நூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்நூல்: `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’
ஆசிரியர்: நடிகர் இன்னசென்ட் | தமிழில் – மு.ந.புகழேந்தி 
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/

திரு.இன்னசென்ட், பிரபல மலையாள திரைப்பட நடிகர். காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் மலையாள திரை உலகில் நீண்ட காலம் நடித்து வருபவர். மலையாள திரைத்துறை சங்கமான “அம்மா ” வின் தலைவர்பொறுப்பில் இருந்தவர். 2014 ஆம் ஆண்டில், சாலக்குடி மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை சந்திக்க வந்த அவரின் பள்ளித்தோழனும்,அவர் மனைவியும் தாங்கள் புற்று நோயாளிகளுக்காக ஒரு காப்பகம் அமைக்கப்போவதாகவும், அவர், அதற்கு பொறுப்பாளராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர். மக்களை சிரிக்க வைத்து பிழைக்கும் தனக்கும், கண்ணீருக்கும் , பெரும் துயர்த்திற்கும் அடையாளமான புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்று மனதிற்குள் எண்ணுகிறார். புற்று நோய் போன்ற பெரிய நோய்கள் தனக்கு வராது என்றும் நினைக்கிறார்.

எனவே,நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அந்த பொறுப்பினை அரைகுறை மனதோடு ஏற்றுக்கொள்கிறார். பின்னர் அந்த காப்பகத்தின் செயல்பாடுகளை கண்ட பிறகு, அதன் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அந்த காப்பகத்திற்க்கு தொடர்ந்து தனது மனைவியோடு சென்று வருகிறார். தனது திரைப்படத்துறை நண்பர்களின் துணையோடு வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகள் நடத்தி, அந்த காப்பகத்துக்கு நிதி திரட்டி தருகிறார்.

அந்த காப்பகத்தின் நோயாளிகளுக்காக தங்களின் வாழ்வை அற்பணித்துக்கொண்ட பல நல்ல மருத்துவர்களோடு அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. அவர்களில் ஒருவர் கங்காதரன் என்னும் மருத்துவர். அவர், அவரின் பள்ளிதோழரும் ஆவார். இந்த நேரங்களில், அவருக்குசிறு, சிறு சுகமின்மை ஏற்படுகிறது. நண்பர்களான மருத்துவர்களின் நல்ல சிகிச்சையினால் குணம் அடைகிறார். பிறரை சிரிக்க வைக்கும் தனக்கு பெரிய நோய்கள் எதுவும் வராது என்ற திடமான நம்பிக்கையில் இருக்கிறார்.

அந்த நம்பிக்கைக்கு மாறாக,திடீரென்று ஒரு நாள் தொண்டையில் உணவு உண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் தொண்டையில் உள்ள ஒருசிறு கட்டி என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த கட்டியின் தன்மை அறிய பையாப்சி எடுத்து அனுப்பப்படுகிறது. அதன் முடிவுகள் வருகிற வரையில், இன்னசென்டும், அவர் குடும்பமும் மிகுந்த மனஉளைச்சலும், பதட்டமும், வேதனையும் அடைகின்றனர்.

லிம்போமா என்னும் ஒரு வகை புற்றுநோய் என பரிசோதனை முடிவு மூலம் அறிகிறார். அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து போகிறது. பெரும் துக்கத்திற்கும், சோகத்திற்கும் ஆளாகிறது. தொடர் சிகிச்சையின் மூலம் குணப்படுத்திவிட முடியும் என்ற மருத்துவர் நம்பிக்கை அளிக்கிறார். ஆனாலும், அவரின் குடும்பம் முழுமையும் அழுகையும், கண்ணீராகவும் வேதனைப்படுகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.அதனால், அவருக்கு தலைமுடி கொட்டுவதும், உடல் இளைத்து போகவும் செய்கிறது. மருத்துவமனையில் இருந்தபோதும், வீட்டுக்கு வந்தபோதும் அவரை காண நண்பர்கள், உறவினர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், என ஏராளமானோர் வருகின்றனர். திரு. இன்னசென்ட், தனது நோயை மறந்து தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு அவர்களிடம் உரையாடுகிறார். அந்த உரையாடல்களில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழை யோடுவதை இந்த நூலை வாசிக்கும் போது அறியமுடிகிறது.

அவரின் நோய் குணமான நிலையில், அவரது மனைவியை கட்டாயப்படுத்தி ” மெமோகிராம் ” என்னும் பரிசோதனையை செய்யசொல்கிறார். அவருக்கும்
மார்பகப்புற்றுநோய் என்று தெரியவருகிறது. மீண்டும் அழுகையும் கண்ணீரும், சோகமும் தொடர்கிறது. ஒரு சிறிய அறுவை சிகிச்சை. அதன் பிறகு தொடர் சிகிச்சை .மனைவியும் புற்று நோயில் இருந்து மீண்டு வருகிறார்.

திரு.இன்னசென்ட், தனக்கும், தனது மனைவிக்கும் வந்த புற்றுநோயை முறையான மருத்துவம், அந்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை, என அவற்றை எதிர்கொண்டு மீண்டதையும், மறுபடி நடிக்க வந்ததையும் எழுதியுள்ளார். திரைப்பட நடிகராக இருக்கும் அவரே மருத்துவ செலவினங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை உணர்கிறார்.

எனவே, அரசு மருத்துவமனைகளின் தரம், ஏழை மக்களுக்கு உயரிய சிகிச்சை, மருத்துவர், பரிசோதனைக்கூடம்கள், மருந்து கடைகள் ஆகியோரின் கூட்டுக்கொள்ளை ஆகியவைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட நாடாளுமன்றத்தில் பேசுகிறார். அதன் மூலம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டில் பல நல்ல மாற்றம்கள் ஏற்படவும், ஏழைகளுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார்.

ஒரு சிரிப்பு நடிகரின் புற்றுநோய் அனுபவங்கள், நகைச்சுவையோடு விவரிக்கப்பட்டுள்ளது.அதே சமயத்தில் இது போன்ற பெரிய நோய்கள் வரும்போது மனம் தளராது நம்பிக்கையோடு எதிர்கொள்வதும், தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுமே வியாதியில் இருந்து விடுபடச்செய்யும் என நம்பிக்கை ஊட்டுகிறார்.

மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது.

ஆ. அசோக் சீனிவாசன்