மாமனார்
மகளின் பொழப்பப் பாக்க,
விடிகாலையில் பஸ் ஏறி
வெயிலுக்கு முந்தி
வந்துட்டாரு அப்பா.
கையில அஞ்சாறு
பழத்தப் புடிச்சிக்கிட்டு,
கருத்த உடம்பு
வியர்வைய வாசனை
திரவியமா பூசிருந்திச்சு.
மருமகனுக்குக் காய்ச்சல்.
“பாத்தே ஆகணுமுன்னு
பரிதவிச்சுப் போனாரு!
சொல்லாமல் கொள்ளாமல்
வண்டி ஏறிட்டாரு.
வெயிலுக்கு வாழ்த்து சொல்லி,
கண்ணயும் புருவத்தயும்
சுருக்கி, வீட்டுக்கு
வந்துட்டாரு.!
அப்பன பாத்ததும்,
“வாறதுக்கு முந்தி
சொல்லிட்டு வர
வேணாமா”ன்னு கூப்பிடுறா
மகள்.
எப்புடிப்பா இருக்கன்னு
கண்ணு மருமகனை தேடுது.
வெள்ள மாறாத சட்டயில,
வெள்ளந்தியா சிரிச்சுக்கிட்டு.
எதுக்கு வந்துகிட்டு
மெல்ல எட்டிப் பாக்குறாரு
மருமகன்.
வெள்ளப் பல்லு வெள்ளையடிக்க,
கையைப் புடிச்சு,
“இருக்கட்டும் மாப்பிள்ளை” னு
எதமா பேசுறாரு அப்பா.
ஆளுக வீட்டுக்கு
வந்து போக,
கொலு பொம்மையா
உக்காந்து இருக்காரு
பேச ஆளில்லாமல்
அப்பா.
“இந்தா வெளிய
போய் வாரே”னு
சொன்ன மாப்பிள்ளையும்
காணோம்.
“கடையில சோறு
வாங்கி குடுத்தா
சொரணை கெட்ட மகள்.”
வீட்டுக்கு வந்த
மருமகன் கிட்ட
“சொல்லிட்டு போகணுமுன்னு”
கெடயா காத்து கெடக்காரு
அப்பன்.
பைய புடிச்சு கிளம்ப,
மருமகன் வர
ஆட்டோ புடிச்சு
தரவா”ன்னு கேட்க,
ஒய்யாரமா நின்னு
பாத்துகிட்டு இருக்கு
ஊரையே ஏத்திக்கிட்டுப்
போன “காரு ”
– இரா. கலையரசி