மூன்றாம் பிறை நாவல் – புத்தகத்திலிருந்து
“இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன்.”
“ஒப்புக் கொண்டீர்களா?”
“இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன்.”
ஒப்புக் கொண்டீர்களா?”
“இன்ஷா அல்லா; ஒப்புக்கொண்டேன்
இப்படியாக வஹிதாவின் மூன்றுமுறை ஒப்புதலோடு நாவல் தொடங்குகிறது. கதையின் நாயகி வஹிதா. அவ்ளின் கனவுக் காட்சியின் வழியாகத் திருமண ஒப்பந்த நகல் நினைவூட்டப் படுகிறது. இது. ஆசிக் என்ற ஆண்மகனுடன் வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்விக்கப் பட்டு, வாழ்க்கை அவள் சிந்தனைகளுக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாமல் அமைந்து போக, பிறந்தகம் நோக்கித் திரும்பிவிடுகிறாள். அன்றைய இரவில்தான் கனவுக் காட்சியாகத் செயற்கையான திருமண ஒப்பந்தக் கோலம் வந்து நிற்கிறது. பெண்ணின் வாழ்க்கை தான் விரும்பாதபோதும் ஓர் ஆண்மகனிடம் ஒப்படைக்கப் படுவது அதுவே அவளின் முதல் துயரம் என்றாகிவிடுகிறது. மத மார்க்கம் எதுவானாலும் பெண்ணின் நிலை அடிமைச் சாசனத்தின் நகலாகவே அமைகிறது. வஹிதாவின் நிர்ப்பந்த வாழ்க்கை வழியாக இது காட்சிப் படுத்தப் படுகிறது.
நாவல் என்பது கதையல்ல; காட்சிப் படிமங்களைக் கதைபோல வார்த்தை வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட முடியாது. அது வாழ்வியல் வரலாறு மற்றும் பண்பாட்டுச் சாசனம்தான் என்றாலும் ஒரு சிமிழுக்குள் அடங்காமல் விரிந்து பரவும் பெரும் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த தத்துவப் பெட்டகம். நேற்று, இன்று, நாளை என்ற கால எல்லைகளைக் கொண்டு இயங்குகிறது. ரஷ்ய நாவல்கள் போல தமிழில் விரிவடைந்த பரப்பைக் கொண்டு இயங்கும் ஒருசிலவற்றுள் ”மூன்றாம் பிறை” முக்கியமானது. சிறைப்படாத சிந்தனைப் பொருண்மையும் தொய்வுதட்டாத இலக்கியச் செழுமையும் நாவலின் மினுமினுப்பை அதிகப் படுத்துகின்றன.
இந்த நாவலின் வாசிப்பு அனுபவத்துக்கு நிகரான மொழியை மதிப்புரைப் பகுதியில் கொண்டுவந்து விடமுடியாது. ஆழமும் அழுத்தமுமானது மட்டுமல்ல; கவித்துவமான அடர்த்தியையும் உட்கொண்டு இயங்குகிறது.
வாவேர் ராவுத்தர் சேமித்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் அவர் மகன் உதுமான் ராவுத்தர் பெண்ணுடம்புக்குள்ளும் அரசியல் படாடோபத்துக்குள்ளும் இறைத்துச் சிதைத்துவிடுகிறார். அவரின் வாரிசுகளுக்கு அதுவே பெரும் சுமையாகி உதயசூரியன் இல்லம் என்று பெயர் சூட்டப்பட்ட அவரின் சொந்த வீடு கடனுக்குள் மூழ்கி ஏலம் போய்விடுகிறது. இன்னொரு மொழியில் சொல்வதென்றால் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் அடையாளம்தான் இந்தக் கடன் சுமை.
தோப்பில் முகமது மீரான் அவர்களின் வாழ்ந்துகெட்ட இஸ்லாமிய வாழ்க்கைப் பதிவுகள் இந்த நாவலிலும் அடக்கம் கொண்டிருக்கின்றன. மீரான் மைதீன், ஜாகிர் ராஜா போன்றவர்கள் இஸ்லாமிய சட்டகத்துக்குள் நின்று தங்கள் கண்ணுக்குப் புலனாகிய மேடு பள்ளங்களைச் சுட்டிச் சென்றிருக்கிறார்கள் என்றாலும் தோப்பில் அவர்களும் மானசீகன் அவர்களும் இஸ்லாமிய வாழ்வையும் ஞானத் தேடலையும் பதிவு செய்வதில் முன்னணிப் பாத்திரம் வகிக்கின்ன்றனர்.
இந்த நாவல் காதலாலும் காமத்தாலும் நிரம்பி வழிகிறது என்பதோடு காலத்தின் கட்டளைகளுக்கு இசைவாய் வறுமையை வலியக் கொண்டுவரும் உதுமான் ராவுத்தர் செயல்களாலும் ததும்புகிறது. பின்னாளில் கேட்பாரற்றுக் கிடக்கப் போகும் அவருடைய ஜீப் என்ற வாகனம் கணிகையர் காலிடுக்கைத் தேடியும் அரசியல் தலைவர்களின் அடிமைச் சேவகத்துக்காகவும் ஓடிக் கொண்டே இருந்தது.. செல்வச் சீரழிவின் அடையாளமாக ஜீப் ஒரே இடத்தில் நின்றுவிடுகிறது. அதோடு நாய் போன்ற விலங்குகளின் சிறுநீர்க் கழிப்பிடமாக மாறிவிடுகிறது. சோகச் சுவடு படிந்த வறுமையின் அடையாளங்களில் ஒன்|றாக, இயங்காத அந்த ஜீப் அனாதியாய் நின்றுகொண்டிருக்கிறது.
இந்த நாவலின் அனைத்துப் பாத்திரங்களும் நிறைவாகவும் கவித்துவமாகவும் பேசுகின்றன. வாசிக்க வாசிக்க மனம் நிரம்புகிறது. சங்க காலம் தொட்டு இன்றுவரையிலான தமிழ்மொழி வெப்பகாலத்து மர நிழல் போலவும் நளினமாய் ஸ்பரிசிக்கும் பிரபஞ்சக் காற்றுப் போலவும் மனசுக்குள் ஊடுருவி உடலெங்கும் வியாபகமாகி நிற்கிறது.
இந்த நாவலில் முக்கியமான வரலாற்றுச் செய்தி ஒன்று பதிவு பெற்றிருக்கிறது. அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஆங்கில அதிகாரிகளுக்குச் சேவகம் செய்த இந்தியச் செல்வந்தர்களுக்கு, பொது நிலங்கள் அனைத்தையும் பட்டாப் போட்டுத் தந்தனர். தேவாரம் ஜமீன்தார் சுற்றுலா வந்த (பெயர் தெரியவில்லை, மதுரை மாவட்ட நிர்வாகியாய் இருக்கலாம்) அதிகாரிக்கு நல்ல உணவையும் ஆடல் மகளிரையும் தந்ததற்காக, தேனியின் மேற்கு எல்லையில் இருந்து குன்னூர் வைகை நதிவரை உள்ள இடங்களைப் பட்டயம் செய்து தாந்ததாக இன்றைக்கும் பழைய முதியவர்கள் சொல்வதுண்டு. நில உச்சவரம்புச் சட்டம் வந்த பிறகு பெரும்பாலானவற்றை விற்றுத் தீர்த்துவிட்டனர். அதுபோல்தான் உதுமான் ராவுத்தரின் தாத்தா கனிராவுத்தர் ஆங்கில அரசுக்கு விசுவாசம் காட்டி ஏராளமான சொத்துகளைச் சேர்ர்த்தார். உதுமார் ராவுத்தரின் தந்தை வாவேர் ராவுத்தர் அதை மேலும் வளப் படுத்தி வளர்த்தெடுத்தார்.
செல்வத்தை உருவாக்குபவர்களைவிட அதைச் செலவு செய்யும் அடுத்த தலைமுறை மெத்தனமாக நடந்து செல்வ மதிப்புப் புரியாமல் விட்டேத்தியாய்ச் செலவு செய்து அழிப்பர். உதுமான் அப்படித்தான் பாழாக்கினார். அவரின் இளையமகன் காதர் கூட அடுத்தவர் தயவில்தான் படிக்க முடிந்தது என்பது பெரும் சோகம்.
எல்லா நிகழ்வுகள் போலவே கிரிக்கெட் வைளையாட்டும் கேரம் பலகை ஆட்டமும் இணை பாத்திரங்களாக நாவலில் வருகின்றன. கிரிக்கெட் நுணுக்கங்களை நன்கு தெரிந்து புரிந்தவராய் இருக்கிறார் நூலாசிரியர். கிரிக்கெட் விளையாட்டு மூலம் காதருக்குச் சில நண்பர்கள் கிடைக்கின்றனர். திரு என்ற திருமாறன், ராஜா உள்ளிட்ட தோழர்கள்! இதில் திருமாறன் உதுமான் ராவுத்தர் மறைவுக்குப் பின் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் கருவியாய் மாறிவிடுகிறான். ராஜா தமிழகத்தில் இன்றும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கத்தின் உறுப்பினன். இந்த இருவரும்தான் அப்துல் காதரின் குணாதிசயங்களை வடிவமைக்கின்றனர். தமுஎகசவுக்கு மிகப் பெரும் அந்தஸ்தைத் தந்திருக்கிறார் நாவலாசிரியர்.
உதுமான் ராவுத்தரின் மனைவி சுபைதா இறைப்பற்று கொண்டவள். “பாவா அவுக” என்று அடிக்கடி உச்சரித்துத் தனது துன்ப துயரங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள்.
அவளின் மூத்த மகன் கமர்நிதி. அவன் கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டு வம்புதும்புகளை வாங்குபவனாய் இருக்கிறான். சுபைதா அவனுக்குக் கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் அவனுக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை. புலியையே புல்லென மிதிப்பவன் இந்தக் கிளியை என்ன பாடு படுத்துவானோ என்று பெண்வீட்டாருக்கு பயம். ஆனாலும் சுபைதா தன் மகனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான் அல்லவா?
சுபைதாவின் சிநேகிதி ஜைத்துன். அவள் ஒரு கல்யாண புரோக்கர். கமருக்காக நிறைய இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஜைத்துன் கமர் மீது குற்றச்சாட்டு வைக்கிறாள். அப்போது சுபைதா தன் குடும்பப் பெருமையை அள்ளிவிடுகிறாள்.
”இது எப்பேர்க்கொத்த குடும்பம் தெரியுமா?” என்று தொடங்கி வாவேர் ராவுத்தரின் வள்ளல்தன்மையை விவரிக்கிறாள். ”அவரு எஸ்டேட்டுக்குப் போயிட்டு வந்தார்ன்னா தெருவே ஜெகஜோதியாயிரும்.” என்கிறாள். அவர் தன் மடியில் மாற்றி வைத்திருக்கிற பணம் முழுவதையும் அள்ளி அள்ளித் தந்து மகிழ்வார் என்று பெருமைப் படுகிறாள். மேலும் அவள் சொல்வது “வாவேர் கொணத்துல தர்மன்; குடுக்குறதுல கர்ணன்.” அப்படிப் பட்டவரின் பேரனுக்குப் பெண் தரமாட்டார்களா எனக் கேள்வி எழுப்புகிறாள்.
இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் ஓர் இஸ்லாமியப் பெண்ணின் பண்பாட்டு அணுகுமுறை எத்தனை ஜனநாயகப்பூர்வமானது என்பதைத்தான் தர்மனும் கர்ணனும் இந்து(?) மத இதிகாசத்தின் பாத்திரங்கள். இஸ்லாத்தின் ஞானத் தத்துவம் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுமா என்பதைவிட வாழ்வின் சிநேக அணுகுமுறை அதைத் தடை செய்யவில்லை. மக்களின் வாழ்வோடு ஒன்றிவிட்ட காவியப் பாத்திரங்கள் பெருமைக்குரிய வழிகாட்டிகளாய் இருப்பதை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். (அத்தகைய ஐக்கிய அணுகுமுறை இன்று இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.) சாமான்ய மனிதர்களின் மனங்களில் பதிந்துவிட்ட எதார்த்தத்தைப் பதிவு செய்வதன்மூலம் மதமாச்சர்யம் அடித்தட்டு மக்களிடம் இல்லை என்பதை நிறுவுகிறார் நாவலாசிரியர்.
வஹிதாதான் நாவல் முழுப் பரிமாணத்தையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆசிக்குக்கு வாழ்க்கைப் பட்டபோது அவனை விரும்பாதவளாய் இருக்கிறாள். முதலிரவில் அவனை அண்டவிடாமல் அடம்பிடித்த போது ஆசிக்கும் ஒதுங்கிப் போகிறான். இதிலிருந்தே அவன் பல பெண்களோடு உறவுகொண்டவன் எனப் புரிய முடிகிறது. (காம வேட்கை என்பது முதலிரவில் முழுவதையும் தனதாக்கிக் கொள்கிற சுதந்திரத்தை இருவருக்கும் அளிக்கிறது இயற்கை; முதலிரவில் அடம்பிடிக்காமல் ஒதுங்குகிறார்கள் என்றால் அவர்கள் பல முந்திகளில் படுத்து எழுந்தவர்கள் என்று அர்த்தம். பலமேனி சுவைத்தவர்களால்தான் ஒதுங்குதல் சாத்தியம்.) கல்யாணமாகி 22 நாட்கள் கழித்து ஒரு மழைநாளில் இணைசேர்கின்றனர். வஹிதாவுக்கு திருப்தி உண்டாகவில்லை,
தாம்பத்தியத்தின் இயல்புகெட்ட சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த போது ஒருநாள் இருவரும் திரையரங்குக்குப் போகின்றனர். ஈர்ப்பு இல்லாத படம்; எப்போது முடியும் என்|று அசதியோடு அடிக்கடிக் கடிகாரத்தைப் பார்க்கிறாள். இதைக் கவனித்த ஆசிக் கேட்கிறான். “கடிகாரத்தையே பாத்துக்கிட்டிருக்க; எவனையும் வரச் சொல்லியிருக்கியா?” இந்த வார்த்தைகள்தான் வஹிதாவைப் பிறந்தகம் நோக்கி விரட்டி விடுகிறது. ஆண் வக்ரத்தை அன்று முழுமையாய் உணர்ந்துகொள்கிறாள்.
குடும்பம் வறுமையின் வாடிவாசலில் நின்று திக்குமுக்காடிக் கொண்டிருந்த தருணத்தில் வஹிதா வேலைக்குப் போகவேண்டிய் நிர்ப்பந்தம் உண்டாகிறது. அதற்கு ஏதுவாக இஸ்மாயில் என்ற அழகன், துணிக்கடை நடத்துபவன் நட்பு கிடைக்கிறது. ஆண்கள் எப்போதும் பெண்களை அடிமையாய் நடத்தும் குணமுடையவர்கள் என்பதை அறிந்து வைத்திருந்த வஹிதா இஸ்மாயிலின் அழகில் சொக்கிப் போனாலும் அவன் முழுமையான வாழ்வியல் நேசனாக மாறித் தன்னை இணைஜீவியாய் ஏற்றுக் கொள்வானா என்ற சந்தேகம் எழுகிறது. அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன். அவன் மனைவி ஒரு ஈளநோக்காட்டுக் காரி. அவன் வலைவீசும் ஒவ்வொரு தருணத்திலும் அவளுக்குச் சந்தேகம் வந்துகொண்டே இருக்கிறது. மனைவியை தலாக் செய்தால் அன்றி இன்னொரு திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. தலாக் செய்துவிட்டுத் தன்னை ஏற்பானா, அல்லது வப்பாட்டியாய் மட்டும் வைத்துக் கொள்வானா என்ற சந்தேகங்கள் மனதை வாட்டியபோதிலும் இஸ்மாயிலின் அழகு இவளை ஈர்க்கிறது. வஹிதா பெண்ணழகி என்றால் அவன் ஆணழகன். மனசின் தடுமாற்றங்களை மேனியழகு வென்றுவிட “நீ ஒப்புக் கொள்கிறாயா?” என்ற இஸ்மாயிலின் கேள்விக்கு “ஒப்புக் கொள்கி|றேன்” என்று அடிபணிந்து விடுகிறாள்.
ஒவ்வொரு நாளும் தனியறைச் சந்திப்பு! கூடி முயங்கும் கொண்டாட்டத் தருணங்கள்! சிறந்த இலக்கிய வாசகியான வஹிதா சுஜாதா போன்ற இலக்கிய ஜாம்பவான்களோடு தொடர்பில் இருக்கிறாள். மின்னஞ்சல் பரிவர்த்தனையும் நடைபெறுகிறாது. சுஜாதாவின் படைப்பு ஒன்றை வாசித்துவிட்டுப் பாராட்டி மின்கடிதம் எழுதுகிறாள். அதற்கு “நன்றி” என்று பதில் போடுகிறார் சுஜாதா. அதைப் பார்த்துவிட்ட இஸ்மாயில், சுஜாதா ஓர் ஆண் என்று புரிந்துகொண்டு “இனிமே இப்படிக் கடிதம் எழுதுவதை நி|றுத்திவிடு” என ஆணையிடுகிறான். ஆண்மனசின் சந்தேகக் குறியீடு இது.
வஹிதாவுக்கு மனச்சங்கடம் உண்டானாலும் காமுக இயக்கங்கள் தொடர்கின்றன. மனித உணர்ச்சி ஏதேனும் ஒன்றுக்கு அடிமைப் பட்டுவிட்டால் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியம் என நாவல் மௌனமாய் எச்சரிக்கிறது. அது மதுபோதையாக இருந்தாலும் காம போதையாக இருந்தாலும். விளைவாகக் கருவுறுகிறாள் அவள்.

இஸ்மாயிலின் வணிகச் சூழல் மாறுகிறது, இருவரின் அத்துமீறிய உறவைப் புரிந்துகொண்ட இஸ்மாயிலின் மாமனார் (அவர்தான் கடைமுதலாளி எனப் பின்னர் தெரிய வருகிறது.) கடையைத் தன்வசப் படுத்திக் கொண்டு இஸ்மாயிலை எடுபிடியாக்கி வேறு கடைக்கு அனுப்புகிறார். ஒருநாள் இரவு வஹிதாவைச் சந்தித்த இஸ்மாயில் “இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை” எனச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறான்.
“அழகின் மயக்கம் உயிரை மாய்க்கும்” என்பதாய் நாவல் பாடம் புகட்டுகிறது. இஸ்மாயில் நிராகரித்த அந்த இரவில் வஹிதா தற்கொலை செய்துகொள்கிறாள். வஹிதாவின் மரணத்தை விவரிக்கும் பாங்கு சோகச்சுவையின் உச்சம்.
வஹிதாவின் மரணத்துக்குப் பின் குடும்பம் சிதைந்து விடுகிறது. கமர் கொலைக் குற்றவாளியாகி சிறைசென்றுவிட, இரண்டாமவன் ரசாக் இஸ்மாயிலுடனான வஹிதாவின் காம இயக்கத்தைக் கண்டு வெ\றுத்து ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அடுத்தவர் உதவியால்; காதர் படித்தபோதும் நிலைப் படாத மனதோடு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான். சுபைதா வீட்டு வேலைக்குப் போகிறாள். எத்தனையோ பேருக்கு உதவி செய்த குடும்பம் அனாதையாகிக் கிடக்கிறது. திருமாறன் செஞ்சோற்றுக் கடன் போல அவ்வப்போது உதவி செய்கிறான்.
காதர் தந்தை இறந்தபோது முழு ஆண்டுத் தேர்வு எழுத முடியாமல் குறைந்த மதிப்பெண் பெற்று, குடும்பச் சுமையைத் தனதாக்கத் துணி சுமக்கும் வேலைக்குப் போகிறான். அது அவனுக்கு ஒத்துவராத நிலையில் திருவின் உதவியால் மீண்டும் கல்லூரிப் படிப்புக்குத் திருச்சிக்குச் செல்கிறான். வஹிதாவின் சாவுக்குப் பின் அதுவும் இரண்டாம் ஆண்டோடு நின்றுவிடுகிறது. திருமாறன்தான் ஒரு மருத்துவமனையில் அவனுக்கு வேலை வாங்கித் தருகிறான்.
இந்த நாவலின் மிக முக்கியமான பாத்திரம் பூ என்ற பூங்குழலி, காதருக்கு இணையாகக் கல்வியிலும் இலக்கிய வாசிப்பிலும் முன்னணி வகிக்கிறாள். உடல் அழகிலும் கூட உச்சம் தொட்டவளாய் இருக்கிறாள்.
அனைத்துப் பாத்திரங்களும் அதிகமான உரையாடலை நிகழ்த்தும் அதே வேளையில் காதர் அளவாகப் பேசக் கூடியவனாக இருக்கிறான். பூ உட்பட அவனைக் காணும் எல்லாப் பெண்களும் அவன்மீது காதல் கொண்டு நெருங்கும்போது விலகி விலகிச் செல்கிரான். பூங்குழலியை அதிகம் நேசிக்கிறான் எனினும் அவளின் அரவணைப்புக்குள் சிக்காமல் நழுவி விடுகிறான். “அடக் கோழையே” என்று வாசகமனம் திட்டுகிரது என்பதோடு தனக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என ஏங்குகிறது. இதுதான் எழுத்தின் வெற்றி.
கனி ராவுத்தரின் அல்லது வாவேர் ராவுத்தரின் வம்சம் கெட்டழிந்த துயரத்தோடு இறுதி வாரிசாக காதர் மட்டும் எல்லையிட்டு நிற்கிறான். பூவுடனான அவனின் காதல் என்னாயிற்று என்ற கேள்வியை வாசகமனம் நெடுநாள்வரை கேட்டுக் கொண்டே இருக்கும். பூ தன் கல்வியைத் தொடர வடநாடு சென்றுவிடுகிறாள் என்றாலும் அவளுக்கும் காதருக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்; ஒருவேளை அப்படி நடக்கவேண்டாம் என்று ஆசிரியர் முடிவு செய்துவிட்டாரோ? இந்துத் தூய்மைவாதம் காக்கும் ஆர் எஸ் எஸ் போல இஸ்லாம் தூய்மைவாதம் காக்கும் வஹாபியத்தின் நிழலில் கிடந்து உழலட்டும் என்று விட்டுவிட்டாரா? பூ-காதர் கல்யாணத்தை நடத்திப் புதுமை செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அது ஓர் இலக்கியப் பனுவலின் கடமையும் கூட.
இந்த நாவலில் இயற்கை வர்ணனைகள் ஏராளம் உண்டு. காதர் முதன்முதலாகப் பூவைச் சந்திக்கும் நிகழ்ச்சி சொல்நயம் பொங்க வர்ணிக்கப் படுகிறது. “பூங்குழலி கோதுமை நிறத்தில் ஜொலித்தாள். நுனி சற்று அகலமாய் இருந்தாலும் மேலே இருந்து தொங்கும் கத்தி மாதிரி நீண்ட கூர்நாசி; அவள் கண்களில் வியப்பும் குறும்பும் சரிவிகிதத்தில் கலந்திருந்ததைப் போல் காதருக்குத் தோன்றியது. நாக்கை நீட்டி அடிக்கடி ஈரப் படுத்துவது போல் உதடுகள் சரியான வளைவுகளோடு கனிரிந்திருந்தன.”
மேனி வர்ணனைகள் மட்டுமில்லாமல் இயற்கையின் படிமங்களாகிய மேகம், சூரியன், மர அசைவு என்று எல்லாவற்றிலும் புதைந்திருக்கும் அழகைத் துல்லியமாய் வெளிக் கொண்டு வந்து காட்சிப் படுத்துகிறார் ஆசிரியர். மொழி ஆளுமைமிக்க வர்ணனைகள் அவை.
ஓர் இரவுக் காட்சியின் அழகைப் பாருங்கள்; “வெறியோடு வந்திருந்த இரவை வானம் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தது. உச்சியில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களைக் கொள்ளிக் கண்களாய்க் கற்பனை செய்த மேகம் அலுப்புடன் நகர்ந்தது. சாக்கடை நீரில் தெரிந்த தன் உருவத்தைக் கண்டு நிலா முகம் திரும்பிக் கொண்டது.”
அடுத்து வரப்போகும் கமர் அவர்களின் கோபக் கனலுக்கு முன்னுரை போல இந்தக் காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது., இன்ப நிகழ்வு என்றால் அழகிய காட்சிகளும் மனித மாண்புக்கு எதிரான நிகழ்வு என்றால் அருவருப்புக் காட்சிகளும் சித்தரிக்கப் படவேண்டும் என்பது செவ்வியல் இலக்கியத்தின் அடிப்படைக் கோட்பாடு என்பதை அடுத்த இலக்கியவாதிகளுக்குப் பாடம் நடத்துவது போல வடிவமைத்திருக்கிறார் ஆசிரியர்.
நாவலெங்கும் நகைச்சுவை உணர்வுகள் மோலோங்கி நிற்கின்றன. க்ரிக்கெட் விளையாடத் தெரியாத திருமாறன், புளியமரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டான். ஒருநாள் அவன் சொன்னான். “பதினொரு முட்டாள்கள் விளையாடுவதைப் பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்னு பெர்நாட்ஷா சொல்லியிருக்கார் தெரியுமா?”
வேறு யாரோ சொன்ன வாசகம் இது. பெர்நாட்ஷா பெரும்பாலும் இலக்கியத்திலும் நாடக அரங்கத்திலும் மட்டுமே கவனம் கொண்டவர். இந்த வாசகத்தைச் சொன்னது பெர்நாட்ஷா இல்லை என்\று தெரியும்போதே பெரும் சிரிப்புக் கிளர்ந்துவிடும். பெர்நாட்ஷா யாருன்னு தெரியுமாடா?” என்|று சக மாணவர்கள் கேட்டபோது அவன் சொன்னதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. கொஞ்சநேரம் யோசித்துவிட்டு “கடைசி முகலாய இளவரசன்”” என்றான். கடைசி முகலாயன் பெயர் பஹதூர்ஷா. அவர் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கிப் போராடி ஆங்கிலக் கொட்டடியில் கிடந்து இறந்து போனார். விஷயம் தெரிந்தவன்போல உளறுகிறான் என்பதை வாசிப்பு அனுபவ்பமுள்ள வாசகர்கள் நிச்சய்ம் சிரிப்பார்கள்.
இதுபோல நிறைய நகைச்சுவைப் படலங்கள் வந்து வந்து வாசிப்பு வேகத்தை அதிகப் படுத்துகின்றன.
இலக்கியச் சங்கிலியின் எட்டுக் கண்ணிகளய் எட்டுச் சுவைகள் இருக்கின்றன.
”நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல். மெய்ப். 3)
ஆரிய இலக்கண வரையறைத் தமிழுக்குள் புகுந்த பி|றகு “நவரசம் என்று மாற்றினார்கள். மேர்கண்ட எட்டுச் சுவைகளைத் தாண்டி “வீடு” என்ற சுவை புகுத்தப்பட்டது. வீடுபேறு என்பது மனிதன் மரணித்தபின் சென்று ஓய்வெடுக்கிற இடம். ஓய்வுத்தளம் எப்படி சுவையாகும் என்ற கேள்வி இன்றளவும் அறிவியல் சிந்தனையுடன்கூடிய இலக்கியவாதிகளிடம் உண்டு. எட்டுச் சுவைகள் என்பதுதான் இயல்பான ரசனைக்கோலம். ஆகவே, “அப்பால் எட்டே, மெய்ப்பாடென்ப” என்ற தொல்காப்பிய சூத்திரம்தான் உண்மையான இலகிய ரசனைக்கான இலக்கணம்; அல்லது சாரம். அவற்றுள் அருவருப்புச் சுவையும் ஒன்று. ஒருசில இடங்களில் மட்டும்தான் அதுவரும். அந்தச் சுவையைத் தமிழ் இலக்கணவாதிகள் “இடக்கரடக்கல்” என்று ஒதுக்கி வைத்துவிட்டனர். ஆனாலும் நவீன இலக்கியங்கள் சில அந்தச் சுவையைப் பதிவிட்டு நிறைவு செய்கின்றன. ”மூன்றாம் பிறை”யிலும் நினைத்தாலே குமட்டுகிற அருவருப்புக் காட்சி ஒன்று பதிவாகி வாசகனை ஓங்கரிக்க வைக்கிறது.
வஹிதா இஸ்மாயில் நட்பு காமக்கடலோடு கலந்து அலைபாய்ந்து ஆர்ப்பரிக்கிறது. வஹிதாவின் ஒவ்வோர் உடலணுவும் காம உறுப்புகளாகவே அவனுக்குப் பிடிபடுகிறது. கண், காது, உதடு, உடலின் பிற காமப் பொறிகள் அனைத்தையும் நுகர்ந்து வரும் இஸ்மாயில் வஹிதாவின் மூக்கையும் நாக்குநீட்டிச் சுவைக்கிறான். ஊளைவாடை அவனுக்குள் நுழைகிறது. ஆயினும் மூக்கின் உள்பகுதிவரை நாக்கை நுழைத்துச் சுவைத்துக் கொண்டே இருக்கிறான். அப்போதே வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. இவன் காதலின் சாளரங்கள் திறக்கப் படாத வெறும் காமுகப் பேய் மட்டும்தான் என்று. இளிவரல் என்று சொல்லப் படுகிற இந்த அருவருப்புச் சுவை நாவலில் அழுத்தமாக அமைந்திருக்கிறது.
பின்னுரையில் யாஸ்மின் சொல்லியிருப்பது பொல, “வழ்வின் பொற்கணங்களை, விதியின் கைப்பாவைகளாய் ஆடும் மனித மனங்களின் தத்தளிப்பை, ஃப்க்கீரின் துயர் நிரம்பிய குரலோடு பேசும் உரைநடைக்காவியம்.”; மூன்றாம் பிறை.
நூலின் விவரம்:
நூல்: மூன்றாம் பிறை நாவல்
ஆசிரியர்: மானசீகன்
வெளியிடு: தமிழினி பதிப்பகம்
பக்கம்: 802
விலை: ரூ.990/
நூல் அறிமுகம் எழுதியவர்:
தேனிசீருடையான்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

