மீண்ட சொர்க்கம்
மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்டின் `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’  நூலை வாசித்தீர்களா?’ என இயக்குநரும் தோழருமான கரு.பழனியப்பன் கேட்டிருந்தார்.
அவர் ஒரு நூல்குறித்து எப்போது கேட்டாலும் உடனே தேடிப்பிடித்தேனும் வாசித்துவிடுவேன். எனில், அவர் தேர்ந்த வாசகன். தெளிந்த அரசியலைத் திறந்த மனதுடன் பகிர்பவர். இன்னசென்டின் மிகச்சிறிய நூலான அது, நேற்றைய இரவின் நிலவையும் தூக்கத்தையும் பறித்துக்கொண்டது.
அணுஅணுவாக வாழ்வின் துயர்மிகு தருணங்களை அலசியிருக்கிறார். சிரிப்பால் உலகையே ஆளும் அவர், நோயின் கொடூரத்திலிருந்து மீண்டெழுந்த அழகிய பதிவு.
எழுத்தின் ஒவ்வொரு பத்தியிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளைப் பரவவிட்டிருக்கிறார். நோயின் தன்மையை எதிர்கொள்ள அவர் பட்ட பாடுகள், எந்தச் சினிமாவிலும் காட்டப்படாதவை.
புற்றுநோயின் அதிதீவிர தாக்குதலுக்கு உட்பட்ட நிலையில் தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் லிஸிக்கும் உதவியாயிருந்த மனைவிக்குமே அந்நோய் பீடித்த தகவல் அவரை நிலைகுலைய வைக்கவில்லை. மாறாக, நிமிர்ந்தெழும் நம்பிக்கையைத் தருகிறது.
வரிகளுக்கு இடையிடையே அவர் தொட்டுக்காட்டும் தத்துவ தரிசனங்கள் தனித்துச் சொல்லத் தக்கவை.
தம்மைச் சந்திக்க வருகிற நபர்கள் நோயைவிட, கூடுதல் அச்சத்தை கொடுத்தார்கள் என்பதைச் சிரித்தபடியே கடந்துச் சென்றிருக்கிறார். இந்திய மருத்துவ வணிகத்தையும் ஆங்காங்கே கடியாமல் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்ற வேண்டியக் கடமைகளை உத்தேசித்து நோயிலிருந்து மீள விரும்பிய அவர், மீண்டும் நடிப்பை தொடர எண்ணியிருக்கிறார். காரணம் `தொழிலைத் தொடரவில்லையெனில், மக்கள் பணத்தைத் திருடச்சொல்லும்’ என எழுதியுள்ள இடத்தைக் குறித்துவைத்திருக்கிறேன்.
அரசியலைப் பணமீட்டும் தொழிலாகக் கருதி, மக்களைச் சந்திக்கும் நடிகர்களுக்கு மத்தியில் இன்னசென்ட் கவனிக்க வைக்கிறார். தொழிலையும் அரசியலையும் தனித்துப் புரிந்த உண்மையான `பிக்பாஸ்’ அவர்தான்.
புற்றுநோய், இதயநோயைத் தொடர்ந்து மறைவிடத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது, `அந்த இடத்தை அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவர் பெண்ணாக இருப்பதில் உங்களுக்கு பிரச்சனையில்லையே’ என மருத்துவர் கங்காதரன் கேட்டிருக்கிறார். அதற்கு `தெய்வம் முன்னால் வரும் போது அது, ஆணா பெண்ணா என்றா பார்ப்பார்கள்’ என்றிருக்கிறார்.
படிப்போம் பகிர்வோம்: புற்றுநோய் கண்டு புன்னகைத்தவர்! | படிப்போம் பகிர்வோம்:  புற்றுநோய் கண்டு புன்னகைத்தவர்! - hindutamil.in
நூல் நெடுக சிரிக்கவும் சிலிர்க்கவும் நிறைய வாக்கியங்கள். `சிரிப்பு நடிகர்களுக்கு ஒரு பெரிய சாபக்கேடு இருக்கிறது. எப்பொழுதும் எதையாவது ஒன்றைப் பற்றி வேடிக்கையாகப் பேசவேண்டும். சினிமாவில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நம்மிடமிருந்து சிரிப்பை மட்டுமே எதிர்ப்பார்பவர்கள் நம்முடைய மன உளைச்சலை பொருட்படுத்துவதே இல்லை’ என்ற வரிகளை அழாமல் நகர்ந்துச்செல்ல சிரமப்பட்டேன்.
நோய் என்பது நமக்கும் வரக்கூடியது என்னும் எண்ணமே பலருக்கு வருவதில்லை. அவருமே அப்படித்தான் இருந்திருக்கிறார். இக்கட்டிலும் சிரிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே இயல்பாக வாழ்வை வென்றெடுக்க முடியும். இன்னசென்டின் இந்நூல் பரிந்துரைக்கவும் பாதுகாக்கவும் தக்கது.
சத்தியன் அந்திக்காடு, மம்முட்டி, மோகன்லால் என நூலில் வரும் நிஜ அன்பர்கள் நெகிழ்ச்சியூட்டுகிறார்கள். இணங்கியும் நுணுங்கியும் நண்பர்களைப் புரிந்துகொள்வது அரியக் கலை. நோய்மையுற்ற காலத்தில் தம் வீதியிலுள்ள பழக்கடைக் காரரும் பூவியாபாரியும் என்னென்ன நினைத்திருப்பர் என்பதையும் ஊகித்திருக்கிறார். அந்த வாக்கியங்களில் மின்னியெழும் சிரிப்புப் பூச்சிகளைப் பிடிக்க முடியாமல் திணறினேன்.
வாழ்விலிருந்து எழுதும் எதுவுமே சோடையாவதில்லை. இன்னசென்டை நடிகராகவும் அரசியல்வாதியாகவும் பிடித்தது. தற்போது எழுத்தாளராகவும். நூலைத் தமிழில் பெயர்த்துள்ள (பாரதி புத்தகாலயம்) மு.ந. புகழேந்திக்கு அன்பும் நன்றிகளும்.
புரியும்படி பேசவும் எழுதவும் ஒரு நடிகராவது தமிழில் உண்டா என்றெல்லாம் கேட்பது நாகரீகமில்லை. சிரிக்கத்தானே வாழ்க்கை?
யுகபாரதி

நூல்: `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’
ஆசிரியர்: நடிகர் இன்னசென்ட் 
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *