதிவு செய்கின்றன “மலைச்சி”யின் ஐம்பத்தைந்து வார்ப்புகளும்.

பொதுவாக முதுமை என்றால் திண்ணையைக் காத்துக் கிடக்கும் (திண்ணைகள் இல்லாத வீடுகளில் வெளிமதிலோரம் பம்மிக் கிடக்கும்) காலமாக இருப்பதாகப் பட்டாலும், அது அப்படியல்ல; நெடுங்காலம் நடந்து வந்த பாதையை அசைபோட்டு, தனது உழைப்பு, உழைப்பின் வழிப்பட்ட பரிணாமம், எல்லாவற்றையும் தனது ஆன்ம ஏடுகளில் எழுதிப் பார்க்கும் வரலாற்று மறுவாசிப்புப் பயணம். யாரும் கிட்டத்தில் அண்டாத முதியவர்கள் குறிப்பாகக் கிழவிகள் சதாசர்வகாலமும், ஓய்வு ஒழிச்சலின்றி இப்படியாக எழுதிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த அந்தரங்கத்தை ஒரு கவிஞன் கண்டடைகிற இடம்தான் கவித்துவ மணல்மேடு. மணலுக்கடியில் நீரூற்றும் சுரக்க வாய்ப்பிருக்கிறது.

உதவித் தொகைக்கு
ரேகை வைத்துத்
தலை இழுவும் மையில்
அழிந்த ரேகைகளை
மாதம் ஒருமுறை
மீட்டிப் பார்ப்பாள்.

தும்மல் சத்தத்திற்கு
நூறு, இருநூறு என்|று
சாந்தம் செய்யும், அவளிடம்
நாள் என்பது
புலர்வதற்கும் கவிழ்வதற்குமான
இடை ஓட்டமாக இருப்பதில்லை.

திண்ணைக்கிழவியின் அற்புதமான அசைபோடுதல்களை கவிதைக் கயிற்றால் கட்டி வாசகப் பார்வைக்கு விட்டிருக்கிறார் நந்தன் கனகராஜ்.

ஜெயகாந்தன் படைப்புகளில் “உயிலின் மரணம்” என்ற சிறுகதை முக்கியப் படைப்பு. அன்று ஜெயகாந்தனுக்காகவே ஒதுக்கப் பட்ட ஆனந்த விகடனின் பக்கங்களில் முத்திரைக் கதைகள் பதிவாகி வாசக வெளியெங்கும் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தன. அப்படியான முத்திரைக் கதைதான் “உயிலின் மரணம்.” ஒரு முதியவர் இருமியபடி படுத்துக் கிடக்கிறார். “இப்பவோ பெ|றகோ” என்று ஊரே வாயா|றியது. அவரைவிட இளையவர்கள் எல்லாம் அவர் கண்முன்னே இறந்து பாடை ஏறிச் சென்றனர். அவர் உடலைப் பரிசோதித்து ஆறுமாதம் கெடு விதித்திருந்த மருத்துவரும் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப் பட்டார். அவருக்குக் கால நிர்ணயம் செய்தவர்கள் எல்லாமே காலத்தோடு கலந்துவிட்டனர். அவர் தன் சொத்தைத் தன் பேத்திக்கு (என்று நினைக்கிறேன்) உயில் எழுதி வைத்திருந்த நிலையில் அவளும் மரித்துவிட்டாள். அந்த உயிலுக்கு இனி என்ன மதிப்பிருக்கிறது?

இந்தக் கதையின் பிரதிபலிப்பாக “மலைச்சி” கவிதை உயிரோட்டம் கொண்டிருக்கிறது. “கூனி” என ஏடாசி செய்யப் பட்ட அவளும் விரைவில் இறந்துவிடுவாள் என மற்றவர்களால் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டிருக்க, நிர்ணயித்தவர்கள் போய்ச் செ3ர்ந்துவிட்டார்கள்; அவள் இன்னும் நிற்கிறாள். அங்கதச் சுவை ததும்பும் எளிய அதேநேரத்தில் வலிய கவிதை இது.

சுடுகாட்டுக் காட்சி ஒன்று! இச்சிமரநிழல். கருவேன மரங்களுக்கிடையே நீளும் ஒற்ரஒயடிப் பாதை. மஞ்சநத்திப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன. இறுதிச் சடங்கு செய்துவிட்டு வெட்டிய இளநீரில் இருக்கும் நீரை உறிஞ்சவரும் பறவைகள். நீர் ததும்பும் கிடங்கு!

அந்தக் கிடங்கில்தான் ஒரு பெண் உருவம் உயிர் போன நிலையில் மிதக்கி|றது. ஆழம் தெரியாமல் விழுந்துவிட்டாள் என்று எல்லாரும் பேசுகிறார்கள்.

இந்தக் காட்சிப் படிமத்துக்குப் பிறகு கவித்துவ வரிகளைப் பதியமிடுகிறார் நந்தன் கனகராஜ்.

“மதகுப் பள்ளத்தின்
இடிவிழுந்த மொட்டைப் பனை அருகில்
நின்று போகிறவர்களுக்குக் கேட்கிறது
ஒரு ஜோடிக் கிளிகளின்
பேச்சு.”

கொஞ்சநேரம் யோசித்த பிறகு அது ஓர் ஆணவக் கொலை என்று புரிந்து விடுகிறது. ஆண்டாண்டு காலமாய்ப் பெண்களின் ஆறாத் துயரம் நீண்டுகொண்டிருப்பதாய் வருத்தப் படுகி|றது கவிதை. இதில் ஜோடிக் கிளிகளின் பேச்சு முக்கியமான படிமம். கூந்தல் விரிந்து இறந்துகிடக்கும் பெண்னைக் காட்டிவிட்டு நின்றிருந்தால் அது வெறும் காட்சியாக மட்டும் ஒதுங்கியிருக்கும். அல்லது “அவள் கொலைசெய்யப் பட்டாள் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பை உலவ விட்டிருந்தால் செயற்கைக் குரலாய் விளம்பரமாகி இருக்கும். ஜோடிக் கிளிப் பேச்சு என்ற காட்சியும் சொற்களும்தான் நந்தன் கனகராஜின் படைப்புகளைத் தனித்துவப் படுத்திக் காட்டுகிறது.

“தொலைதூரப் பயணத்தில்
பக்கத்து இருக்கை
காலியாகவே வருகி|றது.

ஒவ்வொரு நி|றுத்தத்திலும்
ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள்.
நான் இறங்கவேஎண்டும்,
காலி இருக்கை உட்கார்ந்திருக்கிறது.”

மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணக் காட்சிதான். பேருந்துப் பயணத்தில் இவன் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கை காலியாக இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் மக்கள் ஏறவும் இறங்கவும் செய்கிறார்கள். ஆனால் அந்த இருக்கை மட்டும் காலியாக இருக்கிறது. ”நான் இறங்கவேண்டும்/காலி இருக்கை உட்கார்ந்திருக்கிறது.”

ஓர் இருக்கை காலியாக இருக்கிறது என்பது மட்டும்தான் கருப்பொருளா? வாசகனைச் சிந்திக்கத் தூண்டும் வரிகள். ஒருவேளை அவன் அழுக்குக் கோலத்தில் இருக்கலாம்; அல்லது அவலட்சணம் பொருந்திய உடலுடன் கூடியவனாய் இருக்கலாம்; அதையும் தாண்டி பயணிகளின் பார்வையில் கீழ் ஜாதிக்காரனாய் இருக்கவும்ம் வாய்ப்புண்டு. சாதாரண மனிதன் ஒருவன் பிறரால் நிராகரிக்கப் படும் அளவுக்கான தோற்றம் என்பது மானுடத்தின் ஏற்றத தாவ்வின் உள்வடிவம். வாசகப் புரிதலுக்கான பல பரிமாணங்கள் இந்தக் கவிதையில் உள்ளடங்கிக் கிடக்கின்றன. பல மொழி பேசும் ஓர் உதட்டின் நுட்பம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி மௌனமாய்ப் பேசும் பல படைப்புகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

காட்சிப் படிமங்களே கவிதையாகி நி|ற்கும் பல படைப்புகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. ஆழ்ந்து வாசித்தால் அவை வெறும் கண்ணுக்கினிய காட்சிகல் மட்டுமில்லை. கருத்துக்கும் காட்சி தருகின்றன. “பொந்துப் ப|றவைகள்” என்னுமொரு கவிதை. நீர்வ|ற்றிக் கைவிடப்பட்ட ஒரு கிணறு; ஆலந்தூர் பிதுங்கி கிணற்றை எட்டிப் பார்க்கிறது. கமலைக் கல் கேட்பாரற்று ஒதும்க்கிக் கிடக்கிறது. கிணற்று மதிலில்  இருக்கும் பொந்துகளில் சில பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. வண்டுகள் கரையில் முளைத்துக் கிடக்கும் எருக்கஞ்செடிகளை நோக்கிப் போகின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி காதலர்களோ காமுகர்களோ ஒதுங்குமிடமாகவும் இருக்கிறது.

“அந்தரங்கப் பேச்சுகள்
தூரப் பனையின்
ஓலைப் பச்சைகளாகிப் பழுக்கின்றன.”

இது ஓர் இடைஞ்சலாகிப் பொந்துப் பறவைகள் சத்தம் எழுப்புகின்றன.

அந்தரங்கப் பேச்சுகள் முழுமை அடைகின்றன என்பதை மிக நுணுக்கமான வார்த்தைகளால் பதியமிட்டிருக்கிறார் கவிஞர். கிராமத்து வெளிகளில் இன்றைக்கும் காணக்கிடைக்கிற யதார்த்தக் காட்சிதான் இது. வார்த்தைகளாகி இலக்கியப் படைப்புக்குள் உருவாரம் கொள்ளும்போது பேரழகுத் தாட்டியத்தைப் பிரதிபலிக்கின்றன.

இந்தத் தொகுப்பின் 55 கவிதைகளும் சொல்லடர்த்தி, பொருளடர்த்தியோடு ஆழ்மனப் பிரக்ஞையுடன் கூடிய எழிலடர்த்தியும் செறிந்து வாசகனை வசீகரப் படுத்துகின்றன.

நந்தன் கனகராஜ் கவிதைக் காட்டுக்குள் புதுவிதமான விருட்சங்களை நட்டு, அவற்றின் இலைகளையும் கொப்புகளையும் காட்சிப் படுத்துவதோடு, பூ, காய், கனியென விளைச்சலையும் உறுதிப் படுத்துகிறார். 300 பக்க நாவலைவிட இந்த 80 பக்கக் கவிதகைகளை வாச்க நெடுங்காள அவகாசம் தேவைப் படுகிறது.

நாவல்களை பாகம் பாகமாக எழுதுவார்கள். “மலைச்சி”யிலும் அப்படி ஒரு சாகசம் நிகழ்ந்திருக்கிறது. 55 கவிதைகள் ஒரு பாகம் என்றால் தோழர் அழகிய பெரியவன் அவர்களின் முன்னுரை இன்னொரு பாகம்; அவரின் நுட்பமான இலக்கியப் பார்வை இந்த நூலுக்கு வைர வைடூரிய அணிகலனாய் அழகுபடுத்துகிறது

நந்தன் கனகராஜ் அமைக்கும் இலக்கியப் பாதை நேர்த்தியானதாகவும் நிழல் மரங்கள் அடர்ந்தும் வாசகப் பயணிகளுக்கு வழிகாட்டுகிறது. வாழ்க அவரின் இலக்கிய இயக்கம்.

நூலின் தகவல்கள் :

நூல் : மலைச்சி (கவிதைகள்)
ஆசிரியர் : நந்தன் கனகராஜ்
பதிப்பகம் : தமிழ்வெளி பதிப்பகம்
பக்கம் : 80
விலை : ரூ 120/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

தேனிசீருடையான்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *