தோழிகள் அவர்களுக்கான நேரத்தில் : மனதைக் கவரும் எழுத்து
இலக்கியத்தைப் பொருத்த வரையில், இருப்பதைத் தக்க வைப்பதும் – தேவையானதை அரவனைப்பதுவே அதனின் விருப்பமாக அமையும். இங்கே இது வேண்டாம் என்று விலக்கி வைப்பதற்கான காரணம் என்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கடந்து போவதுதானே வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் பல அத்தியாயங்கள் பல நெளிவு சுழிவோடுதான் கடக்க வேண்டியதிருக்கிறது. அந்தக் கடத்தலை மிகவும் ஆழமாகவும், எந்தச் சலனமுமில்லாமல் தேனில் ஊறப்போட்ட பேரிச்சம் பழமாக தன்னுடைய தனித்த உரைநடைப் பாணியில் சிறப்பாகவே தந்திருக்கிறார், எழுத்தாளர் துரைசாமி சுகன்யா அவர்கள்.
இது இவரின் முதல் தொகுப்பென்று அறிந்தபோது வியப்பே மேலிடுகிறது. அவ்வளவு நேர்த்தி. வாக்கிய அமைப்பு, அதற்கு ஏற்றப்படியான உரையாடல் கட்டமைப்பென்று, என்ன சொல்ல வருகிறோமோ அதை குளறுபடி இல்லாமல் நகர்த்திச் செல்லும் பாங்கு, கதைசொல்லியின் பாவனை ஏன் இவர் நாவல் களத்திற்கு வரக்கூடாது என்கிற கேள்வியை முன் வைக்கிறது. இத்தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தும் புனைவு மாதிரியே தெரியவில்லை. கதாசிரியருக்கு வாழ்வில் நன்கு பழக்கப்பட்ட மனிதர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்யும் போது, புற வடிவமைப்பை வெகு இயல்பாக உருவாக்கிக் காட்டுகிறார்.
மனதை இலகுவாக்கும் கதைகளாக சில கதைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் மனதைக் களங்கச் செய்யும் கதைகளையும் தந்திருப்பது, ஒரு தேர்ந்த படைப்பாளராக, அதில் அவர் அடையாளப்படுத்தும் இடங்கள், இதயத்தைப் பிழிய செய்கிறது. “வாழ்ந்தவள்” எனும் கதையைக் குறிப்பிடலாம். இன்றையக் காலகட்டத்தில் படிக்காதவர்களைக் காட்டிலும், படித்தவர்கள் தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். புரிதல் இல்லாமல் இல்லை. எல்லாப் புரிதல் இருந்தும் சில நேரங்களில் தடம் புரண்டு விடுகிறார்கள். இந்தக் கதையில் அப்படியான தடம் புரண்டு போவதால் ஏற்படும் விளைவு குடும்பத்தையே நிலைகுலைய வைக்கிறது. சண்டை என்பது அவரவர் வீட்டிற்குள்தான். பொதுவெளிக்கு வரும்போதும், சுற்றத்தார் பேச்சுகள் உள்ளே நுழைந்தால் பாதிப்பு பெரிதாகிவிடும். அப்படியொரு வார்த்தையில் மாட்டிக்கொண்டு, மரணத்தை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்தப் பின் வாழ்ந்தவளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை வாசித்து முடித்ததும் கனமாகிப் போகிறது மனம்.
இதுபோன்று கனத்தையும், தவிப்பையும் சொல்லும் கதைகள் ஏராளம். கதாபாத்திரங்களை ஒப்பீட்டு ரீதியிலான திறனாய்வு செய்யும் படியான கதைக் கூறுகளும், காட்சி விளக்கங்களும் தேடிப்பார்த்ததில் கிடைக்கிறது. நட்பிற்கான இலக்கணத்தை வரையறுத்தல் – ஒரு தந்தை தன் மகனின் மீது அக்கறைக் கொண்டு, அந்த அக்கறையைத் தவறுதலான முன்னெடுப்பில், அவனை இழந்து நொடிந்து போதல் – இருபது வயதில் காதல் – அண்டை மாநிலத்திலிருந்து ஒரு மைனர் பெண்ணை கூட்டி வருதல் – தந்தை மகனின் விவாதம் – அச்சம் என்று பல நிலைகளிலிருந்து சிந்திக்க வைக்கும் விவாத பொருளுக்கு எடைபோடும் கதைகளையும் கொடுத்திருக்கிறார்.
பெண் கதாபாத்திரங்கள் அதிகமாக இடம் பெறுகிறார்கள். வங்கியில் நடக்கும் அத்துமீறல்கள் – தந்தையால் வாழ்வை கேள்விக்கு உள்ளாக்கிய மரகத்தையும் யோசிக்க வைக்கிறது. அதேபோன்று தெய்வானையின் வாழ்வும் மிகவும் பரிதாப கரமானதாக போய்விடுகிறது. துயரங்களை எப்படி சொல்ல வேண்டும் எனும் உத்தி முறையை கையாளும் போது, சரியான சொற்களின் சிக்கனத்தைத் தேவைக் கருதியே பயன்படுத்தி இருப்பது வெகுசிறப்பாகவே படுகிறது.
ஒரு அக்கறை, எடுத்துச்சொல்லுதல், இப்படி இருக்க வேண்டும், எப்படி பிறருடன் பழக வேண்டும், பேச வேண்டும், தன் நடவடிக்கைகளை கவனித்தல் வேண்டும் என்று ஒவ்வொரு கதையும் நமக்கு ஏதாவதொன்றைக் கற்பிக்கும் விதமாகவே உணர முடிகிறது. இதில் முக்கியமானவற்றில் மிகவும் முக்கியமானதாக, தற்போதுள்ள காலகட்டத்தில் வரும் வாழ்வியலுக்கான சிக்கலென்று சொன்னால், அது “லிவிங் டு கெதர்” . தமிழர்களின் குடும்ப அமைப்பைச் சிதைப்பதற்கென்றே வரும் பன்னாட்டு நிறுவனங்களின் உத்தி முறையாக இதைப் பார்க்கலாம். ஏன் என்றால், தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், பூர்வகுடிகளை முதலில் சிதைக்க வேண்டும். அதற்கு மிக முக்கியமான அச்சாணியாக இருப்பது ஆணைவிட பெண்தான். பெண்ணின் மனதை மாற்ற ஆடம்பரத்திற்குள் கொண்டுசெல்ல வேண்டும். கைநிறை சம்பளம் வாங்கும் பெண்கள்தான் முதல் குறியாகப் பார்க்கப்படுகிறது.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற பொய்யான பிம்பத்தை சில எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும், மேலைநாட்டுக் கலாச்சாரத்தை இங்கே அறிவு கொண்டு திணிக்கிறார்கள். இதில் சில பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள். திருமணமாகாத நிலை, தமிழ் நாட்டின் பிறப்பு விகிதம் குறைவு என உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பல சிக்கலுக்குள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. வேதனைதான்.
இந்தக் கருத்தாக்கத்தைத் தான் கல்லூரியில் மாணவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென முன்னெடுக்கும் நகர்வும் தேவையாகவே இருக்கிறது. சில கதைகளை இன்னும் ஆழமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இத்தொகுப்பு காலத்தைப் பசியாற்றி வளரும் என்பதில் வியப்பில்லை. இன்னும் பல காத்திரமானப் படைப்புகளை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்வார். அவருக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்…
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தோழிகள் அவர்களுக்கான நேரத்தில் |
| ஆசிரியர்: | மல்லிகாவின் சுகன்யா |
| வெளியீடு: | பென்டகன் பப்ளிகேஷன், திருவள்ளுவர் மாவட்டம். தொடர்புக்கு : 7373599062. |
| விலை: | ₹.80 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻முத்தழகு கவியரசன், |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

