மனிதர்க்கு மானம் வேண்டும்
மதியாதோர் அறிதல் வேண்டும்;
மனதிலே நிறுத்தல் வேண்டும்
மதியாலே வெல்லல் வேண்டும்!
கோபங்கள் உள்ளோர் யாரும்
குறைக்காமல் வாழ்தல் வேண்டும்;
மண்ணுக்குள் செல்லும் போதும்
மறக்காமல் இருத்தல் வேண்டும்!
தொட்டாலே வாழ்க்கை யில்லை
பார்த்தாலே பாவம் தொல்லை
எட்டாத தூரம் நின்று
ஏவல்கள் இடுதல் நன்று!
வாழ்க்கைக்கு வழியே மூன்று
வழிவழியாய் இவையே சான்று!
உயிர்வாழ உணவே முன்னே
உடைதானே அடுத்தப் பின்னே!
இல்லந்தான் இயங்கு தற்கு
இருந்திடும் அடுத்தப் பின்னே!
உணவுண்டு உடை உடுத்தி
உறங்கிட இல்லம் கண்டாய்!
மனிதரை மனிதன் என்று
மதித்திடா மடையா கேளாய்;
உணவினை உன் கின்றாயே
உழைத்தவன் தீட்டுக் காரன்!
உடையது உடலைத் தொட்டால்
உறுத்துமே உழைத்தோன் தீட்டு;
இல்லத்தைக் கட்டித் தந்தோன்
இழிவான சாதி சாதி!
மானமும் மதியும் உந்தன்
மண்டைக்குள் இருக்கு மானால்
உன்னுடை உழைப்பால் மட்டும்
உணவுடை இல்லம் காண்பாய்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.