“எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம், மனம் போல வாழ்வு, மனம்
இருந்தால் மார்க்கம் உண்டு… இப்படி எண்ணங்களையும் மனதையும் முன்னிலைப்படுத்தும்
பொன்மொழிகளுக்கு இங்கே பஞ்சமே இல்லை. மருந்தை விட ஆற்றல் மிக்கது மனம்
என்பதை அடிக்கடி படித்திருந்தாலும், நம்மிடையே நோய்களுக்குப் பஞ்சமில்லை! ஏன்?
நம்முடைய நம்பிக்கையின் பலவீனம்தான் காரணம்! மனதின் மகாசக்தியை வெற்று
வார்த்தைகளில் பிரசங்கம் செய்வதில் அர்த்தமில்லை. எதற்கும் அறிவியல்பூர்வ
விளக்கமும், தெளிவான செய்முறை வழிகாட்டுதல்களும் நமக்கு தேவைப்படுகிறது. அப்படி
நோய்களை குணப்படுத்த மனதையும் எண்ணங்களையும் எப்படி முறைப்படுத்த வேண்டும்
என்பதை இந்நூலில் அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் அக்கு ஹீலர் உமர் பாரூக்.

உளவியல் மருத்துவம் இன்றைக்கு உலகமெங்கும் வேரூன்றியுள்ள பல நோய்களுக்கான
அடிப்படைக் காரணம் மனதில் ஏற்படும் சமநிலைக் குறைவுதான் என்கிறது. அமெரிக்காவின் நாஷ்வில் நகரத்தில் வாழ்ந்து வந்த சாம் லாண்டி என்பவருக்கு திடீரென ஒருநாள் தொண்டையில் வலி ஏற்பட்டது. டாக்டரை அணுகினார். இரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு “உங்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வந்து இருக்கிறது அதுவும் முற்றிய நிலையில் இருப்பதால் சிகிச்சை ஒன்றும் செய்ய முடியாது” என்றார் டாக்டர். அதிர்ந்து போன லாண்டி படிப்படியாக உடல் நிலை நலிவடைந்து இருவாரங்களில் மரணமடைந்தார்.

Acu Healer umar Farook YouTube Stats, Channel Statistics & Analytics

அப்படி மரணமடைந்த லாண்டியின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு மறுபடியும் அனுப்பப்பட்டது. அவருடைய உணவுக் குழாயில் புற்றுநோய் இருந்த தடயங்களோ, புற்றுநோய்க் கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது அந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்? “பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கி தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் அமெரிக்காவின் மரபணு ஆய்வாளர் டாக்டர் புரூஸ் லிப்டன். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குணமாதல் என்பது வெறும் உடலோடு தொடர்புடைய மாற்றம் மட்டுமல்ல. மாறாக, அது மனதோடு இணைந்த மாபெரும்
விளைவாகும் என்கிறது மரபணு அறிவியல். ஆரோக்கியத்தை மனம் ஏற்படுத்தும்
என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உளவியல் விதிகளையும் சில சம்பவங்களையும்
பார்க்கலாம் என்கிறார் உமர் பாரூக்.

1981 -ம் ஆண்டில் மோரீஸ் என்ற பைலட் அமெரிக்க விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது விமானம் வெடித்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட மோரீஸினுடைய முதுகெலும்பு, கழுத்து எலும்புகள் முறிந்திருந்தன. உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும் விழுங்கவும் முடியவில்லை. அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் மோரிஸ் உயிர் பிழைத்தார். இன்று எல்லோரையும் போல் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மனம் என்னும் மாமருந்து! Manam Ennum Mamarunthu!

உடலை இயக்குவதில் மனம் பெரும்பங்கு வகிப்பதை உணர்ந்துகொண்ட மோரீஸ் தன் மன இயக்கம் மூலம் உடல் இயக்கத்தை சீரமைத்துக் கொண்டார். “என்னைப்பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதுதான் முக்கியமானது. உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவும் இல்லை” என்று கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில்
ஒருவர்!

மோரீஸ் குட்மேனைப் போன்ற ஒரு அற்புத மனிதர்தான் அயர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர் ஜோசப் மர்ஃபி. அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு எந்த சிகிச்சையும் வழங்க இயலாது என்று அவருடைய மருத்துவ நண்பர்கள் கைவிட்டனர். நாம் பேசுகிற மர்ஃபியின் காலம் 1980. உடலின் இயக்கத்தில் மனது பெரும் பங்காற்றுகிறது என்பதை டாக்டர் மர்ஃபி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்ஃபி. அவருடைய 30க்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன.

நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்தவர் மர்ஃபி. நம்முடைய மனம் செயல்படுவதில் இருவகையான விளைவுகள் உண்டு. ஒன்றின் பெயர் பிளாசிபோ விளைவு. இன்னொன்றின் பெயர் நோசிபோ விளைவு. தனக்குத்தானேஅல்லது பிறர் மூலம் உருவாகும் நம்பிக்கைதான் பிளாசிபோ விளைவு . இந்த பிளாசிபோ நம் மனதில் செயல்படத் தொடங்கினால் நம் வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். தனக்குத்தானே அல்லது பிறர் மூலம் உருவாக்கப்படும் அவநம்பிக்கைகள் பயத்தை விதைக்குமானால் அதற்குப் பெயர்தான் நோசிபோ விளைவு. பிளாசிபோவும் நோசிபோவும் நம் அன்றாட வாழ்வில் மாறி மாறி ஏற்படுகின்றன. இவற்றை முறைப்படுத்திக் கொள்வதன் மூலம் நம்மைக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

மருத்துவ உலகின் அதிசயம் – பிளாசிபோ …

நம் உடல் மூன்று அடுக்குகளில் வேலைசெய்கிறது உடலியல் மாற்றம், வேதியியல் மாற்றம், மனவியல் மாற்றம் ஆகிய மூன்றும்தான் அந்த அடுக்கு. பொதுவாக நாம் விளையாட்டுக்குக் கூட மூச்சிரைக்க ஓடி பழக்கம் இல்லாதவர் என்று வைத்துக்கொள்வோம் ஒரு நாய் நம்மைத் துரத்துகிறது. இப்போது அதனிடமிருந்து தப்பித்து ஓடுவதற்கு எங்கிருந்தோ ஒரு அசுரபலம், அசாத்திய வேகம் நமக்கு வந்துவிடுகிறது. இதுதான் உடலியல் மாற்றம். உடலுக்கு தேவைப்பட்ட பலத்தை வழங்குவதற்காக இந்த உடல் தனக்குள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது.

அதற்கு அடிப்படையாக அமைவது அட்ரீனல் என்ற வேதியியல் பொருளின் சுரப்புதான். இந்த
ஹார்மோன் சுரப்பு ஏற்பட்ட பிறகுதான் ரத்தத்தின் அழுத்தமும், வேகமும் அதிகரித்து
உடலுக்கு சக்தி கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழலில் நாம் உணரும் பயமும், எச்சரிக்கை
உணர்வும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மனநிலை மாற்றமே
வேதியியல் மாற்றங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதுதான் மனித உடல்
இயக்கத்தின் மூன்றடுக்கு இயக்கம். எல்லா நோய்களுக்கும் மூல காரணமான மனநிலை மாற்றங்களை முழுமையாகப் புறக்கணித்து விட்டு உடல்நலம் சாத்தியம் இல்லை. இன்று தொழிலில், குடும்ப உறவுகளில், அன்றாட வாழ்க்கையில் நிறைந்துள்ள டென்ஷன் உலகில் மருந்துகளைவிடமன அமைதியே அதிகத் தேவையாக இருக்கிறது.

அதன் அடையாளமாகத்தான் ஆன்மீக வியாபாரமும் உளவியல் பயிற்சி வகுப்புகளும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உடலும் மனதும்
இணைந்திருக்கிறது. உடல் பாதிக்கப்படும்போது அதன் ஒரு பகுதியான மனமும் பாதிப்படைகிறது. அதேபோல மனம் பாதிப்படையும்போது அதன் இன்னொரு பகுதியான உடலும் பாதிப்படைகிறது. அதுபோல, உடல் நன்றாக இருக்கிறபோது மனம் உற்சாகமாக இருக்கிறது. மனம் ஆரோக்கியமாக இருக்கும்போது உடலும் நன்றாக இருக்கிறது. உடலின் ஒரு பகுதிதான் மனம். மனதின் ஒரு பகுதிதான் உடல். இந்த இரண்டும் தனித்தனியானது அல்ல.

மனம் என்னும் மாமருந்து! Manam Ennum Mamarunthu!

உடல் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் – நம்முடைய உறுப்புகளை, நமக்குத்
தேவையான சத்துக்களை யார் உருவாக்கியது என்ற ரகசியத்தைத்தான். நீங்கள் கருவாக
தாயின் கர்ப்பப் பைக்குள் இருந்தபோது உங்கள் உடல் உறுப்புகளை, அதற்குத் தேவையான
சத்துக்களை யார் உருவாக்கியது? கருவின் முதல் நிலையில் சைக்கோட் எனப்படும்
அடிப்படை உயிரணு உருவாகிறது. ஒரு ரத்தத் துளி போல் காட்சியளிக்கும் உயிரணுக்
கூட்டம் படிப்படியாக வளர்கிறது. உள் உறுப்புகள் வளரத் தொடங்குகின்றன. எலும்புகள்,
தசைகள், தசைநார்கள், உறுப்புகள், புலன் உறுப்புகள், மூளை என ஒவ்வொன்றாக வளர்ந்து

இயங்கத் தொடங்குகிறது. தாயின் உடலால் உற்பத்தி செய்து அளிக்கப்பட்ட சத்துக்களைப்
பெற்று சிசு வளர்கிறது. அப்படியானால் உடலை உருவாக்கியது உடல்தான். உருவாக்குவதற்கான ஆற்றலை உயிர்ச் சக்தியின் சுழற்சி நமக்குக் கொடுத்தது. தும்மலும் இருமலும் நோய்கள் அல்ல என்கிறார் ஆசிரியர். அதை இவ்வாறு விளக்க முற்படுகிறார். தூசி நம் கண்களில் படும்போது தூசியை எதிர்த்து வெளியேற்ற கண்களில் கண்ணீர் சுரக்கிறது. தூசி என்னும் கழிவுப் பொருளிலிருந்து கண்களைப் பாதுகாக்க கண்ணீர் வருகிறது. மூக்கிற்குள் அந்நியப் பொருட்கள் நுழைவதைத் தடுக்க, எதிர்ப்பு சக்தியாக தும்மலை வரவழைக்கிறது. தும்மல் வரவில்லை என்றால் தூசி போன்ற உடலுக்கு ஒவ்வாத கழிவுப் பொருள் மூக்கின் வழியாக உள்ளே போக வாய்ப்பு ஏற்படும்.

தும்மல் வந்தால் ஒருபோதும் ...

தும்மல் என்பது உடலால் நடத்தப்படுகிற எதிர்ப்பு இயக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, உள்ளே நுழையும் கழிவுப் பொருட்களை சூழ்ந்து அடைத்து வைப்பதற்காக சளி சுரக்கிறது. இவ்வாறு உருவான சளி நுரையீரலில் தங்குகிறது. இந்த சளியை, அதில் உள்ள
கழிவுப் பொருளோடு வெளியேற்ற முயல்கிறது உடல். அந்த எதிர்ப்பு சக்தியால் இருமல்
தோற்றுவிக்கப் படுகிறது. சளி வெளியேற்றப்பட்ட பிறகு இருமல் நின்றுவிடும். நாம்
உண்ணும் உணவுப் பொருள் மோசமானதாக இருக்கும் போதோ, அல்லது அதனை செரிக்க
முடியாமல் உடல் நிலை இருக்கும்போதோ நமக்கு குமட்டல் ஏற்படுகிறது.

அந்த எச்சரிக்கையை மீறி நாம் சாப்பிடும்போது வாந்தி வருகிறது. குமட்டல் ஏற்படும்போதே நாம்
உணவைத் தவிர்த்திருந்தால் வாந்தி வந்திருக்காது. ஆக, வாந்தி, குமட்டல் என்பதும் எதிர்ப்பு
சக்தியின் வேலைகள்தான். இரைப்பை வரை உள்ள கழிவுகளை வாந்தியாகவும், இரைப்பைக்குக் கீழே உள்ள கழிவுகளை பேதியாகவும் நம் உடல் வெளியேற்றும். உடல் வெளியேற்றும் ஒவ்வொரு பொருளும் கழிவுப் பொருள்தான். இந்த தொந்தரவுகள் எல்லாம் நோய் அல்ல, உடலின் எதிர்ப்பு சக்தியின் நடவடிக்கைதான் என்று புரியும் போது உடலின் குணமாக்கும் ஆற்றல் புரியும். பயத்தை விடுவதே நோய்க்கான முதலுதவி என்கிறார் உமர் பாரூக். “நம்பிக்கையே பலம், பலவீனமே மரணம்” என்ற விவேகானந்தரின் பொன்மொழியைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

நம் உடலின் ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும் வேலையைச் செய்வது பராமரிப்பு சக்தி. இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தி என்கிறார்கள். நம் உடலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளை சமநிலைப்படுத்துவதுதான் இந்த பராமரிப்பு சக்தியின் ஒரே வேலை! உடலில் ஒரு காயம் ஏற்படும்போது எப்படி நம் ரத்தத்தை உறைய வைத்து பராமரிப்பு சக்தி வேலை செய்கிறதோ, அதே போல நம் மனதில் ஏற்படும் சமநிலைக் குலைவை மாற்றுவதற்கும் பராமரிப்பு சக்தி வேலை செய்கிறது. கோபம், பயம், கவலை, துக்கம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும் போதெல்லாம் மனம் சமநிலை தவறுகிறது. மனம் சமநிலை தவறும்போதெல்லாம் பராமரிப்பு சக்தி வேலை செய்து

அதனைச் சரி செய்ய முயல்கிறது. பொதுவாக, பராமரிப்பு சக்தி உடலை விட மனதிற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. என்னதான் ஒரு ஆராய்ச்சியாளர் ஒரு விஷயத்தைப் பயன்படுத்தி அதில் ஈடுபடுத்தப்பட்ட பல நபர்கள் குணமடைந்ததை நேரில் கண்டாலும் விஞ்ஞானபூர்வமான விளக்கம் வேண்டும் என்று எப்போதுமே அறிவியலாளர்கள் கேட்பார்கள். புதிய கண்டுபிடிப்புகள் எதுவானாலும் கருவிகள் வழியாகவே அதனை நிரூபிக்க முயல்வது அறிவியல் நடைமுறையாக மாறியிருக்கிறது. மனம் விஷயத்திலும் மனதின் இயக்கத்தை கருவிகள் மூலம் நிரூபித்தார் ஜப்பானிய விஞ்ஞானி மசாரோ எமாட்டோ. அவருடைய முதல் கண்டுபிடிப்பு 1999-ல்தான் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற அவருடைய தீவிர ஆய்வுகளின் மூலம் மனதின் ஒவ்வொரு எண்ணத்திற்கும் புறவுலகில் மாற்றம் நிகழ்கிறது
என்பதை அவர் கண்டுபிடித்தார்.

Discoveries of Masaru Emoto about the Memory and Member of Water …

பொருட்களில் ஏற்படும் மாற்றங்களை தண்ணீரை வைத்து ஆய்வு செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார் எமாட்டோ. தண்ணீரை ஐஸ் கட்டிகளாக மாற்றி பரிசோதிப்பதுதான் அவரது திட்டம். தண்ணீரை உறைய வைத்து, கிறிஸ்டல்களாக மாற்றி, போட்டோ எடுத்தார். தனித்தனியான படங்களை எடுத்து சோதித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருபடம் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டிருந்தது. அது எந்த படம் என்று சோதனை செய்து, பீத்தோவன் இசை கேட்டுக் கொண்டே எடுத்த படம்தான் அது என்பதைக் கண்டுபிடித்தார் எமாட்டோ. இதை மேலும் சில தடவைகள் பரிசோதித்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்.

அடுத்து, ஏழ்மையான ஒரு நபரை தனது தனது ஆய்வுக் கூடத்துக்கு அழைத்து வந்தார். அவர் அருகில் ஆய்வு செய்யப்பட வேண்டிய தண்ணீர் தயாராக இருந்தது. அந்த நபருக்கு மிகவும் விருப்பமான, ஆனால் இதுவரை கிடைக்காத பொருள் எது என்று கேட்டு, அவர் சொன்ன பொருளை அடுத்த சில நிமிடங்களிலேயே வாங்கிக் கொடுத்தார் எமாட்டோ. அந்த நபருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து ஐஸ் கட்டிகளாக மாற்றி மைக்ராஸ்கோப்பில் பார்த்தார் எமாட்டோ. சாதாரண தண்ணீரின் மைக்ராஸ்கோப் படத்திற்கும், மகிழ்ச்சி வெளிப்பட்டபோது எடுக்கப்பட்ட படத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது.

தொடர்ந்து பலவிதமான மனநிலைகளை ஐஸ் கிறிஸ்டல் புகைப்படங்கள் மூலம் எமாட்டோ பதிவு செய்தார். மனநிலை மாற்றத்தால் நம் முன்னால் இருக்கும் தண்ணீர் மாற்றமடைகிறது என்பதை அவர் அறிவியல்ரீதியாக நிரூபித்தார், இப்போதும் கிராமங்களில் உயிர் பிரியப் போகும் நிலையில் உள்ள ஒரு நபரை நலம் விசாரிக்கப் போகிறவர்கள் “மனதைத் தளர விடாதீர்கள்” என்றுதான் சொல்லி விட்டு வருகிறார்கள். “உடலைத் தளர விடாதீர்கள்” என்று சொல்வதில்லை. உடலின் கட்டுப்பாடுஇருப்பது மனதின் வழியாகத்தான் என்பதை நம்மையறியாமல் இப்படித்தான் வெளிப்படுத்துகிறோம். மனம்தான் ஹார்மோன்களின் கடவுள் என்கிறார் உமர் பரூக்.

Dr. Masaru Emoto

இறுதியாக அவர் “மனதின் வடிவம் தான் உடல். உடலின் ஆற்றல் வடிவம்தான் மனம். ஒன்றை சீர்குலைத்தால் மற்றொன்றும் சீர்குலையும். இயற்கை விதிகளைப் பின்பற்றினால் உடல் நலத்தோடு வாழ முடியும். எண்ணங்களைக் கையாளத் தெரிந்தால் மனபலத்தோடு வாழ முடியும். இயல்பான மனதோடு வளமாக வாழ்வோம்” சொல்லி முடிக்கிறார். நாம் பின்பற்றுவது எந்த மருத்துவ முறையாக இருந்தாலும், உடல்நலத்தைப் பேண மனநலத்தைப் பாதுகாப்பது முக்கியம் என்பது அனைவருக்கும் பொதுவானது.. எந்த மருத்துவ முறையுடனும் பொருந்தக் கூடியது. நான் படித்து மகிழ்ந்த இந்தப் புத்தகத்தை நீங்களும் படித்துப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்.

நூல் விமர்சனம்
மனம் என்னும் மாமருந்து
ஆசிரியர் : அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்
வெளியீடு : மல்லிகை பிரசுரம், கோடம்பாக்கம் (தொலைபேசி 044-65551022) மின்னஞ்சல்
: [email protected]

பேரா.கே.ராஜு
ஆசிரியர்
புதிய ஆசிரியன் மாத இதழ்

4 thoughts on “நூல் அறிமுகம்: அக்கு ஹீலர் உமர் பாரூக் எழுதிய “மனம் என்னும் மாமருந்து” – பேரா.கே.ராஜு”
 1. அற்புதமான புத்தகத்தை அற்புதமான முறையில் அறிமுகப்படுத்தி உள்ளார் பேராசிரியர் கே ராஜு அவர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்
  – சி பி கிருஷ்ணன்

 2. வாசிக்க வேண்டிய புத்தகம், அதுவும் இன்றைய காலகட்டதிற்கு தேவையான ஒன்று.

  காரணம் நோய் அச்சம், உடலில் நோய் இருக்கோ இல்லையோ மன பயத்தின் காரணமாக உடல் எதிர்ப்பு திறன் குறைய காரணமாக அமைகிறது. இதற்கு தீர்வாக இந்த புத்தகம் அமையும் என்பது எந்த மாற்றுக் கறுத்தும் இல்லை.

  ஜமீல் அஹ்மத்,
  வாணியம்பாடி.

 3. Exelent sir I an chennai I want this book kindly sent any contact no .I am trying landlines but outsorder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *