மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம்
நவீன தொழில்நுட்பமும் சமூக ஊடகங்களும் குழந்தைகளின் சிந்தனைகளையும், விடுமுறை நாட்களில் 24/7 பொழுதுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஒரு பள்ளி மாணவியின் சிந்தனையும் கற்பனை வளமும் சேர்ந்து படைப்பாளியாக சங்கம் வைத்து வளர்த்த தமிழ்நாட்டில் உருவெடுக்க வைத்துள்ளது என்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
ஆசிரியர் பற்றி :
ஆசிரியர் பற்றி என கூறும் பொழுதே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது . ஒரு பள்ளி மாணவியை ஆசிரியர் என்று கூற வைப்பதற்கு அவர் ஒரு படைப்பாளராக இருந்தால் தான் கூற முடியும் அல்லவா…? அப்படி அவர் உருவெடுக்க காரணமாக இருந்தது அவர்கள் அம்மா தினந்தோறும் படிக்கும் கதைகளும் , படித்த கதைகளை இரவு பொழுதுகளில் சுவாரசியமாக மகளுக்கு கூறியதும் என்றால் மிகை இல்லை.
சிறுவர்களிடம் புத்தகங்களின் பெயர்களைக் கேட்டாலே தெரியாது . ஆனால் இந்த ஆசிரியர் எனக்கு மிகவும் பிடித்த புத்தகமான “ஓநாய்க்குலச் சின்னம்” போல ஒரு மிகப்பெரிய நாவலை எழுதுவேன் என்று கூறும் பொழுதே அவரின் எதிர்கால நோக்கு என்னவாக இருக்கும் என்பதை நாம் எளிதாகக் கண்டுணரலாம்.
இனி நூல் பற்றி:
பத்து கதைகள் . பத்து கதைகளும் குழந்தை ஆசிரியரின் அட்வென்ச்சர் + பேண்டஸி போன்ற பல கற்பனையைத் தூண்டக்கூடிய அளவில் உருவாகியுள்ளது. ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் பொழுது உண்மையிலே இந்த நூலின் ஆசிரியர் ஒரு குழந்தை நட்சத்திரமா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது . அந்த அளவுக்கு கற்பனைத் திறன் மெருகேறி உள்ளது.
ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு புதிய விஷயத்தை உள் நுழைத்திருக்கிறார் . சில கதைகளில் இதை எப்படி கொண்டு போகப் போகிறார் என்பதை நாம் கணித்திருக்க , அதற்கு வேறு திசையில் முடிவு தந்திருப்பார் . ஒரு படைப்பாளனுக்கு மிக அவசியமானது இந்த திறன் தான். வாசிப்பாளர்கள் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் வேறு வகையில் கதையின் முடிவைத் தந்து கதையை சுவாரசியப்படுத்துவது.
📌மை டியர் மாயன் கதையில் மாயன் எதனால் இறந்து போகிறான்..? அவுட்டுக்காய் என்றால் என்ன..? என்று கூறுகிறார்.
📌மணிப்புறா கதையில் ஒரு விலங்கு மற்றொரு விலங்குக்கு காட்டும் இரக்கம் ,ஒரு இனம் தன்னோடு பிற இனத்தை ஏற்றுக் கொள்ளும் பாங்கு என கதை ஒளிர்கிறது.
📌 மந்திரத் தொப்பி கதையில் சிறுவர்கள் மாயாஜாலத்தின் மீது கொண்ட ஈர்ப்பு , ஒரு கலையைக் கற்றுக்கொள்ள தகுந்த வயது காலம் வரவேண்டும் என்ற அறிவுரைகள் அருமை.
📌 இறக்கை – கண்ணுக்கினியால் எனும் சிறுமி , அவரைக் கொடியின் மேலே சிறுவன் செல்வது போல் தானும் செல்ல வேண்டுமெனில் இறக்கை வேண்டும் என்று நினைக்கும் போது , அதற்கு கல்விதான் ஆதாரம் என்று மருத்துவர் சொல்லும் அறிவுரை அபாரமான சிந்தனை.
📌 நிலாவில் ஒரு சிறுவன் கதையில் நெகிழியால் பூமியில் ஏற்படும் கேடுகளை ஏலியன் கூறுவது போல சொல்லிருக்கும் அழகு கதை சொல்லிக்கே உள்ள தனி அழகு.
இப்படி ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு உள்ளார்ந்த கற்பனையோடும் கதை பின்னும் திறனோடும் நம்மை வியக்க வைக்கிறது. கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நகர்வு, ஒவ்வொரு மாந்தர்களையும் அறிமுகம் செய்யும் விதம் என கதையின் நேர்த்தி கைத்தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் நூல் என்று அறிமுகம் செய்கிறது. இன்னும் ஸ்ரீ யக்க்ஷா பல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் கதை சொல்லலைத் தவற விடுகையில் ஒரு ஆகச் சிறந்த படைப்பாளன் உருவாவதை தடுக்கின்றோம் என்பதை இந்த நூல் எனக்கு சொல்லிச் செல்கிறது.
எல்லோரும் கதை சொல்லியாக மாற வேண்டும் என நினைக்கும் நான்…
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர்: மந்திரத் தொப்பி
ஆசிரியர் : ஸ்ரீ யக்க்ஷா
விலை : 80
பக்கங்கள் : 80
தலைப்பு : சிறுவர் இலக்கியம்
நூல் அறிமுகம் எழுதியவர் :
✍️ பா விமலா தேவி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.