Manathil Ganatha Sambal Poem By AdhiSakthivel. ஆதித் சக்திவேலின் மனதில் கனத்த சாம்பல் கவிதை

மனதில் கனத்த சாம்பல் கவிதை – ஆதித் சக்திவேல்




உயிர்கள் வேறாயினும்
சாம்பல் என்றே சொல்கின்றோம்
உடல் எரியக் கிடைக்கும் மீதத்தை
துளிகள் வேறாயினும்
மழை என்பதைப் போல்

தந்தையின் சாம்பலைத்
தலை மகன் என்னைக்
கரைக்கச் சொன்னது மரபு

அவரது இறுதி மூச்சின் சுருதி
இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது
இசையாய் அச்சாம்பலில்

இரு கரை தொட்டு ஓடிய நொய்யலின்
தென்கரையில் மூன்று படிக்கட்டுகள்
இன்னும் மூழ்காமல்
ஓடிய பிரவாகத்தில் மிதந்தார்
காட்சி அடுக்குகளாய் அப்பா
எனக்குத் தெரிந்த நாள் முதல்
மரணம் மறைந்து தாக்கிய நாள் வரை

வெண்ணிறச் சாம்பலில்
எரியாது இருந்த
அடர் துயரத்தின்
விரிசலில் முளைத்த
அப்பாவின் நினைவுகள்
கைகளில் கனத்தது

காலத்தின் மரத்தில்
அனுபவ ஊஞ்சல் கட்டி ஆடியவர்
இன்று உறங்குகிறார்
அம்மர நிழலில்
சாம்பலாய்

காலங்களின் தொலைவை
காலத்தால் கடந்த அவர் இறந்ததை
எந்தக் காலத்தில் குறிப்பிடுவேன் நான்?

தாய்மை பொங்கி வழியும்
தந்தையென
ஈரம் நிறை ஆன்மாவின் கதவுகளை
அகலத் திறந்து வைத்து – அதில்
எரியும் மெழுகுவர்த்தியாய்
உருகும் பனிக்கட்டியாய்
தன்னைக் குவித்து
குறையாக் குளிரை
அணையா ஒளியை அள்ளிக் கொள்ள
வாருங்கள் என அழைத்தவர்

பசுந்தரையிலும்
பாறைகளிலும்
எதிரொலிக்கிறது
அவரது அழைப்பு

ஆண்டுகள் ஒரு நூறு ஆயிடினும்- நாம்
பெற்றுக் கொள்ள எத்தனையோ
அவரிடம் இன்னும்
சாம்பலைக் கரைக்கையில்
கழுவிட முடியாக் கரையாய்
என் இரு கைகளில் பரவியது
அவரது ஞானத்தின் கரை

காற்றில் கரையும் வாசனையாய்
நீரில் கரைந்த சாம்பல்
இன்னுமோர் உயிரைச் சேர்த்தது
நொய்யலின் உயிரோட்டத்தில்

திரும்பிப் பார்த்தேன்
நின்று கரைத்த
மூன்று படிக்கட்டுகளையும்
மூழ்கடித்து ஓடத் தொடங்கியிருந்தது
வெள்ளம்
எங்கிருந்தோ
நுங்கும் நுரையுமாய்ப் பொங்கிப்
பாய்ந்து வந்தது நொய்யல்
சாம்பலைத் தனதாக்கிக் கொள்ள

இப்போதும்
கரைந்த சாம்பலில்
இசையாய் ஒலித்தது
அவரது இறுதி மூச்சு
நொய்யல் ரசித்தது அதை
மேலும் கீழும் தலையசைத்து

நீண்ட நாட்களுக்குப் பின் கண்டேன்
நொய்யலின் முகத்தில்
ஒளிரும் புன்னகையை
கைகளில் கனத்த சாம்பல்
இப்போது
மனதில் கனத்தது

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *