பேராசிரியர் ஜெ.கே எழுதிய "மன வலிமை கொண்ட மனிதர்களின் வெற்றி ரகசியங்கள்" கட்டுரை | தன்னம்பிக்கை, தோல்வி, மாற்றம், நன்றியுணர்வு மற்றும் மன உறுதி பற்றிய சிறந்த தமிழ்க் கட்டுரை | www.bookday.in

மன வலிமை கொண்ட மனிதர்களின் வெற்றி ரகசியங்கள் – பேராசிரியர் ஜெ.கே

மன வலிமை கொண்ட மனிதர்களின் வெற்றி ரகசியங்கள்

– பேராசிரியர் ஜெ.கே 

வாழ்க்கையில் எல்லோருக்கும் பிரச்சினைகள் வருகின்றன. தோல்வி, ஏமாற்றம், விமர்சனம், இழப்பு, பயம், மன அழுத்தம். இவை யாரையும் விட்டு வைப்பதில்லை. ஆனால் சில மனிதர்கள் மட்டும் எந்த சூழ்நிலையிலும் உடைந்து போகாமல் அமைதியாக முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் சவால்கள் இல்லாதவர்கள் அல்ல; சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொண்டவர்கள். இன்றைய உலகில் மன வலிமை என்பது மிக முக்கியமான வாழ்க்கைத் திறனாக மாறியுள்ளது. திறமை, கல்வி, பணம் ஆகியவை மனிதனை ஒரு அளவுக்கு உயர்த்தலாம். ஆனால் மன உறுதி இல்லையெனில் சிறிய பிரச்சினைகள்கூட மனிதனை சோர்வடையச் செய்து விடும். அதனால் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களுக்கும், சிரமத்தில் உடைந்து போகிறவர்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வித்தியாசம் அவர்களின் மனநிலையில்தான் இருக்கிறது

மன வலிமை கொண்டவர்கள் சில தனிப்பட்ட பழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட மாட்டார்கள். தோல்வியில் துவண்டு போக மாட்டார்கள். மாற்றத்தை பயப்பட மாட்டார்கள். கவலைக்கு பதில் தீர்வில் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கை எப்போதும் நம் விருப்பப்படி இருக்காது என்பதை ஏற்றுக்கொண்டு, எந்த சூழலிலும் தங்களை சமநிலைப்படுத்திக் கொள்வார்கள். மன வலிமை என்பது பிறவியிலேயே கிடைக்கும் ஒரு அரிய குணமல்ல. அது தினசரி சிந்தனைகள், பழக்கங்கள், அனுபவங்கள் மற்றும் அணுகுமுறைகளால் மெதுவாக உருவாகும் வாழ்க்கை திறன். இந்த கட்டுரையில், மன வலிமை கொண்டவர்கள் வாழ்க்கையில் பின்பற்றும் சில முக்கியமான ரகசியங்களை பார்க்கலாம்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டு தங்களை இழக்க மாட்டார்கள்

ஒப்பீடு என்பது மாபெரும் வன்முறை, அதை ஒருபோதும் நிகழக்கூடாது மனதிற்குள். மன வலிமையானவர்கள் வாழ்க்கையை போட்டியாக அல்ல, தனிப்பட்ட பயணமாக பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். இன்று சமூக ஊடக காலத்தில் இந்த ஒப்பீட்டு மனநிலை மிகவும் அதிகரித்துள்ளது. ஒருவர் வெளிநாட்டில் வேலை கிடைத்த புகைப்படம் பதிவிடுகிறார்; இன்னொருவர் புதிய கார் வாங்கியதை பகிர்கிறார்; மற்றொருவர் வெற்றியை வெளிப்படுத்துகிறார். இதையெல்லாம் பார்த்து பலர், “நான் மட்டும் வாழ்க்கையில் பின்னால் போய்விட்டேனா?” என்று அமைதியாக கவலைப்பட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையும் வேறுபட்டது. ஒரே விதை கூட வெவ்வேறு காலத்தில் மரமாகிறது. அதுபோல மனிதர்களின் வளர்ச்சிக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது.

ஒரு மாணவன் மருத்துவராகிறார்; இன்னொருவர் தொழில்முனைவோராகிறார்; மற்றொருவர் ஆசிரியராக சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குகிறார். எல்லோருடைய வெற்றியும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. “அடுத்தவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது?” என்பதில் கவனம் செலுத்தும் மனிதன், தனது வாழ்க்கையை வாழ மறந்து விடுகிறான். அதனால் மன வலிமையானவர்கள் மற்றவர்களின் முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்பட மாட்டார்கள்; மாறாக, தங்களுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்துவார்கள். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் .பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தன்னை யாருடனும் ஒப்பிடவில்லை. தனது கனவுகளோடு மட்டுமே போட்டியிட்டார். அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், இந்தியாவின் உயர்ந்த மனிதர்களில் ஒருவராக உயர்ந்தார்.

ஒப்பீடு மகிழ்ச்சியை திருடும் அமைதியான திருடன்என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபரான தியோடர் ரூஸ்வெல்ட் குறிப்பிடுகிறார். உண்மையில், தொடர்ந்து பிறரை ஒப்பிட்டு வாழும் மனிதன் ஒருபோதும் முழுமையான திருப்தியை உணர முடியாது. ஏனெனில் உலகத்தில் எப்போதும் நம்மைவிட முன்னேறியவர் யாரோ ஒருவர் இருப்பார். அதனால் மன வலிமையானவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் கவனிப்பார்கள்.நேற்றைய என்னைவிட இன்று நான் சிறப்பாக இருக்கிறேனா?” என்று. இந்த அணுகுமுறையே அவர்களுக்கு மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. வாழ்க்கை ஓட்டப்பந்தயம் அல்ல; ஒவ்வொருவரும் தங்கள் வேகத்தில் நடக்கும் நீண்ட பயணம் என்பதை அவர்கள் ஆழமாக புரிந்திருக்கிறார்கள்.

தவறுகளில் சிக்கி நின்று வாழ்க்கையை வீணாக்க மாட்டார்கள்

மன வலிமையானவர்கள் தவறுகளை வாழ்க்கையின் முடிவாக பார்க்க மாட்டார்கள். அவர்கள் புரிந்திருப்பது ஒன்று தவறு செய்யாத மனிதன் யாருமில்லை. ஆனால் அதே தவறில் சிக்கி நின்று கொண்டே இருப்பதுதான் உண்மையான தோல்வி. பலர் வாழ்க்கையில் ஒரு தவறு நடந்துவிட்டாலே, அதையே மீண்டும் மீண்டும் நினைத்து தங்களை குற்ற உணர்வில் தள்ளிக்கொள்கிறார்கள். அப்போது அப்படி செய்திருக்கக் கூடாது…”, நான் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது…” என்று கடந்த காலத்தோடு போராடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கடந்த காலத்தை மாற்ற முடியாது என்பதை மன வலிமையானவர்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு முக்கியமான கேள்வியை மட்டும் கேட்பார்கள், இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? என்று. உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி தோமஸ் எடிசன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முயற்சிகளில் தோல்வியடைந்த பிறகே மின்விளக்கை கண்டுபிடித்தார். ஆனால் அவர் ஒருபோதும் நான் தோற்றுவிட்டேன் என்று நினைக்கவில்லை. வேலை செய்யாத ஆயிரம் வழிகளை கண்டுபிடித்தேன் என்ற மனநிலையுடன் முன்னேறினார். இதுவே மன வலிமையின் அடையாளம். தோல்வியை முடிவாக அல்ல, அனுபவமாக பார்க்கும் மனநிலை.

வாழ்க்கையில் பல நேரங்களில் தவறுகள்தான் மனிதனை முதிர்ச்சியடையச் செய்கின்றன. ஒரு மாணவன் தேர்வில் தோல்வியடைந்த பிறகே நேரத்தின் மதிப்பை புரிந்துகொள்கிறான். ஒரு தொழில்முனைவோர் இழப்புகளை சந்தித்த பிறகே சரியான முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்கிறார். அடிபட்ட குதிரை தான் பாதையை கவனமாக பார்க்கும் என்ற பழமொழி போல, சில தவறுகள் மனிதனை உடைக்காமல், மேலும் விழிப்புணர்வுடன் வாழ கற்றுத்தருகின்றன. மன வலிமையானவர்கள் தங்களை வெறுக்க நேரம் செலவிட மாட்டார்கள். குற்ற உணர்வில் மூழ்காமல், அடுத்த முயற்சிக்காக தங்களை தயார்படுத்துவார்கள். ஏனெனில் அவர்கள் புரிந்திருக்கிறார்கள், வாழ்க்கை என்பது ஒரே ஒரு தவறால் முடிந்து போகும் கதையல்ல என்று. ஒரு தவறு ஒரு மனிதனை வரையறுக்காது; அந்த தவறுக்குப் பிறகு அவர் எப்படிப் எழுந்து நிற்கிறார் என்பதுதான் அவரை வரையறுக்கிறது.தவறு என்பது வாழ்க்கை கதவை மூடுவதில்லை. பல நேரங்களில் அது, மனிதனை இன்னும் வலிமையாக மாற்றும் புதிய கதவைத் திறக்கிறது.

மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தழுவிக் கொள்வார்கள்

மன வலிமையானவர்கள் வாழ்க்கையில் ஒரு உண்மையை ஆழமாக புரிந்திருக்கிறார்கள், மாற்றம் தவிர்க்க முடியாதது. வாழ்க்கை, காலம், மனிதர்கள், சூழ்நிலைகள் அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால் அவர்கள் மாற்றத்தை எதிர்த்து சோர்ந்து போக மாட்டார்கள்; மாறாக, அதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். மாறாதது மாற்றம் மட்டுமே என்ற பழமொழி போல, மாற்றத்தை புரிந்துகொள்ளும் மனிதர்களே வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணிக்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக வந்தபோது பலர் பயந்தார்கள். இனி நம்மால் முடியாது, பழைய முறைகளே சிறந்தது என்று சிலர் அதிலிருந்து விலகினார்கள். ஆனால் அதே நேரத்தில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள தயாராக இருந்தவர்கள் முன்னேற ஆரம்பித்தார்கள். கொரோனா காலத்தில் இதை உலகமே பார்த்தது. ஆன்லைன் கற்றல் ஆரம்பித்தபோது பல ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் கற்றுக்கொள்ள தயங்காத ஆசிரியர்களே மாணவர்களின் கல்வியை தொடர்ந்து கொண்டு சென்றார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொண்ட மனநிலையே அவர்களை காலத்தோடு இணைத்து வைத்தது.

மன வலிமையானவர்கள் புதிய சூழலை ஒரு அச்சமாக பார்க்க மாட்டார்கள்; புதிய வாய்ப்பாக பார்ப்பார்கள். புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள். பழைய சிந்தனைகளில் சிக்கிக்கொள்ளாமல், இப்போது என்ன தேவை? என்பதை புரிந்துகொள்வார்கள். ஓடும் நீர்தான் சுத்தமாக இருக்கும் என்பார்கள். அதுபோல தொடர்ந்து கற்றுக்கொண்டு மாறிக்கொண்டே இருக்கும் மனிதன்தான் மனதிலும் வாழ்க்கையிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பான். பல நேரங்களில் மனிதனை சோர்வடையச் செய்வது மாற்றம் அல்ல; மாற்றத்தை ஏற்க மறுக்கும் மனநிலை. சிலர் பழக்கமான சூழலில் மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. வேலை மாறலாம். மனிதர்கள் விலகலாம். சூழ்நிலைகள் மாறலாம். அப்போது உடைந்து போகாமல், தன்னை சமநிலைப்படுத்திக் கொள்வதே உண்மையான மன வலிமை. மரங்கள் கூட புயலில் தங்களை சற்றே வளைத்துக்கொள்வதால் தான் உடையாமல் நிற்கின்றன. அதுபோல வாழ்க்கையிலும் தன்னை மாற்றிக்கொள்ளத் தெரிந்த மனிதர்களே எந்த சூழலிலும் நிலைத்து நிற்கிறார்கள். மாற்றத்தை ஏற்றுக்கொள்வது பலவீனம் அல்ல. அது, வாழ்க்கையோடு சேர்ந்து வளரத் தெரிந்த மனத்தின் முதிர்ச்சி.

எல்லோரையும் மகிழ்விப்பதற்காக தங்களை இழக்க மாட்டார்கள்

மன வலிமையானவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவாக புரிந்திருக்கிறார்கள்; எல்லோரையும் மகிழ்விக்க முயற்சித்தால், இறுதியில் தன்னையே இழக்க நேரிடும் என்று. அதனால் அவர்கள் தேவையான இடத்தில்இல்லைஎன்று சொல்லத் தயங்க மாட்டார்கள். பலர் நல்ல மனிதராக தோன்ற வேண்டும் என்பதற்காக எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். யாராவது உதவி கேட்டால் மறுக்க முடியாமல் செய்கிறார்கள். வேலை இடங்களில் கூட, தங்களால் முடியாத அளவுக்கு வேலை ஏற்றுக்கொண்டு உடலையும் மனதையும் சோர்வடையச் செய்கிறார்கள். ஆனால் மன வலிமையானவர்கள் தங்களுடைய வரம்பை அறிந்து செயல்படுவார்கள். ஏனெனில் தொடர்ந்து தன்னை சோர்வடையச் செய்வது நல்ல மனம் அல்ல; அது மெதுவாக தன்னைத்தானே புறக்கணிப்பது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுஎன்பார்கள். வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது. ஓய்வில்லாமல் உழைப்பது, எல்லோருடைய பிரச்சினைகளையும் தன் மீது ஏற்றிக்கொள்வது, தன்னுடைய உடல்நலத்தையும் மன அமைதியையும் கவனிக்காமல் வாழ்வது ஆகியவை ஒருநாள் மனிதனை உள்ளிருந்து வாழ்வின் மீதான காதலை வெறுக்க ஆரம்பிக்கும். அதனால் மன வலிமையானவர்கள் உடற்பயிற்சி, தூக்கம், அமைதி, தனிநேரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மகாத்மா காந்தி கூட தனது நேரத்தையும் வாழ்க்கை ஒழுங்கையும் மிகவும் கவனமாக பாதுகாத்தார். ஏனெனில் தன்னை கவனிக்காத மனிதனால், மற்றவர்களுக்கும் நீண்ட காலம் உதவ முடியாது என்பதை அவர் புரிந்திருந்தார். இன்றைய உலகில் பலர்இல்லைஎன்று சொல்ல பயப்படுகிறார்கள். “அவர்கள் என்ன நினைப்பார்கள்?”, “உறவு பாதிக்கப்படுமோ?” என்ற பயத்தில் தங்களது மன அமைதியையே விட்டுக்கொடுக்கிறார்கள். ஆனால் உண்மையில், எல்லை இல்லாத அன்பு பல நேரங்களில் சோர்வை உருவாக்குகிறது. மன வலிமையானவர்கள் உதவியை மறுப்பதில்லை; ஆனால் தங்களை அழித்து உதவ மாட்டார்கள். தன்னலம் மற்றும் பொறுப்பு இடையே சமநிலையை காக்கத் தெரிந்திருப்பார்கள். ஒரு விளக்கு தொடர்ந்து எரிய வேண்டுமெனில் அதில் எண்ணெய் இருக்க வேண்டும். அதுபோல மனிதனும் தன்னுடைய உடல், மனம், அமைதி ஆகியவற்றை கவனித்தால்தான் நீண்ட காலம் உறுதியாக நிற்க முடியும்

தேவையான இடத்தில்இல்லைஎன்று சொல்லத் தெரிந்திருப்பது மரியாதையின்மை அல்ல. அது, தன்னையும் தனது வாழ்க்கையையும் மதிக்கத் தெரிந்த மனத்தின் அடையாளம்.

எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்

மன வலிமையானவர்கள் வாழ்க்கையை முழுவதும் பிரச்சினைகளாக மட்டும் பார்க்க மாட்டார்கள். எந்த சூழலிலும் ஒரு நல்ல வாய்ப்பு இருக்கலாம் என்று நம்புவார்கள். அதனால் சவால்கள் வந்தாலே உடைந்து போகாமல், “இதிலிருந்து என்ன செய்யலாம்?” இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள். பலர் தடைகளைப் பார்த்து பயப்படுகிறார்கள்; ஆனால் மன வலிமையானவர்கள் அதையே முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக மாற்ற முயற்சிக்கிறார்கள். ஒரு விவசாயியை நினைத்துப் பாருங்கள். மழை குறைந்தாலும் அவர் நம்பிக்கையை இழக்கமாட்டார். புதிய விதைகள், புதிய முறைகள், தண்ணீர் சேமிப்பு வழிகள் என்று ஏதாவது முயற்சி தேய்த்துக்கொண்டே இருப்பார். ஏனெனில் அவர் புரிந்திருக்கிறார், கவலை மட்டும் விளைச்சலை தராது என்று. இதுவே நேர்மறை மனப்பான்மையின் உண்மையான அர்த்தம். பிரச்சினை இல்லை என்று நடிப்பது அல்ல; பிரச்சினை இருந்தாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது.

மன வலிமையானவர்கள் தோல்வியை விட முயற்சியை அதிகமாக மதிப்பார்கள். “ஒருமுறை தோற்றுவிட்டேன், இனி முடியாதுஎன்று முடிவு செய்து விட மாட்டார்கள். வாழ்க்கையில் பல வெற்றிகள், தொடர்ந்து முயற்சி செய்தவர்களுக்குத்தான் கிடைத்துள்ளன என்பதை அவர்கள் அறிவார்கள். “முயற்சி திருவினையாக்கும்என்ற பழமொழி போல, நல்ல எண்ணமும் தொடர்ந்து செய்யும் செயல்களும் ஒருநாள் பலனை தரும் என்று நம்புவார்கள். இப்படிப்பட்ட மனிதர்களின் மனநிலை, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். எப்போதும் குறை கூறிக்கொண்டிருக்கும் மனிதர்களுடன் இருந்தால் சோர்வு உருவாகும்; ஆனால் நம்பிக்கையுடன் செயல்படும் மனிதர்களுடன் இருந்தால் உற்சாகம் உருவாகும். மன உறுதி பரவும் தன்மை கொண்டது. அதனால் மன வலிமையானவர்கள் எதிர்மறை எண்ணங்களில் நீண்ட நேரம் சிக்கிக்கொள்ள மாட்டார்கள். கவலையை விட தீர்வில் கவனம் செலுத்துவார்கள். உலகின் பல பெரிய சாதனைகள் முதலில் ஒருவரின் நம்பிக்கையில்தான் ஆரம்பித்தன. ஒரு சிறிய எண்ணமே பின்னர் பெரிய மாற்றமாக மாறியது. அதனால் அவர்கள் ஒரு விஷயத்தை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள், வெற்றி வெளியில் உருவாகுவதற்கு முன், அது முதலில் மனதில் உருவாக வேண்டும் என்று. 

நம்பிக்கை என்பது வெறும் நல்ல எண்ணம் அல்ல. இருள் இருந்தாலும், இன்னும் ஒரு விடியல் வரும் என்று நம்பிக்கையுடன் முன்னேறும் மனத்தின் வலிமை.

தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறிந்திருப்பார்கள்

மன வலிமையானவர்கள் தோல்வியை பார்த்து நின்றுவிடமாட்டார்கள். அவர்கள் புரிந்திருப்பது தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல; அது வளர்ச்சியின் ஒரு கட்டம். வெற்றி பெறும் ஒவ்வொருவரின் பின்னாலும் பல தோல்விகளும் ஏமாற்றங்களும் மறைந்து கிடக்கின்றன. ஆனால் உலகம் பெரும்பாலும் இறுதியில் கிடைத்த வெற்றியை மட்டுமே பார்க்கிறது. சச்சின் டெண்டுல்கர் ஒரே நாளில் ஜெயித்துவிடவில்லை, இவ்வளவு உயரத்திற்கு ஒரே இரவில் வந்துவிடவில்லை. எண்ணற்ற தோல்விகள், புறக்கணிப்புகள், கடுமையான பயிற்சிகள், மன அழுத்தங்கள், விமர்சனங்கள் இவற்றையெல்லாம் கடந்து தான் அவர் கிரிக்கெட்டின் கடவுளாக உயர்ந்து நின்றார். இன்றைய தமிழக முதல்வர் விஜய் கூட தனது ஆரம்ப காலத்தில் பல சவால்களை சந்தித்தார். பல தோல்வி படங்கள், எதிர்மறை விமர்சனங்கள்சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் தோல்வியை காரணமாக காட்டி அவர் பின்வாங்கவில்லை. விடாமுயற்சியும் அமைதியான மனநிலையும் அவரை இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாற்றின. இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றியிருக்கிறார்

மன வலிமையானவர்கள் தோல்வியை தங்களது மதிப்புடன் இணைத்து பார்க்க மாட்டார்கள். “நான் தோற்றுவிட்டேன்என்று அல்ல; “இந்த முயற்சி தோல்வியடைந்ததுஎன்று பார்ப்பார்கள். இந்த சிறிய மனநிலை வேறுபாடே அவர்களை மீண்டும் எழுந்து நிற்க வைக்கிறது. “விழுவது தவறு அல்ல; விழுந்த இடத்திலேயே கிடப்பதுதான் தவறுஎன்ற பழமொழி போல, அவர்கள் ஒவ்வொரு தோல்வியையும் ஒரு அனுபவமாக மாற்றிக் கொள்வார்கள். வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விதான் மனிதனை முதிர்ச்சியடையச் செய்கிறது. வெற்றி தராத பாடங்களை, சில நேரங்களில் தோல்வி கற்றுத்தருகிறது. அது பொறுமையை கற்றுத்தருகிறது. தன்னம்பிக்கையை சோதிக்கிறது. மன உறுதியை உருவாக்குகிறது. அதனால் மன வலிமையானவர்கள் மீண்டும் முயற்சிக்கத் தயங்க மாட்டார்கள். ஏனெனில் முயற்சி தொடரும் வரை தோல்வி நிரந்தரமல்ல என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஒரு விதை மண்ணுக்குள் புதைக்கப்படாமல் மரமாக மாறாது. அதுபோல வாழ்க்கையிலும் சில சிரமங்களும் தோல்விகளும் மனிதனை உயர்ந்த நிலைக்கு தயார்படுத்துகின்றன.

தோல்வி மனிதனை உடைக்க வருவதில்லை. அவன் இன்னும் வலிமையாக எழுந்து நிற்க தயாரா என்பதை பார்க்கத்தான் வருகிறது.

நன்றியுணர்வே மகிழ்ச்சியின் ரகசியம் என்பதை அறிவார்கள் 

மன வலிமையானவர்கள் வாழ்க்கையில் இல்லாதவற்றை மட்டும் எண்ணிக்கொண்டே வாழ மாட்டார்கள். தங்களுக்கு ஏற்கனவே கிடைத்திருக்கும் சிறிய உயர்வையும் மதிக்கத் தெரிந்திருப்பார்கள். தினமும் காலை விழித்தெழுவது, குடும்பம் அருகில் இருப்பது, உடல்நலம், ஒரு வேலை, ஒரு உணவு, இவை எல்லாமே சாதாரண விஷயங்கள் அல்ல; பலருக்கு கிடைக்காத வரங்கள் என்பதை அவர்கள் உணர்கிறார்கள். அதனால் தான் சிறிய விஷயங்களுக்குக் கூட நன்றி கூறும் பழக்கம் அவர்களிடம் இருக்கும். இன்றைய உலகில் பலர் எப்போதும் தங்களிடம் இல்லாததை மட்டுமே கவனிக்கிறார்கள். “அவர்களிடம் அது இருக்கிறது…”, “எனக்கு இன்னும் இது கிடைக்கவில்லை…” என்ற எண்ணங்கள் மெதுவாக மன அமைதியை குலைக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் மன வலிமையானவர்கள் வாழ்க்கையை வேறு பார்வையில் பார்க்கிறார்கள். குறைகளை எண்ணுவதற்குப் பதிலாக, கிடைத்திருப்பவற்றை மதிக்க கற்றுக்கொள்கிறார்கள். “கிடைத்ததை மதித்தால் வாழ்க்கை அமைதியாகும்என்ற பழமொழி போல, நன்றியுணர்வு மனதை மெதுவாக சமநிலைப்படுத்துகிறது.

பல ஆய்வுகள் கூட, தினமும் நன்றி கூறும் பழக்கம் மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்று கூறுகின்றன. சிலர் தினமும் இரவு தூங்குவதற்கு முன், அந்த நாளில் நடந்த நல்ல விஷயங்களை நினைத்து நன்றி கூறுவார்கள். இந்த சிறிய பழக்கம் கூட மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது. ஏனெனில் நன்றி கூறும் மனம், வாழ்க்கையை எதிர்மறையாக அல்ல, நிறைவாக பார்க்க ஆரம்பிக்கிறது. நன்றியுணர்வு நல்ல உறவுகளையும் உருவாக்குகிறது. “நன்றிசொல்லத் தெரிந்த மனிதர்களிடம் இயல்பாகவே அன்பும் மரியாதையும் உருவாகின்றன. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், வாழ்க்கையில் உதவிய மனிதர்கள், இவர்களின் மதிப்பை உணர்ந்த மனிதன் ஒருபோதும் அகந்தையில் வாழ மாட்டான். மரத்தின் வேர் தெரியாமல் இருந்தாலும், அது இல்லாமல் மரம் நிற்காது. அதுபோல வாழ்க்கையில் பலரின் பங்களிப்பால் தான் நாம் முன்னேறுகிறோம் என்பதை மன வலிமையானவர்கள் மறக்க மாட்டார்கள். எப்போதும் குறை கூறும் மனம் ஒருபோதும் திருப்தியை உணராது. ஆனால் நன்றியுணர்வு கொண்ட மனம், சாதாரண வாழ்க்கையில்கூட அழகை கண்டுபிடித்து மகிழ கற்றுக்கொள்கிறது.

கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் சிக்கி நேரத்தை வீணாக்க மாட்டார்கள் 

மன வலிமையானவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான உண்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. சில விஷயங்கள் நம்முடைய விருப்பப்படி நடக்காது. காலநிலை மாறலாம். மனிதர்கள் மாறலாம். எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாகலாம். சில நேரங்களில் எவ்வளவு முயற்சி செய்தாலும், சில சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டை மீறி இருக்கும். ஆனால் அதற்காக வாழ்க்கையையே வெறுத்துவிட்டு கவலையில் மூழ்க மாட்டார்கள். “மழையை நிறுத்த முடியாது; ஆனால் குடையை எடுத்துச் செல்லலாம்என்ற நடைமுறை சிந்தனை அவர்களிடம் இருக்கும். பலர் பிரச்சினையைப் பற்றியே தொடர்ந்து சிந்தித்து மனதை சோர்வடையச் செய்கிறார்கள். “ஏன் இப்படிச் நடந்தது?”, “இது மட்டும் இல்லையென்றால்…” என்று கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால் மன வலிமையானவர்கள் பிரச்சினையில் அல்ல, தீர்வில் கவனம் செலுத்துவார்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் போது கோபப்படுவதால் பாதை திறக்காது என்பதை அவர்கள் அறிவார்கள். அதற்கு பதிலாக அந்த நேரத்தை பயனுள்ள சிந்தனைக்கோ, அமைதிக்கோ பயன்படுத்த முயற்சிப்பார்கள்

கையில் உள்ளதை கவனித்தால் வாழ்க்கை நகரும்; கையில் இல்லாததை நினைத்தால் மனம் மட்டும் சோர்வடையும்என்பதையே அவர்கள் நடைமுறையில் வாழ்கிறார்கள். இதனால் அவர்கள் தேவையற்ற மன அழுத்தத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்காமல், மாற்றக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு மாணவன் தேர்வு முடிந்த பிறகு கவலையில் மூழ்காமல், அடுத்த தேர்விற்கான தயாரிப்பில் இறங்குவது போல, அவர்கள் வாழ்க்கையையும் முன்னோக்கி நகர்த்திக்கொண்டே இருப்பார்கள். ஏனெனில் கடந்ததை பிடித்து நிற்பதால் எதிர்காலம் உருவாகாது என்பதை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். “கவலை தீர்வை தராது; செயல் மட்டுமே மாற்றத்தை தரும்என்ற மனநிலையோடு அவர்கள் வாழ்கிறார்கள். அதனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் முழுவதும் உடைந்து போகாமல், சமநிலையுடன் சிந்திக்க முடிகிறது.

வாழ்க்கையில் அமைதியாக இருப்பவர்கள் எல்லா பிரச்சினைகளும் இல்லாதவர்கள் அல்ல. எதை மாற்ற முடியும், எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொண்டவர்கள்.

வாழ்க்கையை மாற்றும் பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்வார்கள்

மன வலிமையானவர்கள் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்திருக்கிறார்கள். உலகம் நமக்காக தனியாக எதையும் செய்து தர வேண்டிய கடமையில் இல்லை. அதனால் அவர்கள் எப்போதும் பிறரை குறை சொல்லிக்கொண்டு வாழ மாட்டார்கள். “யாராவது வந்து என்னை உயர்த்துவார்கள்”, “ஒருநாள் அதிர்ஷ்டம் மாறும்என்ற காத்திருப்பு மனநிலையிலும் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையை மாற்ற வேண்டுமெனில், முதலில் தாங்களே முயற்சி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அரசு, சமூகம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் இவை எல்லாம் ஒரு அளவுக்கு உதவலாம். ஆனால் மனிதனின் முன்னேற்றத்தை இறுதியில் தீர்மானிப்பது அவனுடைய முயற்சிதான்

டாக்டர் .பி.ஜே. அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்து, செய்தித்தாளை விற்றுப் படித்து, இந்தியாவின் ஏவுகணை நாயகனாகவும், குடியரசுத் தலைவராகவும் உயர்ந்து உலகப் புகழ்பெற்றார். வறுமை காரணமாகத் தனது 12-வது வயதிலேயே தந்தையை இழந்து, பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, உள்ளூர் நூலகங்களில் உதவியாளராகப் பணியாற்றினார் இளம்பகவத். சுமார் 19 வருடப் போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையை மாற்றும் பொறுப்பை தானே ஏற்று தனது 34-வது வயதில் ..எஸ் அதிகாரியானார். ஒரு லட்சியத்திற்காக இத்தனை ஆண்டுகள் தளராத உறுதியுடன் இருந்தது வியப்பிற்குரியது. இவரைப்போன்று ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பலர் இன்று உலக அளவில் சாதித்திருக்கிறார்கள். அவர்கள் வசதிகளுக்காக காத்திருக்கவில்லை; கிடைத்த சிறிய வாய்ப்புகளையே பெரிய வெற்றியாக மாற்றினர்.

மன வலிமையானவர்கள் வாய்ப்புக்காக காத்திருக்க மாட்டார்கள்; அதை உருவாக்க முயற்சிப்பார்கள். வேலை கிடைக்கவில்லை என்றால் புதிய திறன்களை கற்றுக்கொள்வார்கள். ஒரு பாதை மூடப்பட்டால் மற்றொரு வழியை தேடுவார்கள். தோல்வி வந்தால்கூட, “என் வாழ்க்கை முடிந்துவிட்டதுஎன்று உட்கார மாட்டார்கள். “இன்னும் என்ன செய்யலாம்?” என்று முன்னேற முயற்சிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது புகார் சொல்லும் இடமல்ல; பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் இடம் என்பதை அவர்கள் அறிவார்கள். இன்றைய உலகில் பலர் தங்களது தோல்விகளுக்காக சூழ்நிலைகளையே காரணமாக கூறுகிறார்கள். ஆனால் மன வலிமையானவர்கள் பிறரை குறை சொல்ல நேரம் செலவிட மாட்டார்கள். அவர்கள் தங்களது ஆற்றலை செயல்களில் செலுத்துவார்கள். “நம்முடைய வாழ்க்கைக்கான மிகப்பெரிய பொறுப்பு நாம்தான்என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

ஒரு மனிதன் தனது வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தருணமே, அவன் உண்மையான வளர்ச்சியை தொடங்கும் தருணமாக மாறுகிறது.

இறுதியாக 

மன வலிமை என்பது சிலருக்கே பிறவியிலேயே கிடைக்கும் அரிய குணமல்ல. வாழ்க்கையை எப்படி பார்க்கிறோம், சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம், தோல்விக்குப் பிறகு எப்படி மீண்டும் எழுகிறோம் என்பதன் மூலம் உருவாகும் மனப்பக்குவம். ஒப்பீட்டை விட முன்னேற்றத்தை தேர்வு செய்வதும், பயத்தை விட நம்பிக்கையை பிடித்துக் கொள்வதும், பிரச்சினையை விட தீர்வில் கவனம் செலுத்துவதும் மனிதனை உள்ளிருந்து வலிமையாக்குகின்றன. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் நம்முடைய மனநிலையை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள முடியும். அதுவே உண்மையான மன வலிமை. மன உறுதி கொண்டவர்கள் பிரச்சினைகள் இல்லாதவர்கள் அல்ல; பிரச்சினைகள் வந்தாலும் உடைந்து போகாமல் முன்னேற கற்றுக்கொண்டவர்கள்.

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடமாகவும், ஒவ்வொரு மாற்றமும் ஒரு புதிய வாய்ப்பாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கமாகவும் பார்க்கத் தொடங்கும் போது வாழ்க்கை மெதுவாக மாற ஆரம்பிக்கிறது. உலகத்தை வெல்வதற்கு முன், மனிதன் முதலில் தனது மனதை வெல்ல வேண்டும். ஏனெனில் மனம் உறுதியாக இருந்தால், வாழ்க்கையின் எந்த புயலும் மனிதனை எளிதில் சாய்க்க முடியாது.

“உலகின் மிகப்பெரிய ஆயுதம் மனவலிமைதான், அதை கொண்டவன் உலகையே வெல்வான்” 

நன்றி !!!

📚 எழுதியவர் : 

– ✍🏻 முனைவர் சீ.ஜெயக்குமார்., (பேராசிரியர் ஜெ.கே)                             

M.Com., M.Phil., Ph.D., SET., MBA., Ph.D., SET., MHRM., M.Sc(Yoga)., M.Sc (Psyc)., M.A (Tamil)., (Ph.D).,PGDCA., 

2/132 மேற்குத்தெரு, .மேட்டுப்பட்டி, சாத்தூர் – 626203, விருதுநகர் மாவட்டம். 

உதவி பேராசிரியர் & ஆராய்ச்சி மேற்பார்வையாளர், 

வணிகவியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறை, 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, மேலநீலிதநல்லூர் – 627 953, 

சங்கரன்கோவில் – தென்காசி மாவட்டம்,

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *