மாலதி மைத்ரியின் "பேய்மொழி" கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம். இடப்புறம் கவிஞர் மாலதி மைத்ரியின் உருவப்படம், வலப்புறம் நூலின் 3D அட்டை, பின்னணியில் இயற்கை மற்றும் கடல் காட்சியுடன் விளம்பர வடிவமைப்பு.

மாலதி மைத்ரியின் “பேய்மொழி” கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

2001ல் வெளிவந்த மாலதி மைத்ரியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘சங்கராபரணி’ தொடங்கி 2003ல் வெளிவந்த ‘நீரின்றி அமையாது உலகு’> 2005ல் ‘நீலி’> 2011ல் ‘எனது மதுக்குடவை’> 2017ல் வெளிவந்த ‘முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை’> 2019ல் வந்த ‘கடல் ஒரு நீலச் சொல்’ ஆகிய தொகுப்பு வரையிலான அனைத்துக் கவிதைகளையும் உள்ளடக்கிய முழுத்தொகுப்பு இந்தப் ‘பேய்மொழி’.

மொழியின் சமூகப் பயன்பாடானது அதன் இயக்கத்திலேயே உள்ளது. சமூகத்தை இயங்கச் செய்வதற்கான ஒரு கருவியாகவே மொழி உள்ளது. இங்கு சமூகம் என்பதே ஆண் மைய அடிப்படையிலேயே ஊன்றி நிற்கிறது. அதன் வளர்ச்சி என்று உருவகப்படுத்துவதும் ஆண் மையத்திலிருந்தே கிளைத்து எழுகிறது.

‘நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்> நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்> நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்> நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி’ என்ற சொல்லாடல் வழி சமூகத்தின் அனைத்து அடிப்படை அலகுகளிலும் சாதியின் இருப்பை நியாயப்படுத்துவதாகவும் அதை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கும் பாரபட்சத்தன்மையை எடுத்துரைப்பார் பெரியார்.

அதையே இவ்வாறாகக் கூறிப் பாருங்கள்:
‘நம் கடவுள் ஆண்மை காப்பாற்றும் கடவுள்> நம் மதம் ஆண்மை காப்பாற்றும் மதம்> நம் இலக்கியம் ஆண்மையைப் போற்றும் இலக்கியம்> நம் மொழி ஆண்மை காப்பாற்றும் மொழி’. சிந்திப்பவர் எவருக்கும் இதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவ்வகையில் சமூக அசைவியக்கக் கருவியான மொழி இங்கு ஆண்மொழியாகவே அமைந்திருக்கிறது. இம்மொழியில் முன்வைக்கப்படும் ‘பெண்மை’யும் கூட ஆண் மையப் பெண்மை என்பதே உண்மை. அங்கு பெண்மையானது> தேவதையாகவும் ஆண் உருவகித்திருக்கும் ‘அழகியல்’ சட்டகத்துக்குள் அடங்கும் பதுமையாகவுமே வெளிப்படும்.

ஆக> அசல் ‘பெண்மை’ எவ்வாறு உருவாகும்? சமூக அலகுகள் அனைத்தும் – ஏன் ஒட்டு மொத்த சமூகமே – ஆண் மைய சமூகமாக இருக்கையில்> இங்கு முழு உயிர்ப்புள்ள அசல் ‘பெண்மை’ உருவாக முதலில் சமூகப் பரப்பில் பரவி நிற்கும் ‘ஆண்மை’ அகற்றப்படுதல் அவசியமாகிறது. அந்த வகையில் மொழியில் – இலக்கியத்தில் வேரூன்றியுள்ள ஆண் மொழி அகற்றப்படுவதாலேயே அங்கு தனித்துவமான பெண் மொழி உருவாக முடியும். ஆண் மொழியை எப்படி அகற்றுவது? அங்கிங்கெணாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்மொழி இயங்கும் சமூக – இயற்கை வெளியையே மாற்றிவிட்டால்..?

மாலதி மைத்ரியின் கவிதைகளில் – அவரது மொழியில் – அதுதான் நிகழ்த்தப்படுகிறது. சமூகப் புறக்கட்டுமானங்களை முழுவதும் நிராகரித்து ஒட்டுமொத்த இயற்கை வெளியையும் ‘பெண்மை’யாக – ‘பெண் மொழி’யாகப் புதிதாகப் புனைவாக்குகிறது – உருவாக்குகிறது. அதுவே தனது அம்மா சொன்ன கதைக்குள் இருந்த யானையைப் பரிசாகக் கொடுத்ததும்> அந்த யானையை அழைத்துக் கொண்டு வழமையான வனத்துக்குள் செல்லாமல்> கடலுக்குச் செல்ல வைக்கிறது. கடலுள்ளும் வானுள்ளும் கரைந்து மறைந்த யானை கடலின் அலைகளாய் தன்னைப் பின்தொடர> ‘கடலில் கரைந்த ஒற்றை யானைக்கு/ஓராயிரம் தும்பிக்கைகளென/என் மகள் ஊருக்கெல்லாம்/ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்’ என அடுத்த தலைமுறைக்கும் – இதுகாறும் நிறுவப்பட்டு வந்த இயற்கையை முன்பின்னாகச் சிதைத்தும் தன்போக்குக்கு மறுஉருவாக்கம் செய்தும் – கடத்தச் செய்கிறது.

நதி> மழை> கடல்> மணல்> மலை> காடு> இரவு> பகல்> மரம்> பறவை> விலங்கு> ஊர்வன எல்லாமுமாக இங்கு பெண் மைய மொழி கட்டமைக்கப்படுகிறது – அல்லது – அமிழ்த்தி மூழ்கடிக்கப்பட்டு மறைக்கப்பட்ட பெண் மைய இயற்கை வெளியை வெளிக்கொணரும் பணியை மாலதி மைத்ரியின் கவிதைகள் மேற்கொள்கின்றன. இங்கு மொழி உருக்கொள்ளும் புதிய வடிவம் – பெண் வடிவம் – பயமூட்டுவதாக புதுமையாக இருக்கிறது. புதியது எல்லாமே பயத்தையே முதலில் ஏற்படுத்தும். அந்த வகையில் இங்கு பெண்மொழியே பேய்மொழி. அந்தப் பேயின் மொழி விடுதலை. அது நீலியின் மொழி. ஆண் மைய ‘பூமிக்கு வெளியே நிற்கிறாள் நீலி’.

‘பெண்ணின் தவிப்புப் புரியாதவன் ஆண்’ என்ற கவிதாயினி அவ்வையின் அகப்பாடல் காலந்தொட்டே பெண் மொழியை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகள் தோற்றம் கொண்டுவிட்டன. மாலதி மைத்ரியின் கவிதைகளில் அதன் தீவிர நிலையை ஒரு தேர்ந்த வாசகனால் உணரமுடியும். அதை கவிஞரும் உணர்ந்ததாலேயே> ‘ஒளவையின் மகள் நான்/பல காலங்களையும் வெளிகளையும்/பலவித உடல்களினூடாகக் கடந்து/சென்று கொண்டிருக்கும் ஒளவையின்/மகள் நான்..’ என்று அறைகூவலிட்டு> ‘ஒளவையின் யோனி விரிந்து/இரண்டாயிரமாண்டு கால வெளியையும்/மொழி வெளியையும் உள்வாங்கி/என்னைப் பிதுக்கித் தள்ள/என் நகத்தாலேயே தொப்பூழ்க் கொடியைக்/கிள்ளித் துண்டித்துவிட்டு/குருதியீரம் காயாமல் நடந்து போகிறேன்’ எனத் தன்னையும் தன்னையொத்த பெண்கவிகளையும் அவ்வையின் – அவ்வை மொழியின் – தொடர்ச்சியாகவே காண்கிறார்.

பால்> சாதி> மதம்> இனம்> வர்க்கம்> மொழி ஆகியவற்றின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட வேறுபாடுகளை – முரண்களைக் களைய – ஒட்டுமொத்த மானுட சமத்துவத்துக்கான முதல் மற்றும் அடிப்படை நிபந்தனையாக அமைவது பெண் மைய சமூக உருவாக்கமாகும். அதற்கான வழியே பெண்மொழி உருவாக்கம். அத்தகையதொரு பெண் மொழி இத்தொகுப்பில் முழுமையாக உருக்கொண்டு வந்துள்ளது.

‘ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்
குடிகாரன் துரோகி மோசடிக்காரன்
ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்
கொடுங்கோலன் காமவெறியன்
சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்
இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை
அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது….

….ஆண்கள் வீட்டைப் புணர்வதன் மூலம்
பூமியை வளர்க்கிறார்கள்
பெண்களையல்ல
காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.’

மாலதி மைத்ரியின் கவிதைகளில் செயல்படும் பெண் நிலையானது – சுயமான தன்னிலையாகவும் – அதே சமயம் இயற்கையுடன் கலந்த கூட்டு நிலையாகவும் – பெண்ணின் அகம் சார்ந்த/உடல் சார்ந்த உணர்வுகளைக் கொண்டு பொது நிலையாகவும் – ஒரே நேரத்தில் செயல்படுகிறது. தானே இயற்கையான பின் வெளியையும் காலத்தையும் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுடைக்கும் ஆற்றல் பெண் நிலைக்குக் கிடைத்து விடுகிறது. அந்தக் கால-வெளி கட்டுப்பாட்டினைக் கொண்டு இதுகாறும் அதிகாரத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்திய ஆண் மையத்தை தலைகீழாக்குகிறார்.

இங்கு ஆண் மைய ஆதிக்கத்தின் வழி உருவாக்கப்பட்ட அடிமைப்பெண் உடலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இயற்கையிலான பெண் உடலை முன்வைக்கிறார். அதன்வழி பெண் உடலை முன்வைத்து ஆதிக்க ஆண் உடலைக் கட்டுடைக்கிறார் – அல்லது – இதுகாறும் ‘உருவாக்கப்பட்டு’ ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட ஆண் உடலை அழிக்க முற்படுகிறார்.

‘கோடி கோடி முலைகளாய்ப் பூரிக்கும்
அண்டப் பேரொளியில்
குளம் குட்டை அருவி
ஆறு ஆழியெல்லாம்
பூதேவியின்
கொக்கலிக்கும் முலைகளாகப்’ பார்க்கும் அவரால் அருகாமைத் தீவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சக தமிழ் உயிர்களின் மீதான பேரினவாத ஒடுக்குமுறை – கொடுமைகளைத் தாங்க முடியவில்லை. நூல் நெடுக அந்த ஆற்றாமை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவே ‘பட்டாசு சத்தம் கேட்டால்
புளியமரத்தின் வேர்களுக்குள் பதுங்கிக்கொண்டு அழுது கதறுகிறாள்’ என்று அகதி ஒருத்தியின் பயத்தைப் பாடச் செய்கிறது.

‘புலால் உண்ணாமையை
போதித்த புத்தன்
துரட்டியென நீண்ட
கொலைக்கரங்களை
யோனிக்குள் நுழைத்து
கர்ப்பப்பைகளைப் பிடுங்கி எடுத்து
இனி பிறக்கப் போகும்
சிசுக்களோடும்
யுத்தத்தைத் தொடருகிறான்
சிரிக்கும் புத்தன்’ என்று புத்தனின் பெயரால் நடந்த பேரினவாதப் படுகொலைகளை எண்ணிக் கோபம் கொள்ளச் செய்கிறது.

பெரும்பான்மையான தமிழ்க் கவிதை வெளியில் காணக் கிடைக்காத கடலும் கடல் சார்ந்த நெய்தல் வாழ்வும் தனி கரிசனத்துடன் மாலதி மைத்ரியின் கவிதைகளில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நல்லவாட்டுக் கடலில் மீனெடுத்து
பத்து மைல் கழுத்தொடியச் சுமந்து
விற்றுத் திரும்பும் ஆயாக்களும் அம்மைகளும்
மீன் வேட்டைக்குக் கடலோடும்
என் செல்வ மக்கள்
கரையேறி விடும் சுடுமூச்சே
புதையல் எந்தங்கமே’

என்று கரையில் காத்திருக்கும் நெய்தல் பெண்களின் பாட்டைப் பாடிச் செல்கிறார். நெய்தல் திணையில் பெண்ணே குடும்ப அமைப்பின் பொருளாதார அச்சாக இருந்து சுழற்றுவிக்கிறாள் என்பதையும் கவிதைகள் வழி உணர்த்துகிறார்.

‘….பெருங்கடலோடி முதல்பாடில்
பிடித்த வலை மீன்களெல்லாம்
மகன் சூட்டிய கிரீடமாய்
பெருமையாய் அமர்ந்திருக்க
முதுநீரை நீலக்கல்லாக்கி
மூக்கில் அணிந்த
தென்முனை குமரி அம்மையாய்
கடலமுதேந்தி சந்தைக்குப் போகிறாள்…’

இயற்கையை இப்போது பாதுகாக்காவிடில் நாளை பாழே மிஞ்சும் என்ற கவலையும் நெகிழிப் பயன்பாடு உள்ளிட்ட பூமியின் இயற்கைத் தன்மையை சீரழிக்கும் விசயங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற ஆதங்கமும் பல கவிதைகளில் கவலையோடும் ஆழ்ந்த அக்கறையோடும் வெளிப்படுகிறது.

‘….சொரி மீன்களென மிதந்து
பெருங்கடலை ஆளத் தொடங்கும்
பாலித்தீன் பூதங்கள்
இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்களின்
வயிற்றில் செரிக்காத பூதுருக்கள்
தேவதையை மணலில் புதைக்கவிட்டுத் திரும்புகிறோம்
கடல்கன்னி சிந்தும் கண்ணீர்
விதைத்த வயலெல்லாம் பாய்ந்து
மூழ்கிறது நம் குடி…’

‘….இளகும் மனமற்ற
சிமெண்ட் சாலையில்
ஊர்த்தவப் பேய்மழை
கால்கள் ஒடிய ஒடிய ஆடிக்களைத்து
மரிக்கிறது கழிவுநீருடன்
புறவழிச்சாலையில் குடிநீர் லாரி
நள்ளிரவே வரிசையில் வாய்பிளக்க
நிற்கும் பிளாஸ்டிக் குடங்களில் நிரம்புவது
நாளைய பாழ்….’

ஆண் மையம் தகர்த்த இயற்கை சார் பெண் மைய கவித்துவ மொழியின் வழி அதிகாரத்தின் மூலமான வலிகளிலும் வாதைகளிலும் இருந்து பெரும் ஆசுவாசத்தையும் விடுதலை உணர்வையும் தருகிறது மாலதி மைத்ரியின் இக்கவிதைகள். அவற்றுள் அவ்வப்போது கோள்களும் திசைகளும் இடம் மாறச் செய்யும் மழை பொழிகிறது. பால் மணத்துடன் நதி சலசலத்துப் பாய்கிறது. கடல் வீட்டைத் தோணியாக்கி ஓயாமல் அலையடிக்கிறது. ஆகாயத் தாமரையும்> நீலாம்பலும்> கல்யாண முருங்கையும்> தாழையும்> வேம்பும்> அடம்பக் கொடியும்> பச்சைப் பனையும்> கொய்யா மரமும்> சவுக்குக் காடும்> மாமரமும் உயிர் அசையும் முனகலோடு அம்மாவின் அடிவயிற்று வெம்மையைத் தோற்றுவிக்கின்றன.

பெண் கவிதைகளின் தவிர்க்கவியலாக் கூறான – காமத்தை அதிகாரத்துக்கான வழியாக்கி உடலை ஆயுதமாக்கும் கவிதைகளில் கூடுதலாக இயற்கையும் இங்கு துணை ஆயுதமாகிறது. ‘கொழுத்த களிநண்டுகள்/அலையும் அலையாத்திக்காட்டில்/செம்பவளச் சில்லென/ ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி…/…சதுப்பு நிலத்தின்/கூதிர்கால இரவொன்றில்/இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற/கொத்திக்கொண்டு பறக்கிறது/கருங்கால் நாரை/அதன் அலகில்/சிறுசுடரென எரிகிறதென் யோனி…’ எனப் பெண்மையை சிலாகிக்கும் கவிஞர் ‘…தாயடையாள ஏக்கத்தின்/வீங்கிய மரு…/…திருநங்கை/வெட்டியெறிந்த உபரித்தசை…/…ஆண் தர்மத்தின் நெற்றியில்/அழுகித் தொங்கும் ஊன்’ என்று லிங்கமைய ஆண்மையை துடைத்தெறிகிறார்.

இத்தொகுப்பில் கண்டது பேய்மொழி என்றாலும்> அந்தப் பேய்மொழிதான் துலக்குகிறது இதையும் –
‘….விண்மீன் என்றால் கவிதை
நட்சத்திரம் என்றால் வெறும் நட்சத்திரம்தான்
மற்ற எந்த மொழியிலும்.’

கூடவே அசல் அசைவம் எது என்பதையும் கூட –

‘பெண் முத்தம்
துடிக்கும் இறாலை
உயிராய் உரித்துண்பது
பதனீயுடன்

ஆண் முத்தம்
பச்சைக் கணவா மீனை
பற்கடிப்படாமல் பனங்கள்ளுடன்
சுவைப்பது.’

மொத்தச் சுருக்கமாகச் சொன்னால்> தமிழ்க் கவிதைப் பரப்பில் ஆண்மொழி தவிர்த்ததொரு பெண்மொழி உருவாக்கத்திலும்> பெண்மையை முற்றும் முழுதுமான இயற்கையாய் உருவகித்து புதிய உலகிற்கான அடிப்படையை முன்வைப்பதிலும்> ஈழத் தமிழரின் அவலநிலை குறித்தும் போரின் காரணமான புலம்பெயர் வாழ்தலின் கொடுமை குறித்தும் ஆழ்மன ஆதங்கத்தை வெளிப்படுத்துவதிலும்> இயற்கையே பெண்மையான பின் திணைதோறுமான பெண்ணின் இருப்பையும் – குறிப்பாக – நெய்தல் வாழ்வியலில் பெண்ணின் தலைமைத்துவத்தையும் இத்தொகுப்பில் தன் கவிதைகளின் வழியே மாலதி மைத்ரி குறிப்பாக முன்வைக்கிறார்

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“பேய்மொழி” கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்:மாலதி மைத்ரி
வெளியீடு:
எதிர் வெளியீடுதொடர்புக்கு: www.ethirveliyedu.in – 04259 226012 – 99425 11302
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *