அதிகாரிகளாக உள்ள இந்துக்களை அதிர வைத்த ஒரு வாட்ஸ்ஆப் குழு | மல்லு ஹிந்து ஆஃப் (Mallu Hindu Off) | மல்லு முஸ்லிம் ஆஃப் (Mallu Muslim Off)

அதிகாரிகளாக உள்ள இந்துக்களை அதிர வைத்த ஒரு வாட்ஸ்ஆப் குழு

அதிகாரிகளாக உள்ள இந்துக்களை அதிர வைத்த ஒரு வாட்ஸ்ஆப் குழு
அ. குமரேசன்

மதச்சார்பற்ற அரசு என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, அலுவலர்களும் தங்களை எந்த மதத்தோடும் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடாது. பொதுவானவர்கள், இவர்களைத் தயக்கமின்றி நாடலாம், பாகுபாடற்ற சேவையைப் பெறலாம் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், சில உயர்மட்ட அதிகாரிகள் தங்களை மதம் சார்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளக் கூச்சப்படுவதில்லை. அதிகாரிகள் தங்களது வீடுகளில் சொந்த நம்பிக்கை சார்ந்த சடங்குகளைச் செய்வதற்குத் தடையேதும் இல்லை. குடும்பத்துடன் தங்களின் மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருவதற்கும் கதவடைக்கப்படவில்லை.

அலுவலகத்திலும் வெளியிலும் அவர்கள் “நான் இந்த மதத்துக்காரன்தான்” என்று அடையாள வில்லையை மாட்டிக்கொள்ளக்கூடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுகிற வரையிலாவது இந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறவர்கள் மதிப்பிற்குரியவர்கள். (அட போங்க தோழர், நீதிபதிகளே பூசைகள் நடத்தித் தலைவர்களை வரவழைத்துக் கொண்டாடுகிறபோது இது பற்றி என்னத்தைச் சொல்றது என்ற ஆதங்க முணுமுணுப்புகள் காதில் விழுகின்றன.)

கேரளத்தில் ஓர் உயரதிகாரி. தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குநர். பெயர் கோபாலகிருஷ்ணன். கடந்த தீபாவளி நாளில், கேரள அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாகப் பணியாற்றும் பலருக்கு, ஒரு புதிய வாட்ஸ்ஆப் குழுவில் அவர்கள் இணைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது. அந்தக் குழுவின் பெயர் “மல்லு ஹிந்து ஆஃப்”. இதில் உள்ள “மல்லு என்ற சொல்லுக்கு “மலையாளி” என்று பொருள். “ஆஃப்” என்பது “ஆஃபீசர்ஸ்” என்ற சொல்லின் சுருக்கம். “மலையாள ஹிந்து அலுவலர்கள்” என்பது குழுப் பெயரின் விரிவாக்கம். குழுவின் நிர்வாகி கோபாலகிருஷ்ணன் என அதில் இருந்திருககிறது.

திடீரெனத் தங்களது வாட்ஸ்ஆப் தகவல் மேடைக்கு வந்த இப்படியொரு குழுவில் தங்களைக் கேட்காமலே இணைக்கப்பட்டதில் பல அலுவலர்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருக்கிறார்கள். பக்திச் செய்திகளோ, மதம் சார்ந்தவர்களாக இருப்பதில் பெருமைப்படுவதற்கான தகவல்களோ, அப்படி அடையாளப்படுத்திக்கொண்டு என்ன செய்யலாம் என்ற வழிகாட்டல்களோ பரிமாறப்படும் என்று நினைத்தவர்களும் இருந்திருப்பார்கள்.

கவலையடைந்தவர்கள் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரித்திருக்கிறார்கள். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கிறார்கள். என்னைக் கேட்காமல் ஏன் என் பெயரைச் சேர்த்தீர்கள் என்று கேட்டவர்களும் இருந்திருப்பார்கள்.

அதிகாரிகளாக உள்ள இந்துக்களை அதிர வைத்த ஒரு வாட்ஸ்ஆப் குழு | மல்லு ஹிந்து ஆஃப் (Mallu Hindu Off)  | மல்லு முஸ்லிம் ஆஃப் (Mallu Muslim Off)

இதற்கிடையே இந்தச் செய்தி வெளியே பரவிவிட்டது. இணைய மேடைகளில் சர்ச்சையாகியிருக்கிறது. கண்டனங்கள் அதிகமாக ஒலித்தன. இதிலே என்ன தப்பு என்று நியாயப்படுத்திய ஆதரவுகளும் வந்திருக்கின்றன.

ஆயினும், குழுவைக் கலைத்துவிட்டார் கோபாலகிருஷ்ணன். யாரோ தனது வாட்ஸ்ஆப் முகவரியை ‘ஹேக்’ செய்து, தனக்கே தெரியாமல் இப்படியொரு குழுவைத் தன் பெயரில் ஆரம்பித்துவிட்டார்கள் என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இதற்கிடையே, இந்தக் குழுவின் இதே பெயரில் 11 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டனவாம். அந்தக் குழுக்களை எல்லாம் நீக்கிவிட்டதாகச் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். ஒரு வாட்ஸ்ஆப் குழு “மல்லு முஸ்லிம் ஆஃப்” என்ற பெயரில் துவங்கப்பட்டதாம்!

ஊடகவியாலாளர்கள் கேட்டபோது, பல அலுவலர்களும் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்கள். ஒருவர் மட்டும், தங்களை இந்த மதத்தவர்களாக உணர்கிறவர்கள் ஒரு குழுவாகத் தொடர்பு கொள்வதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். குழுவைத் தொடங்கியவர் குறிப்பிட்ட பின்னணி உள்ளவர்தான் என்றும், அதன் ஆதரவாளர்தான் என்றும் கூட கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசின் தலைமைச் செயலர் ஆணையிடக்கூடும் என்று தெரிகிறது. விசாரணையில் உண்மைகள் தெரிய வரட்டும்.

உண்மையிலேயே மத அடையாள நோக்கத்துடன் தொடங்கப்பட்ட குழுதான் என்றால், சட்டப்படி நடவடிக்கை என்பதைத் தாண்டி, மக்களுக்கான அலுவலர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக மக்களின் ஒருமைப்பாடு திரட்டப்பட வேண்டும். எந்த மதத்தின் பெயராலும் இவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

குழுவைத் தொடங்கிவிட்டுக் கலைத்துவிட்ட “வீரச்செயலும்” அம்பலப்படுத்தப்பட வேண்டும், அரசமைப்பு சாசனத்தின் மேன்மை பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையிலேயே மோசடியாகத்தான் குழுக்கள் திறந்துவிடப்பட்டன என்றால், அந்த வகை சைபர் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுடைய நோக்கமும் நிறைவேறாது என்று உணர்த்தப்பட வேண்டும்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *