புத்தக அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் “மழைக்காடுகளின் மரணம்” – பெ.அந்தோணிராஜ்  

      இந்நூலாசிரியர் காடுகள் மீது கொண்ட பெருவிருப்பதின் காரணமாக இங்கு பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு போர்னியோ தீவில் வேலை என்றதும் மிகவும் பிரியத்துடன் போய் சேருகிறார். பெரும் அதிர்ச்சி அங்கு இவருக்கு காத்திருந்தது. எந்தக்காடுகள் மீது பிரியம் வைத்திருந்தாரோ அதேக் கன்னிக்காடுகளை அழித்து  வெட்டு மரங்களை  ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில்தான் போய் சேருகிறார்.
போர்னியோத் தீவு மலேசியா, இந்தோனேசியா மற்றும் புருனே நாடுகளுக்குச்சொந்தமானது.
போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. மாபெரும் உயிர் மண்டலத்தை தன்னகத்தே வைத்துள்ள ஒரு தீவு. இங்கு 44வகை பாலூட்டிகளும், 37 வகையான பறவைகள்,  19 வகையான நீர் வாழ்வனவும் கொண்டது.
   மனிதக்குரங்கு வகைகளில் ஒன்றான உராங் உடாங், புரபோஸிஸ் குரங்கு (மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஓர் உயிரி )பிக்மி வகை யானைகள், உலகிலேயே பெரிய பூவான ரபிலேசியா, உலகின் உயரமான மரங்களில் ஒன்றான மெங்காரிஸ் (250அடி உயரம் )உலகின் மிகப்பெரிய தேனீக்களான ஆசியன் பாறைத்தேனீ, இதுவரை கண்டுபிடித்ததில் மிகப்பெரிய குச்சிப்பூச்சி (ஏறக்குறைய இரண்டடி நீளம் )ஆகியவை இந்தக்காடுகளில்தான் வாழ்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 60வகையான உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு உயிர் செறிவுள்ள காடுதான் அழிவை எதிர்நோக்கி இருக்கிறது. இவர் பணிபுரிந்தபோது 90சதவீதத்திலிருந்த காடு 73சதவீதமாக குறைந்துள்ளது. 2020 க்குள் 32.8சதவீதமாக குறைந்துவிடும் அபாயம் உள்ளது என்கிறார்.
காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினர் மற்றும் விலங்குகளுக்கு போக்கிடம் என்ன? மூன்றாம் உலகநாடுகளின் இயற்கை வளத்தை சுரண்டி தங்களுடைய ஊளைச்சதையை பெருக்கும் வளர்ந்த நாடுகளின் நுண்ணரசியல் எத்தகையது?  பார்ப்போம்.
போர்னியோ மிதவெப்பமண்டலமழைக்  காடாகும். ஒரு காலத்தில் பூமியில் 14%மழைக்காடுகள் இருந்தன. இப்போது அது வெறும் ஆறு சதவீதமாகக் குறைந்துள்ளது. நாம் உண்ணத்தகுந்த பலவகைகள் மட்டும் 3000இருப்பதாகக்கூறப்படுகிறது. 200பழவகைகளையே நாம் இப்போது பயன்படுத்துகிறோம். இப்போது ஒரு நாளைக்கு 137வகையான தாவரங்களையும் விலங்குகளையும் நாம் இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடுகிறார் உயிரியல் நிபுணர் எட்வார்ட் ஓ வில்சன்.
மழைக்காடுகள் உள்ளே நுழைந்ததும் நாம் உணருவது அதனுடைய குளிர்ச்சிதான். அதன் இருட்டு, அதன் ஈரப்பதம். இத்தகைய சூழல் புவியில் வேறு எங்கும் அனுபவிக்கமுடியாது. சூரியஒளியை உள்விடாமல் நெருங்கி அடர்ந்து, உயர்ந்து இருக்கும் அந்தக் காடுகள். மரங்களின் உயரங்களில் தான் இருவாட்சிப்பறவை கூடு கட்டும்.  சூரிய ஒளி உள்ளேபுகமுடியாத காரணத்தால் காட்டின் தரைப்பகுதி எப்போதும் ஈர்ப்பத்துடன்தான் இருக்கும். அததரையில் பரவியிருக்கும் மண் வளமான மண்ணாகும்.இரண்டு சென்டிமீட்டர் தடிமன் அம்மண் சேருவதற்கு ஆயிரம் ஆண்டுகளாவது தேவைப்படும். ஆனால் போர்னியோ காடுகளில் ஒரு அடி  அளவு உயரம் அம்மண் படிந்திருக்கிறது.
போர்னியோவில் 25ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய 700க்கும் மேற்பட்ட மரவகைகளைக் காணலாம்.  பசுமைக்காடுகளை பணத்தாள்களாக உருமாற்றிக்கொண்டிருக்கின்றன கொள்ளைக்கார வணிக நிறுவனங்கள். ஆனால், பணத்தாள்களைக்கொண்டு பச்சையம் தயாரிக்க முடியுமா என்கிறார் ஆசிரியர்.
கானகத்தின் குரல்: சூழலியல் ...
உலகின் மிதவெப்பமண்டல காடுகளைக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் ஏழைநாடுகள்தான். அவை தங்கள் வருமானத்திற்காக இக்காடுகளை அளித்துக்கொண்டிருப்பதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. இந்நாடுகளை சுற்றுச் சூழல் வில்லன்கள் என்று வளர்ந்த நாடுகள் வர்ணிக்கின்றன. இந்நாடுகளில் வெட்டப்படும் மரங்களையெல்லாம் இறக்குமதி செய்வதெல்லாம் வளர்ந்த நாடுகள்தான். இதிலுள்ள நுண்ணரசியலில் லாபம் ஈட்டுவது வளர்ந்த நாடுகளே. பாசம் பொங்கி இந்நாடுகளின் மீது  முதலைக்கண்ணீர் வடித்து உலகவங்கி மூலம் கடன் கொடுத்து சாலைவசதிகளை மேம்படுத்த உதவுகிறோம் என்று சொல்லி கடனாளியாக்கும். கடனை அடைக்க முடியாதபோது, உதவுபதுபோல நடித்து இந்நாடுகளின் அடிமடியான வளமிக்க இக்காடுகளின் மேல் கைவைக்கும். காடுகளை அழித்தலும் மீண்டும் காடுகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற கருத்தின் அடிப்படையில் வெட்டப்பட்ட காட்டுப்பகுதிகளில் எண்ணெய்ப்பனையும், தேக்கும், யூக்லிப்டசும் வளர்த்து பொதுமக்களின் கண்களை கட்டி விடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் நிலைமை அரசுகள் நினைப்பது போல இல்லை. மழைக்காடுகளை மனிதர்களால் உருவாக்கமுடியாது. மழைக்காடுகள் அழியும்போது அதுவரை சூரியஒளியை கண்டேயிராத குருந்தவரங்களும், நுண்ணுயிர்களும், கொடிகளும், பறவைகளும். தாவரஉண்ணிகளும், அதைநம்பியிருக்கும் மாமிச உண்ணிகளும் அழிந்துபோகும். அந்தக்காட்டை நம்பி உயிர்வாழ்ந்த பழங்குடிகள் அதுவரை அவர்களுக்கு பரிசியமில்லாத ஒரு வேலைக்குத் தள்ளப்படும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வரும் கலாச்சாரக்கூறுகளுக்கும் ஆபத்து நேரும். இவ்வளவு இழப்பையும் எப்போது மீண்டும் கொண்டுவருவது. முடியாமலேயே கூட போய்விடும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம்.
பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு ஒரு எடுத்துக்காட்டு. போர்னியோவில் ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதி ஒரு பழங்குடியினர் வசம் இருந்தது. 1986 ல் ஒருமிகப்பெரிய நிறுவனம் வெறும் 27000ரூபாயை கொடுத்துவிட்டு 69லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டது. அந்த அப்பாவி பழங்குடி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்ததோடுமட்டுமல்லாமல் அந்நிறுவனத்திலேயே தினக்கூலியாக வேலைபார்க்கின்றனர். எவ்வளவு பெரிய கொடுமை. இப்படி இயற்கையை அழித்து ஒரு மனிதர் கூட வாழ்வதற்கு தகுதியில்லாமல் போன “ரப்பானுய் “தீவின் வரலாற்றை மறந்து போய் இருக்கிறது  மனிதகுலம் என்று ஆசிரியர் தான் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
காடு என்பது மரங்கள் மட்டும் இருப்பதல்ல. அது ஒரு இயற்கை இயந்திரம். பல்லாயிரக்கணக்கான உயிர்களின் இருப்பிடம்.  2011 ஆம் ஆண்டை  ஐ. நா. சபை சர்வதேச காடுகள் ஆண்டாக அறிவித்தது. காடுகளைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கம். புவியின் நுரையீரல்கள் இந்த மழைக்காடுகள்தான். நுரையீரலின் முக்கியத்துவம் தெரியாமல் மக்கள் உள்ளது வருந்தத்தக்கதே என்று குறிப்பிடுகிறார். விவசாயம் தொடங்கிய பின்பே 40சதவீதக்காடுகள் அளிக்கப்பட்டன. இப்போதும் மலைப்பகுதிகளில் மூன்றில் இரண்டுபங்கு காடுகள் அதாவது புவியில் 33%காடுகள் இருந்தால்தான் உயிர்வளி குறையாமல் இருக்கும்.
மழைக்காடுகளின் மரணம் - நக்கீரன் ...
       இன்றைக்கு இந்தியாவில் இருப்பது இருபது சதவீதகாடுகள் என்றாலும், அதுவும் துண்டாடப்பட்ட காடுகளாகவே உள்ளன. 2006 வனஉரிமைச்சட்டம் இந்தியப் பழங்குடிகள் காட்டில் வாழவும், காட்டு உற்பத்தியை பயன்படுத்துவதற்கான உரிமையையும் வழங்கியுள்ளது. காடு என்பது பொன்முட்டையிடும் வாத்து. காட்டை வெட்டி மரங்களை விற்பதைக்காட்டிலும் காடுபடு பொருள்களிலிருந்து வரும் வருமானம் அதிகமாகவே இருக்கும். அதோடு பழங்குடியினரின் மருத்துவ அறிவு வியக்கத்தக்கது.
தியேடர் பாஸ்கரனின் தகவல்படி தமிழகத்தில் 15சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. அதிலும் 2.5 சதவீதமே பாதுகாக்கப்பட்ட காடுகள் உள்ளன தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் எட்டுக்கும் மேற்பட்ட காட்டுயிர் முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்கள் உள்ளன. ஐ. நா.அமைப்பு (யுனெசுகோ ) உயிக்கோளப்பகுதியாகதமிழகத்தில்  நீலகிரி உயிர்கோளக் காப்பகமும், மன்னார் வளைகுடா உயிர்கோளப்பகுதியும் ஆகிய இரண்டு இடங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. கடுகளைக்காத்து நம்மையும் காப்போம்.
நூல் =மழைக்காடுகளின் மரணம் 
ஆசிரியர் =நக்கீரன் 
பதிப்பு =பூவுலகின் நண்பர்கள் 
விலை =ரூ. 25/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.