கவிதை: மலீகா….. கஸல்
மலீகா….
காற்றோடு சிலு சிலுக்கும்
மரங்கள் உதிர்க்கும் குல்மொஹர்
மலர்களைப் போலத்தான்
உனது
பார்வைகளும் என்மீது
விழாமல் ஒதுங்கிச் சென்று
மண்ணில் விழுந்து மரணிக்கின்றன
வீதியை கடந்திடும்
போதெல்லாம்- உனது
விழிப்புறாக்களின்
இமைச் சிறகுகள்
படபடக்கும் சப்தங்களை
உணர்கிறேன்..
உதடுகளின் சிறைகளில்
சிறைப்பட்டுக் கிடக்கும்
மௌனம் வலிமை மிக்கவை
அதற்கு வார்த்தைகளும்
சிவப்புக் கடலைப்போல்
அடர்வும் ஆழமும் அதிகம்
மௌனம் என்பது
ஒரு ஆன்மா பேசிட
இன்னொரு ஆன்மா கேட்டுணர்வது
இரவோடு இரவாக
பாலைவன மணல் குன்றுகளில்
விழுந்து மறையும்
பனித்துளிகளைப்போல்
விடியலில் மறைந்து விடும்
இரவின் இரகசியம் அது
உறைந்துப் போன மௌனத்திற்கும்
உயிரிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கும்
பார்வைகளுக்கும்
அர்த்தங்களைத் தேடி அலைகிறேன்
ஒரு *சூஃபியைப் போல..
தனிமையில் நட்சத்திரங்களை
எண்ணுபவனின் நிலைதான்
எனக்கும் எண்ணிக்கைப்
புலப்படாமல் தவிக்கிறேன்…..
இருப்பினும்
நெற்றி மேகங்களின்
வியர்வைத் தூறல்களும்
விழிகள் நனையாமல்
குடைபிடிக்கும் புருவங்களும்
விழிகளுக்குப் பின் நின்று
தடுமாறும் மனதும்
என்னிடத்தில் சொல்லிவிட்டுத்தான்
செல்கின்றன …..
உன் காதலின் முகவரியை .
எழுதியவர் :
– ரிஸ்வான்
சூஃபி – ஞானி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.