மலரும் சருகும் (நாவல்) – நூல்அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல்: மலரும் சருகும் நாவல்
ஆசிரியர்: டி.செல்வராஜ்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 214
விலை: ₹200
’மலரும் சருகும்’ – தமிழ் நாவல் உலகில் தலித் மக்களின் வாழ்வியலை முதன் முதலாகச் சித்தரித்த படைப்பு.
டேனியல் செல்வராஜ் சோசலிச யதார்த்தவாதத்தை தமிழ் இலக்கியத்தில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். சிறந்த எழுத்தாளரான இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அடித்தட்டு மக்களுக்கான வழக்கறிஞராகக் கழித்தவர். 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தைத் (தமுஎகச) தோற்றுவித்த 32 எழுத்தாளர்களில் ஒருவர். மலரும் சருகும், தேநீர், அக்னிகுண்டம், தோல், மூலதனம், பொய்க்கால் குதிரை, அடுக்கம் ஆகிய நாவல்கள், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ப.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
இவரின் ‘தோல்’ நாவல் 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றது. தோல் பதனிடும் தொழிலாளர்கள் வாழ்வியலைச் சித்தரித்த அந்த நாவலுக்காக பத்தாண்டு காலம் கள ஆய்வுகளை மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலங்கள் பற்றிய ‘தேநீர்’ நாவல் ’ஊமை ஜனங்கள்’ என்ற பெயரில் திரைப்படமாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த டி.செல்வராஜ் (1938-2019) கல்லூரியில் படிக்கும் காலத்தில் தி.க.சிவசங்கரன், தொ,மு,சி.ரகுநாதன், நா.வானமாமலை போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களுடன் பழகிடும் வாய்ப்பைப் பெற்றவர். செல்வராஜின் ’மலரும் சருகும்’ நாவல் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நடத்திய ‘முத்திரை மரக்கால்’ போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட நாவலாகும். இது தமிழின் முதல் தலித் நாவல் என்று கொண்டாடப்படுகிறது. 1966இல் வெளிவந்த இந்நாவல் தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இந்தநாவல் குறித்து இலக்கிய விமர்சகர் கோ.கேசவன் ‘இலக்கியமும், இலக்கியப்போக்கும்’ என்ற நூலில் ”!965ஆம் ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த தமிழ் நாவல்களில் சமூகக் கொடுமைகளை எதிர்த்த வலுவான குரலைக் கேட்க முடிகிறது. அதனைத் தொடங்கி வைத்த பெருமை செல்வராஜின் ’மலரும் சருகும்’ நாவலையே சாரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தலித் இலக்கியம் என்ற இலக்கிய இயக்கம் 1950களில் மராத்திய இலக்கியத்தில் பெரும் புயலாக உருவாகிப் பின்னர் கர்நாடக இலக்கியத்தில் கால் பதித்து இன்று தமிழ் இலக்கியத்தில் கால் பரப்பலாகிறது. தமிழில் தலித் இலக்கியம் குறித்து பல விதமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தலித்துகள் மட்டுமே தலித் இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்ற நிலையில், வேறு சிலர் அந்த நிலையிலிருந்து சற்றே இறங்கிவந்து தலித் இலக்கியம் தலித் உணர்வு உள்ளவர்களாலும் படைக்கப்படலாம் என்கின்றனர். ஆனால் எதார்த்தவாத இலக்கியக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களால் தலித் மக்களின் வாழ்க்கை அமர இலக்கியங்களாக மகாராஷ்டிராவில் தலித் இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே படைக்கப்பட்டுள்ளதே நிதர்சனம்.
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கச் சிற்பிகளில் ஒருவரான முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய ‘தீண்டாத்தகாதவன்’, ’கூலி’ ஆகிய நாவல்கள் இந்திய இலக்கிய வானில் சிறந்த தலித் இலக்கியமாக இன்றளவிலும் மின்னிக் கொண்டிருக்கின்றன. தகழி சிவசங்கரப்பிள்ளை மலையாள இலக்கியத்தில் தலித் மக்களின் வாழ்வியல் சோகங்களைக் காட்சிப்படுத்துகின்ற வகையில் ‘தோட்டியின் மகன்’, ‘இரண்டு இடங்கழி’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
செல்வராஜின் ‘மலரும் சருகும்’ நாவல், கிராமப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கின்ற தலித்துகள் தீண்டாமை எனும் கொடிய வன்முறையால், சமூக நோயால் புறக்கணிக்கப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாவதைச் சித்தரித்துக் காட்டுகிறது. இந்திய சமூக அமைப்பில் வர்க்க வேறுபாடுகள் வருண, சாதி வேறுபாடுகளாக மாற்றப்பட்டிருப்பதே, உலகில் உள்ள இதர சமூக அமைப்புகளிடமிருந்து அது வேறுபடும் இடமாகும். உழைப்பும், வர்க்கமும், சாதியும் ஒருவரின் பிறப்புடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள கொடுமை இந்தியாவில் மட்டுமே காணப்படும் அவலமாகும். இந்த நாவல் வெளிவந்த வேளையில் அதனை பிரச்சார நாவல் என்று ’கலை கலைக்காகவே’ என்று செயல்படும் கூட்டம் தூற்றியது. இன்னொரு புறம் ’‘இந்நாவல் தலித் இலக்கியமாகாது. நிலஉடைமையாளர்களுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் இடையிலான போராட்டமே நாவலின் மையப்பொருளாக உள்ளது, எனவே இதனை தலித் மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவலாகக் கருத முடியாது’ என்ற வாதத்தை தலித் இலக்கியவாதிகள் முன்னிறுத்தி வந்தனர்.
மலரும் சருகும் நாவல் வெளிவந்த இரண்டு ஆண்டுகளுக்குள் 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கீழ் வெண்மணியில் நியாயமான கூலி கேட்டதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 44 தலித் மக்கள் நிலஉடமையாளர்களால் தீயிலிட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் தமிழ்நாட்டின் வரலாற்றில் நீங்காத வடுவாக இடம்பிடித்தது. கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ள தலித்துகளின் வாழ்வும், விடுதலையும் அவர்களுடைய பொருளாதார விடுதலையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. சோசலிச யதார்த்தவாதத்தின் சாரமும் இதுவே.
மாடசாமி என்ற ஏழை விவசாயக் கூலியின் குடும்பத்தை மையப்படுத்திய கதையாக இருந்த போதிலும் ‘மலரும் சருகும்’ நாவல் ஏராளமான கதாபாத்திரங்கள், சம்பவங்களுடன் பரந்து விரிகிறது. திருநெல்வேலி அருகிலிருக்கும் ஒரு சிற்றூரில் மாடசாமி தனக்கிருந்த சிறிய அளவிலான நிலத்தில் உழைத்து, கள்ளங்கபடமற்று எளிமையாக வாழ்ந்து வருகிறார். மனைவியை இழந்த மாடசாமியை மகன் ஈசாக், மருமகள் பூரணம், பேரன் மோசே, பேத்தி கன்னிமரியாள் ஆகிய நால்வரும் நன்கு கவனித்துக் கொள்கின்றனர். மாடசாமியின் மகள் மாடத்தி திருநெல்வேலியில் வேலாண்டிக்கு வாக்கப்பட்டு சற்று வசதியாக வாழ்கிறாள். மாடத்தி-வேலாண்டி தம்பதிகளுக்கு ரத்தினம் என்ற மகனும் புஷ்பம் என்ற மகளும் இருக்கின்றனர். கல்லூரியில் படித்துவரும் ரத்தினத்திற்கு மாமன் மகள் கன்னிமேரியை திருமணம் முடிப்பது என்று நிச்சயமாகிறது. ரத்தினத்தின் படிப்புத் தேவைக்காக சில நூறுகள் தருமாறு மாடசாமியிடம் கேட்கிறாள் மகள் மாடத்தி. வேறுவழி ஏதுமின்றி மாடசாமி தன்னிடமிருந்த துளியோண்டு நிலத்தை காந்திமதிநாத பிள்ளையிடம் அடகுவைத்து பணத்தை ரத்தினத்துக்குக் கொடுக்கிறார். காந்திமதிநாத பிள்ளை ஊரில் உள்ள தலித் மக்கள் வசமிருக்கும் நிலங்களைப் பறித்து மிகப் பெரிய நிலஉடமையாளராக வலம் வருபவர். அரசதிகாரம் அவருக்குத் துணைபோகிறது. அவரின் பேராசைக்கு அளவேயிருக்கவில்லை.
காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்ததும் ரத்தினம் மனம் மாறி விடுகிறான். மாமன் மகள் கன்னிமேரியை மறந்துவிட்டு எம்.எல்.ஏ. மகள் செல்வியை மணந்து கொள்கிறான். அவனுடைய ஈவிரக்கமற்ற செயலை ரத்தினத்தின் பெற்றோர்களும் ஆதரிக்கின்றனர். ஆனால் தங்கை புஷ்பம் இத்துரோகச் செயலை எதிர்க்கிறாள். வீட்டைவிட்டு வெளியேறி ஆசிரமத்தில் சேருகிறாள். ரத்தினத்தின் புறக்கணிப்பிற்குப்பின் திருமணமே வேண்டாம் என்று சொல்லி கன்னிமேரி பிடிவாதமாக இருக்கிறாள். அடகு வைத்த நிலம் வட்டியில் மூழ்கிறது. காந்திமதிநாத பிள்ளை நிலத்தை தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொள்கிறான். குத்தகை விவசாயிகளாக அவர்களே தொடரலாம் என்று சொல்லி நல்லவன்போல் நடிக்கிறான். குத்தகை விவசாயிகளிடம் விளைச்சலில் பெரும் பகுதியை எடுத்துக்கொண்டு அவர்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவன். அறுவடை நேரத்தில் அரசு அங்கீகரித்த முத்திரை மரக்காலை அவன் பயன்படுத்துவதில்லை. மாறாக தன்னிடம் இருக்கும் மரக்காலைக் கொண்டு நெல்லை அளந்து அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறான்.
பட்டாளத்தில் சேர்ந்திருந்த ரங்கன் ஊருக்குத் திரும்பிய பிறகு அந்த ஊரின் நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறது. அவன் குத்தகை விவசாயிகளுக்கான சங்கத்தை உருவாக்குகிறான். விவசாயக் கூலிகளை ஏமாற்றிப் பிழைக்கும் காந்திமதிநாத பிள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறான்.
மாடசாமியின் பேரன் மோசே காதல் வயப்படுகிறான். மோசே-வள்ளி காதலர்கள் கழனியெங்கும் சுற்றி காதல் விளையாட்டு விளையாடுகிறார்கள். வள்ளியின் அக்காள் கணவன் அவர்களுடைய காதலுக்கு இடையூறாகக் குறுக்கிடுகிறான். அக்காள், தங்கை இருவரையும் மணந்து கொண்டால் ஆண் பிள்ளை இல்லாத வீட்டின் சொத்து முழுவதையும் அடைந்துவிடலாம் என்பது அவனுடைய திட்டம். ரங்கனின் ஆதரவுடன் மோசே-வள்ளி திருமணம் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடக்கிறது. திருமணத்தை மறுத்துவந்த கன்னிமேரி ஊரில் யாரும் மணக்க மறுத்த சுடலை எனும் அரைக் கிறுக்கனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அனைவரும் பாராட்டும்படி சுடலையை படிப்படியாகத் திருத்தி அவள் வெற்றி பெறுகிறாள். ரத்தினத்தின் தங்கை புஷ்பம் ஆசிரமத்தில் இருந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்கிறாள்.
ரங்கன் தலைமையில் குத்தகை விவசாயிகளின் போராட்டம் உச்சத்தை எட்டுகிறது. சாதி பேதமின்றி ஊர் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். மோசே, சுடலை இருவரும் அந்தப் போராட்டத்தின் முன்னணியில் நிற்கிறார்கள். காவல்துறையை அழைத்து காந்திமதிநாதன் போராட்டத்தை நசுக்க நினைக்கிறான். காவல்துறை அதிகாரியான மாடசாமியின் பேரன் ரத்தினம் அங்கே வந்து தன் சொந்தபந்தங்கள் உட்பட அனைவரையும் கைதுசெய்து வண்டியில் ஏற்றுகிறான். கன்னிமேரி போராளிகளை ஏற்றிச் செல்லும் காவல்துறை வண்டியின் பின்னால் ஓடுகிறாள். மாடசாமி கிழவர் அவளுடைய கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளைப் பின்தொடருகிறார். மார்பில் குழந்தையைக் கவ்விப் பிடித்தவாறு கீழே விழுந்து அவர் மரணத்தைத் தழுவுகிறார். தற்செயலாக அங்கே வரும் புஷ்பம்-பத்மநாபன் தம்பதிகள் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள். அத்துடன் நாவல் முடிவடைகிறது.
பல நூறு ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வாழும் தலித் மக்களின் பொருளாதாரம் மேம்பட்டால்தான் அவர்களின் அவலங்களும், அவமானங்களும் மாறி அவர்களால் சமூக அந்தஸ்து பெற முடியும். கிராமங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளாக இருக்கும்வரை தலித்துகளின் அவலம் தொடருவதைத் தவிர்க்க முடியாது. கீழ் வெண்மணி, கொடியங்குளம் என்று தொடரும் போராட்டங்கள் அனைத்தும் அந்தத் தொடர்ச்சியின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. ’மலரும் சருகும்’ நாவல் இப்போராட்டங்களுக்கான உந்து சக்தியாக இருந்துள்ளது என்பதில் ஐயமில்லை.
–பெ.விஜயகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.