மந்திரத் தொப்பி – நூல் அறிமுகம்
அரசுப்பள்ளி தான் குழந்தைகளுக்கு சுதந்திரத்தை வழங்கும்; கண்ணியமிக்க குழந்தைப்பருவத்தை பாதுகாக்கும். சிந்தனைத் திறன்களை தட்டியெழுப்பும். அதற்கு உதாரணம் தான் குழந்தை ஸ்ரீயக் ஷா. ஆம் இந்நூல் அவரின் வளமான சிந்தனைகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது.
வாசிப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் வானம் வசப்படும் என்பதற்கு இக் குழந்தையும், அவருடைய தாயாருமே சாட்சி.
ஆம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேசலாடா ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் மாணவியின் அருமையான சாதனை தான் இந்நூல். குழந்தையின் தாய் ஆகச்சிறந்த வாசிப்பாளர் என்பதை கேசலடா பள்ளியின் தலைமை ஆசிரியர் தோழர் பெ. ஜெயசீலன் அவர்களின் வழியே அறிந்தபோது அவ்வளவு மகிழ்ச்சி.
நூலின் ஆக்கம் ஆகச்சிறந்த கற்பனைத் திறம். கதைகள் ஒவ்வொன்றும் சிந்தனைகளை வாரி கொட்டிச் செல்லும். பத்து கதைகளிலும் பறந்து செல்லும் சுதந்திரப் பறவைகளின் உணர்வுகள் நமக்கு ஏற்படும். வாசித்த பின்பு குழந்தைகளின் மீது இன்னும் கூடுதல் அன்பு பெருகும். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் எண்ணமும் பெருகும். அப்படித்தான்
குழந்தை ஸ்ரீயக் ஷா நம்மிடையே உலா வருகிறார் இந்நூலின் வழியே. அப்பப்பா பத்து வயதுக்குள் எவ்வளவு நேசம்! குழந்தைகளை சுதந்திரமாக வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்என்பதை தனது கற்பனைத் திறன்மூலம் அபாரமாக வெளிப்படுத்துகிறார். நாமே நம்மை கேட்டுப் பார்த்துக்கொள்வோமே நாம் சிறிய வயதில் மணலில் ஓடி ஆடி விளையாடி உடம்பு முழுவதும் மணலை நிரப்பி வீடு சென்ற காலங்களை இன்று அதேபோல் நமது சந்ததியினருக்கும் வழங்குகிறோமா? குழந்தை ஸ்ரீயக் ஷா நம்மிடம் அதை கேள்வியாக கேட்காமல் கதையாகக் கூறி நம்மை சிந்திக்க வைக்கிறார்.
அப்படி அவர் எழுதிய கதை ஒன்றினை உங்களோடு பகிர்கிறேன் தோழர்களே
‘நிலவில் ஒரு சிறுவன்’
சிறுவன் வீட்டில் நான்காவது பிள்ளை. மூன்று குழந்தையும் பெண்ணாக இருந்ததால் நான்காவதாக பிறந்த குழந்தைக்கு இரு பாட்டிகளும் பெயர் வைப்பதில் போட்டி. இறுதியாக குழந்தையின் அப்பா சிவராம் என்று இரு பெயரை இணைத்து வைத்தார். குழந்தை தன்னுடைய பெயரை ராம் என்றே அழைத்துக்கொள்ள விரும்பினான். சரியாக பள்ளி போக மாட்டான். பாட்டிகள் நிறைய கதை சொல்வார்கள். அதில் ஒன்று நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை. இப்படியாக நாட்கள் கடந்தபோகிறது. நண்பர்களுடன் மீன் பிடிக்க செல்வான் பள்ளி செல்லாமல். அப்படித்தான் ஓர் நாள் ஆற்றுக்குச் செல்கிறான். அங்கே இருந்த தடுப்பணையில் மீன் பிடிக்க நண்பர்கள் யாரும் வரவில்லை. ராம் அப்படியே கறையில் படுத்திருக்கிறான். சிறு வயது முதலே ராம் நிலவுக்குப் போகும் ஆசையில் இருந்துள்ளான். அப்படி கண்ணை மூடியிருந்த போது சத்தம் கேட்டு வந்த திசையை பார்க்கிறான். ஒரு பறக்கும் தட்டு. அதில் ஏலியன் வந்து இறங்குகிறது. வா ராம் நான் உன்னை நிலவுக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறும். ராம் பயந்துவிடுவான். பயப்படாதே என்று கையை பிடித்து அழைத்துச் செல்லும். விண்வெளியில் போகும் வழியில் மனிதர்கள் பூமியின் சுற்றுச்சழலை எவ்வளவு தூரம் கெடுத்து வைத்துள்ளார்கள் பார் என்று பூமியை சுற்றியிருக்கும் மாசுவை காட்டிச் சென்றது. அதில் நெகிழி சார்ந்த அவ்வளவு மாசு இருந்ததை கண்டு ராம் மிரண்டு விடுகிறான். இப்படியாக நிலவுக்குச் சென்று காலடி வைத்த முதல் சிறுவன் என்ற பெருமையுடன் னது பாட்டிகள் சிறு வயதில் கூறிய பாட்டி வடை சுட்ட இடத்தை தேடினான்.
உடனே ‘என்ன தேடுகிறாய்? என்று கேட்ட’ ஏலியன் ‘இதென்ன பேக்கரியா இங்கே வடை சுட்டு விற்க?’ என்று கூறி மனிதர்கள் பூமியை சீரழித்தது போல் வேறு எந்த கிரகத்தையும் கண்டுபிடித்து சீரழிக்காமல் இருந்தால் சரி என்று கூறிய ஏலியன் மறுபடியும் சிறுவன் ராமை பழையபடி பூமியில் இருந்த பாறையில் கொண்டு வந்து விட்டுவிட்டு மறுபடியும் சந்திப்போம் என்று கூறி விடைபெற்றுச் சென்றது ஏலியன். இரவு ஆகியும் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடி வருகின்றனர். எதுவும் தெரியாதது போல் ஆற்றின் தடுப்பணை கறையில் நின்றிருந்த ராம் குரல் கொடுத்து பெற்றோரிடம் சேர்ந்தான். இவ்வளவு நேரம் இங்கே என்ன செய்கிறாய் என்று பெற்றோர்கள் கேட்க தூங்கிவிட்டேன் என்று சமாளித்தான். அன்றிலிருந்து நிற்காமல் தினமும் பள்ளி செல்வான்.
எப்படியாவது பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று உறுதியேற்றான் என்று கதையை முடிக்கிறார் குழந்தை ஸ்ரீயக் ஷா. அபார சிந்தனை கொண்ட இக்குழந்தையை எப்படி பாராட்டினாலும் தகும். இன்னும் இருக்கும் ஒன்பது கதைகளை வாசித்து குழந்தையின் நல்ல சிந்தனையைபோல் நம்மை சுற்றியிருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் நல்ல சிந்தனைகளை வெளிப்படுத்த அனுமதிப்போம். குழந்தைகளிடம் இயல்பாக உரையாடினால் நமக்கு அவர்கள் நம் கைப்பிடித்து அழைத்துச் செல்வார்கள் உலகை சுற்றிக் காட்ட. குழந்தைகளுடன் இயல்பாக அவர்களுக்கு இணையாக இறங்கி வந்து அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு வழி வகுப்போம். ஒருபோதும் தேர்வுகள் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டாது. மேல் வகுப்பிற்கு தேர்வுகள் ஓர் அளவுகோல் அல்ல. அவர்களின் செயல்பாடுகளே எல்லாவற்றையும் உயர்த்திக் காட்டும் அளவுகோல். அதற்குத் தேவை உரையாடல். குழந்தைகளுடன் உரையாடுவோம். உரையாடலுக்குத் தேவை வாசிப்பு.
குழந்தை ‘ஸ்ரீயக் ஷா’விற்கு உறுதுணையாக இருக்கும் அவரது தாயாருக்கும், கேசலடா அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தோழர் பெ. ஜெயசீலன் அவர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. குழந்தை ஸ்ரீயக் ஷா அவர்களுடன் நேரடியாக உரையாடிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளேன். அது எப்போது என்று தான் தெரியவில்லை. அப்படிப்பட்ட சிறந்த குழந்தையின் சிறந்த பெற்றோர், சிறந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல்கள் :
நூல் : மந்திரத் தொப்பி
சிறுவர் கதைகள்
ஆசிரியர் : ஸ்ரீயக் ஷா
வெளியீடு : ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ்
ஆண்டு : நவம்பர் 2024
விலை : ரூ. 80
நூலைப்பெற : 8072903442
நூல் அறிமுகம் எழுதியவர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.