கலீல் ஜிப்ரான் எழுதிய மணலும் நுரையும் - நூல் அறிமுகம் | Lebanese-American writer and poet Kahlil Gibran - Manalum Nuraiyum Book review - https://bookday.in/

மணலும் நுரையும் – நூல் அறிமுகம்

மணலும் நுரையும் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : மணலும் நுரையும்

ஆசிரியர் : கலீல் ஜிப்ரான்

தமிழில்  : டாக்டர் ரமணி

வெளியீடு : கவிதா வெளியீடு

பக்கம் :  56

விலை :  ரூ.50

தீர்க்கதரிசி, உடைந்த சிறகுகள் போன்ற முழு நீளநூல்களை தந்த கலீல் ஜிப்ரானின் மன உணர்வுகளின் பிரவாகம் தான் இந்நூல். சின்னஞ்சிறு அலைகளாக இந்த நூலின் ஒவ்வொரு பாடலும் நம் கால்களை அல்ல, மனங்களை நனைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் ஓர் தத்துவத்தை நிலை நிறுத்தி அதில் மறைந்துள்ள மறைபொருளை நம்மை உணர வைத்து வாழ்வின் நீளத்தை நமக்கு அறிய வைக்கின்றன இந்த பாடல்கள் அல்லது கவிதைகள்.

மணலை அள்ளிப் பார்க்கையில் கையில் நுரை நிற்பதில்லை. ஆனால் மணலோடு சேர்ந்த நுரையாய் நம் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது இந்த மணலும் நுரையும். நூலின் சில முத்துக்களை அள்ளுவோம் வாருங்கள்.

மணலுக்கும் நுரைக்கும் இடையே இந்த கடற்கரையில் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறேன். எழும்பி விழும் அலை என் கால் தடத்தை அழித்துவிடும்தான். காற்றும் நுரையைக் கொண்டு போய்விடும்தான். என்றாலும் கடலும் கரையும் நித்தியமாக நிலைத்திருக்கும்.

இது மணலுக்கு மட்டுமல்ல நமது வாழ்க்கைக்கும் பொருந்தும். எத்தனையோ சாதனைகளை செய்து கொண்டிருந்தாலும் செய்துவிட்டேன் என்று இருமாப்பு அடைந்திருந்தாலும் அனைத்தும் காலவெளியில் கரைந்து போய்விடும் ஆனால் இறுதிவரை நிலைத்திருப்பது என்னவோ மாற்றம் மட்டும் தானே.

துயிலெழுந்த அவர்கள் என்னிடம் சொன்னார்கள் முடிவில்லாத கடலின் முடிவில்லாத கரையில் ஒரு மணல் துகளே நீயும் நீ வாழும் உலகும்.
என் கனவில் நான் அவர்களிடம் சொல்கிறேன் நானே தான் அந்த முடிவில்லாத கடல். எல்லா உலகங்களும் எனது கரையின் மணல் துகளே.

இந்த கவிதையை வாசிக்கும் போது ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம் ஒளிந்து கொண்டு இருக்கிறது அந்த உலகத்திற்கு அவரே அரசன் ஆகிறான் என்பதையும் அந்த உலகம் முழுவதும் அவன் வசமே ஒளிந்து கிடக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இரவுப் பாதையிலன்றி யாரும் விடியலைச் சென்றடைய முடியாது.

எவ்வளவு அற்புதமான வரிகள், வெற்றியடைய வேண்டுமென்றால் முயற்சி, பயிற்சி, தோல்வி அவசியம். இவற்றை தாண்டித்தான் செல்ல முடியும். அதேபோல வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நாம் விடியலைக் கண்டடைய வேண்டும் என்றால் இருளிலிருந்து தானே தொடங்க முடியும்.

இறகுப் படுக்கையில் இருப்பவர் கனவுகள் கட்டாந்தரையில் படுப்பவர் கனவுகளை விடப் பிரமாதமில்லை எனும் போது வாழ்வின் நியாயத்தின் மேல் எப்படி நான் நம்பிக்கை இழப்பது?
இதுவும் நம்மை தன்னம்பிக்கை கொள்ள வைக்கின்ற ஒரு கவிதை. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் எல்லாம் தள்ளிவைத்துவிட்டு வாழ்வை எதிர்நோக்கும் ஒவ்வொரு மனங்களிலும் இருக்கிறது அவரவர்களுக்கான உழைப்பும் வெற்றியும்.

கற்பனைக்கும் சாதனைக்கும் இடைப்பட்ட வெளியை ஏக்கத்தால் மட்டுமே கடக்க முடியும்.#தன் இதயத்தை பாட ஒரு பாடகன் கிடைக்காதபோது வாழ்க்கை தன் மனதை வெளிப்படுத்த ஒரு தத்துவ அறிஞனைப் படைக்கிறது.

இந்த தத்துவம் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் எட்டிப்பார்த்து இருக்கும். நம்மை புரிந்து கொள்ளாத உலகத்தின் முன்னால் நாம் நம்முடைய தத்துவத்தை தானே வெளிப்படுத்த முடிகிறது.

ஒவ்வொரு விதையும் ஓர் ஏக்கமே.

ஒவ்வோர் அசுரனும் தன்னைக் கொல்ல ஓர் அவதாரத்தைப் பிரசவிக்கிறான்.

இது புராணக் கதை அல்ல. எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய கதை. நம் ஆசைகளைப் போல நமக்குள்ளே ஒவ்வொரு அசுரனையும் நாம்தானே ஆரம்பித்து வைக்கிறோம். அதை நாம் தானே முடித்தும் வைக்கிறோம்.

வார்த்தைகளுக்கு வயது வரம்பில்லை. சொல்லும்போதோ எழுதும்போதோ அவை காலம் கடந்தவை எனத் தெரிந்திரு.

ஒரு விதையை போடு. மண் உனக்கு ஒரு மலரைத் தரும். வானம் நோக்கிய கனவொன்று காண். வானம் உனக்கு ஒரு காதலியை தரும்.

பெண்களின் சின்ன சின்ன குறைகளை பொறுத்துக் கொள்ளாத ஆண்கள் பெண்களின் பெரிய பெரிய நலன்களை அனுபவிப்பதில்லை.

ஆம் சக மனுஷியாக பெண்ணை பார்க்கும் ஆண் இருந்துவிட்டால் கட்டாயமாக பெண்ணிடமிருந்து அனைத்துவிதமான நலன்களையும் அவன் அடைந்துவிட முடியும். அதற்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது பெண்ணை மதிப்பது மட்டுமே.

விருந்தாளிகள் மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு வீடும் ஒரு கல்லறையே.

வாழ்க்கையின் போக்கிற்கு ஆறுதலைத் தருவது கொண்டாட்டங்களும் சந்திப்புகளும் தான் என்றால் மிகையில்லை.

நாம் அடிக்கடி நமது அடுத்த நாள்களிலிருந்து கடன் வாங்குகிறோம். நமது நேற்றைய கடன்களை அடைக்கத்தான்.

இந்த பொன்மொழி எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்திப் போகிறது அல்லவா. இன்று நாம் செய்து முடிக்க வேண்டிய செயல்கள் என்று பட்டியலிட்டு அவற்றை முடிக்காதபோது நாளை நோக்கி தானே நமது மனம் ஏங்குகிறது.

முடவன் தன் எதிரியை அடித்துத் தன் கைத்தடியை முறிக்காதிருப்பதே புத்திசாலித்தனம்.

புகழை விரும்பாத மலர்தான் வேர்.

மணலும் நுரையும் கவிதைத் தொகுப்பில் மிகச் சிறந்த கவிதையாக இதைச் சொல்லலாம். எல்லாவிதமான செயல்களையும் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் ஒதுங்கி நிற்கும் எத்தனையோ மனிதர்கள் இன்று இந்த பூமியில் வேர்களாக விரிந்து காணப்படுகிறார்கள் அல்லவா.

இயற்கையிலிருந்து எல்லையற்றதை நோக்கி எடுத்து வைத்த ஓர் அடி தான் கலை.

முட்கிரீடம் செய்யும் கைகள் கூடச் சும்மா இருக்கும் கைகளை விட மேல்.

என்னுடைய வார்த்தைகளில் சிறைப்படுத்தி வைத்த ஒவ்வோர் எண்ணத்தையும் என் செயல்கள் மூலம் விடுவிக்கவேண்டும்.

இப்படியாக 322 தத்துவங்கள் மூலம் இந்த மணலும் நுரையும் விரிந்திருக்கிறது. கலீல் ஜிப்ரான் என்ற கடலிலிருந்து நமக்கு கிடைத்த ஒரு நல்முத்து இந்த நூல். இதை மொழிபெயர்ப்பு நூல் என்ற அடிப்படையில் அல்லாமல் நேரடியான மூல நூல் என்ற வகையில் டாக்டர் ரமணி அவர்கள் அழகாகவும் அற்புதமாகவும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். வாருங்கள் கலீல் ஜிப்ரானிடம் நாமும் கொஞ்சம் மணலையும் நுரையையும் அள்ளி வரலாம்.

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

கலீல் ஜிப்ரான் எழுதிய  மணலும் நுரையும் - நூல் அறிமுகம் | Lebanese-American writer and poet Kahlil Gibran - Manalum Nuraiyum Book review - https://bookday.in/

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *