லூர்துராஜின் *மாணவர் அறிவியல் கதைகள்* – ரோனா ஆல்பர்ட் 

லூர்துராஜின் *மாணவர் அறிவியல் கதைகள்* – ரோனா ஆல்பர்ட் 



மாணவர் அறிவியல் கதைகள் 
லூர்துராஜ்
₹30.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

     ‘மாணவர் அறிவியல் கதைகள்’ என்ற சின்னஞ்சிறிய புத்தகத்தில் மாணவர்க்கேற்ற வகையில் பென்னம் பெரிய கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூலின் பின்பக்க அட்டையில் பதிப்பாளர் சொல்லி இருப்பதுபோல் இதில் விரிந்த அறிவியல் உலகம் காணப்படுகிறது என்பதும் உண்மை.

     ஒவ்வொரு கதையின் தலைப்பிலும் அறிவியல் கோட்பாடு விளக்கம் பெறுகிறது என்பதோடு ஒவ்வொரு அறிவியல் உண்மையும் சமுதாயத்துடன் இணைக்கப்படுகிறது என்பதை கற்பனை கதை நிகழ்வுகளால் கவனமாக விளக்குகிறார் நூலாசிரியர் லூர்து எஸ் ராஜ் அவர்கள். நம்மிடையே நடைபெறும் அன்றாட நிகழ்வுகளிலும் அறிவியல் உண்மை பொதிந்திருக்கிறது என்ற உண்மை நம்மை சிந்திக்க வைக்கிறது.

     வேடந்தாங்கல் சுற்றுலா சென்ற மாணவர்கள் ஆசிரியருடன் பேருந்தில் திரும்பி வரும்போது அம்மாணவர்களில் ஒருவர் சில நிமிடங்களில் தூங்கி வழிகிறார். தூக்கத்தில் விழுந்துவிடாதிருக்க கையால் முன் இருக்கையின் கம்பியை பற்றிக் கொண்டிருக்கிறார். எவ்வளவு நேரம்தான் இப்படி தூக்கத்தோடு கம்பியை பற்றிக் கொண்டு பயணிக்க முடியும்? பிரச்சனை ஆரம்பமாகிறது. தூங்கி விழுபவர் அடுத்து பக்கத்து மாணவர் மேல் சரிகிறார். ஓரிரு முறை பொறுத்துக் கொண்டவர் அதற்குமேல் முடியாமல் ஆசிரியரிடம் முறையிடுகிறார்.

     நடைமுறை உண்மையான தூங்கும்போது மனிதர் தம் கையால் ஒரு பொருளை வெகுநேரம் பற்றிக் கொண்டிருக்க முடியாது. தூங்கிய சில நிமிடங்களில் கைநெகிழ பொருள் கீழே விழுந்துவிடும் என்பதை அறிந்திருந்த ஆசிரியர், பறவைகளும் கிளையில் அமர்ந்து தூங்குகின்றன, அவை ஏன் ஒருபோதும் விழுவதில்லை? என்ற வினாவை மாணவர்களிடையே எழுப்பி அதற்கு அவரே விளக்கமும் கொடுக்கிறார். கிளையைக் கால்களால் பற்றிப் பிடித்தபடி தூங்கும் பறவைகளின் கால்களில் இருக்கும் தசைநாண் பூட்டு என்ற அமைப்பு பறவைகளின் பிடி நெகிழாதிருக்க எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கி, தூங்கும்போது மனிதரால் அவ்வாறு பற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதைக் கூறுகிறார். அறிவியல் உண்மை அங்கே உணரப்பட, பாதிக்கப்பட்ட மாணவரிடம் தூங்கி விழுந்தவர் மன்னிப்பு கோர அங்கு சமாதானம் ஏற்படுகிறது.



     கடுங்கோடைக் காலத்தில் பறவைகளும் நீருக்கு ஆலாய்ப் பறக்கின்றன. பறவைகள்பால் ஆர்வம் கொண்ட மாணவர் சிலர் தங்கள் வீட்டு மாடி அல்லது உயரமான ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டாங்கச்சி கலங்களை வைத்து அதில் நீரூற்றி அவற்றின் தாகம் தீர்க்கின்றனர். பறவைகள் நீர் அருந்தும் அழகிய நிகழ்வை இரகசியமாக மறைந்து நின்று செல்போனில் வீடியோவாகவும் படமாகவும் பதிவிடுகின்றனர். குடிநீர் எல்லா உயிரினங்களுக்கும் தேவைப்படுகிறது,  உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கதையின் முக்கியத்துவமாகக் காட்டப்படுகிறது.

     தியாகுவின் இணைபிரியா நண்பனான அவன் நாய் கிட்டி அவனுடன் ஓட்டப் பயிற்சி செய்கிறது, விளையாடுகிறது; இறுதியில் தியாகுவின் உடலில் வியர்வை ஊற்றாய்  பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் கிட்டியின் உடலில் வியர்வை கொட்டவில்லை. அதற்கான காரணத்தை உடல் பயிற்சி ஆசிரியர் சொன்ன பின்னரே அவன் அறிந்து கொள்கிறான். நாய் மேல் அவன் கொண்டிருந்த சந்தேகம் நீங்க அவன் மகிழ்ச்சி அடைகிறான். நாயின் உடல் தோலில் வியர்வை சுரப்பிகள் இல்லை எனும் அறிவியல் உண்மை நாய் கிட்டியிடம் அவன் கொண்டிருந்த அன்பையும் பரிவையும் மேலும் அதிகமாக்கிற்று.

     ஜூலை 16, 2004  அன்று பள்ளி ஒன்றில் தீயில் கருகி கணப்பொழுதில் இறந்த 94 குழந்தைகளை நாம் மறக்க முடியுமா? குழந்தையுடன் இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு ஜூலை 16 அன்று வரும் தம்பதியர்  முதலில் பூங்காவை சுற்றி வருகின்றனர். வருடை என்று சொல்லப்படும் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டின் படத்தைப் பார்த்ததும் ‘இதைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று சலித்துக் கொள்ளும் மனைவிக்கு அதன் சிறப்புகளை எடுத்து சொல்கிறார் கணவர். ’குழுவாக வசிக்கும் வரையாடுகள் பால்வாடி போன்ற  ஓர் அமைப்பை உருவாக்கி எல்லா ஆடுகளின் குட்டிகளையும் ஓர் ஆடு மொத்தமாக பாதுகாக்கிறது என்ற உண்மையை அறிந்த மனைவி முதலில் ஆச்சரியப்படுகிறார். ஆனால் விலங்கினங்களுக்கு உள்ள அறிவுகூட  மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என தீயில் கருகி கணப்பொழுதில் இறந்த 94 குழந்தைகள் அந்த நாளும் கிழமையில் நினைவுக்கு வர மகிழ்ச்சியான சுற்றுலா சோகமாகி விடுகிறது. குழந்தைகளைப் பாதுகாக்க எல்லா பள்ளிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் மாணவியரை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுத்தோமா? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும்பிக் கொண்டேதான் இருக்கிறது. ஏனென்றால் இந்த காலகட்டத்தில் பள்ளிக்கூடமும் திறக்கவில்லை; இணையதள வகுப்புகள் மட்டுமே நடை பெறுகின்றன.. ஆனால் அங்கும் அந்த தொல்லை .நீங்கியபாடில்லை

     பாலியல் கல்வி  என்ற கோரிக்கை ஒரு கால கட்டத்தில் உரத்த குரலில் பேசப்பட்டது. உயர் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களும் அதற்கான விளக்கங்களும் சேர்க்கப்பட்டன.’ உயிர்கள் செய்யும் உன்னதச் செயல்’ என்ற தலைப்பில் இந்த நூலில் அது மிகமிக நாசுக்காக சொல்லப்படுகிறது. காற்று, தேனீ, வண்டு, பூச்சி என்று ஆரம்பித்து உழவர்கள் தங்கள் சோளப் பயிரிடையே நடந்து சென்று எவ்வாறு உயர் விளைச்சலுக்கு வழிவகை செய்கின்றனர் என்பதைச்சொல்லி நம்மை வியக்க வைக்கிறது ஒரு கதை. இறுதியாக மனித வாழ்வில் உயிர்கள்  செய்யும் உன்னதச் செயல்’ மாலதி  என்ற குழந்தையின் கேள்விக்கு பதிலாக அமைகிறது.



     கொரோனா பெருந்தொற்று மனித சமுதாயத்தை ஆட்டி அசைத்து அதை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனைகளில் படுக்கை இல்லாமலும்  ஆக்சிஜன்  பற்றாக் குறையாலும் மக்கள் திண்டாடினர். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் செறிவூட்டிகளுக்கும் கொரோனா நோயாளிகள் குணம் பெற அவசியத்  தேவை இருந்தது, அரசின் தீவிரமான செயல்பாட்டால் இன்று அவை எல்லாம் மருத்துவமனைகளில் தாராளமாக கிடைக்கின்றன். ஆனால் கதையில் பள்ளி செல்லும் ஒரு மாணவனுக்கும் அது தேவைப்பட்டது. எனவே அவன் குடி தண்ணீர் குப்பியுடன் ஆக்சிஜன் குப்பியையும் பையில் சுமந்து செல்கிறான். பள்ளிப் பேருந்தில் பிரச்சனை உண்டானதால் செய்தி தலைமை ஆசிரியரை எட்டுகிறது. ஏராளமான மரங்கள் வளர்க்கப்படாத பள்ளிச் சூழல்களில் இந்த பிரச்சனை உண்டாகலாம் என்பதை உயிர்க் காற்றுக் குடுவை என்ற தலைப்பு விவரிக்கிறது. அதுமட்டுமல்ல காடுகளின் குறைவால் மழைவளமும் குறைகிறது. எனவே நாட்டின் பரப்பில் 33 விழுக்காடு காடுகளை உண்டாக்க எல்லா நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. உலக சமுதாயத்தின் முக்கியமான பணிகளில் மரம் வளர்ப்பதும் ஒன்று. ஏனென்றால் மனித சமுதாயம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை மரங்கள் தானே உண்டாக்கிக் கொடுக்கின்றன என்ற கருத்துடன் கதை இணைக்கப்படுகிறது.

     போன்சாய் குற்று மர வளர்ப்பு மற்றும் விற்பனை  என்பது நகர்ப்புறங்களில் நல்ல பொழுதுபோக்காய் அமைகிறது. பேராசிரியர் வீட்டுக்கு தன் நண்பனைக் காண வரும் சிறுவன் அவர் வீட்டில் உள்ள குற்று மரங்களைப் பார்த்து வியப்படைகிறான். அவன் ஆர்வத்தை புரிந்துகொண்ட ஆசிரியர் அந்த வகை மரம் வளர்க்கும் கலையை விளக்கும் நூலை அவனுக்கு பரிசாக வழங்குகிறார். குற்று மரம் வளர்ப்பு என்ற அறிவியல் ஏழை மாணவனுக்கு பொழுதுபோக்காகவும் வருமானம் தரும் வழியாகவும் மாறுகிறது.

     நெகிழி என்னும் தீமை இன்று நிலம் நீர் என்று எல்லா தளங்களையும்  ஆக்கிரமித்து மாசை உண்டாக்கி மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு பெரிய தடையாக அமைந்துவிட்டது. இந்த மாசினால் ஏற்படும் துன்பம் மிகவும் அதிகமாகி வருவதால் அதன் பயன்பாட்டை மனிதன் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது மையக் கருத்து. இதனை ஓர் இயக்கமாக மாற்றி மாணவர்கள் தங்கள் நகரை நெகிழி மாசிலிருந்து தூய்மையாக்க துணிவுடன் செயல்படுகின்றனர். அவர்கள் செயலை சுவைபட விளக்குகிறது ஒரு சிறுகதை.

     சூரிய காந்திப்பூ சூரியன் இருக்கும் திசை நோக்கி நகர்வதற்கான காரணத்தையும் பறவைகளின் இடப்பெயர்ச்சியையும், பூச்சிக்கும் பூவுக்கும் ஏற்பட்ட சண்டை பற்றிய விளக்கத்தையும் இன்னும் பல அறிவியல் செய்திகளை வாழ்வியலோடு இணைத்து கதைகள் அழகாகப் பின்னப்பட்டுள்ளன. 200-க்கும் அதிகமான அறிவியல் சிறுகதைகளையும் 60-க்கும் மேற்பட்ட நூல்களையும்   படைத்துள்ள ஆசிரியர் லூர்து எஸ். ராஜ் அவர்கள்  அறிவியல் உண்மைகளை பிள்ளைகளுக்கு இப்படியும் ஆர்வமான முறையில் உணர்த்த முடியும் என்பதை தம் கற்பனைக் கதைகளால், வாழ்வியலை அற்புதமாகப் படம் பிடித்து பாடம் கற்பிக்கிறார். அறிவியல் உண்மைகளை தமிழில் சின்னஞ்சிறு கதைகள் வழியாக சுவைபட உணர்த்தும் ஆசிரியர் லூர்து எஸ். ராஜ் அவர்களின் அறிவியல் வழி சமுதாயப் பணி பாராட்டுக்குரியது. வளர்க அவர் பணி!



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *