“பால்யகால சகி”
வைக்கம் முகமது பஷீர்
தமிழில் : குளச்சல் மு.யூசுப்
பக்கங்கள்: 80
₹. 100
காலச்சுவடு பதிப்பகம்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1944) எழுதப்பட்ட குறுநாவல். இன்று படிக்கும்போது அதே உயிர்ப்புடன் இருப்பதே இந்நூலின் வெற்றியாக கருதுகிறேன். பல்வேறு பாராட்டுக்களையும் நல்விமர்சனங்களையும் பெற்ற நாவலே இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள மூலத்தின் இயைபு மாறாமல் அழகுத் தமிழில் எளிய முறையில் மொழிபெயர்ப்பு செய்த குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கே முதல் வணக்கம் உரித்தாகிறது. பிறமொழி படைப்புகளின் சாரம் குறையாமல் கருத்தும் சிதையாமல் மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு மேலிடாமல் ஒரு படைப்பை வார்த்தெடுப்பது என்பது பாராட்டுதலுக்குரியது தானே…
“பால்யகால சகி” என்ற தலைப்பே மிகுந்த ஆர்வத்தை ஊட்டக்கூடியதே… அதிலும் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர்… கேட்கவா வேண்டும்??? நூலைப் படிக்க விருப்பம் உண்டாகாமல் போகுமா??? நூலின் தொடக்கத்தில் உண்டான ஈர்ப்பு இறுதி வரை நில்லாது பயணித்த அனுபவம் அலாதியானது.
மஜீதும் சுகறாவும் கண்முன் நடமாடும் கதாபாத்திரங்களாகவே நகர்கின்றது கதைக்களம். சிறுவயதில் நமது பால்யகால சகியாக யாராவது இருந்தார்களா என்ற தேடலையும் பால்யகால சகியாக யாருமே கிட்டவில்லையே என்ற ஏக்கத்தையும் பால்யகால சகியாக அந்தப் பெண் இருந்திருக்கலாமோ என்ற தாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவே இந்நூல் பயணிக்க வைக்கிறது நம்மை நமது இளமைக் காலத்தில்…
ஒவ்வொரு பகுதியிலும் வரக்கூடிய பருவங்கள் மிக விரைவாக வளர்ந்து கொண்டே செல்வதால் நாவலும் மிக மிக விறுவிறுப்பாக நகர்கிறது. ஏழ்மையின் வலியினூடாக அன்பின் உயர்நிலையையும் (சுகறாவின் வாப்பா) செல்வ மிடுக்கின் வழியாக ஆணவச் செருக்கையும் (மஜீத்தின் வாப்பா) தோலுரித்து காட்டுவதாக அமைந்துள்ளது இந்த குறுநாவல்…
‘மரணம்’ ஒரு குடும்பத்தின் வாழ்வில் ஏற்படுத்தும் தடுமாற்றங்களில் நாம் மனம் வருந்தாமல் கடக்க இயலாதுதானே… அதனை நாவலாசிரியர் எடுத்தியம்பும் பாங்கில் கரையாத கல்மனமும் கரைவது நிச்சயமே… மஜீதும் சுகறாவும் பேசும் உயர்நிலைப் படிப்பு குறித்தான உரையாடலே ஒரு பானைச் சோற்று சாட்சியாக கருதுகிறேன்.
‘கோபம்’ ஒரு குடும்பத்தின் உறவுகளில் உண்டாக்கும் விரிசலை மஜீத்தின் வாப்பா மூலமாக மிக யதார்த்தமாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். பெற்றோரிடம் கோபங்கொண்டு விடலைப் பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்நூல் ஏதேனும் சிறுபாடம் புகட்டுவதாகவே அமையும் எனக் கருதுகிறேன்.
பெண்ணினத்தின் அடிமைத்தனத்தையும் ஆணினத்தின் அகங்காரத்தையும் மஜீத்தின் பெற்றோர் வாயிலாக தெரிவித்திருப்பது சாதாரணமாகத் தோன்றினாலும் சிறுவன் மஜீத்தின் மனநிலையிலும் அதே எண்ணம் வேரூன்றி வளர்வதைக் காட்சிப்படுத்திய விதம் கவனிக்கத்தக்கது…
நகத்தில் பிராண்டுவதும் நகத்தை வெட்டுவதற்கான மகாராணிக் கதையும் சிறுவயதில் சிலாகித்து மகிழும் தருணங்களே… ” கொஞ்சம் பெரிய ஒண்ணு” என்பதற்கான விளக்கம் சிந்திக்க வைத்து சிரிப்பூட்டக்கூடியதே…
“சுன்னத்” நிகழ்வு மற்றும் காதணி விழா வைபவம் வாயிலாக சமூக ஏற்றத்தாழ்வை படம்படித்துக் காட்டும் காட்சிகள் வாழ்வியலை உயிரூட்டமாக தெளிவுபடுத்துகின்றன…
மஜீத்துக்கும் சுகறாவுக்கான உறவு காதலாக அரும்புமென நாம் அவதானிப்பது இயல்பானதே என்ற போதிலும் அதற்கான சூழலும் சந்தர்ப்பமும் கவித்துவமானதே… காதல் முறிவுக்குப் பின் கதை “அழகி” படக்கதையாகத் தோற்றமளிக்குமோ என்ற சிந்தனை உண்டாவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்த குடும்பம் விதிவசத்தால் நிர்மூலமாகி சிதிலமடைந்த நிலையில் தள்ளாடுவதை காணும்போது வறுமையின் கோரத் தாண்டவம் நம்மைக் கலங்கடிக்க வைப்பதாகவே இருக்கிறது. முற்பகுதி மிக மிக மகிழ்வான மனநிலையில் பயணித்த கதைக்களம் பிற்பகுதியில் முகாரி ராகம் இசைப்பதாக மாறுவது சற்று கவலையளிப்பதாகவே உள்ளது.
முஸ்லீம் சமூகத்தில் நிலவும் திருமண சடங்கு முறைகளையும் வரதட்சணைக் கொடுமைகளையும் மிக நுட்பமாக எடுத்தியம்பியதில் எழுத்தாளர் வெற்றி வாகை சூடியுள்ளார் எனலாம். நாடோடியாகத் திரிந்து மீண்டும் ஊர் திரும்பும் மஜீத்தை உறவினர்கள் வரவேற்று உபசரிக்கும் விதம் பின்னர் தடம் மாறிப் போவது காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது.
காதல் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த போதிலும் வாழ்வின் துயரில் சிக்கி சுழலும் மஜீத்தின் மனநிலையில் பயணிப்பது புதியதோர் அனுபவமாக மிளிர்வது கண்கூடு. எண்பது பக்கத்தில் இந்நாவல் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் நம் அகக்கண்ணில் விரிவடைந்து விசாலமான பார்வையை உண்டாக்கவல்லது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை எனலாம்.
குறைவான கதாபாத்திரங்களின் மூலம் நேர்த்தியாக பின்னப்பட்ட கதைக்களத்தில் அற்புதமான படைப்பைத் தந்துள்ளார் எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள். ஒரே அமர்வில் நான் படித்த முதல் குறுநாவல் என்ற பெருமிதமும் இந்நூலின் மூலம் கிட்டியுள்ளதில் கூடுதல் மகிழ்வுடன் பகிர்கிறேன்.
விறுவிறுப்பாக அமைந்த உன்னதமான படைப்பு. முஸ்லீம் சமூக குடும்பங்களுடன் உறவாடிய உன்னத உணர்வு மேலிட்டதைத் தவிர்க்க இயலவில்லை. முஸ்லீம் சமூகம் சார்ந்த புத்தம்புதிய வார்த்தைகளை மிக லாவகமாக அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு இந்நூலுக்கு கூடுதல் பலமே…
நல்லதோர் படைப்பு. வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.
பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.