Mandaiyan Aasari Sandhilirunthu Article by G Ramakrishnan Sa Thamizhselvan Su Po Agathiyalingam. மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - ஜி.ராமகிருஷ்ணன், ச.தமிழ்ச்செல்வன், சு.பொ.அகத்தியலிங்கம் வரலாறுகளை வழங்கிடும் வரலாற்றுப் பங்களிப்பு
                                                                            – ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகம் உள்பட இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் மைல்கற்களாய் அமைந்த நிகழ்வுகள், உழைக்கும் வர்க்கத் தலைவர்களது வாழ்க்கைப் பயணங்கள்… இவை பற்றிய துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம்பிக்கையோடு நாடக்கூடிய ஒருவர் இருக்கிறார் – தோழர் என். ராமகிருஷ்ணன். ‘களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்’ தொடரில் நாற்பதாண்டு, ஐம்பதாண்டு, ஏன் – அறுபதாண்டுகளுக்கும் மேலாகக் கட்சியிலும், வர்க்க அமைப்புகளிலும், வெகுமக்கள் அமைப்புகளிலும் பொறுப்புகளை வகித்து, போராட்டங்களில் முன்னின்று. சிறை சென்று அர்ப்பணிப்போடு கட்சிப்பணியாற்றிய பல தோழர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். சற்றே மாறுபட்ட வகையில், ஆனால் அதே அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கிக்கொண்டிருப்பவர் என்.ஆர். கம்யூனிஸ்ட் கட்சியில் பத்திரிகையாளராக பணியைத் தொடங்கி, கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது கட்சியின் வரலாற்றையும், தலைவர்களின் வாழ்க்கையையும் தொகுத்தளிக்கிற நடமாடும் தகவல் களஞ்சியமாக அரும்பணியாற்றி வருபவர்.

1942ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இளம் வயதிலேயே இவரது தந்தை இறந்து விட்டதால் இவரது மூத்த சகோதரர்களாலும் சகோதரிகளாலும் வளர்க்கப்பட்டார். அந்த மூத்த சகோதரர்களில் ஒருவர்தான் விடுதலைப்போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா. ராமகிருஷ்ணன் பிறந்தபோது சங்கரய்யா மதுரை மாநகரில் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ராமகிருஷ்ணன் தமது மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டதற்கு இந்தப் பின்னணியும் ஒரு காரணம். பள்ளி மாணவராக இருந்தபோது கட்சியின் அகில இந்திய 3வது மாநாடு 1952இல் மதுரையில் நடைபெற்றது. தமுக்கம் மைதானத்தில் வைகை வெள்ளம் புகுந்தது போலத் திரண்ட பேரணியைப் பார்த்ததும், அதில் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் ஹரிபாலிட் பேசியதைக் கேட்டதும் இவருடைய சிந்தனையில் மின்விளக்கொளியைப் பாய்ச்சியது போல் இருந்தது. அதிலிருந்தே இவர் மனதளவில் கம்யூனிஸ்ட்டாகிவிட்டார். கட்சி அலுவலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். நிறைய நூல்களைப் படிக்கத் தொடங்கினார்.

பள்ளியிறுதி வகுப்பு முடித்த பிறகு, அந்த இளம் வயதிலேயே மதுரையில் ‘ஜனசக்தி’ இதழின் செய்தியாளராகச் செயல்பட ஆரம்பித்தார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாவதற்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது ‘ஜனசக்தி’ நிருபர் பணிதான். அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்தவர் தோழர் ஜீவா. அவருடன் ஏற்பட்ட தொடர்பு தன்னைச் செழுமைப்படுத்தியது என்று குறிப்பிடுகிறார் என்.ஆர்.

1961ல் சென்னையில் ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் துணையாசிரியராகச் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவார்த்த, கொள்கைப் பிரச்சனையில் உட்கட்சிப் போராட்டம் நடந்த பின்னணியில் 1963ஆம் ஆண்டு ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டது. என்.ஆர். காலையில் ‘ஜனசக்தி’ அலுவலகத்திலும், மாலையில் ‘தீக்கதிர்’ அலுவலகத்திலும் பணியாற்றினார். 1964ஆம் ஆண்டு உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயணத்தில் தானும் இணைந்துகொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அடக்குமுறையை ஏவியது. முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் என்.ஆர்.,, கோவை ஈஸ்வரன் இருவரும் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களை வரவேற்றவர்கள் பி. ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள். பின்னர் என்.ஆர். ‘தீக்கதிர்’ பணியில் முழுமையாக ஈடுபட்டார்.

1966ஆம் ஆண்டு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகள் ‘ஜனசக்தி’ இதழின் நிருபராகப் பணியாற்றினாலும் கட்சி உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. அக்காலத்தில் கட்சி உறுப்பினராவது அவ்வளவு கடினமானது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அரசியல் தலைமைக்குழுவின் முடிவின்படி தோழர் என்.ஆர். தில்லி சென்று கட்சியின் அகில இந்திய மையத்திலிருந்து செயல்பட்டார். அங்கு கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பி. சுந்தரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி. ராமமூர்த்தி, ஏ.கே. கோபாலன், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இ.எம்.எஸ். நம்பூதிரிபாத், ஜோதிபாசு, பி.டி.ரணதிவே உள்ளிட்ட கட்சியின் நவரத்தினங்களோடு நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு தனது பெரும்பேறு என நெகிழ்கிறார் என்.ஆர்.

“தில்லியில் இருந்தபோது, தூக்குமேடை வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுமான சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால், டாக்டர் கயாபிரசாத் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது,” என்று நினைவுகூர்கிறார். எப்பேற்பட்ட வாய்ப்பு அது!

தோழர் பிரகாஷ் காரத் 1971ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக தில்லி சென்றார். தன்னிடம் தோழர் வி.பி. சிந்தன் கொடுத்திருந்த அறிமுகக் கடிதத்தோடு அவர் ராமகிருஷ்ணனைச் சந்தித்தார். இவர்தான் பிரகாஷ் காரத்தைக் கட்சியின் தில்லி மாநிலச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தினார்.
என்.ஆர். ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டு கட்சி மையத்தில் பணியாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருந்தவர் தோழர் ஏ.கே. கோபாலன். அவருக்கு வரும் கடிதங்களைப் பராமரிப்பது, அவர் அரசுக்கு அனுப்ப வேண்டிய மனுக்களைத் தயாரிப்பது போன்ற பணிகளையும் என்.ஆர். செய்து வந்தார். மேலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தில்லிக்கு வருகிறபோதும் அவர்கள் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்கிறபோதும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை இவர்தான் செய்வார்.

வங்கச் சிறைகளிலும் அந்தமான் சிறைகளிலும் 28 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த தோழர் கணேஷ்கோஷ் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். அவருடைய அன்பிற்குரிய தோழனாகப் பழகிடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அதேபோல், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி. ஜோஷியுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

1982இல் தோழர் என்.ஆர். கட்சி மையத்திலிருந்து செயல்பட வேண்டுமென்று அரசியல் தலைமைக்குழு முடிவு செய்தது. இரண்டுமுறை அரசியல் தலைமைக்குழு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு அதில் விவாதிக்கப்படும் தீர்மானங்களை உரிய திருத்தங்களுடன் எழுத்தாக்குவதற்குப் பணிக்கப்பட்டார். முக்கியமான அந்தப் பணியையும் திறம்படச் செய்தார் என்.ஆர்.

இவர் மனதில் பல ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு வந்து கட்சி, கட்சித் தலைவர்கள், கட்சியின் தலைமையிலான பல்வேறு இயக்கங்களின் வரலாறுகளைப் புத்தகங்களாக எழுத வேண்டுமென்ற அவா இருந்தது. அதற்காகத் தன்னை தமிழகத்திற்கு அனுப்பிவைத்திடக் கேட்டுக்கொண்டு அரசியல் தலைமைக் குழுவிற்குக் கடிதம் கொடுத்தார். 1983இல் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் இ.எம்.எஸ். இவரது பதினைந்தாண்டுகால தில்லி அலுவலகப் பணிகளைப் பாராட்டி, இவரின் பணி மத்தியக் குழுவிற்கு மீண்டும் கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்து கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

மதுரைக்கு வந்தபிறகு குடும்பத்தைப் பராமரிக்கவென ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆயினும் தினமும் மாலை ‘தீக்கதிர்’ அலுவகத்திற்கு வந்துவிடுவார். கட்சியின் ஆங்கில வெளியீடுகளைத் தமிழாக்கம் செய்துகொடுப்பார். 1985இல் தோழர் என். வரதராஜன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘தீக்கதிர்’ ஊழியராகச் சேர்ந்து மொழியாக்கத்தோடு, விளம்பரப் பிரிவிலும் பணியாற்றி வந்தார்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் முசபர்அகமத் வாழ்க்கை வரலாற்றை என்.ஆர்.நூலாக எழுதி, அது 1988இல் வெளியானது. அதைத் தொடர்ந்து தோழர் பாலாஜி (‘சவுத் விஷன்’ பதிப்பகம்) இவரது 22 புத்தகங்களை வெளியிட்டார். தன்னை பாலாஜிதான் புத்தக எழுத்தாளராக்கினார் என்று என்.ஆர். நன்றியறிதலோடு கூறுகிறார். அடுத்தடுத்து எழுதிக்கொண்டே இருந்தார். எழுதித் தள்ளினார் என்றார் மிகையாகாது. இன்று வரை என்.ஆர். 68 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

‘அயர்லாந்து – 800 ஆண்டு விடுதலைப்போர்’, ‘மகத்தான பிரெஞ்சுப் புரட்சி’, ‘நீதிக்குப் போராடும் பாலஸ்தீன் மக்கள்’, ‘உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு’, ‘இங்கிலாந்தை உலுக்கிய சாசன இயக்கம்’, ‘ரஷ்யப் புரட்சி புதிய பார்வை’, ‘தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1917-1984)’, ‘தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(1964-2014)’, ‘தமிழக சுதந்திரப் போரில் கம்யூனிஸ்ட்டுகளின் மகத்தான பங்கு’ -இவை இவரது குறிப்பிடத்தக்க நூல்களில் சில. காரல் மார்க்ஸ், ஜென்னி, ஆங்சான் சூ கி, மார்ட்டின் லூதர் கிங், டாக்டர் அம்பேத்கர், ஈவெரா பெரியார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் என்.ஆர். வழங்கியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, சமர்முகர்ஜி, எம்.கே.பாந்தே, கே.ரமணி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய பி.டி.ரணதிவே வாழ்க்கை வரலாற்றை கட்சியின் மலையாள நாளேடாகிய ‘தேசாபிமானி’ தொடராக வெளியிட்டது. இவர் எழுதிய கே.ரமணி, லீலாவதி ஆகிய வரலாறுகளை தெலுங்கு மொழியில் ‘பிரஜாசக்தி’ வெளியிட்டுள்ளது. இவர் எழுதிய பி.ராமமூர்த்தி வரலாறு கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய சமர்முகர்ஜி வாழ்க்கை வரலாறு வங்காள மொழியில் வந்துள்ளது. ‘மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள்’ தற்பொழுது மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் வாழ்க்கையும் – பங்களிப்பும்’ பற்றிய இவருடைய நூல் முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1844-1917) என்ற 600 முதல் 700 பக்கங்களைக் கொண்ட நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ஒப்புதலுக்காக அதன் படியை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

படிப்பதையும் எழுதுவதையுமே முழுநேரப் பணியாக தோழர் என்.ஆர். செய்து வருகிறார். இத்தகைய வரலாறுகளை என்.ஆர். எழுதவில்லை என்றால் கட்சியின் வீரமிகு அத்தியாயங்களும், கட்சித் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க புரட்சிகரச் செயல்பாடுகளும் பற்றி இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போயிருக்கும் என்றால் மிகையல்ல.

இவருடைய துணைவியார் குருவம்மாள் 10 ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். மகன் மணவாளன், மகள் சாந்தி இருவரும் கட்சி மீது பற்றுக் கொண்டவர்கள்.
எளிமையை, பணிவைத் தனது அடையாளமாகக் கொண்டவர் தோழர் என்.ஆர். இக்கட்டுரையை எழுதுவதற்காகக்கூட தன்னுடைய வாழ்க்கை விபரங்களைத் தர மறுத்தார். கடந்த ஓராண்டு காலமாக அவரோடு போராடித்தான் சில தகவல்களைப் பெற வேண்டியிருந்தது. கட்சிக்கும், தான் வாழும் சமூகத்திற்கும் தோழர் என்.ஆர். ஈடுபாட்டோடும் அர்ப்பணிப்போடும் செய்த, தொடர்ந்து செய்துவருகிற எழுத்துப்பணி பாராட்டத்தக்கது- பின்பற்றத்தக்கது.

என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு: ச.தமிழ்ச்செல்வன் (2009)

வெள்ளையனே வெளியேறு என்று மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருந்த 1942இல் தகிக்கும் ஒரு செப்டம்பர் நாளில் மதுரை கோச்சடையில் திரு.நரசிம்மன் திருமதி.ராமானுஜம் தம்பதியரின் ஒன்பது குழந்தைகளில் (ராஜமாணிக்கம், சங்கரய்யா, ராமசாமி, ராமகிருஷ்ணன், ராஜேந்திரன்,லட்சுமிகாந்தம், ஞானாம்பாள், மீனாட்சி, அங்காள ஈஸ்வரி) ஒருவராகப் பிறந்தவர் எழுத்தாளர் தோழர் என்.ராமகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.எஸ்.நரசிம்மன் ஒரு பொறியாளர். அந்த நாட்கள் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி இல்லாததால் 1915இல் பம்பாய் நகரத்தில் கற்று வந்த பொறியாளர் அவர்.

நான்கு வயதில் தந்தையை இழந்த ராமகிருஷ்ணன் தாயாரின் அரவணைப்பிலும் அண்ணன்மார்கள் பாதுகாப்பிலும் மதுரையில் வெள்ளியம்பலம் பள்ளியில் 6,7 வகுப்புகளையும் பின்னர் உயர்நிலைப்பள்ளிக்கல்வியை சேதுபதி பள்ளியிலும் முடித்தார். அவருடைய அண்ணன் தோழர். என்.சங்கரய்யா மாணவப்பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள்,தலைமறைவு வாழ்க்கை, போராட்டங்கள் எனத் தீவிரமான போராளியாக ஆகியிருந்தார்.

“அண்ணனின் கட்சி என் கட்சியானது. எங்கள் குடும்பத்தின் கட்சியானது. கட்சியே எங்கள் குடும்பமுமானது.1940களில் அமெரிக்கன் கல்லூரி மாணவராக அண்ணன் சங்கரய்யா இருந்த காலத்திலேயே அவர் தீவிரமான கட்சி ஊழியராகிவிட்டார்.

நான் பள்ளிச்சிறுவனாக இருந்த நாட்களில் தினசரி பள்ளிக்கூடம் விட்ட உடன் மதுரை மண்டையன் ஆசாரி சந்திலிருந்த கட்சி அலுவலகத்துக்கு ஓடி விடுவேன். வீட்டில் இருக்க என்னால் முடியாது. அந்தப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான இடமாக கட்சி அலுவலகமே இருந்தது. அங்கே தோழர்கள் ராமராஜ், பழனிச்சாமி, கே.பி.ஜானகியம்மா என்று எல்லோருமே என் மீது பிரியமாக இருப்பார்கள். காப்பி, டீ வாங்கிக்கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை நான் ரொம்ப உற்சாகத்துடன் செய்வேன்.அங்கு ஜனசக்தி படிப்பேன். பத்திரிகை படிக்கும் பழக்கம் அங்குதான் ஏற்பட்டது. தலைவர்கள் போராட்ட அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதை சிறு பையனாக வாய்பிளந்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன். கட்சி ஆபீஸ் கல்யாண வீடு போல எப்போதும் கலகலப்பாகவும் பரபரப்பாகவும் இயங்கிக் கொண்டே இருக்கும்.எனக்கான இடம் அதுதான் என்கிற உணர்வு எப்போதும் எனக்குள்ளே ஓடிக்கொண்டே இருந்தது.
கம்பத்திலிருந்து அத்தா (தோழர் அப்துல் வகாப்) வருகிற நாள் கட்சி அலுவகத்தில் கொண்டாட்ட நாள்தான். கையில் காசு கொண்டுவந்து அலுவலகத்திலுள்ள எல்லோருக்கும் காப்பி, பலகாரம், சாப்பாடு என்று வாரி வழங்குவார். கட்டுச்சாதத்தில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கும் நம் தோழர்கள் வயிராற உற்சாகத்தோடு சாப்பிடும் நாட்களாக அவை அமையும்.

அப்போது என் காலில் செருப்புக் கிடையாது. ஒருநாள் ஜானகியம்மா பார்த்து என்னடா செருப்பில்லாம புழுதியிலே நடக்கிறே வா என்னோடு என்று ஒரு செருப்புக்கடைக்கு அழைத்துச் சென்று எனக்குச் செருப்பு வாங்கிக்கொடுத்தார்கள்.நெகிழ்ச்சியான அந்த நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாத நிமிடமாகும்’’
தோழர் ராமகிருஷ்ணனின் இளமைக் காலமாகிய 1950களின் பிற்பகுதியில் மதுரை மாநகரம் தேசிய அரசியல் நடவடிக்கைகள் கொந்தளிப்புமிக்க மையமாக விளங்கியது. திமுகவும் வளரும் சக்தியாக அப்போது புறப்பட்டிருந்த்து. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகன் அகில இந்தியத் தலைவர்கள் தவறாமல் வந்து போகிற நகரமாக அன்றாடம் அரசியல் கூட்டங்கள் நடக்கிற களமாக மதுரை விளங்கியது. நகரெங்கும் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் இலவச வாசகசாலைகள் (அன்சாரி நூலகம்,பத்மாசனி வாசக சாலை, பகுத்தறிவுப்பாசறை, தியாகி சுந்தரம் நூலகம்)என இயங்கும். ஆணியில் கயிறு கட்டி பத்திரிகைகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். மதுரை என்றில்லை அன்று தமிழகத்தின் பல நகரங்களில் இத்தகைய வாசக சாலைகள் இயங்கின. அரசியல்கூட்டங்களும் கட்சி அலுவலகத்தில் நடக்கும் விவாதங்களும் வாசகசாலைகளும் இளம் ராமகிருஷ்ணனை செதுக்கி வடிவமைத்துக்கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

இவை ஒருபுறம் இருக்க அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகைகளாக இருந்தவை அம்புலிமாமா, ஆர்வி நடத்திய கண்ணன், தமிழ்வாணனின் கல்கண்டு போன்றவைதான். கல்கண்டில் தமிழ்வாணன் எழுதிய ஆயிரம் கண்கள் என்கிற தொடரை விடாமல் வாசிப்பேன். கடைகளில் இந்த இதழ்கள் வரும்வரை காத்திருக்கப் பொறுமை இருக்காது. வெள்ளிக்கிழமை அதிகாலை பத்திரிகை ஏஜெண்ட் வீட்டுக்கே போய் கட்டை உடைத்து இந்த இதழ்களை வாங்கி சுடச்சுடப் படிப்பேன்.அப்போது கல்கண்டில் வந்த ஒரு கேள்வி பதில் என்னால் மறக்க முடியாதது.

கேள்வி: நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக வரத் தகுதியானவர் யார்?

தமிழ்வாணன்: சந்தேகமென்ன நமது பி.இராமமூர்த்திதான்.
இந்த வாசிப்பிலிருந்து நான் அடுத்த கட்டத்துக்குச் சென்றதற்குக் காரணம் நியூ செஞ்சுரி புத்தக நிலையம்தான். ஐந்தாவது பாரம் ஆறாவது பாரம் படித்துக்கொண்டிருந்த நாட்கள் கோடை விடுமுறையில் என்சிபிஎச் புத்தகக்கண்காட்சியில் வேலைக்குப் போனேன். 45 நாள் வேலை. நாள் ஒன்றுக்கு ஒரு ரூபா சம்பளம்.மாலை 4 மணி முதல் இரவு 10 வரைதான் விற்பனை. ஆனால் மற்ற நேரத்தில் காவல் வேலை. கண்காட்சிக்குக் கதவு கிடையாது பெரிய படுதா மட்டும்தான். ஆகவே காலையிலிருந்து மாலைவரை வாட்ச்மேன் வேலை பார்ப்பேன். அந்த நேரம் பூராவும் படிப்புத்தான்.

காலை உணவுக்கு 2 ரூபாயும் மதிய உணவுக்கு 2 ரூபாயும், இரவுக்கு 2 ரூபாயும் கொடுப்பார்கள்.கரும்பு தின்னக்கூலி போலத்தான். டால்ஸ்டாய்,கார்க்கி, கோகோல்,செகாவ்,காண்டேகர்,மாஸ்தி என்று துவங்கி ரகுநாதன், கு.அழகிரிசாமி என்று பரந்து சென்றது என் வாசிப்பு. மு.வ.வின் நூல்கள் அத்தனையையும் படித்து முடித்தேன். நிக்கலோய் ஓஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது நாவல் மனதை முழுதாக ஆக்கிரமித்து ஆட்டுவித்த நாட்கள் அவை. மலையாள எழுத்தாளர்கள் தகழி, பொற்றேகாட், உருபு, பொன்குன்னம்வர்க்கி போன்றோரின் நூல்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

ஜெயகாந்தனின் பல கதைகளை அன்று நான் மனப்பாடமாகச் சொல்லுவேன்.கண்காட்சியிலிருந்த நான் பின்னர் என்சிபிஎச் நிரந்தரக் கடை மேலக்கோபுரத்தெருவில் திறந்தபோது (1959) ஆறாவது பாரம் படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது ராதாகிருஷ்ணமூர்த்தி என்கிற அற்புதமான மனிதர் அங்கே பொது மேலாளராக இருந்தார். நான் சின்னப்பையனாக இருந்தாலும் ரொம்ப அன்புடனும் சம மதிப்புடனும் நடத்துவார்.என் புத்தக தாகத்துக்கு மதிப்புக்கொடுத்து வேலை வாங்குவார். அங்கிருந்து பின் மதுரை ஜனசக்தி நிருபராக இருந்த தோழர் எம்.என்.ஆதிநாராயணனிடம் உதவியாளராகப் போய்ச் சேர்ந்தேன்.அப்போது செய்திக்காக தோழர் ஜீவா உள்ளிட்ட தலைவர்களோடு உடன் செல்லும் பெரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

1961இல் தோழர் ராமகிருஷ்ணன் சென்னைக்குப் பயணமானார்.அப்போது ஜனசக்தி 10 ரூபாய் பங்குகளாக விற்பனை செய்து ஒரு நிறுவனமாக்கப்பட்டது. 4000 பங்குதார்கள் சேர்ந்தனர்.அதையெல்லாம் கணக்கு வைத்து ஒழுங்கு செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. இளைஞர் ராமகிருஷ்ணன் 1961இல் ஜனசக்திக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு காசாளராகக் கொஞ்ச நாள் பணியாற்றியபின் அவரை தகவல் களஞ்சியப் பொறுப்பாளராக நியமித்தார்கள். அற்புதமான அந்த ஜனசக்தி நூலகத்திலேயே கிடக்கும் அரிய வாய்ப்பு அது.ஜீவாவை ஆசிரியராகவும் தோழர் கே.முத்தையாவை பொறுப்பாசிரியராகவும் கொண்டு அப்போது ஜனசக்தி வந்து கொண்டிருந்தது. ஆசிரியர் குழுவில் இருந்த மகத்தான மனிதர்களாக இருந்த மாஜினி, கே.ராமநாதன், வி.ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் டி.செல்வராஜ், தோழர் ஐ.மாயாண்டிபாரதி,சோலை ஆகியோருடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அப்போது நானும் சோலையும் ஜீவாவுடன் நெருக்கமாக இருப்போம். அவர் எங்கு கூட்டத்துக்குப் போனாலும் அவருடைய பையைத் தூக்கிக் கொண்டு நாங்கள் இருவரும் அவர் பின்னாலேயே ஓடிவிடுவது வழக்கம். இரவில் நானும் சோலையும் குரோம்பேட்டையில் இறங்கிக்கொள்வோம்.ஜீவா தாம்பரம் செல்வார். ஜீவா தொடராக எழுதிய புதுமைப்பெண் என்னும் கட்டுரையையும் பாரதி பற்றிய கட்டுரையையும் நூலாகக் கொண்டு வரலாமே என்று ஜீவாவிடம் நான் கேட்டேன்.நீயே பிரதி எடு என்று ஜீவா சொல்ல ஜெராக்ஸ் அக்காலத்தில் இல்லாததால் என் கையெழுத்திலேயே அவ்விரு தொடர்களையும் பிரதி செய்தேன்.கட்சிப் பிளவுக்குப் பின் பாரதி குறித்த கட்டுரை மட்டும் ரகுநாதன் முன்னுரையுடன் நூலாக வந்ததாக அறிந்தேன்.இன்னொரு நூல் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

ஜனசக்தியில் தோழர் ராமகிருஷ்ணன் சேர்ந்த காலம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஆழமாக வேர்பரவிய நாட்களாக இருந்தது.அச்சமயம் 1963 ஜனவரி 19 அன்று தோழர் ஜீவாவும் மரணமடைந்தார். ஜீவா இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியா என்று நாடும் கட்சியும் திகைத்து நின்றன.

வேறுபாடுகள் கட்சிப்பிளவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தன. ஜனசக்தி ஊழியர்களில் நான், சோலை, டி.எஸ்.தினகரன்,சூரியநாராயணன் போன்றோர் பிந்தைய சிபிஎம் நிலைபாடு கொண்டவர்களாக இருந்தோம்.தோழர் அப்பு முன்முயற்சியில் அவரை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் பத்திரிகை அச்சிடப்பட்டது.ஜனசக்தியிலிருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட சோலை உண்மையான ஆசிரியராக இருந்தார். நான் பகலில் ஜனசக்தி வேலையையும் இரவில் சத்தமில்லாமல் கோடம்பாக்கம் போய் அங்கு தீக்கதிர் வேலையும் செய்வேன். 1964இல் கட்சி பிளவுபட்டது. அன்று காலை 9 மணிக்கு வழக்கம்போல ஜனசக்தி அலுவலகம் போனோம்.வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டோம்.தோழர் ஏ.எஸ்.கே ஐயங்கார் எங்கடம் கட்சி ரெண்டாயிடுச்சி.நீ எந்தப்பக்கம்? என்று எங்களிடம் கேட்டார்.நாங்கள் பி.ஆர். பக்கம் என்று சொன்னோம். அப்படியானால் உங்களுக்கு இங்கே இடம் இல்லை என்று ஒரு மாத சம்பளத்தைக் கையில் கொடுத்து மூன்று பேரை வெளியே அனுப்பி விட்டார்கள். திடீரென்று தெருவில் நின்றோம்.நானாவது பிரம்மச்சாரி. மற்றவர்கள் குடும்பஸ்தர்கள். ஒரே குழப்பமாக இருந்தது.சில நாட்களில் தினகரன் ஒய்.எம்.சி.ஏ.வில் கணக்கெழுதப்போய்விட்டார். சூர்யநாராயணன் ஒரு கோவிலில் குருக்களாகப் போய்ச்சேர்ந்தார். அவருக்கு பக்தியும் கிடையாது.ஓதுகிற மந்திரமும் தெரியாது.ஆனாலும் வாழ்க்கை இருந்ததே என்ன செய்ய?

நான் சைதாப்பேட்டையில் தீக்கதிரில் வேலை பார்க்கப் போய்விட்டேன்.சம்பளம், அலவன்ஸ் எதுவும் கிடையாது.மணியார்டர் ஏதும் வந்தால் சாப்பாடு கிடைக்கும்.அல்லது பக்கத்துப் பெட்டிக்கடையில் கடனுக்கு வாழைப்பழமும் கடலை மிட்டாயும் சாப்பிட்டு தண்ணியைக் குடிப்போம். லட்சிய வெறியோடு வேலை பார்த்த நாட்கள் அவை.

கோவை ஈஸ்வரன், உசிலை சோமநாதன் போன்றோர் தீக்கதிருக்கு பெரும் உதவி செய்தார்கள். இந்தக் காலம் முழுவதிலும் டெல்லிக்குப் போய் கட்சி வேலை பார்க்க வேண்டும் என்கிற ஒரு ஆசை என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.நான் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களைப் பார்க்கும் நேரமெல்லாம் நச்சரிக்கத் துவங்கினேன்.

1969இல் அவர் ஆசைப்பட்ட அல்லது கனவு கண்ட டெல்லி மாநகரில் கட்சியின் நாடாளுமன்ற அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.மதுரையில் இருந்தபோது தினமணியையும் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸையும் ஒருசேர வாசித்து ஆங்கிலப்பயிற்சி எடுத்த அனுபவத்தை டெல்லி வந்ததும் தீவிரமாகத் தொடர்ந்தார். மக்களவை நடவடிக்கைக் குறிப்புகளை தினசரி வாசித்து வாசித்தே ஆங்கிலத்தில் சொந்தமாக எழுதும் அளவுக்கு மொழிப்பழக்கம் வந்தது.
1969 முதல் 1983வரை நான் டெல்லியில் இருந்த 15 ஆண்டுகள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் கொண்ட ஆண்டுகளாயின.எத்தனை ஆளுமைகள் எத்தனை தலைவர்கள்!

அப்போது கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் கல்கத்தாவில் செயல்பட்டது. 4, அசோகாரோடு அலுவலகத்தில் இயங்கிய எங்கள் அலுவலகமே டெல்லிக்கு வரும் எல்லாத் தலைவர்களும் தங்கி வேலை பார்க்கும் இடமாக இருந்தது. தவிர மாநிலங்களில் நோய்வாய்ப்படும் முழுநேர ஊழியர்களையும் சிகிச்சைக்காக எங்கள் பராமரிப்பில் கொண்டு வந்து தங்க வைப்பார்கள். ஏகே.ஜியும் சுர்ஜித்தும் அங்குதான் தங்குவார்கள்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரும் உண்மையில் குணத்தாலும் உழைப்பாலும் தியாகத்தாலும் நவரத்தினங்கள்தான் என்பதை அருகிருந்து பார்த்துப் புரிந்து கொண்டேன்.அவர்களுக்கிடையே ஆச்சரியமூட்டும் விதமான வேலைப்பிரிவினையும் உறவும் தோழமையும் இருக்கும்.

சும்மா இருக்க நேரம் வாய்த்தால் தோழர் பசவபுன்னையா எங்களோடு சற்று வம்பு இழுத்து சமகால அரசியல் பற்றிய எங்கள் புரிதலை அறிந்து கொண்டு கல்வி புகட்டுவார். தோழர் ஏ.கே.ஜி ஊழியர் நலனில் ரொம்பவும் அக்கறையாக இருப்பார்.கம்பளி இருக்கிறதா ஷூ இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து வாங்கித்தருவார்.

ஒருமுறை எங்கள் விருந்தினர் அறையிலிருந்த எட்டுக் கட்டில்களும் நிறைந்து விட்டன. அது டிசம்பர் குளிர்காலம்.ஒரு நாள் நள்ளிரவு தூக்கத்திலிருந்து முழிப்புத் தட்டியபோது என் கட்டிலுக்குக் கீழே யாரோ குளிரில் நடுங்கிக்கொண்டு புரண்டு கொண்டிருப்பதைப்பார்த்து எழுந்து விளக்கைப் போட்டேன்.தோழர் சுர்ஜித்! எந்த மாநிலத்துக்கோ போய்விட்டு இரவு தாமதமாக வந்தவர் தோழர்கள் தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என்று யாரையும் எழுப்பாமல் கீழே இருந்த தரைவிரிப்பில் படுத்திருக்கிறார்.எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது.அவரை எழுப்பிக் கட்டாயப்படுத்தி என் கட்டிலில் படுக்க வைத்தேன்.

1971இல் நல்ல சிவந்த நிறமுடைய பார்த்தாலே அறிவின் தீட்சண்யம் துலங்குகின்ற புன்னகை மிரும் முகத்தோடு ஓர் இளைஞர் சென்னையிலிருந்து தோழர் வி.பி.சிந்தனின் கடிதத்தோடு என்னைப் பார்க்க வந்தார்.அக் கடிதப்படி அவரை டெல்லி மாநிலக்குழு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றேன். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர வந்திருந்த அவரை மாணவர் சங்கப்பணிகல் பயன்படுத்துமாறு தோழர் வி.பி.சி.கேட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த இளைஞர் களத்தில் இறங்கிய பிறகுதான் டெல்லியில் மாணவர்சங்கம் மகத்தான வளர்ச்சி பெற்றது.அவர்தான் தோழர் பிரகாஷ் காரத் என்பதை இதற்குள் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குறிப்புகளைத் தயாரிக்கும் பணியினூடாகத் தன் சொந்த அரசியல் மற்றும் மொழியறிவை வளர்த்துக்கொண்ட தோழர் ராமகிருஷ்ணன் 1981 வரை மக்களவைப் பணிகளையும் 1982 இல் மாநிலங்களவைப் பணிகளையும் ஒருங்கிணைத்தார்.1982இல் மதுரைக்குத் திரும்ப வேண்டும் என்கிற மனநிலையை கட்சி கேட்டுக்கொண்டதற்கிணங்க 1982 வரை அடக்கி வைத்தார். 1983இல் கட்சியின் மத்திய குழு அலுவலகப்பணியில் சேர்ந்தார். டெல்லியில் வாழ்ந்த இந்தக்காலம் முழுவதும் மிகப்பெரிய பேறாக அவர் கருதுவது பல தலைவர்களோடு நெருங்கிப்பழகிக் கற்றுக்கொண்டதைத் தான்.
அதைப்போலவே மிக முக்கியமானது அங்கிருந்த நாட்களில் நான் சந்தித்த புரட்சியாளர்கள்.

பகத்சிங்கின் சகாக்களான தோழர்கள் சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால், டாக்டர் கயா பிரசாத் கட்டியார் மூவருமே எங்கள் இடத்துக்கு வருவார்கள். சி வவர்மா அடிக்கடி வந்து எங்களோடு தங்குவார்.அப்போது அவர் உத்தரப்பிரதேச மாநிலக் குழுவின் செயற்குழுவில் இருந்தார். பகத்சிங் பற்றிய கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் அதே உணர்ச்சியுடன் எங்களுக்குச் சொல்லுவார் .அந்த இரவுகள் மறக்க முடியாதவை. டெல்லிக்குளிரின் நடுக்கத்தைவிட பகத்சிங்கின் கதை தரும் அதிர்வு கூடுதலாக இருக்கும்.ஒவ்வொருமுறை பேசி முடிக்கும்போதும் தோழர் சிவவர்மா கேவி அழுதுவிடுவார். நாங்கள் கண்களில் நீர் கசிய அவரைச்சுற்றி மௌனமாக உட்கார்ந்திருப்போம்.

ஒருமுறை தோழர் கே.முத்தையா அவர்கள் சந்திரசிங் கார்வாலி என்பவரை தீக்கதிருக்காகப் பேட்டி எடுத்து அனுப்புமாறு என்னைக்கேட்டுக்கொண்டார். அவர்யார் என்று எனக்குத் தெரியாது.அவர் நம் அறைக்கு வருவாரா என்று அறைத்தோழர்களிடம் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.ஒருநாள் நீ தேடிய ஆள் வந்திருக்காரப்பா என்று தோழர்கள் சொல்லவும் சந்திரசிங் கார்வாலி என்கிற அந்த முரட்டுக்கிழவரை சந்தித்தேன். பேட்டி பற்றிச் சொன்னதும் முரட்டுக்குரலில் பேட்டியெல்லாம் எதுக்கு வேற வேலை இல்லே என்று மறுத்து விட்டார். அப்புறம் அடுத்த முறை அவர் வந்தபோதும் பேட்டி என்று ஆரம்பித்தேன். அட போப்பா! என்று மறுத்து விட்டார்.

ஒருமுறை நிதானமாகப் பார்த்தார். பிறகு அதுதான் அப்பவே ராகுல் சாங்கிருத்தியாயன் என் வாழ்க்கை வரலாறை எழுதிட்டாரே.. அதை வாங்கிப் படிக்க வேண்டியதானே…. என்று சொன்னார். 1922இல் பெஷாவரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து நின்றபோது மக்களைச் சுடுமாறு கார்வாலி ரெஜிமெண்ட்டுக்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டார்கள்.எம் மக்களை நாங்கள் சுடுவதா என்று மறுத்துத் துப்பாக்கிகளைக் கீழே போட்ட வீரர்கன் தலைவர்தான் இந்த கார்வாலி. தூக்குத் தண்டனை தரப்பட்டுப் பின்னர் காந்தியாரின் பேச்சுவார்த்தையால் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த வீரர் அவர். சிறையில் அவர் கம்யூனிஸ்டானார்.

சிட்டகாங் எழுச்சியில் பங்கேற்ற கடைசிக் “குற்றவாளி”யான தோழர் சுபோத்ராய் எங்களோடு வந்து தங்குவார். கல்பனாதத்தும் கூட வந்திருக்கிறார்.புரட்சி நாயகர்களான இவர்களோடு தங்கிப் பேசும் வாய்ப்பும் அவர்கள் வாயிலாகவே அந்த நாட்கன் தகிப்பை கேட்ட அனுபவமும்தான் டெல்லி வாழ்க்கை எனக்குத் தந்த மாபெரும் சொத்தாகக் கருதுகிறேன்.

உண்மையில் அந்தச் சொத்தோடும் விடைபெற்றபோது தோழர் இ.எம்.எஸ் எழுதிக் கொடுத்த ஒரு பாராட்டுக்கடிதத்தோடும்தான் தோழர் ராமகிருஷ்ணன் டெல்லியிலிருந்து விடைபெற்று மதுரை வந்து சேர்ந்தார். ஒரு முழு நேர ஊழியர் வங்கியில் சேமிப்பெல்லாம் வைத்திருக்க ஏது வாய்ப்பு? வீசின கையும் வெறும் கையுமாக சில நாள் அலைந்தார். பின்னர் தீக்கதிர் நாராயணன் உதவியால் கட்சித்தோழரான என்.பி.கே.முத்து என்கிற கீழக்கரையைச் சேர்ந்த ஒரு தோழரின் மொசைக் நிறுவனத்தில் மதுரைக்கிளையில் (மொசைக் லாண்ட்) கொஞ்சநாள் வேலை பார்த்திருக்கிறார். அங்கும் மதியம் வரைதான் வேலை. 350 ரூபாய் சம்பளம். இரண்டு மணிக்கு தீக்கதிருக்கு வந்து கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பிரசுரங்கள் எழுதிக்கொடுக்கிற வேலைகள் செய்துள்ளார். ஊதியமில்லாவிட்டாலும் மனதுக்கு நிறைவைத்தந்தது இந்த வேலைதான்.

அப்போது 1986 முதல் தீக்கதிரில் விளம்பர பொறுப்பாளராக பத்தாண்டுகள் பணியாற்றினார். 1987இல் தோழர் பி.ராமமூர்த்தி இறந்த நாளன்று நான் சவுத் விஷன் பாலாஜியைச் சந்தித்தது என் வாழ்வின் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. பாலாஜிதான் எனக்கு எழுத்தாளன் என்கிற ஒரு அடையாளத்தை வழங்கினார் என்பேன். அவர் கேட்டுக்கொண்டபடி இ.எம்.எஸ்ஸிடம் நேரடியாகப் பேசி அனுமதி பெற்று அவருடைய ‘ஓர் கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்’ என்கிற புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன்.பாலாஜி அதை வெயிட்டார்.அதை அடுத்து தோழர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன், கே.பி.ஜானகி அம்மா, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ. பாலசுப்ரமணியம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டோம். பிஆர் நூலுக்காக பல இடங்களுக்கும் சென்று தகவல்கள் சேகரித்தேன். தோழர்கள் இ.எம்.எஸ்,சுர்ஜித் உள்ட்ட தோழர்களை நேரில் சந்தித்து குறிப்புகள் எழுதி வாங்கினேன். அந்த நூலைத் தயாரிக்க இரண்டாண்டுகல் 22 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவானது. வட்டிக்கு வாங்கி செலவு செய்யப்பட்டது.

இக்காலம் முழுவதும் என் எழுத்துப்பணிக்கு வழிகாட்டியாக இருந்தவர் தோழர்.கே.வரதராஜன்தான். 45 வயதுக்கு மேல் நான் எழுத்தாளன் ஆனேன். 23 புத்தகங்களை வெளியிட்டு எனக்கு எழுத்தாளன் என்கிற முகத்தை வழங்கியது சவுத் விஷன் பாலாஜிதான். தோழர் ராமகிருஷ்ணனின் எளிமையான நூல்கள் பரவலான வாசிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. தன்னுடைய எழுத்து வகை தோழர் சோலையின் பாணியைப் பின்பற்றியது என்று குறிப்பிடும் அவர் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றையும், நெல்லை, வடஆற்காடு, கோவை போன்ற மாவட்டக் கட்சி வரலாறுகளை எழுதியதை மிக முக்கிய அனுபவமாகக் குறிப்பிடுகிறார்.

இவ்வரலாறுகளை எழுதுவதற்காக பல ஊர்களுக்கும் சென்று பழைய தோழர்களைத் தேடித் தேடிச் சந்தித்தது மிகப்பெரிய மனப் பாதிப்பை உண்டாக்கியது. ராஜபாளையம் கந்தசாமி என்கிற மூத்த தோழரைத் தேடிப்போனேன். தன் மகள் வீட்டுத் திண்ணையில் ஓர் அழுக்குச் சட்டையோடு எப்போதும் அவர் படுத்து இருப்பார். அவர் நிலைமை என் மனதைப் பிசைவதாக இருந்தது. ஓடி ஓடிக் கட்சிப்பணியாற்றியவர் அவர் தூத்துக்குடியில் டாம் டாம் நல்லசிவன் என்று அறியப்பட்ட தோழர் மு.நல்லசிவன் அவர்களைச் சந்தித்தேன்.200 ரூபாய் முதியோர் பென்சனுக்கு ரேசன் அரிசியுடன் கணவன் மனைவி இருவரும் வாழும் எய வாழ்க்கை வறுமையைச் சந்திக்கும் மன உறுதி மிகுந்த நெகிழ்ச்சியூட்டியது.இப்படி எத்தனையோ தோழர்களைச் சந்தித்தேன். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

இவர்கள் அனைவருக்குமே கட்சியின் மீது மிகப்பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வாழ்வதைப் பார்த்தேன். கட்சியின் உயர்மட்டத்தோழர்களோடும் பழகியிருக்கிறேன். இப்படிக் கீழ்மட்டத்தில் பணியாற்றிய தோழர்களையும் பார்த்துவிட்டேன். புரட்சியாளர்களையும் பார்த்தேன். இவர்கள் யாவருமே தம்மை முன்னிறுத்தாத தியாகச் செம்மல்கள். இந்தப் பண்பாடு கம்யூனிஸ்ட் பண்பாடு நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கி வளர்த்தெடுக்க வேண்டிய பண்பாடாகும் தனக்கு எழுதுவதைத் தவிர வேறொன்றும் தெரியாது. அதன் மூலம் நம் காலத்தின் ஈடு இணையற்ற வளரும் தத்துவமான மார்க்சியத்துக்குச் சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியம் என்று அடிக்கடி குறிப்பிடும் தோழர் ராமகிருஷ்ணன் இடையறாது எழுதி வரும் ஒரு படைப்பா.

அவருடைய பெயர் இல்லாமல் பல கண்காட்சிகள், கட்சிப்பிரசுரங்களுக்காக அவர் ஏராளமான பங்கப்புகளைச் செய்திருக்கிறார்.ஒருநாள் முழுக்க அவரோடு பேசி இந்த நேர்காணலை எழுதியபோது கட்சி கட்சி என்றுதான் பேசிக்கொண்டிருந்தார்.தன் சொந்த வாழ்க்கை பற்றி கேட்டால் மட்டுமே பேசினார்.அவருக்கு குருவம்மாள் என்கிற துணைவியாரும் (இப்போது அவர் காலமாகிவிட்டார்) மணவாளன், சாந்தி என்று இரு மக்கள் இருப்பதையும் கூட கேட்ட பிறகுதான் குறிப்பிட்டார்.தன்னுடைய துணைவியாரும் பிள்ளைகளும் கூட கட்சியின் மீது அளப்பரிய மதிப்போடும் நம்பிக்கையோடும் இருப்பதில் பெருமையும் பெருமித உணர்வும் கொள்ளும் ராமகிருஷ்னன் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

நான் எங்கெங்கு சுற்றி வந்தாலும் மண்டையன் ஆசாரி சந்தில் என் அண்ணன் கட்சி என்கிற உணர்வோடு கட்சி அலுவலகத்தில் சுற்றித்திரிந்த அதே பையனாகவே இப்போதும் உணர்கிறேன்.காதுக்குள் காங்கிரஸ் போலீஸ் தீக்குச்சியை உரசிப்போட்டுச் செவிடாக்கிய தியாகி தோழர் பொதும்பு ராமையா, பொதும்பு பொன்னையா ,வீரணன்,சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட தோழர் வீராயி இவர்கன் வீர காவியங்களால் உந்தப்பெற்றுக் கட்சிக்குள் ஈர்க்கப்பட்ட மதுரைப்பையனாகவே இருக்கிறேன்.. இருப்பேன்…

வரலாறு படைத்த என்.ராமகிருஷ்ணன் நூல்களில் வரலாற்றின் நாயகர்கள்
                                                                                                                                     – சு.பொ.அகத்தியலிங்கம்

(வரலாறு படைத்த என்.ராமகிருஷ்ணன் நூல்களை முன்வைத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற படைப்பரங்கில் சு.பொ.அகத்தியலிங்கம் வாசித்த கட்டுரை)

வரலாற்றைப் படிக்க வேண்டாம்; வரலாற்றைப் படைப்போம் என ஒருமுறை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மாணவர்களிடையே பேசினார். இதனை அறிஞர் பெருமக்கள் கண்டித்தனர். வரலாற்றை முறையாக படிக்காமல் – உள்வாங்காமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் கடந்த காலம் என்ற ஒன்று உண்டு. கடந்த காலம் என்று இல்லாத ஒன்று இவ்வுலகில் உண்டா? தாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மைதான். நிகழ்காலத்தின் மூலத்தை கடந்த காலத்திலும், விளைவுகளை எதிர்காலத்திலும் தேடுவது தவிர்க்க முடியாதது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீர்படுத்த விரும்புவோருக்கும், சீர்கேடுகளைத் தவிர்க்க விரும்புவோருக்கும், கடந்த காலத்தைப் பற்றிய அறிவும், புரிதலும், உணர்வும் பயனுள்ளவையாக அமையும். அத்தகைய கடந்தகால அறிவு-தெளிவு-உணர்வு இவற்றைத்தான் வரலாறு என்று குறிப்பிட வேண்டும் என்கிறார் பேராசிரியர் அ. கருணானந்தன்.

நாம் இன்று பள்ளிகளில் படிக்கும் வரலாறு எத்தன்மையது? இதுகாறும் உருவாக்கப்பட்ட, தரப்பட்ட வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் வரலாறுகளாகவே, ஆதிக்க சக்திகளைப் பெருமைப்படுத்தும் வரலாறுகளாகவே இருந்திருக்கின்றன. ஆதிக்க சக்திகளின் கருவியாகவே வரலாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருணானந்தன் மேலும் கூறுகிறார்:

தற்கால இந்திய வரலாற்று அணுகுமுறை ஆங்கில ஆதிக்கத்தின் போது இருந்த அணுகுமுறையிலிருந்து பெரிய அளவில் மாறவில்லை. இரண்டிலுமே அரசியல் கிளர்ச்சிகள், ஆட்சி மாற்ற கிளர்ச்சிகள், சமூக மாற்ற கிளர்ச்சிகள், விவசாயிகள் கிளர்ச்சிகள், தொழிலாளர் கிளர்ச்சிகள் போன்றவற்றிற்கு இடம் அளிக்கப்படுவதில்லை. இராஜாராம் மோகன்ராய், வித்யாசாகர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, அலிகார் இயக்கம் ஆகியோர்கள் இடம்பெறும் வரலாற்றில் இராமலிங்க வள்ளலார், மகாத்மா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, இராமசாமிபெரியார், அம்பேத்கார் போன்றவர்கள் ஏன் இடம் பெறுவதில்லை? தெலுங்கானா கிளர்ச்சி, புன்னப்புரா, வயலார், கிளர்ச்சி, கோவை மில் தொழிலாளர் கிளர்ச்சி போன்றவை மறைக்கப்படுவது ஏன்?
வரலாறு கொடுக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது – வரலாறு திரிக்கப்படுவதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது-வரலாறு மறைக்கப்படுவதற்கும் நோக்கம் இருக்கிறது என்கிறார் கருணானந்தன்.

இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிற வரலாறும் சரி, வரலாற்று நாயகர்களும் சரி, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியே எனில் மிகையல்ல. வரலாற்று நாயகர்கள் என இங்கே நாம் குறிப்பிடுவது; கம்யூனிஸ்ட் இயக்கத்தை – உழைப்பாளி மக்கள் இயக்கத்தை இந்திய தேசத்தில் கட்டி எழுப்ப முன்னத்தி ஏர் ஓட்டியவர்கள் – தமிழகத்தில் இப்பணியில் முதல் சாலை போட்டவர்கள் பற்றிய வரலாறே ஆகும்.

இங்கே எனக்கு பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட நூல்கள் 15 ஆகும்.
1) முசாபர் அகமது 2) இ.எம்.எஸ். 3) பி.டி. ரணதிவே 4) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் 5) ஜோதிபாசு 6) பி. ராமமூர்த்தி 7) எ. பாலசுப்பிரமணியம் 8) ஏ. நல்லசிவன் 9) எம். ஆர். வெங்கட்ராமன் 10) கே. ரமணி 11) பி.ஆர்.பரமேஸ்வரன் 12) வி.பி. சிந்தன் 13) கே. அனந்தன் நம்பியார் 14) எம்.கே.பாந்தே 15) அந்தமான் தீவுச்சிறை
இதில் முதல் 13 பேரும் இப்போது உயிரோடு இல்லை; எம்.கே. பாந்தே நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்; அந்தமான் தீவுச் சிறை ஓராயிரம் தியாகக்கதை சொல்லும் குறிப்புகள்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் கருக்கொண்ட போதே சதி வழக்குகளை எதிர்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் கருக்கொலை முயற்சி, சிசுக்கொலை முயற்சி இவற்றிற்கு தப்பி அதன் விளைவுகளோடு வளர்ந்த குழந்தையைப் போன்றதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு. அப்படியெனில் அந்த வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை எத்தகையதாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு எஃகாக உருமாறியவர்கள் என செக்கோஸ்லேவேகிய மாவீரன் ஜூலியஸ் பூசிக் கூறுவது மிகையல்ல என்பதை இந்நூல்கள் நிறுவுகின்றன.

தாஷ்கண்ட் – பெஷாவர் சதிவழக்குகள், கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என மூன்று முக்கிய சதிவழக்குகளை எதிர்கொண்டுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் இம்மண்ணில் காலூன்றியது. முசாபர் அகமது வாழக்கை வரலாற்று நூலில் இதன் வேர்களும் கூறுகளும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

சரிதை என்பதும் சுயசரிதை என்பதும் அது எவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதோ அவர் வாழ்ந்த காலகட்டத்தை; கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதிலிருந்து பயன்தரும் படிப்பினையைப் பெற்றுக்கொள்வதும் என்பதாகும். ஒரு சரிதையின் உருவாக்கத்திற்கு எத்தகைய உழைப்பும் ஆக்கத்திறனும் தேவைப்படுகிறது எத்தனை வருடங்கள் செலவிட வேண்டியுள்ளது என்பதை நூலாசிரியரின் உரையில் நன்குகாணலாம். இவ்வாறு தோழர் பி. ராமமூர்த்தி வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பதிப்புரை எழுதியுஎள்ள எம். பாலாஜி கூறுவது வெறும் வார்த்தைகளல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. இந்த 15 நூல்களும் ஏன் அவரின் மொத்த நூல்களும் இதன் சாட்சியே ஆகும்.

இதில் ஓர் இந்திய கம்யூனிஸ்டின் நினைவலைகள் எனும் இஎம்எஸ் வாழ்க்கை வரலாறு என். ராமகிருஷ்ணனின் ஆக்கம் அல்ல. மொழியாக்கம் செய்தவர்தாம் என். ராமகிருஷ்ணன். வேதங்களிலிருந்து மார்க்சியத்தை நோக்கி வளர்ந்த இஎம்எஸ் குறித்து இவர் தனியாகவும் நூல் எழுதியுள்ளார். இவரின் மொழியாக்கத் திறனுக்கு இந்நூல் சான்று பகர்கின்றது. இந்நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கான முன்னுரையில் இஎம்எஸ் எழுதுகிறார்:

ஒரு கம்யூனிஸ்ட் ஆவதற்காகதான் பிறந்து வளர்ந்த சமூக அரசியல் சூழ்நிலையை எதிர்த்துப்போராட வேண்டியிருந்த மனிதனின் கதை இது; பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தபின் முதலில் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் நடந்த உட்கட்சிப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்த மனிதனின் கதை இது இந்த கணிப்பு அவரது, அதாவது இஎம்எஸ்ஸின் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, ஏதாவது ஒரு வகையில் எல்லா தலைவர்கள் வாழ்க்கையிலும் இதனைக் காணமுடிகிறது. என். ராமகிருஷ்ணன் எழுத்தின் கூர்மை இதனை மையப்படுத்தியே தலைவர்கள் வாழ்வை சித்தரிப்பதிலும் செயல்பட்டிருப்பதை உறுதியாகக் கூறமுடியும்.

தோழர் பி. ராமமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு என்பது என். ராமகிருஷ்ணன் படைப்பிலே முத்திரை பதிக்கும் முதல்வரிசை நூல்களில் இடம் பெறும். இதனை அவரே ஒப்புக்கொள்வார். தன் வாழ்க்கை வரலாற்றை சுதந்திரப்போராட்ட, கம்யூனிஸ்ட் இயக்க, தொழிற்சங்க இயக்கப் பின்னணியோடு இணைத்து எழுத வேண்டும் என்றும், வெறும் தனிமனிதனின் வரலாறாக எழுதக்கூடாது என்றும் கூறினார். நான் அதற்கு ஒப்புக்கொண்டேன் என தோழர் பி. ராமமூர்த்தி விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு பெருமளவு அதற்கு நியாயமும் வழங்கி இருக்கிறார்.

ஆயினும் இதே அளவுகோல் பிறவாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூற இயலாது. அப்படி எதிர்பார்க்கவும் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது வரலாற்றுச் சூழலை விவரிக்கத் துவங்கினால் பக்கங்கள் பெருத்துவிடும். கூறியது கூறல் மீண்டும் மீண்டும் நிகழும், ஆயினும் தேவையானவற்றை தேவைப்படும் இடத்தில் கூறவும் இவர் தவறவில்லை. இந்த நூல்களை எல்லாம் இணைத்துப் படிக்கும்பொழுது அன்றைய காலகட்டத்தின் அரசியல் சமூக பொருளாதார வரலாறும் இதில் இவர்கள் பங்களிப்பும் நன்கு புலனாகும்.

எந்த தனிமனிதரும் வரலாற்றின் படைப்புதான். அதே சமயம் அந்த வரலாற்றை முன்நகர்த்துவதில் அவரின் தனித்த ஆளுமைக்கும் முக்கிய பங்கு உண்டு. வள்ளுவர் காலத்தில் காரல் மார்க்ஸ் பிறந்திருந்தால் அவர் நிச்சயம் மூலதனம் எழுதியிருக்கமாட்டார், திருக்குறள் போல்தான் அறநூல், வாழ்வியல் நூல் படைத்திருப்பார். ஒரு வேளை வள்ளுவன் மார்க்ஸ் பிறந்த காலத்தில் இருந்திருந்தால் சமூக அறிவியல் நோக்கில் தத்துவ நூல் எழுதியிருப்பார். இருவருமே அவரவர் வாழ்ந்த காலத்தின் மாபெரும் கொடை; அதேபோல அவர்களின் ஆளுமை அந்தந்த காலத்தை முன்நகர்த்தும் நெம்புகோலாயின எனில் தவறல்ல.

இதை ஏன் சொல்லுகிறேன் எனில் இந்த மாபெரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துவிட்டு அத்தகைய எளிமை, அத்தகைய அர்ப்பணிப்பு, அத்தகைய தியாகம் இன்றைய கம்யூனிஸ்ட்டுகளிடம் இல்லை என்று பலர் கூறுகின்றனர். வெளிப்பார்வைக்கு அது உண்மையெனினும் அது முழு உண்மையல்ல. அன்றைய காலகட்டத்தின் நெருக்குதல்களுக்கிடையே ஒடுக்குமுறைகளுக்கு இடையே வாழ்ந்த அவர்களுக்கு முன் நீண்டு கிடந்தது அத்தகைய கரடு முரடான பாதையே அதில் பயணிக்கிறபோது ஏற்பட்ட சிரமங்களும், அதைத் துணிந்து சீர்செய்து வழிஅமைத்த மனவுறுதியும் நம்மை வியக்கவைக்கும் அந்த பாதையில் நடைபோடும். மற்றவர்கள் அடுத்த கட்ட முன்னேற்றம் காணமுயற்சிக்கின்றனர். இவர்களின் வாழ்வும் பணியும் அதற்கொப்பவே அமையும்.

ஜோதிபாசுவின் வாழ்க்கை பாதை மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் பெற்றுவரும் வெற்றியின் பின்னால் உள்ள இரத்தத்தையும் வியர்வையையும் நமக்கு விளங்கவைக்கும்; சுர்ஜித்தின் வாழ்க்கைப் பாதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் செல்லும் திசை வழியின் அவசியத்தை; அதன் பரிணாமத்தை அதற்காக நடத்திய உள்கட்சி போராட்டத்தை படம் பிடிக்கும். இ.எம்.எஸ்., பி. ராமமூர்த்தி உட்பட மூத்த தோழர்களின் வாழ்க்கை வரலாறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறும் பிரிக்க முடியாது. அதே சமயம் வெறும் கட்சி வாழ்க்கை மட்டுமே தனிமனித வாழ்வு ஆகாது அல்லவா?

இ.எம்.எஸ். நூலுக்கு அணிந்துரை வழங்கிய ஏ. நல்லசிவன் கூறுவார், ஒரு கம்யூனிஸ்ட் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள உறவும் பாசமும் அரசியல் வாழ்வில் அவன் அடையும் கடும் துன்பங்களால் பல நேரங்களில் பாதிக்கப்படுவதும், அதனை உறுதியுடன் சமாளிப்பது மட்டுமின்றி பாசமிக்க குடும்பத்தினரை எப்படி அணுக வேண்டும் என்பதைனையும் விளக்குகிற பகுதியாகும்.

இதேபோன்ற கூறுகள் மற்றெல்லா நூல்களிலும் சுட்டிக்காட்ட என். ராமகிருஷ்ணன் தவறவில்லை. பி. ராமமூர்த்தி தன்தாயின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக தனது தாயார் மரணம் வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தது; மரணப் படுக்கையிலிருந்த தன் மனைவி சாராதாவை சந்திக்க தலைமறைவாய் இருந்த எம்.ஆர். வெங்கட்ராமன் சென்றதும், ..நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைப்படியே நடந்துகொள்ளுங்கள், என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்…சீக்கிரம் தப்பித்துவிடுங்கள்… என மனைவி கேட்டுக்கொண்டதும், என ஒவ்வொரு வரலாற்றிலும் பாசப்போராட்டங்கள் சிலவற்றை என். ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ள பாங்கு தனித்துவம் ஆனது. கம்யூனிஸ்டுகள் காதலும் பாசமும் இல்லாத இரும்பு இதயம் படைத்தவர்கள் அல்ல; உண்மையான காதலும் ஊற்றெடுக்கும் பாசமும் அவர்களின் தனித்துவம். ஆயினும் அரசியல் புறச்சூழலால் அவர்களும் அவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் பட்ட சிரமங்கள் அளவற்றது. என். ராமகிருஷ்ணன் அந்த வாழ்வுக்கு உரிய நியாயம் அனைத்து நூல்களிலும் வழங்கியுள்ளார்.

தோழர் எ. பாலசுப்பிரமணியம், எம்.ஆர். வெங்கட்ராமன், பி. ராமமூர்த்தி என ஓரளவு வசதியும் வாய்ப்பும் படைத்த மத்திய தர வர்க்கத்திலிருந்து அதுவும் உயர் சாதியிலிருந்து வந்தவர்கள் சந்தித்த பிரச்சனைகள் தனித்துவமானது. சுயசாதி மறுப்பும் பூணூலை அறுத்தெறிந்து சனாதன தளை உடைத்து அடித்தட்டு மக்களோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வதும் மிகப்பெரிய அர்ப்பணிப்பாகும். இவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல் நெடுக இதன் அழுத்தமான சுவடுகளை என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் திண்டுக்கல்லில் தாழ்த்தப்பட்ட மக்களை, தோல் பதனிடும் தொழிலாளர்களை அணிதிரட்ட அவர்களோடு இணைந்து போரிட்டது தனிக்காவியமாகும். வர்க்கப் போராட்டமும் சாதி எதிர்ப்பு போராட்டமும் இணைந்த அந்த போராட்ட களம் புதிய படிப்பினைதரும். அதேபோல பூதிப்புரம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சுடுகாட்டுப் பாதையை மறுத்து ஆதிக்க சாதியினர் கட்டிய சுவரை இடித்துத் தகர்த்தும், அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டுமே வாக்களிப்போம் என்ற மேல்சாதி நிர்பந்தத்திற்கு பணியமறுத்து அந்த சிறு அளவு வாக்கால் தோல்வியை சந்தோஷமாக ஏற்றதும் சாதாரணமானதா?

இவர்கள் வாழ்க்கை இப்படியெனில் தோழர் கே. ரமணியின் வாழ்க்கை ரொம்பவும் வித்தியாசமானது. வறுமையை சுவைத்த வாழ்க்கை கடைக்கோடியிலிருந்து போராடிப் போராடி அங்குலம் அங்குலமாக முன்னேறிய ஒரு ஏழை பஞ்சாலைத் தொழிலாளியின் புலம்பெயர்ந்த தொழிலாளியின் சோகக் கதையாகும். பி.ஆர். பரமேஸ்வரன், கே.எம். ஹரிபட், அனந்தநம்பியார் போன்றோர் வாழ்வுகளும் பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்த மனிதர்களின் போராட்ட வாழ்வின் கதையன்றோ? பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்வு தமிழக சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட எழுச்சியின் வரலாறாகும், ரமணியின் கதை கோவை மாவட்ட தொழிற்சங்க வரலாறு எனினும் மிகையல்ல, அதோடு மட்டுமல்ல தன்னம்பிக்கை சுயமுயற்சி இவைபற்றியெல்லாம் இப்போது வெளிவரும் ஆன்மீக நெடிமிக்க சுய முன்னேற்ற நூல்கள் தராத நம்பிக்கையை போராட்ட உணர்வை வைராக்கியத்தை இரத்தத்தோடு கலக்கச் செய்யும் வாழ்க்கை வரலாறு ரமணியுடையது. அதனை அந்த வாழ்க்கைப் போராட்ட வலியோடு என். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

ஒரு வகையில் தற்போது அவரது வாழ்க்கைப் போராட்டமும் அத்தகையதுதானே!
ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தனியான வார்ப்படத்தில் வார்க்கப்பட்டவன் என்றார் தோழர் ஸ்டாலின். ஆனால் தனிவார்ப்படமாக அவர்கள்பட்ட அடியும் பயணித்து கடந்த பாதையும் – அப்பப்பா நம்மை மலைக்கவைக்கிறது. ஆழமான தத்துவ மோதல்களும் உள்கட்சிப் போராட்டங்களும் நடைபெற்ற காலத்தில் கொண்ட கொள்கைக்காக அவமதிப்புகளையும், கட்சியின் தண்டனைகளையும் ஏற்று செயல்பட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று படிப்பினைகள் என்றும் பயன்தரும். தோழர் பி.டி. ரணதிவே வாழ்க்கை அதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும். தோழர் பி.டி. ரணதிவே சந்தித்த அவமானங்களைப்போல் வெறொருவர் சந்தித்திருக்கக் கூடுமோ என ஐயமே எழுகிறது. அதனை பி.டி. ஆர் எதிர் கொண்ட விதம்தான் இன்றைக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.

இந்தியாவில் கம்யூனிட் கட்சியை கட்டி வளர்த்தவர்கள் வரிசையில் பி.டி ஆருக்கு தனி இடம் உண்டு. சிறந்த அறிவாளி. விடுதலைக்கு பின் கட்சிக்குள் ஏற்பட்ட அதி தீவிரவாத போக்குகள் கட்சிக்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. அதனால் கட்சிக்குள் கருத்து மோதல் தீவிரமானது. பி.டி. ஆர் பாதைக்கு எதிரானவர்கள் கைவலுப்பட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறல் ஏற்பட்டபோது அஜய் கோஷ், எ.ஏ டாங்கே, சி. ராஜேவர்ராவ், பசவபுன்னையா ஆகிய நால்வர் கொண்ட தூது குழு ரஷ்யா சென்று டாலினிடம் விவாதித்தது. டாலின் இந்திய கம்யூனிட் கட்சி மேற்கொண்ட இடது தீவிரவாத தவறுகளை சுட்டிக் காட்டியதுடன்; பி.டி ஆர் செயலாற்றல் மிக்க, திறமைமிக்க கம்யூனிட்- கட்சியிடம் இழப்பதற்கு திறமை மிக்க ஊழியர்கள் மிகக் குறைவு, எனவே அவரை இழந்து விடவேண்டாம் மத்தியக் குழுவில் சேர்க்க வேண்டாம் ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப வேறு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று யோசனை கூறினார்.

ஆயினும், அன்று கட்சியில் நிலவிய சூழ்நிலை வேறுமாதிரியாகவே இருந்தது. கட்சியின் மத்தியக்குழு விசாரணைக்கு பின் ரணதிவேயை இரண்டு ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டார். இதை விசுவாசமிக்க கம்யூனிடாக பி.டி ஆர் ஏற்றுக் கொண்டார்.இப்பொழுது பல தோழர்களுக்கு அவர் வேண்டாத மனிதராக காணப்பட்டார். பலர் அவரை சந்தித்துப் பேசுவதையே தவிர்த்தனர். என்கிறார் அவர். வரலாற்றை எழுதிய என். ராமகிருஷ்ணன் அவரது மனைவி விமலா ரணதிவே வார்த்தையில் கூறுவதானால். 1951 முதல் 1955 வரைப்பட்ட கால கட்டமானது பி.டி ஆருக்கு மிகவும் சோதனை மிக்க காலகட்டமாகும். டாங்கேயும் அவரது ஆதரவாளர்களும் அவரை மிகவும் மட்டகரமாக நடத்தினார்கள்.

சாதியிலிருந்து நீக்கப்பட்டவரைப்போல் நடத்தினார்கள் என்று விமலா ரணதிவே கூறுவதிலிருந்து அந்த மன உழைச்சலைப் புரிந்து கொள்ள முடியும். பலமாதங்கள் கட்சி வழங்கும் ஊதியம் கூட வழங்கப்படவில்லை விமலா வேலைக்குப் போய் ஈட்டும் சொற்ப வருவாயும் லீலா சுந்தரய்யா அவ்வப்போது அனுப்பும் சிறு உதவியும் தான் வயிற்றுப்பாட்டுக்கானது.தனது சகோதரி அகல்யா ரங்கனேக்கள் வீட்டில் ஒரு அறையில் ஒட்டுக் குடித்தனமாக வாழ்ந்தார். மனைவி வேலைக்கு போனதும்; தனது மகன் உதய் தான் அவரது ஒரே பற்றுக்கோடு அவனை பராமரிப்பதிலும் புத்தகங்கள் படிப்பதிலும் நேரத்தை செலவிட்டார்.

அவருக்கு கட்சி வேலை எதுவும் தரப்படவில்லை. கட்சி அலுவலக வராண்டாவில் உட்கார்ந்து படிப்பதும் தனக்கு தானே சதுரங்கம் ஆடுவதுமாக கழித்தார். கட்சி அவருக்கு வேலைதரவில்லை எனினும் கட்சி அலுவலகம் செல்வதை நிறுத்தவில்லை. இந்தச் சூழலில் 1953 ஆம் ஆண்டு கட்சித் தலைமைக்கு வரவாய்ப்பிருந்தும் அதனை பி.டி ஆர் நிராகரித்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிட் இயக்க முக்கியத் தலைவர்களில் ஒருவரான என். பிரசாத்ராவ் விவரித்து பிடி ஆரின் சுய கட்டுப்பாட்டை சுட்டிக் காட்டுகிறார். இதனை என். ராமகிருஷ்ணன் தான் எழுதிய நூலில் மேற் கோளாகவும் காட்டுகிறார்.

மதுரையில் கட்சிக் காங்கிர நடைபெற்ற சமயத்தில் பி.டி ஆரும் டாக்டர் அதிகாரியும் கட்சியின் சாதாரண உறுப்பினர்கள் தாம். டிராக்ஸிய வாதிகள், துருக்கியர்கள், பயங்கரவாதிகள் என்று வசைபாடபட்ட எங்களில் சிலர் இவ்விரு தலைவர்களுக்கும் கட்சியில் அவர்களுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமென்று விரும்பினோம். அவர்கள் இருவரும் மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்பினோம். இதற்காகப் பிரதிநிதிகளைத் திரட்டும் வேலை என்னிடம் ஒப்படைக்கப் பட்டது டாக்டர் அதிகாரி போட்டியிட சம்மதித்தார். ஆனால் பி.டி ஆர் போட்டியிட உறுதியாக மறுத்து விட்டார். அவர் மீது மத்தியக் குழுவின் தடை இருக்கும்வரை அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். பெருத்த ஆதரவோடு அவர் வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால் அவர் கட்சிக் கட்டுப்பாட்டில் இறுதியாக இருந்தார்.

மத்தியக்குழு முன் மொழிந்த பெயர் பட்டியலில் டாக்டர் அதிகாரியின் பெயர் இல்லை. ஆனால் நாங்கள் அவர் பெயரை முன் மொழிந்தோம் அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் தன் மீதிருந்த தடை நீக்கப்படும் வரை பி.டி ஆர் கட்சியின் சாதாரணச் சிப்பயாக இருந்தார். அதுதான் அவரது உருக்கு போன்ற கட்டுப்பாடு 1955 ஆம் ஆண்டு மீண்டும் மகாராஷ்டிர மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது வரலாறு. `உளிக்கு பயந்தால் சிலை இல்லை அதுபோல ஒவ்வொரு வெற்றியாளனும் அதற்காக அவன்பட்ட அவமானங்களும் காயங்களும் அளவற்றது. இந்த நூல் நெடுக இத்தகைய காயங்களின் பதிவு நிறையவே உண்டு. பி. ராமமூர்த்தியும், எ. பாலசுப்பிரமணியமும், எம்.ஆர். வெங்கட்ராமனு அவர் கொள்கையில் உறுதியாக நின்றபோது அதனை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள திராணியற்று; அவர்களே அறுத்தும் எறிந்துவிட்ட பூணூலையும், சாதி அடையாளத்தையும் அவர்கள் மீது பூசி அசிங்கப்படுத்திய வக்கிர அரசியல் வேட்டையை எப்படி எழுதுவது. அதே சமயம் இவர்களின் அப்பழுக்கற்ற – சாதி ஆணவமற்ற – ஒடுக்கப்பட்ட மக்கள்பால் அளவற்ற அக்கறையும் கொண்ட அவர்களின் வரலாற்றை உரிமைப் போர் களங்களினூடே நூலாசிரியர் சொல்லியுள்ள பாணி நெற்றியடி எனின் தவறு அல்ல.

அதேபோல கே. ரமணி, வி.பி. சிந்தன், அனந்தநம்பியார், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றவர்கள் மலையாள தேசத்திலிருந்து வந்தவர்கள், ஆயினும் தமிழக உழைப்பாளி மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள். சிண்டன் என்ற பெயரையே சிந்தன் என மாற்றியமைத்தவர் பாரதிதாசன் அல்லவா? சென்னை நகர உழைக்கும் மக்களை திரட்டியதில் முன்நின்றவர் வி.பி.சி. அல்லவா? சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற ஒன்று இன்று இருக்கிறது என்றால் அது தோழர் பி.ஆர். பரமேஸ்வரனும், வி.பி. சிந்தனும், கே.எம். ஹரிபட்டும், பி.ஜி.கே. கிருஷ்ணனும், கே. கஜபதியும் விதைத்த விதைகளின் – உழைத்த உழைப்பின் அறுவடையே ஆகும். பி.ஆர்.பரமேஸ்வரன் வாழ்க்கை வரலாற்றில் ஒரு அத்தியாயத்துக்கு `அமைப்பு மனிதர் என என். ராமகிருஷ்ணன் தலைப்பிட்டிருப்பது தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. நூற்றுக்கு நூறு உண்மையாகும். தோழர் ஏ. நல்லசிவன் வாழ்க்கைக் கதையிலும் இது பொருந்தும். தத்துவ விவாதத்திலும் பிரச்சனைகளை அடியாளம் வரை ஊடுருவி பரிசீலிப்பதிலும் அவர் பாணியே தனி. எளிமையின் இலக்கணம். அவர் சிறைவாழ்க்கை தலைமறைவு வாழ்க்கை என பெரும் தியாகம் செய்தவர். இதை எழுதுகிறபோதே அவருடைய கையொடிந்தது சுதந்திரப்போரில் என்று பொய் எழுதவில்லை மாறாக கிரிக்கெட் பார்க்க மரம் ஏறி கீழே விழுந்து கையை ஒடித்துக்கொண்டார் என்றே எழுதினார் என்.ராமகிருஷ்ணன்.

தொழிலாளி வர்க்கத்தை உசுப்பி எழுப்புவது மட்டுமே தலைமைப் பண்பு ஆகாது. சில நேரங்களில் தொழிலாளி வர்க்கம் தவறி தறிகெட்டு புறப்பட்டு விடுவதுமுண்டு. அப்போது கரைவுடைத்து வரும் அந்த காட்டுவெள்ளத்தை எதிர்த்து நின்று மடைமாற்றிவிடுவது அசாதாரணமானது. நூல் நெடுக அத்தகைய சாட்சிகள் உண்டு. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சென்னையில் மோதல் ஏற்பட்டபோது அதனை துணிச்சலாக எதிர்நின்ற தொழிலாளர்களை அமைதிப்படுத்திய வி.பி. சிந்தன் பணி அடடா… அடடாவே. என். ராமகிருஷ்ணன் இதனை உரிய முறையில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்ல ஒருவர் வாழ்க்கை வரலாற்றை எழுதப்புகும்போது உற்சாக மூட்டும் அம்சங்கள் மட்டுமல்ல, ஊக்கத்தை கெடுக்கும் அம்சங்கள் பலவும் தெரியவரும்.

இப்போதுதான் எழுத்தாளர் இதய சுத்தியோடும் இயக்க அக்கறையோடும் செயல்பட வேண்டியவராக உள்ளார். எல்லா நூல்களிலும் என்.ராமகிருஷ்ணன் இதனை கறாராக பின்பற்றியுள்ளார். பி.டி. ரணதிவே வாழ்க்கை வரலாற்று நூலுக்கு முன்னுரை எழுதிய எம்.கே. பாந்தே கூறுகிறார், பி.டி.ஆருடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட பலகருத்து வேறுபாடுகள் கொண்ட விபரங்களுக்குள் போக ராமகிருஷ்ணன் உணர்வுபூர்வமாக எந்த முயற்சியும் செய்யவில்லை. வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே அவற்றைக் குறிப்பிட்டுள்ளார். (ஏற்கெனவே இதைக் கூறியுள்ளேன்) ஆம், அங்கேதான் என். ராமகிருஷ்ணன் நிமிர்ந்து நிற்கிறார்.

மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். கடந்த காலத்தைப் பற்றிய அறிவு-தெளிவு-உணர்வு இவைதான் வரலாறு என பேராசிரியர் கருணானந்தன் கூறியது. இவர் எழுத்தில் உண்மையாகியுள்ளது. எந்தச் சூழலிலும் தனது கருத்தை யார்மீதும் ஏற்றிச்சொல்ல என். ராமகிருஷ்ணன் முயலவே இல்லை. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பலநூறுபேர்களை பேட்டிகண்டு, நூற்றுக்கணக்கான நூல்களை ஏடுகளைப் படித்துச் சலித்து சேகரித்த விபரங்களை ஒப்பனையின்றி – கற்பனைச் சரடு இன்றி – எளிமையாய் கோர்வையாய் தந்ததில்தான் என். ராமகிருஷ்ணன் வெற்றியுள்ளது.

எம்.கே. பாந்தே வரலாறு சிஐடியு வரலாற்றோடும் அனந்தநம்பியார் வரலாறு ரயில்வே தொழிலாளர் போராட்டத்துடனும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஏ. நல்லசிவன் வாழ்க்கை தமிழக கம்யூனிஸ்ட் கட்சி – குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது. அந்தமான் தீவுச்சிறை நூல் அற்புதமானது. சிறைத்தண்டனை தியாகிகள் மனதை உருக்குலைக்கவில்லை. மாறாக புடம்போட்டது. புத்தகம் அவர்களின் போர்வாளானது. கல்வி அவர்களுக்கு கேடயமானதும் ஆச்சரியமான உண்மை. சமரசங்களுக்கு இடமற்ற போராட்ட குணம், சிறைக்குள்ளும் போராட்டங்கள், படிப்பு, விவாத மேடைகள், மாநாடுகள், கையெழுத்துப் பத்திரிகைகள், தாங்கள் சிறையில் உழைத்துப்பெற்ற சம்பளத்தில் வீரர்கள்வாங்கிய (70 வருடங்களுக்கு முன்பு) தூரகிழக்கின் பிரச்சனைகள், பால்கன் நாடுகள், சோஷலிசம் எதற்காக? என்று நீளும் புத்தகங்களின் பட்டியல் – வெளிநாடுகளுக்கு சந்தா அனுப்பி படித்த நியூயார்க் டைம்ஸ், நியூ ஸ்டேட் மென், லண்டன் டைம்ஸ் என்று நீளும் இதழ்களின் பட்டியல் – இவையெல்லாம் தமது மந்தைத்தனமுள்ள முகத்தில் ஓங்கி அறைகின்றன என்கிறார் வாசல் வெளியீட்டகத்தைச் சார்ந்த ஸ்ரீரசா நூலைப் படித்தபின் அது முழுக்க முழுக்க மெய் என்பதை உணர முடியும்.

இங்கு பட்டியலில் உள்ள 14 தலைவர்களின் வாழ்க்கை சுருக்கத்தையோ – உணர்ச்சி பதிவுகளையோ எடுத்துச்சொல்வது இங்கு என் வேலை அல்ல. அந்நூல்களை படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்நூல்களை என். ராமகிருஷ்ணன் எப்படி நேர்மையாக தந்துள்ளார் என்பதுதான் நம்முன் உள்ள பிரதான அம்சம்.
சமீபத்தில் ஒரு பேராசிரியர் எழுதிய ஒரு கம்யூனிஸ்ட் தலைவனின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்ட நேர்ந்தது. அப்போது என். ராமகிருஷ்ணனின் உழைப்பும் நேர்மையும் கறார் அளவுகோலும் பளிச்சென துலக்கமாயின. உதாரணமாக விடுதலைக்கு முன் எட்டு ஆண்டுகள் விடுதலைக்குப் பின் எட்டு ஆண்டுகள் என பேராசிரியர் அத்தலைவரின் சிறைவாழ்வை குறிப்பிட்டுவிட்டு, அடுத்த வரியிலேயே பல்வேறு கட்டங்களாக மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேலே என தொடர்கிறார். கணக்கு இடிக்கிறது. உண்மையின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் சிறைப்பட்ட அவரின் தியாகம் கூட இவரது பொறுப்பற்ற எழுத்தால் நாளை ஆய்வாளர் சந்தேகப்படுவதாக ஆகிவிடும்.

ஆனால் ராமகிருஷ்ணன் நூல்கள் பல செய்திகள் கட்சி வரலாற்றிலும் – மாவட்ட கட்சி வரலாற்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வாழ்க்கை வரலாறுகளிலும் திரும்பத் திரும்ப வருவது தவிர்க்க முடியாது. சில இடங்களில் சுருக்கமாகவும் சில இடங்களில் விரிவாகவும் வரும். ஆனால் அவற்றுக்கு இடையே தகவல் முரண்பாடு இருக்காது. இதனை பலமுறை நான் ஒப்பிட்டுப்பார்த்துள்ளேன். ஆர். உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது இந்த ஒப்பிட்டுப்பார்க்கும் தேவை எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னரும் பல நூல்கள் எழுதும்போது இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.

வார்த்தை ஜோடனைகளுக்காக கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தகவல்களை உள்ளது உள்ளபடி தருவதும், அதனை தகவல்கள் சிலரின் வாய்மொழிக் கூற்றாகவோ அல்லது நூல் ஆதாரங்களின் அடிப்படையிலோ அமைந்திருப்பதும் அவரது எழுத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
உன்னுடைய வாழ்க்கையை விவரித்த பின்னரும்
பயன்படுத்துவதற்கு இன்னும் ஏராளமான
வார்த்தைகள் உள்ளன என்றால்,
சொல்ல வேண்டியதை எல்லாம்
சொல்லிவிட்டோம் என்பதல்ல, ஆனால்
உன்னைக் குறித்து
முழுமையாகச் சொல்வதற்கு
நாங்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்
என்ற காரணத்தால்தான் என்கிற மகாகவி காளிதாஸ் கவிதை வரிகள்
பி.ஆர். நூலின் முதல் பக்கத்தில் இடம் பெறச் செய்திருப்பார். அதே கவிதையை இவருக்கு அப்போது நாம் சமர்ப்பிக்கலாம். அது வெறும் புகழ்ச்சி ஆகாது, உண்மையாகும்.

தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் குறித்து அவர் நிறையவே சொல்லியிருப்பினும் சிங்காரவேலர் குறித்து இவர் தனியாக எழுதவில்லை.தோழர் ஏ.கே. கோபாலன், சுந்தரய்யா போன்றோர் வாழ்க்கை சுயவரலாறு வெளிவந்துவிட்டதால் இவர் எழுதாமல் தவிர்த்திருக்கக்கூடும்; அதே சமயம் பிரமோத் தாஸ்குப்தா, பசவபுன்னையா போன்றோர்க் பற்றிய பதிவும் சென்னை, தஞ்சை மாவட்ட(இன்று அதுவே பலமாவட்டங்களாகிவிட்டன) வரலாறுகள் எழுதப்படுவதும் அவசியம். அவரிடம் உரிமையோடு இவற்றை எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக மேல் கூறியவற்றையும் எழுதியபின், இவரது நூல்களை வரிசைக்கிரமமாகத் தொகுத்து. கூறியதை கூறாமல் எடிட் செய்து நான்கைந்து பாகங்களைக் கொண்ட தொகுப்பாக வெளியிடுவது மிகமிக அவசியம். நாளை நிச்சயம் உழைக்கும் மக்கள் ஆட்சி செய்வார்கள். அப்போது வரலாற்றை உண்மையாக எழுத முயற்சிப்பார்கள். அதற்கு ஆவணமாக இத்தொகுப்புகள் அமையும். தமிழக உழைக்கும் மக்கள் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுத முயலும் எந்தத் கொம்பனும் இவரது நூல்களை மேற்கோள் காட்டாமல், இதிலிருந்து விபரங்களை எடுத்தாளாமல் எழுதவே இயலாது. ஏனெனில் இது அடிப்படை ஆதாரமாக ஆவணமாக அத்தாட்சியாக அடிப்படையாக உள்ளது.

என். ராமகிருஷ்ணனின் எழுத்துப்பணிக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள். உங்கள் உழைப்பும் நேர்மையும் எளிமையும் இனி யாருக்கும் வராது. உங்கள் முன் நாங்கள் மண்டியிடுகிறோம். வணங்குகிறோம். எங்களின் வேர்களை எங்களுக்குக் காட்டியதற்காக….
டால்ஸ்டாயின் கவித்துவமான வரிகளோடு என் உரையை நிறைவு செய்ய விழைகிறேன்.
ஒரு தேனீ பூவின் மேல் அமரும்
வேளையில் ஒரு குழந்தையை கொட்டியது
தேனீயைக் கண்டு அஞ்சிய அக்குழந்தை
மக்களைக் கொட்டுவதற்காகவே தேனீக்கள்
வாழ்கின்றன என்றது.

தேனீ பூவிதழ்களை ருசிப்பதைப்பார்த்த ஒரு கவிஞன்
பூக்களின் நறுமணத்தை நுகர்வதற்காகவே
தேனீக்கள் வாழ்கின்றன என்றான்

மற்றொரு தேனி வளர்ப்பவன்
தேன்கூடுகளின் உயிரியலை
நெருக்கமாகப் பார்த்து
தேனீ மகரந்தத் தூள்களை எடுத்துக் குட்டித் தேனீகளுக்கு உணவு அளிப்பதற்கும்
ராணித் தேனீயை மகிழ் விப்பதற்கும் – அவை தனது
வம்சத்தை விருத்தி செய்வதற்காகவும்
வாழ்கின்றன என்றான்.

தேனீ ஆண்மலரின் மகரந்தத்தை
பெண்மை உறுப்புக்கு
எடுத்துப் பறந்து செல்வதைப் பார்த்த
ஒரு தாவரவியல் அறிஞர்
அது அம்மலரை
செழிப்பாக்குவதற்குத்தான் செல்கிறது;
அதுவே அதன் இருத்தலுக்கான அம்சம் என்றான்

தாவரங்களின் குடிபெயர்வை
பார்த்த இன்னொருவன்
தேனீக்கள்
இந்த குடிபெயர்வுக்கு
உதவுவதாக கூறினான்
தேனியின் வாழ்வின் அர்த்தம் என்றான்
ஆனால்

தேனீயின் தேடல்
முதலில் கூறியதிலோ
இரண்டாவது கூறியதிலோ
அல்லது மனித அறிவில்
பகுத்துப்பார்க்க முடிகிற பலவற்றாலோ
முடிந்த முடிவாவதில்லை

தேனீயின் தேடல் பற்றிய
கண்டுபிடிப்புகள் மனித அறிவு வளர வளர
அதன் இருத்தலுக்கான அர்த்தம்
மேலும் மேலும் நம்முடைய புரிதலுக்கும்
அப்பால் இட்டுச் செல்கிறது

மனிதன் பார்க்க முடிவதெல்லாம்
தேனீயின் வாழ்வியலோடு
பிற உயிர்களின் உறவை மட்டும்தான்
எனவே அதுபோலவேதான்
வரலாற்றுக் கதாபாத்திரங்களின்
இருத்தலும் தேசத்தின் இருத்தலும்

என். ராமகிருஷ்ணன் எழுதிய நூல்கள்
1. பிரெஞ்சுப் புரட்சி
2. ரஷ்யப் புரட்சி புதிய பார்வை
3. சாசன இயக்கம்
4. அயர்லாந்து 800 ஆண்டு விடுதலைப்போர்
5. நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள்
6. உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு
7. மாமேதை மார்க்ஸ் மறைந்தபொழுது
8. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (1917 1964)
9. அந்தமான் தீவுச்சிறை
10. சுதந்திரப் போரில் தமிழகக் கம்யூனிஸ்ட்கன் மகத்தான பங்கு
11. மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
12. கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
13. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
14. வடாற்காடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
15. தமிழக வானில் செங்கொடி இயக்கம் 85 ஆண்டுகள் வாழ்க்கை வரலாறுகள்
16. காரல் மார்க்ஸ்
17. ஜென்னி மார்க்ஸ்
18. மா சே துங்
19. ஹோ சி மின்
20. ஆங் சான் சூ கீ
21. மார்ட்டின் லூதர் கிங்
22. அம்பேத்கர்
23. பெரியார் ஈ.வெ.ரா
24. முசாபர் அகமது
25. பி.டி. ரணதிவே
26. பி. ராமமூர்த்தி
27. எம்.ஆர். வெங்கட்ராமன்
28. வி.பி. சிந்தன்
29. கே. ரமணி
30. ஏ. பாலசுப்ரமணியம்
31. கே. வைத்தியநாதன்
32. கே.பி. ஜானகி அம்மா
33. லீலாவதி
34. பேராசிரியர் சண்முகசுந்தரம்
35. மருத்துவர் த.ச. இராசாமணி
36. மாஸ்டர் ராமுண்ணி
37. ஜி. எஸ். மணி
38. பி.எஸ். தனுஷ்கோடி
39. என். வெங்கடாசலம்
40. ஏ. நல்லசிவன்
41. கே. அனந்தநம்பியார்
42. சி. கோவிந்தராஜன்
43. கே.எஸ். பார்த்தசாரதி
44. பி.ஆர். பரமேஸ்வரன்
45. கே.எம். ஹரிபட்
46. பி. சீனிவாசராவ்
47. ஆர். வெங்கிடு
48. எம். நஞ்சப்பன்
49. ஐ. மாயாண்டி பாரதி
50. கே. முத்தையா
51. அ. அப்துல் வஹாப்
52. வி. ராமசாமி
53. தமிழகத் தொழிற்சங்க முன்னோடிகள்

ஆங்கிலம்
1. B.T. Ranadive An epic story of an indomitable fighter 2. P. Ramamurti A Centenary tribute
3. Life and Times of K. Ramani 4. Samar Mukherj’ee: From Freedom movement of class struggle
5. Dr. M.K. Pandhe: A life f struggles
மற்றும் ஆங்கிலித்திருந்து தமிழாக்கம் செய்தவை 25 நூல்கள்.
1. சேலம் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எழுச்சிமிகு வரலாறு
2. து. ஜானகிராமன் வாழ்க்கை வரலாறு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *