நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘மலாலா – கரும்பலகை யுத்தம்’ – குமரேசன்



“ஆயிஷா கதையை நடராசன் எந்த மனநிலையோடு, என்ன நோக்கத்திற்காக எழுதினாரோ அதே மனநிலையோடுதான், அதே நோக்கத்திற்காகத்தான் இந்தப் புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். மலாலா என்ற ஒரு சிறுமியின் எழுச்சிக் கதையாக மட்டும் சொல்லியிருந்தால் இது ஒரு நல்ல புத்தகம் அவ்வளவுதான். ஆனால் இதுவோ உலக அரசியலிலிருந்து உள்ளூர்ச் சமூகம் வரையில், மனித உரிமைகளிலிருந்து மானுடப் பண்புகள் வரையில், மத நம்பிக்கைச் சுதந்திரத்திலிருந்து மதவெறி அடிமைத்தனம் வரையில் பேசுகிறது. பெண் கல்வியை வலியுறுத்துவதோடு கல்வி என்றால் என்னவென்றே விவாதிக்கிறது.

கல்வி என்பது பள்ளிப்படிப்புக்கும் கல்லூரிப் படிப்புக்கும் பெறுகிற சான்றிதழோடு முடிவதல்ல. ‘கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்று வள்ளுவம் சொல்கிறது. ஆனால், கற்றுத் தேர்ச்சியடையும் பெண்களில் எத்தனை பேரால் அதற்குத் தக நிற்க முடிகிறது?

ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிறபோதெல்லாம், இந்த ஆண்டும் பெண்கள்தான் முதலிடம் என்று செய்திகள் சொல்கின்றன. அவர்களெல்லாம் என்னவாகிறார்கள்? தலைமைகளாகவும் அறிஞர்களாகவும் ஆளுமையோடு வளர முடிகிற சிலரைத் தவிர்த்து ஆகப்பெரும்பாலோர் நிற்க இதற்குத் தக என்று சமையலறைக்கும் படுக்கையறைக்கும் மற்ற அறைகளுக்குமாக வீட்டோடு நிறுத்தப்பட்டுவிடுகிறார்களே?

மலாலா ஒற்றைப் பெண்ணல்ல... அவள் ஓர் இயக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்

நாட்டுக்கு நாடு முன்னே பின்னே வேறுபாடுகள் இருக்கலாம், சதவீத மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் இதுதான் நிலைமை. இதை மீறி இன்று பல பெண்கள் சாதிக்கிறார்கள். பொதுவெளியில் முன்னுக்கு வருகிறார்கள். இது யாரோ சிலரது கருணையால் ஏற்பட்ட மாற்றமல்ல, நீண்ட நெடிய போராட்டங்களால் விளைந்த முன்னேற்றம்.

இதையெல்லாமும் சிந்திக்க வைக்கிற, பெண்ணின் கல்வி உரிமை முதல் பாலின சமத்துவம் வரையிலான லட்சியங்களுக்காகத் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் விருப்பத்தை ஏற்படுத்துகிற, அவ்வாறு இயங்குவதற்குக் கற்றுக்கொண்டு அதற்குத் தக நிற்கவும் தூண்டுகிற இந்தப் புத்தகம் ஒரு மாறுபட்ட புத்தகம் அல்ல, மாற்றத்திற்கான புத்தகம்.”

=============



[தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு இணையத்தளம் வழியாக நடத்திவரும் நிகழ்வின் 129வது (அக்.30) அமர்வில் ஆயிஷா இரா. நடராசனின் ‘மலாலா – கரும்பலகை யுத்தம்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தி உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி. அதைத் தொடர்ந்த உரையாடலின்போது நான் பகிர்ந்துகொண்ட கருத்துகளிலிருந்து இந்தப் பதிவு. புத்தகம் 2015ல் வந்தது.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்]

புத்தகம் வாங்க கிளிக் செய்க: மலாலா:கரும்பலகை யுத்தம்

– குமரேசன்