Manavar Manasu - Theni Sundar (மாணவர் மனசு -தேனி சுந்தர்)

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நற் விதைகளைத் தூவும் ஆசிரியரின் மனதில் ஊஞ்சலாடும் பள்ளியின் நடைமுறைகளும் நினைவுகளும் மாணவர் மனசாக மலர்ந்துள்ளது.

பள்ளத்தை நோக்கி ஓடி வரும் நீரின் அழகைப் போல வெற்றுக் களிமண்ணாய் கிடந்தவற்றில் பளிச்சிடும் பொம்மைகள் வளர்வதைப் போல எதுவுமற்று பள்ளிக்கு வரும் மழலைகளிடம் எல்லாம் நிறைந்த உலகத்தை விதைக்கும் ஆசிரியரின் கனவுகள் பள்ளிக்கூடத்தில் எப்படியெல்லாம் சிறப்புற ஈடேறுகின்றன என்பது குறித்தும் மாணவர் மனங்களில் ஆசிரியர் எவ்விதமான பிம்பத்தை உருவாக்குகிறார் என்பது பற்றியும் வெளிப்படையான நகைச்சுவை கலந்த நம்மோடு உறவாடும் மனசின் குரல் இது.

குழந்தைகளின் மனசுக்குள் அவர்களின் மொழியில் புகுந்து அவர்களை வழிநடத்தும் திறமை எல்லா ஆசிரியர்களுக்கும் அரங்கேறுவதில்லை. தோண்டத் தோண்ட சுரக்கும் நீரைப்போல கல்வி கற்றுத்தர கற்றுத்தர மேலும் செழுமை அடையும் என்ற வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப குழந்தைகளை நோக்கி நகரும் ஆசிரியர் மனங்களில் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. நிம்மதியுடன் கூடிய ஆனந்தம் பிறக்கிறது.

மழலைகளின் மனசுக்குள் மலர்ந்து கொண்டிருக்கும் சின்னச் சின்ன ஆசைகளை தன்னை ஒப்புவித்தும் தன்னை தாழ்த்தியும் விட்டுக் கொடுத்தும் நிறைவேற்றும் ஆசிரியரின் எண்ணங்களை வாசிக்கும் நமக்குள்ளும் விதைக்கிறது நூல்.

எளிமையான மொழியிலும் வளமையான சிந்தனையிலும் எழுதப்பட்டு பிஞ்சுகளின் கனவுகளை நிறைவேற்றும்படியான எண்ணங்களை நமக்குள்ளும் விதைக்கிறது இந்த நூல்.

ஒரு நாட்டின் எதிர்காலம் கட்டமைக்கப்படுவது அந்நாட்டில் சிறப்புற விளங்கும் கல்வியின் அடிப்படையிலேயே அமைகிறது. அந்த வகையில் அறிவியல் யுகத்தில் வாழ்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் கல்வியைப் புதுமைப்படுத்தி எல்லோருக்கும் தரமான கல்வியையும் உயர்தர சிந்தனைகளையும் விதைக்க வேண்டிய அரசு மெல்ல மெல்ல அதிலிருந்து நழுவி தனியார் வசம் கல்வியை ஒப்படைப்பதன் விளைவு இன்றைய காலகட்டத்தில் நிறைய பணியிடங்களில் எதிரொலிக்க ஆரம்பிக்கிறது. அந்த வகையில் பிஞ்சுகளின் ஆரம்பக் கல்வியும் முழுமையாக அவர்களைச் சென்றடைய வேண்டியது அவசியம். இத்தகு சூழலில் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியைக் கற்க வரும் குழந்தைகளுக்கும் இடையிலான தொடர்பு நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருந்தால் மட்டுமே மாணவர்களின் திறனை வெளிக்கொணர்தல் ஆசிரியர்களுக்கு எளிதாகும். ஆனால் காலச் சூழ்நிலை ஆசிரியர் மாணவர் உறவுக்குள் கடினமான வேலைகளை புகுத்தியும் தொடர்ச்சியான உறவுச் சங்கிலியை அறுத்துவிடத் துடிக்கிறது. இத்தகு சூழலில் கல்விக் கூடங்களில் நிலவும் சிறு பிரச்சனைகள் கூட மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கத் தொடங்கி விடுகிறது.

இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் மாணவர்களின் வழியாக ஆசிரியர் நிறைவேற்றிய ஆசைகள் வெளிப்படுகின்றன. அதே சமயம் பள்ளிக்கூடங்களில் மேற்பார்வையிடும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும் வேதனையோடும் விமர்சனத்தோடும் நம்முன் வைக்கிறது. தவறுகளைக் கண்டு தட்டிக்கேட்காத தலைமுறையை உருவாக்கும் கல்வியைச் சாடுகிறது. ஒரே மாதிரியான மனப்பாடத்தினால் தனித்த சிந்தனைகளைத் தடுக்கும் காலச்சூழலைக் கண்முன் நிறுத்துகிறது.

அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் படும்பாட்டை நகைச்சுவையுடனும் கனத்த மனதுடனும் ஆசிரியர் விவரிக்கும் கட்டுரையும் அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய யுகத்திலும் கழிவறையைக் கழுவுவதற்கு ஆசிரியர் துணிந்து நிற்கும் காட்சி நம் முன்னே நிழலோடுகிறது. மலமள்ளும் தொழிலாளர்கள் இன்றைக்கும் எவ்விதமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் தமது தலைமுறையினரை வாரிசுகளை எவ்விதம் வளர்த்துவதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பது குறித்தான கட்டுரையும் வாசிக்கும் எல்லோரையும் அழ வைக்கிறது; சிந்திக்க வைக்கிறது.

குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் கட்டுரைகள் ஆசிரியர்களின் வழியாக ஆசிரியர்களின் மனநிலையையும் உணர்த்தத் தவறுவதில்லை. நகைச்சுவை நிறைந்த மொழியைத் துணை கொண்டும் உணர்ச்சியை எளிதாக நம் மனதிற்குள் கடத்திவிடும் எழுத்தின் வழியாகவும் வாசித்து மகிழவும் யோசித்து இளைப்பாறவும் நம்மைப் பற்றி நாமே பெருமை கொள்ளவும் நமது கல்விமுறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தான அவசர அவசியத்தை உணர்த்தும்படியாகவும் எழுதப்பட்டிருக்கும் இந்த கட்டுரைத் தொகுப்பு காலச்சுழலில் கல்வியின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை

 

              நூலின் தகவல்கள் 

நூல் : “மாணவர் மனசு” (கட்டுரைத் தொகுப்பு)

நூலாசிரியர் : தேனி சுந்தர்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

நூலைப் பெற : 44 2433 2924https://thamizhbooks.com/product/manavar-manasu/

முதல் பதிப்பு டிசம்பர் 2023

பக்கம் 72

விலை  : ரூ.70

 

   நூலறிமுகம் எழுதியவர் 

       இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *