ஆனந்த விகடன் இதழில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தொடரின் இரண்டாம் பாகம்.
பல லட்சம் பிரதிகள் விற்பனையான இந்நூலின் அடிநாதம் அன்பும் அடுத்தவர்கள் கருணையும் நம்மீது நமக்கு உண்டான நம்பிக்கையும் எனலாம் தன்னம்பிக்கையை விதைக்கும் எழுத்துக்களாகும் குட்டி குட்டி கதைகள், நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து நமக்கே நாம் எங்கே தவறு இழைத்தோம் என்பதை சுட்டிக் காட்டும் பாங்கும், எவ்வாறெல்லாம் சமூகத்தின் செயல்கள் நமக்கு, நம் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக கோடிட்டுக் காட்டும் பாங்கும் வியக்கத் தக்கவை.
கணவன் மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு, இன்றைய பெருந்தொற்றுக் காலத்தில் நிகழ்ந்துள்ள அபரிதமான மாற்றங்கள் எப்படி எல்லாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளன, அதிலிருந்து எப்படி எல்லாம் நம் வாழ்வு முறையை நம்மால் திறம்பட மேம்படுத்திக்கொள்ள முடியும், முதியோர் பராமரிப்பு, வறுமையில் உள்ளவர்கள் மீதான கரிசனப் பார்வை என பல தளங்களில் இந்நூல் நம்மை சிந்திக்க வைக்கிறது.
நூலைப்பற்றி நாம் பேசுவதைவிட நூலில் அவர் பேசிய சில கருத்துக்களை இங்கே கூறினாலே இந்நூலின் சாராம்சம் எளிதில் விளங்கும்.
மகத்தான மாற்றங்களின் தொடக்கப்புள்ளி என்பது மாபெரும் குழப்பமான சூழலாகவே இருக்கும். ஆனால், அதை கடக்காமல் மாற்றம் சாத்தியம் இல்லை.
மாற்றத்திற்கு அஞ்சுபவர்கள் புதிய தொடக்கங்களை சந்திப்பதில்லை. அவர்களின் வானத்தில் புதிய விடியல்கள் தோன்றுவதில்லை. மாற்றங்கள் வரும்போதும் சவால்கள் குறுக்கிடும் போதும் அதை பேராபத்தாக நினைத்து ஒதுங்கலாம் அல்லது பெரும் வாய்ப்பாக கருதி அடித்து ஆடலாம். மனநிலையே மாற்றத்தை உறுதி செய்கிறது.
நாய்களிடம் இருந்து அன்பையும் விசுவாசத்தையும் கற்றுக் கொள்வதைப் போலவே வேறு சில வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொள்ளலாம். நாம் செல்லமாக வளர்க்கும் அவையும் நமக்கு குட்டி குட்டி போதனைகள் செய்யும் வழிகாட்டிகளே.
நம் எண்ணங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு மூல காரணமே அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்படுவதுதான். feeling good, being good, looking good என்ற மூன்றில் மூன்றாவதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பது தான் முழு பிரச்சினைக்கும் மூல காரணம்.
மகிழ்ச்சியாய் இருக்க மகிழ்ச்சியை தள்ளிப்போடாத மனம் ஒன்று மட்டும்தான் தேவை. இந்த கணம் அழகானது, அற்புதமானது, ஆனந்தமானது என்பதை உணர்ந்தாலே போதும்.
டேவிட் கோலியாத் கதை தெரியும்தானே. மலை போன்ற உருவம் கொண்ட கோலியாத்தை சிறுவன் டேவிட் எதிர்கொண்டு வென்றது உடல் வலிமையால் அல்ல, நம்மால் முடியும் என்ற மன வலிமையால் மட்டுமே.
கடந்த காலத்தைப் பற்றிய கவலையும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் இல்லாமல் நிகழ்காலத்திலிருந்து தெளிவாக சிந்தித்து வியூகம் அமைத்ததால்தான் டேவிட் கையிலிருந்த உண்டிவில் அவனுக்கு கோலியாத்தை வீழ்த்த போதுமானதாக இருந்தது.
கோபம் என்பது நமக்குள் உருவாகி முதலில் நம்மை காயப்படுத்திவிட்டு அதன் பிறகு அடுத்தவர்களை தாக்குகிறது. அதன் வேகத்தை முதலில் சந்திக்கும் நாம் தான் அதிக பாதிப்பு அடைகிறோம். பலருக்கு இது புரிவதில்லை.
மாற்றங்களை கண்டு அஞ்சி நடுங்காமல் நம்பிக்கையோடு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் ஆளே நாம்தான். அதற்கு நாம் என்ன மனநிலையில் எல்லாவற்றையும் எதிர் கொள்கிறோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எதற்கு அடிமையாகி இருந்தாலும் சரி உங்கள் பிள்ளைகளை உங்களாலும் மீட்க முடியும். வாழ்க்கையில் அவர்கள் அடைந்த வெற்றி நிமிடங்களை, அந்த சந்தோஷ தருணங்களை அவர்களுக்கு நினைவு படுத்துங்கள். அவர்கள் சிக்கியிருப்பது எத்தனை சவாலான சிக்கலாக இருந்தாலும் சரி. அதிலிருந்து அவர்களை மீட்க, நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டியது எல்லாம் உற்சாகம் மட்டும்தான்.
கதைகள் காதுவிட்டு காது பாயும் நூலகங்கள். ஆதியிலிருந்தே கதைகள் தான் மனித சமூகத்தை அடுத்தடுத்து நகர்த்தி வந்திருக்கின்றன.
துணிந்து வெற்றி பெறுபவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதில்லை. அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். பணிவின் பயன் இது.
வெற்றிக்கோட்டை தொட இயலாதவர்கள் தான் வெற்றியைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள்.
நம் மகிழ்ச்சியை தீர்மானிப்பது நாம் வைத்திருக்கும் பணம் அல்ல. அந்த பணத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.
வீடு எவ்வளவு பிரம்மாண்டமாக, மின்னுவதாக இருந்தாலும் அதில் போதிய காற்றோட்டம் இருந்தால் மட்டுமே அது வாழத் தகுந்ததாக இருக்கும்.
அதே போலத்தான் நம் உடலும். நீங்கள் வெளிப்பார்வைக்கு எவ்வளவு கட்டுமஸ்தான உடல் கொண்டவராகவும் இருக்கலாம்.
ஆனால் உங்கள் lungs capacity தான் உங்களின் பலத்தை இறுதியில் தீர்மானிக்கப் போகிறது.
குழந்தைகளுக்கு வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் புரியவேண்டும். புத்தகங்களில் தொடங்கி புத்தகங்களிலேயே முடிந்து போவது அல்ல அறிவு. ஏட்டு அறிவு எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் பட்டறிவு.
உங்கள் குழந்தைகளுக்கு பட்டறிவு கிடைப்பதற்கு ஒரு போதும் நீங்கள் தடைக்கல்லாக இருந்து விடாதீர்கள்.
நம்முடைய முழு ஆற்றலையும் வெளியே கொண்டு வருவது தான் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான நோக்கமே தவிர அடுத்தவரின் காலை இடறி விட்டு பெறுவதற்கு பெயர் வெற்றி அல்ல.
ஒருவரின் விருப்பம், ஆற்றல், அதற்கான தேவை மூன்றும் சந்திக்கும்போது வெற்றிபெறும் முனைப்பு பல மடங்காகிறது. வெற்றியும் எளிதாய் வசமாகிறது.
சூழலை கையாளும் திறன் குறித்து எந்த பள்ளியும் பெற்றோரும் கற்றுக் கொடுப்பதில்லை.
வாழ்க்கை அனுபவத்தால் சிலர் கற்றுத்தேருகிறார்கள். .
முதலீட்டு முடிவுகளில் எப்போதும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
காட்டில் வாழும் விலங்குகளுக்கு குழப்பம் எதுவும் இல்லை. அவை தங்கள் குட்டிகளுக்கு இந்த உலகில் போராட தேவையான அனைத்துப் பாடங்களையும் கற்றுக் கொடுத்து விட்டு விலகி விடுகின்றன.
பிழைத்திருப்பது இனி அந்த குட்டிகளின் பாடு. நாம் தான் நம் குழந்தைகளை முழுவதும் நம்புவதில்லை. அதேசமயம் அவர்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம். குழந்தை வளர்ப்பில் கடினமான விஷயமே இந்த முரண்பாடுதான்.
இறைவன் எப்போதும் தனக்குப் பின்னால் ஒளிவட்டம் தோன்றுமாறு வருவதில்லை.பசிக்கு உணவளிக்கும் கைகளாக, ஆபத்தில் தோள் கொடுக்கும் அறிமுகமற்ற நபராக இறைவன் எப்போதும் நம்மை சுற்றி தன் இருத்தலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். ஆசிரியர்களும் அப்படித்தான். நம்மைச் சுற்றி நிகழும் இயற்கை அற்புதங்கள் தொடங்கி நம்மிடையே வாழும் ஒவ்வொரு மனிதர் வரை நமக்கு ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தான். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளும் அனுபவக் கல்வி தான் நம் ஆதார சுருதியாக விளங்கி நம்மை செலுத்திக் கொண்டே இருக்கிறது.
ஒருவர் கணவனிடமோ மனைவியிடமோ உண்மையை பேசுகிறாரா என்பது முக்கியமல்ல. உண்மையாக இருக்கிறாரா என்பது தான் முக்கியம்.
உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் எதிர்மறை எண்ணங்களை விதைத்தால் அவர்களிடம் விவாதித்து பயனில்லை. அவர்களை தவிர்க்க சில பொய்களை உழைத்து விலகுவது தான் சரி.
இத்தாலி நாட்டில் டிராக்டர் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தவர் ஃபெரிச்சோ. உங்கள் காரில் இந்த இந்த குறைகள் எல்லாம் இருக்கின்றன அதை இப்படி எல்லாம் சரி செய்யலாம் என்று நிறைய யோசனைகளோடு அவர் ஒருமுறை பெராரி கார் கம்பெனியின் மேலதிகாரிகளை சந்தித்தார். டிராக்டர் கம்பெனி நடத்துபவருக்கு சூப்பர் கார் பற்றி எல்லாம் என்ன தெரியும் என அவரை எள்ளி நகையாடி திருப்பி அனுப்பிவிட்டனர். அன்று அவமானப்படுத்தப்பட்ட ஃபெரிச்சோ அதன் பின் ஒரு கார் கம்பெனியைத் தொடங்கினார். அதுதான் லம்போர்கினி. ஒருவேளை அவர் சொன்னதை அன்று ஃபெராரி காது கொடுத்து கேட்டிருந்தால் இன்று அந்நிறுவனத்திற்கு போட்டி நிறுவனம் ஒன்று இல்லாமலே போயிருக்கும். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் எனும் உலகப் பொதுமறைக்கு பொருள் புரிந்தவர்கள் பெரிய நிறுவனத்தில் இல்லாமல் போனது அந்நிறுவனத்தின் சிக்கலே.
உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய ஆசைப்பட்டாலும் அதை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு பணம் கொடுங்கள். ஆனால் அவர்கள் எதையுமே செய்ய தேவையில்லை என்கிற அளவுக்கு பணத்தை விட்டுச் சென்று விடாதீர்கள் என்பது உலகின் புகழ்பெற்ற பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் கூறிய கருத்து.
நிகழ்வுகளுக்கும் விளைவுகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. நிகழ்வுகளுக்கு நாம் குத்தும் தவறான முத்திரைகளை நம் வாழ்வில் நிகழும் மோசமான விளைவுகளுக்கு காரணம்.
பிரார்த்தனை என்பதை யாசகம் கேட்கும் நிகழ்வாக மாற்றி விடாதீர்கள் நம் தேவை என்ன என்பது கடவுளுக்கு நாம் கேட்காமலேயே தெரியும் என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. .
நாம்தான் நம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதை உணர வேண்டும் பிறரோடு ஒப்பிடுதல் நமக்கு நாமே அழித்துக் கொள்ளும் தீங்கு தன்னம்பிக்கை தான் நம் அழகை கூட்டும்.
வெற்றி வேகத்தில் இல்லை இயங்குதலில் இருக்கிறது.
சூழ்நிலையின் மீது எப்போதும் பழி போட்டு தப்பிக்க நினைக்காமல் அதை சாதகமாக மாற்றி பயன்படுத்தி நம் வெற்றிகளை நாம் முன்னேறும் உரமாக மாற்றி காட்ட வேண்டும் .
இப்படியாக பல்வேறு தளங்களில் சிறு சிறு கதைகளின் மூலம் நமக்குள் விழிப்புணர்வு அடைய வைக்கும் இவர் எழுத்துக்களுக்கு நாம் எப்போதும் இனிது இனிது என்று வரவேற்கலாம்.
நூலின் தகவல்கள்
நூல் : மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
நூலாசிரியர் : சுவாமி சுகபோதானந்தா
வெளியீடு : விகடன் பிரசுரம்
பதிப்பு : ஜனவரி 2022
பக்கம் : 272
விலை : ரூ.250
எழுதியவர்
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.