Manamatram short story by Tha.Ezhilarasi மன மாற்றம் குறுங்கதை



வெகுநாள் கழித்து ரம்யா பேருந்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். லாக்டவுன் முடிந்து அப்போதுதான் பேருந்தில் பயணம் செய்ய முடிந்தது. அப்போது கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது.

பஸ் டிரைவரும் பொறுமையாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார் ரம்மியமான இந்த சூழலில் மழைநீரின் தூறல் மேலே மோதியது ரம்யாவின் அடிமனம் வரை குளிர்ந்ததை உணர்ந்தாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தாள் .

போன வருடம் மழை காலம் மழை இல்லாமல் போனதை நினைத்து இப்பொழுது ஆங்காங்கு நிரம்பியிருக்கும் மழைநீரை பார்க்கும் பொழுது மனம் உல்லாசமாக பொங்கியது . மன துள்ளலுடன் ஆபீஸ் சென்று கொண்டிருக்கும் பொழுது பக்கத்து ஜன்னலோரச்சீட்டில் ஒரு சிறுவன் நடுத்தர வயதுடன் கூடிய பெண்ணுடன் வந்து அமர்ந்தான். சிறிது நேரத்தில் தன் வழக்கமான சேட்டைகளை ஆரம்பித்தான். அந்த பெண் எதுவுமே சொல்லவில்லை. சன்னலை திறப்பதும் மூடுவதும் ஆக இருந்தான் மழை நீரும் உள்ளே தெறித்தது. முதலில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிறகு ஒரு தொந்தரவு மெல்ல எட்டிப்பார்த்தது . ஒரு கட்டத்தில் அருகில் அமர்ந்திருந்த அனைவரும் முகத்தை சுளித்தனர்.

‘கொஞ்சம் அமைதியா வரச் சொல்லுமா குழந்தையை”‘என்று அந்தப் பெண்ணிடம் சிலர் முறையிட்டனர்.. ‘ஏற்கனவே கொரானா பயம் வேற மனுஷனை கொல்லுது இதுல நேரா மழை சாரலில் நனைந்தால் சளி பிடித்தால் யார்மா பார்க்கறது? கொஞ்சம் சன்னல் கதவ மூடச் சொல்லுமா’ என்று மற்றொரு ஆண் எகிற உடனே அந்த பெண் எல்லோரிடம் மன்னிப்பு கேட்டாள் .

அந்த சிறுவனின் தாய் கொரானா பாதித்து இறந்து விட்டதாகவும் இப்போதுதான் வெளியில் கூட்டி வருவதாகவும் தெரிவித்தார். வீட்டில் அம்மா இல்லாத தனிமை என்பது அவனை வாட்டியதாகவும் தெரிவித்தார் . சரியாக சாப்பிடவும் தூங்கவும் அடம் பிடித்ததாகவும் கூறினர் வெளியில் கூட்டி வந்தால் கொஞ்சம் பையனின் மனநிலை மாறும் என்று நினைப்பதாகவும் , அதனால் கூட்டி வந்தாகவும் கொஞ்சம் சேட்டைகளை பொறுத்துக்கொள்ளும் மாறு கேட்டார் அந்த பெண்.

அனைவருமே ஆழ்ந்த மவுனத்திற்கு சென்றனர்.
துள்ளலாக இருந்த மனம் சூம்பியது எனக்கு இன்னும் எவ்வளவு இழப்புகளை இந்த மனித சமுதாயம் பார்க்க வேண்டுமோ என்ற எண்ணத்துடன் ரம்யா தன் தடத்தில் இறங்கினாள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *