‘மண் சிவந்தது’ என்னும் நாவலை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மா. சாமுவேல் அவர்கள் எழுதியிருக்கிறார். இந்நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் மிகச்சரியாகக் கூறியிருப்பதுபோல, தான் பணியாற்றிய துறைக்கு எவ்விதத்திலும் சம்பந்தமே இல்லாத ஒரு பணியினை ஒரு சிறந்த புலன் விசாரணை அதிகாரியின் அனுபவத்துடனும், அரசுக் குற்றத்துறை வழக்கறிஞரின் அனுபவத்துடனும் மிகச் சிறப்பாக அளித்திருக்கிறார்.
நாவலில் உள்ள சம்பவங்கள் தஞ்சை மாவட்டத்தில் மண்டலக்கோட்டை என்னும் கிராமத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதி முன்பு வானம் பார்த்த பூமியாக இருந்ததாகும். பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில், காவேரியில், இரண்டாம் நூற்றாண்டிலேயே கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து மிகவும் வியந்து போன, பொறியாளர் சர் ஆர்தன் காட்டன் என்பவருடைய முன்முயற்சியின் காரணமாகக் கட்டப்பட்டதுதான் புதாறு என்று அழைக்கப் படுகிற கல்லணைக் கால்வாய் (Grand Anicut) ஆறாகும். அதுவரை வானம் பார்த்த பூமியாக இருந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதி, 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பொன் விளையும் பூமியாக மாறியது.
இவ்வாறு தொடங்கும் இந்த நாவலில் ஆற்றில் மணல் கொள்ளை மேற்கொள்பவர்களைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் பகத் என்பவர் கொலை செய்யப்படுகிறார். நாவலில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாள் 2008 ஆகஸ்ட் 1 ஆகும். அந்தக் கொலையைக் கண்ணுற்ற சாட்சிகள் எவரும் இல்லாததால் அப்போது விசாரணை செய்த காவல்துறையினர் அந்த வழக்கை ‘கண்டுபிடிக்க முடியாதது’ என முடித்து வைத்துள்ளனர்.
ஆயினும் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் பகத்தின் நண்பரின் மகன் கணேஷ் இந்தக் கொலை சம்பவத்தையும், அதன் பின்னணியில் இருந்த கொலைபாதகப் பேர்வழிகளையும் எப்படி நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தார் என்பதுதான் இந்த நாவல்.
நாவலைப் படிக்கும்போது தஞ்சை மண்ணின் பின்னணியையும், சமூக சீர்கேடுகளையும் அதற்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தையும் கதாமாந்தர்களின் குரல் வழியாக மிகவும் சிறப்பாகவே படைத்தளித்திருக்கிறார் ஆசிரியர் மா.சாமுவேல்.
சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு தோழரும் அவசியம் படிக்க வேண்டிய நாவலாகும் இது.
நூலின் விவரம்:
‘மண் சிவந்தது’
ஆசிரியர்: மா. சாமுவேல்
வெளியீடு: மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன்
2, ஜெ.வி.நகர், வங்கி ஊழியர் குடியிருப்பு, மாதா கோட்டை சாலை, தஞ்சாவூர்-613 005.
விலை: ரூ.300/-
கிடைக்குமிடங்கள்:
1.) கே.இளமாறன், 11, முதல் குறுக்குத் தெரு, வைத்திலிங்கம் சாலை,
நீலாங்கரை, சென்னை-600 115. கைபேசி: 9444288465. 7550188465.
2.) மா.சாமுவேல், ஆசிரியர், மெக்சாண்ட்ரா பப்ளிகேஷன்ஸ்,
2, ஜேவி நகர், வங்கி ஊழியர் குடியிருப்பு, மாதாகோட்டை சாலை, தஞ்சாவூர்-613005.
கைபேசி: 98940 98954
‘மண் சிவந்தது’ – நூல் அறிமுகம் எழுதியவர்:
ச.வீரமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.