📖இந்நூலில் மொத்தம் 15 தலைப்புகளில் மலாலாவைக் குறித்த பல ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
📖முதல் கட்டுரையே அடுத்தடுத்து மலாலாவைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மை உந்தி தள்ளுகிறது.
📖தாலிபன்களுக்கு எதிராக குரல் கொடுத்து, இறப்பின் வாசலிலிருந்து மீண்டு வந்த மலாலா, பெண் கல்வி அவசியத்தையும், அவளுடைய ஆதங்கத்தையும் கொட்டித் தீர்க்கும் விதமாக முதல் கட்டுரை நிறைவு பெறுகிறது.
📖2வது கட்டுரையில் மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை கூறவதோடு, அவளுடைய ஆரம்ப கால பூர்வீகமாக இருந்த ஸ்வாட் பள்ளத்தாக்கு எவ்வாறு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது என்பதையும், அவளுடைய ஊர் மக்களின் வாழ்க்கை சூழலையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியிருந்த விதம் அருமையாக இருந்தது.
📖மலாலாவின் பெயருக்கான காரணத்தை அறிய வரும் போது மிகவும் வியப்பாக இருந்தது.
📖சுதந்தரமாகப் பறக்கலாம் என்ற கட்டுரையில் பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும், மலாலா குடும்பத்தில் அவள் பெண்ணாகப் பிறந்ததை துக்கமாக நினைக்கும் சமயத்தில், அவளுடைய தந்தை மட்டும் மலாலா பிறப்பை குறித்து பெருமிதம் கொள்கிறார்.
📖பெண் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் சரியாக அமைந்தால், சுதந்திரமாக தன்னுடைய கனவை நோக்கிப் பறக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக உணர முடியும்.
📖ஒவ்வொரு குழந்தைகளிடமும், ஒரு குறிப்பிட்ட திறமையானது அவர்களது குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் அல்லது அவர்கள் முன்னோர்களின் ஜீன் வெளிப்பாடாக தொடர்வது வழக்கமாக இருக்கும். அப்படித்தான் மலாலாவும் உருவாகியிருக்கிறார் என்று அவளுடைய பெற்றோர்களின் வரலாற்று பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது பல அறிய தகவல் நமக்கு தெரிய வருகிறது.
📖இன்று சிறந்த பேச்சாளராக, பெண் கல்விக்கு ஆதாரவாக மலாலா போராடுகிறார் என்றால், அந்த எண்ணங்களை முதலில் அவருக்குள் விதைத்தது யார் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.
📖அடுத்த கட்டுரையில், மலாலாவின் தந்தையின் கனவைக் குறித்தும், கல்வியின் அவசியத்தை குறித்தும், பாகிஸ்தானில் உள்ள குழந்தைகள் கல்வியில் பின் தங்கியிருப்பதை, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருப்பதை புள்ளி விவரங்களுடன் ஆசிரியர் கூறியிருக்கிறார்.
📖பல மலாலாக்கள் பாகிஸ்தானில் இருப்பதாகவும், மலாலாவிற்கு கிடைத்த தந்தை போல மற்ற குழந்தைகளுக்கும் அப்படி ஒரு தந்தை கிடைப்பார்களா? என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்.
📖அடுத்த கட்டுரையில்,தாலிபனால் மலாலா சுடப்பட்டதை குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது.
📖அவள் தாக்கப்பட்ட வயது, அவளுடைய காயங்களை விவரிக்கும் போது மனம் கணக்கிறது.
📖அவள் எப்படி மீட்கப்படுகிறாள்? எந்த அரசாங்கம் அவளுக்கு உதவியாக நிற்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
📖 சிறை கைதியாக இருந்த ஒருவர் மலாலாவிற்காக சுடப்பட்டதற்கான காரணத்தை ஒரு கட்டுரையில் கடிதம் மூலமாக கூறுகிறார்.
📖இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும், தாலிபன்களுடைய கொள்கைகளை மீறியதற்காக தாக்கப்பட்டதாகவும், அவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் சக மனிதனாக நமக்கு ஏற்புடையதாக இல்லை.
📖 பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டு வந்த மலாலாவிற்கு நோபல் பரிசு வழங்குவதை குறித்த காரணங்களையும், அவளுக்காக பல நாடுகள் உரிமைக் குரலும், ஆதரவும் அளித்து வந்ததை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
📖 9 மற்றும் 10 வது கட்டுரையில் மலாலாவிற்கு எதிராக எழும்பியிருக்கும் மாற்றுக் கருத்துகளைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
📖மலாலாவிற்கு நோபல் பரிசு கொடுக்கக் கூடாது என்று அவளுக்கு எதிராக இருக்கும் பலருடைய இணையதளத்தில் எழுந்த மாற்றுக் கருத்தையும், வெளிநாட்டில் மலாலா தஞ்சம் புகுந்து விட்டாதாகவும், என மலாலா மீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி வருபவர்களை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
📖 11 வது கட்டுரையில் பாகிஸ்தானிற்குள் எப்படி தாலிபன்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது?
📖 யார் இந்த தாலிபன்கள்? எப்படி பாகிஸ்தானிற்குள் நுழைந்தனர்? என்று அவர்களுடைய வரலாற்றை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கூறப்பட்டடிருக்கிறது.
📖 13வது கட்டுரையில் மதம், பிற்போக்குத்தனம், வறுமையால் பெண்கள் எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை கூறுவதோடு, பாகிஸ்தானில் பெண்களின் நிலையையும், மதத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கு பெண்களுக்கு நடைபெறும் அநீதிகளையும், தனியொரு பெண் போராளியாக செயல்படும் மலாலாவின் மன தைரியத்தின் வலிமையை பார்க்கும் போது பெருமையாகவும் இருந்தது.
📖 புதிய தொடக்கம் என்ற தலைப்பில் மலாலா சாதித்தவற்றை ஒரு தொகுப்பாக பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர்.
📖பெண் கல்விக்காக, உரிமைக்குரலாக மலாலா எடுத்த முயற்சிகளும், அவள் கடந்து வந்த பாதைகளும் சொல்லில் அடங்காதது.
📖 இறுதி கட்டுரையை படிக்கும் போது, மனம் கணத்தது.பெஷாவரில் நடந்த ஒரு சம்பவம் கண்டு மனம் துடி துடித்தது.
📖எவ்வளவு மூர்க்க குணமும், வெறிப்பிடித்தவர்களாக இருந்தால் ஈவு, இரக்கமற்ற செயல்களை தாலிபன்கள் செய்திருப்பார்கள் என்று இக்கட்டுரையை படிக்கும் போது அவர்கள் மீது நமக்கு கோபம் வரும்.
📖இப்புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து முடிக்கும் வரை மலாலாவைப் பற்றிய தகவல்கள் மிகவும் ஆச்சரியமடைய செய்யும் விதமாகவே இருந்தது. அவசியம் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.குறிப்பாக பெண்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.
புத்தகத்தின் பெயர் : மலாலா ஆயுத எழுத்து
ஆசிரியர் பெயர் : ரஞ்சனி நாராயணன்
பதிப்பகம்: கிழக்கு
பக்கங்கள் : 104
இப்படிக்கு,
இராஜதிலகம் பாலாஜி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.