மலாலா கரும்பலகை யுத்தம்
மலாலா என்ற பெண்ணை நான் எப்படி அறிமுகம் செய்வது. அவள் ஒரு மாணவி என்று அறிமுகம் செய்வதா? அல்லது கல்விக்காக போராடிய, அமைதிக்காக போராடிய ஒரு போராளி என்று அறிமுகம் செய்வதா? எனக்கு குழப்பமாக உள்ளது.
ஆம் மலாலா நீ ஒரு போராளிதான் .கல்விக்காக போராடிய போராளி. நமது நாடு விடுதலை அடையும்போது இந்தியா ,பாகிஸ்தான் என்று எந்த ஒரு பேதமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் நம் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தனர் .
ஆனால் விடுதலை பெற்ற பிறகு பாகிஸ்தான் தனியாக பிரிந்து போனது .முதன் முறையாக ஒரு நாடு மத அடிப்படையில் பிரிக்கப்பட்டது என்றால் அது பாகிஸ்தான் .
ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது என்றால் அதன் எல்லைகளை தீர்மானிப்பது மிகவும் முக்கியம். ஒருவர் கையில் இருக்கும் பச்சை நிற பேனாவிற்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் இங்கே ஒரு ஆள் என்ன செய்தார் தெரியுமா?
அதில் பஞ்சாபை இரண்டாக பிரித்து தனது பச்சை மை பேனாவால் மேலே இருந்து கீழே ஒரு கோடு போட்டார் .என்ன நகைச்சுவை என்றால் இவர் போட்ட கோடுகளின் படி ஊர்களில் சென்று அந்த வரைபடத்தை பார்த்தால் பெரிய குழப்பம் தான் .
சொன்னால் நகைச்சுவையாக இருக்கும் ஒருவர் வீட்டில் சமையலறை ,கழிவறை இந்தியாவிலும் படுக்கையறை பாகிஸ்தானிலும் மாட்டிக்கொண்டதாம் என்ன ஒரு காமெடி.
இந்த ஒரு கோடு இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களையும், இந்துக்களையும் பிரித்து விட்டது. வங்க பகுதி பாகிஸ்தான்,பஞ்சாப் பகுதி பாகிஸ்தான் என இரண்டு பாகிஸ்தான்களாக பிரித்து மத கலவரத்தை தூண்டி எல்லைகளை தாண்டி இந்துக்களும், இஸ்லாமியர்களும் குவிந்த போது ரயில் முழுவதும் ரத்த வெள்ளம் அப்பப்பா வழி முழுவதும் பிணக்காடு .
இது போன்ற லட்சக்கணக்கானவர்களின் உயிர்களை பலி கொண்டு நள்ளிரவில் பிறந்த தேசங்கள் நம்முடைய இந்திய பாகிஸ்தான் தேசங்கள்.
ஆனால் என்ன கொடுமை இஸ்லாமியர்களில் அகமதியர் எனும் 2 கோடி பேரை இஸ்லாமியர்கள் என உங்கள் நாடு ஏற்கவே இல்லை. பாகிஸ்தானின் தேச தந்தை ஜின்னா சொல்வார்
“பெண்களும் சரிசமமாக ஆண்களோடு தோள் கொடுத்து ஈடுபடாத எந்த போராட்டமும் வெற்றி அடைய முடியாது .உலகில் இரண்டு வகை அதிகாரம் உண்டு. ஒன்று ஆயுத வழி அதிகாரம் .இரண்டாவது எழுத்து (பேனா) வழி அதிகாரம் .இவை இரண்டை விடவும் பலம் வாய்ந்த மூன்றாவது அதிகாரம் மகளிர் அதிகாரம் .
என்ன ஒரு அழகான வரிகள் .ஆம் மலாலா இந்த வரிகள் முழுவதும் உனக்கே சொந்தமாகும் என நினைக்கிறேன் .ஏனெனில் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது ,வீட்டைவிட்டு பெண்கள் வெளியே போகக்கூடாது ,அப்படியே போனாலும் தன் தந்தையோ ,கணவரோ ,சகோதரனுடனோ பர்தா போர்த்தி கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை நீ உடைத்து வெளியே வந்தது எவ்வளவு பெரிய காரியம்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் வீழ்த்தப்பட்டது. ஹீரோஷிமாவிலும் நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீசி பேரழிவு ஏற்பட்டது. இதற்கு தலைமை அமெரிக்கா. ஆம் அமெரிக்காவின் ஆயுதங்கள் தான் இந்தப் போர்களுக்கு எல்லாம் மூல காரணம்.
ஜப்பான் சமூக பொருளாதார ரீதியில் சீர்குலைந்து போனது .இருப்பினும் அவர்கள் சோர்ந்து விடவில்லை. அவர்கள் கல்வி என்ற ஆயுதத்தை கையில் எடுத்தனர். கடுமையாக உழைத்த ஜப்பானியர்கள் உலகிற்கே உழைப்பிற்கு முன் உதாரணமாகி போனார்கள் .அதேபோன்று சீனாவிலும் கல்வியை ஆயுதமாக எடுத்து மேட் இன் சைனா என்ற வாசகங்கள் குறிக்கப்படாத பொருட்களே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது தான்.
ஆனால் மலாலா உங்களுக்கு மட்டும் ஏன் கல்வி மறுக்கப்பட்டது .எல்லோரும் கல்வி வேண்டும் என்று பாடுபட்டு இருக்கும் காலகட்டத்தில் உங்களுக்கு இருந்த பள்ளிக்கூடங்கள் தகர்த்தப்பட்டன .யாரும் பள்ளிக்குப் போக கூடாது என்று எச்சரிக்கை மணிகள் ஒலித்தன.
பாடப்புத்தகம் கையில் இருந்தால் மரணம் .எழுதுகோல் பிடித்தால் சிறைசேதம். பள்ளிக்கூடம் திறந்தால் குண்டு மழை.
இருந்தாலும் மலாலா நீ எதற்கும் பயப்படவில்லை.
அவர்களிடம் பீரங்கிகள் இருந்தன .அவர்களால் பள்ளிக்கூடங்களை தவிர்க்க முடிந்தது. அவர்களிடம் துப்பாக்கி முனை அதிகாரம் இருந்தது .அவர்களால் பெண்களை வீட்டை விட்டு வெளியே வராமல் செய்ய முடிந்தது .
ஆனால் மலாலா உன்னிடம் கல்வி இருந்தது. அந்த கல்வியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று உனக்குத் தெரிந்திருந்தது. அதனால் தான் நீ கணினி என்ற ஒன்றை கையில் எடுத்தாய் அதன் மூலம் உங்கள் நாட்டில் நடந்த போரை பற்றிய விவரங்களை குல்மக்காய் பிளாக்கை உருவாக்கி அதில் பதிவிட்டாய்.
அது உலகம் முழுக்க பார்க்கப்பட்டது .இருப்பினும் உனக்கு அலைபேசியின் மூலம் பல மிரட்டல்கள் வந்தது .அதையும் சமாளித்தாய். ஊடகம் என்பது எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை தாலிபான்கள் அறியவில்லை பாவம் அவர்களும் படித்திருக்க மாட்டார்கள் போல. அதனால்தான் அவர்களுக்கு இணைய வழி மூலம் நீ செய்து கொண்டிருந்த போராட்டங்கள் தாமதமாகவே தெரிந்தது.
பெண்களை வீட்டிலேயே வைத்து பூட்டுங்கள் என்று நபிகள் நாயகம் நினைக்கவில்லை. உழைப்பிற்கே சகோதரத்துவத்தை போதித்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். ஆனால் அதில் உள்ள பெண்களை படிக்கக்கூடாது என்று சொல்வது எதன் அடிப்படையில்
மார்க்கம் அடிப்படையிலா?மதம் அடிப்படையிலா ?அல்லது மதவாதிகளின் அடிப்படையிலா ?
பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் சாவித்திரிபாய் பூலே முதல் பெண் பொதுப்பள்ளியை உருவாக்கினார் .அதேபோல டிராமா பாய் சமஸ்கிருதம் படிக்க கூடாது என்று தடை செய்யப்பட்டபோது தான் படித்து பண்டிதர் ஆன போதும் அவர்களை தீயிட்டு கொளுத்துமாறு உயர் ஜாதி இந்துக்கள் இறங்கினார்கள் சாவித்திரிபாய் பூலே நான்காண்டுகளாக ரகசியமாக வகுப்புகளை தொடர்ந்தார்.
கல்விக்காக அவர் அவர் மலத்தை வாரி வீசியபோதும் அதை பொருட்படுத்தாமல் கல்வியை கொண்டு சேர்த்தார் .முத்துலட்சுமி ரெட்டி என்று எத்தனையோ பெயர்கள் கல்விக்காக அரும்பாடு பட்டனர் .
ஆனால் மலாலா நீ போராடிய காலகட்டம் வேறு ,களம் வேறு ,உன்னுடைய வயது வேறு…..
பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்த ஒரு இளம் போராளியாக களம் இறங்கிய நீங்கள் 12 வயதாக இருந்தபோது பர்தா அணிந்து செல்ல நான் தயார் .ஆனால் என் பள்ளி எங்கே அதை தரைமட்டம் ஆக்கிய தாலிபான்களுக்கு உரிமை தந்தது யார் ?பாகிஸ்தானின் அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா ?என்று நாட்டின் பிரபல உருது வானொலியில் நீங்கள் கேட்டீர்கள் .
அவருடைய 13 வயதில் மார்க்சிய மாநாட்டில் சிறப்பு உரை நிகழ்த்தி மார்க்சிய பள்ளியை நடத்த சுவாட்டிற்கு வாருங்கள் தோழர்களே என்று நீங்கள் வீரம் செறிந்த அழைப்பை விடுத்த போது உண்மையில் உங்களுடைய போராட்டம் முழுமை பெற்றதாகவே எண்ணுகிறேன் .
அக்டோபர் 9 2012 இந்த நாள் உண்மையில் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்றே சொல்வேன் .நீங்கள் பள்ளி விட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பி வரும்போது உங்களில் யார் மலாலா? உங்களில் யார் மலாலா? என்று பஸ்ஸில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் கேட்கும்போது பேருந்தில் அனைவரும் உங்களை திரும்பி பார்க்கும்போது துப்பாக்கி சுடும் சத்தம் மூன்று முறை கேட்டது.
அமெரிக்கா ,கனடா ,இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ,ரஷ்யா ஒரு 17 நாடுகள் தங்களது நாட்டில் தலை சிறந்த மருத்துவமனைகளில் உங்களுக்கு பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முன் வந்தன.
17 வாரங்கள் உயிருக்கு போராடிய மலாலா நீங்கள் துடித்த போது பாகிஸ்தானில் முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர் .மதவாத தலைவர்களே தாலிபனை மிகக் கடுமையாக எதிர்த்தது .
இந்தியாவில் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் தான் மைய அரசு அனைவருக்குமான கல்வி உரிமையை சட்டமாக்கியது.
மலாலா நீங்கள் சுடப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது நீங்கள் கேட்ட கேள்விகளை ஒவ்வொன்றையும் இங்கே கூறினால் அதற்கு இன்னும் கூடுதலாக பக்கங்கள் தேவைப்படும் என்பதால் இத்துடன் நான் உங்களின் அறிமுகத்தை நிறுத்திக் கொள்கிறேன் .
வாசிகர்கள் புத்தகத்தை வாங்கி படித்து மலாலாவின் போராட்டத்தை முழுவதுமாக வாசியுங்கள். மலாலா கேட்கும் கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.
நூலின் தகவல்கள்
புத்தகம் : மலாலா கரும்பலகை யுத்தம்
ஆசிரியர் : ஆயிஷா இரா நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
விலை : 65/-
நூலறிமுகம் எழுதியவர்
நளினி மூர்த்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.