கதை :  சாலமன் ஒரு கர்நாடகாவில் உள்ள திராட்ஷை தோட்டத்து உடமையாளன். விவசாயி. மைசூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு ஒருமுறை வருகையில் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக வாடகைக்கு வந்திருக்கிறது. அதில் சோபியா என்கிற பெண்ணிருக்கிறாள். அவளை அவனுக்குப் பிடித்துப் போகிறது. அவளுக்கு தனது வீட்டில் நிகழ்கிற வாழ்வு ஒரு நரகம். அவள் அதிலிருந்து தப்பித்து செல்ல போராடிக் கொண்டிருக்கிறாள். சாலமன் அதற்காக முட்டிமோதி, எல்லாவிதமான இடர்களையும் வெற்றி கொண்டு அவளை தனது திராட்ஷை தோட்டத்துக்கு அழைத்து செல்கிறான்.

அவ்வளவு தான்.

எவ்வளவு சுலபமாயிருக்கிறது இது?

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக படத்தை மீண்டும் ஒருமுறை இப்போது பார்க்கும்போது இப்படி எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கில்லை.

நாவலாக வெளிவந்த கதை. கே கே சுதாகரன் என்பவர் எழுதியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அதை இப்போது தேடிப் படிக்கிற வாய்ப்பில்லை. அவர் அதை எந்த மாதிரி கதையாக சொல்லியிருக்கக் கூடும் என்பதையும் என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் பத்மராஜன் செய்கிற திரைக்கதையின் கூறுகள் என்னவென்பது தெரியும். நாவலாசிரியர் எதையெல்லாம் எழுதியிருந்தால் அவற்றை இவர் எடுத்துக் கொள்வார் என்பது தெரியும். நிஜமாகவே பத்மராஜன் படங்களில் உச்சம் பெற்ற திரைக்கதைகளில் ஒன்றாக இது இருக்கிறது. ஒரு படத்தின் இயக்குனர் என்கிற முறையில் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவர் விரும்பி வைத்திருப்பது தான். படத்தின் திரைக்கதை அவர்தான்.

Namukku Parkkan Munthiri Thoppukal (1986)

முன்னொரு நாளில் பெயர் மறந்து விட்ட, உலக சினிமா ஒன்றில் பார்த்த காட்சியை பல பேரிடமும் பேச வேண்டி வந்திருக்கிறது. படத்தின் நாயகன் நேரம் கெட்ட நேரத்துக்கு நள்ளிரவில் ஒரு ஊருக்கு வந்து சேருகிறான். கொஞ்சமும் வெளிச்சமில்லை. தட்டுத் தடுமாறி நடந்து, மேட்டில் ஏறி, பள்ளத்தில் விழுந்து ஒரு வீட்டை தட்டி சாவி வாங்குகிறான். அங்கே மின்சாரமில்லை. அங்கிருந்து அவன் தங்க வேண்டிய வீட்டை அடைந்து, எப்படியோ கதவைத் திறந்து, படுக்கையறையில் புகுந்து கட்டிலில் விழுகிறான். அழுத்துகிற சோர்வின் கனம் தாங்கமாட்டாமல் உடனடியாக தூங்கியும் போகிறான். இதுவரை படத்தில் நாம் பார்த்தது எல்லாமே இருளாக இருந்தது. அப்புறம் அவனது முகத்தில் இலேசான வெளிச்சம் விழுந்திருப்பதைப் பார்க்கிறோம். கண் விழிக்கிறான். அவன் படுக்கையை விட்டு எழுந்து சோம்பல் முறித்து நடக்கும்போது காலை புலர்ந்து விட்டதை அறிகிறோம். அவன் கதவைத் திறக்கிறான். முகம் மலருகிறது. அவன் பார்க்கும் திசையில் அவ்வளவு பேரழகுகள். கம்பீரமாக ஒரு மலை எழுந்து நின்று கொண்டிருக்கிறது. மரங்கள் வெயிலை எதிரொளித்து காற்றுடன் அசைந்து கொண்டிருக்கின்றன. பார்வையாளர்களை துணுக்குற வைக்கிற ஒரு காட்சியனுபவம். இக்காட்சியைப் பார்த்த அந்த நிமிடமே நான், உடனடியாக  ‘  நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்  ‘ என்கிற இப்படத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். இப்படத்தில் ஆரம்பக் காட்சியுமே அதுதான். நான் பார்த்த அந்த உலக சினிமாவைக் காட்டிலும் அற்புதமான காட்சியாக அதை செய்திருந்தார் பத்மராஜன். மேலும் ஒன்றை சொல்ல வேண்டும், படத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது அது.

நான் துவக்கத்தில் சொன்ன கதைக்கு இப்படிதான் காட்சி அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமே கிடையாது. ஆனால் அப்படி சொன்னதால் படத்தின் திரைக்கதை உடனடியாக விறுவிறுப்படைந்தது.

நள்ளிரவு. சாலையில் வந்து கொண்டிருக்கிற டேங் லாரி அந்த வீட்டின் முன்பு வந்து நிற்கிறது. சாலமன் இறங்குகிறான். ஹார்ன் அடிக்கிறான். அம்மா, அம்மா என்று சத்தம் போடுகிறான். படிப்பதற்காக அந்த வீட்டில் வந்து தங்கியிருக்கிற அவனது மாமன் மகன் ஆண்டனி வந்து கதவைத் திறக்க அவனிடம் குசலம் பேசியிருந்து அம்மாவை எழுப்பி வீட்டின் பணிப்பெண்ணை எழுப்பி அந்நேரத்தில் சப்பாத்தியும் சிக்கனும் சாப்பிடுகிறான். அவர்களை அனுப்பி விட்டு தூங்காமல் ஆண்டனியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். சும்மா தான், எப்பவாவது இப்படி ஒரு இரவு வந்து விட்டு காலையில் போய் விடும்போது கொஞ்ச ரகளையெல்லாம் செய்ய வேண்டாமா என்கிறான். எல்லாம் அம்மாவின் திருப்திக்காக தான் !  தூங்கி, விடிந்தவுடன் சாலமன் பார்க்கிற சன்னலில் இயற்கை அழகு கொண்டிருப்பது மட்டுமல்ல, தனது தங்கை எலிசபத்துடன் தோட்ட வேலை செய்கிற சோபியா ! சாலமன் வழக்கப்படி தனது லாரியை எடுத்துக் கொண்டு கிளம்பவில்லை.

Namukku Parkkan Munthiri Thoppukal (1986)

சோபியா அந்த வீட்டில் நன்றாக இல்லை. ஒரு வேலைக்காரியாக இருந்து தன்னை மறக்கடித்துக் கொள்ளுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளும்போது மிக சாதாரணமாக அவளை நெருங்கி அவனால் பேச்சு கொடுக்க முடிகிறது. எதற்க்காக அழுதாய் என்கிற கேள்விக்கு அவள் மழுப்பியவாறு இருக்கிறாள். மைசூருக்கு வந்து இங்கே இருக்கிற இடங்களையெல்லாம் சுற்றிப் பார்த்தாயிற்றா என்று கேட்கிறான். இல்லை, அவளுக்கு அப்படியெல்லாம் வாய்ப்பேயில்லை.  அவளாகவே தான் கேள்விப்பட்டிருந்த சாலமனின் திராட்ஷைத் தோட்டம் பற்றிக் கேட்க, நான் அங்கே உன்னைக் கூட்டிப் போகிறேன் என்கிறான். அவள் துணுக்குற்றுப் பார்க்க சற்று மழுப்பினாலும் திராட்ஷைத் தோட்டங்களில் ராத்தங்கி விடியலில் அற்புதங்கள் பூ விரிக்கிற அழகுகள் பார்ப்போம் என்கிற சாலமன் சங்கீத வசனம் சொல்லுகிறான். அவளது கண்களில் கனவு விரிய, தன்னை மறந்து அவள் அவனை வெறித்துக் கொண்டு நிற்கிறாள்.

சற்றே வருகிற ஒரு தயக்கத்துடன் சாலமன் அவளிடம்,  இதற்கு அடுத்ததாக வரக் கூடிய வசனம் என்னவென்று தெரியுமா என்று கேட்கிறான். அவள் தெரியவில்லை என்று சொல்லி அவனிடமே அதை என்னவென்று கேட்கும்போது சென்று பைபிளை எடுத்துப் பார் என்று கூறி விட்டு நகர்ந்து விடுகிறான்.

ஆண் மற்றும் பெண் இருவரும் தனித்தனி. சமத்துவம் கேட்பது வேறு. பெண் ஆணாகவோ, ஆண் பெண்ணாகவோ மாறுவது வேறு. ஒரு ஆணுக்குரிய கம்பீரங்கள் கண்டிப்பாக ஒரு ஆணிடம் இருக்க வேண்டும். அது குஸ்தி கற்றுக் கொண்டிருப்பதோ, ராணுவத்தில் ஏறி துப்பாக்கி சுடுவதோ அல்ல. உலகின் நைந்து போன சடங்குகளை எல்லாம் புரிந்தவாறிருந்து, அதைக் கடந்தவாறிருந்து வாழ்வை இயல்பாக ஏற்று இருத்தல். கஷ்டம் சுமக்கிற பெண் என்கிற ஒன்றைப் புரிந்து கொண்டதும் அவளை அதில் இருந்து காப்பாற்றி அவளைப் பறக்க வைக்க வேண்டும் என்பதை அவன் எப்போதோ முடிவு கொண்டு விட்டான். சமூகம் ஏற்கிற எந்தத் தகுதியும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதையும், சாலமன் எப்படிப்பட்டவன் என்பதையும் அவன் நள்ளிரவில் வந்த அந்தக் காட்சி முடிவு செய்கிறது. அவன் அட்டவணைப் போட்டுக் கொண்டு உலகின் சம்பிரதாயங்களை தலையாட்டிக் கொண்டிருப்பவன் அல்ல. அவன் அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பார்வையாளர்களே கூட முடிவு செய்து விட முடியும். ஆகவே தான், அப்படி இருக்கவே தான்  தனக்கு மனதில் என்ன உள்ளதோ அதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்பதை முடிவெடுத்து அதை சொல்லியும் இருக்கிறான். சோபியா உடனடியாக சென்று பைபிளை எடுத்துப் படிக்கிறாள்.

Namukku Parkkan Munthiri Thoppukal - Most Romantic Lyric - YouTube

“ அங்கே வைத்து நான் உனக்கு என் அன்பைத் தருவேன் ! “

இருவரும் காதலர்களாகி விடுகிறார்கள்.

படத்தில் பைபிள் மேலும் பங்கு வகிக்கிறது.

ஆண்டனி கல்லூரிக்கு தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அவன் சாலமனைப் பார்க்க தோட்டத்துக்கு கிளம்பிப் போகிறான். சொல்லுவதற்கு ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டதற்கு சோபியா ஒரு கடிதம் எழுதிக் கொடுத்திருந்தாள். அதில் சில எழுத்துக்களும் எண்களும் தான் இருக்கின்றன. அவைகளின் விவரங்களை அறிந்து கொள்ள மறுபடியும் அவர்கள் சாலமன் சங்கீதம் படிக்கிறார்கள். அதில் அவள் அவன் மீது வைத்திருக்கிற மதி மயங்கிய காதல் இருக்கிறது. அவளுக்கு இருக்கக் கூடிய நெருக்கடிகள் தனக்கு பயம் தருவதை சொல்லியிருக்கிறாள். அவனை தான் எப்போது காண முடியும் என்கிற மோகத்தையுமே வெளிப்படுத்தி முடித்திருக்கிறாள்.

சொல்லப் போனால் அந்தப் புத்தகத்தைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் சம்மந்தப்பட்ட மத வாழ்விலிருந்து தள்ளியிருந்த அவள், இப்போது அதைப் படித்து படித்து பண்டிதையாகி விட்டிருக்கிறாள்.

தன்னைக் காண வந்த விருந்தினனான ஆண்டனிக்கு அன்று இரவு பார்ட்டி. தன்னிலும் இளையவனான அவனுக்கு குடிக்க பியர் கொடுக்கிறான். அவனுக்கு அந்த முதல் அனுபவத்தை ஊட்டி விடுகிற அளவில் சாலமன் செல்லுவதைக் கூட பார்க்கிறோம். போதையாலும் தூக்கத்தினாலும் படுத்து விடுகிற ஆண்டனி ஓடிக் கொண்டிருந்த படத்தை தொடர்ந்து பார்க்க விரும்பவில்லை, ஆனால் மேட்டர் படம் பார்க்கிறாயா என்று கேட்டதும் எழுந்து உட்கார்ந்துகொண்டு விடுகிறான். இருக்கா, இருக்கா என்கிறான். அவனுக்கு அதை எடுத்துக் கொடுத்துவிட்டு, அதைப் பற்றின அறிமுகங்களையும் சொல்லிவிட்டு தனது காதலியைப் பற்றி கனவு காண வெளியே செல்லுகிறான் சாலமன். படத்தில் பல ஒழுக்கங்களும் பேணப்படவில்லை என்று வளராதவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் சாலமன் வளர்ந்தவன் என்பதுதான் திரைக்கதை.

அந்தத் திரைக்கதையின்படி அவன் தனது எதிரியான பால் பள்ளிக்கோரனை சந்தித்தாக வேண்டும்.

Namukku Parkkan Munthiri Thoppukal (1986), a Siemens VCR and ...

பால் ரயில்வேயில் வேலை செய்பவர். பல இடங்களுக்கு மாற்றலாகி இப்போது மைசூருக்கு வந்தவர். யாரிடமோ உறவு கொண்டு நம்பியிருந்து, அவரால் கைவிடப்பட்டு மூன்று வயது பெண் குழந்தையான சோபியாவுடன் தனிமையில் இருந்த பெண்மணியை தன்னோடு சேர்த்துக் கொண்டவர். தன்னை அவர் ஒரு தியாகியாக கருதிக் கொண்டு அதிலிருந்து பிறக்கிற அதிகாரத்தை நிரந்தரமாக்கிக் கொண்டு விட்டவர். அவருக்கும் அவள் மூலமாக எலிசபெத் என்கிற குழந்தை பிறந்து வளர்ந்தாயிற்று. சோபியாவை சரியாக படிக்க வைக்கவில்லை. ஒரு வேலைக்குப் போக சம்மதிப்பதில்லை. தற்போதைய நோக்கம் அவளுக்கு ஒரு திருமணத்தை செய்து அனுப்பி விட வேண்டும். எல்லாக் கதைகளையும் தெரிந்து, அவரோடு சேர்ந்து குடிப்பவனுமான ஒரு வக்கச்சன் என்கிற ஊக்கையை தேர்வு செய்தும் வைத்திருக்கிறார். சாலமனுடன் நின்று பேசுவதை அறிந்து சோபியாவைத் அவர் தாக்கும்போது பார்த்திருக்க முடியாமல் அவன் அதைத் தடுக்க முயல அவர் சாலமனிடம் பாயும்போது சரியான உதையைப் பெற்றுக் கொண்டும் விட்டார்.

அவருடைய மூர்க்கம் முறுகுகிறது.

நிஜ வாழ்வில் முழுமையான நாயகன்கள் இருக்க முடியாது என்பது போலதான் நிஜ வில்லன்களும் இருக்க முடியாது. பால் தனக்கு அமைந்த வாழ்வின் குறுக்கு சந்துகளில் அமையப்பட்ட குணநலன்களுடன் இப்படியே இருந்திருந்தால் கூட அவர் ஒரு நல்ல மனிதரில்லை என்கிற டைட்டிலுடன் வாழ்ந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் முழுமையாக வெளிப்பட வேண்டிய சந்தர்ப்பத்தை காலமும் சந்தர்ப்பமும் கதவு திறந்து வைக்கின்றன. ஒருவேளை நமக்கே கூட நாம் குள்ள நரியாக தெரிகிற சந்தர்ப்பம் நேரிட்டால் நம்மால் பின்வாங்க முடியுமா என்பதில் உறுதி கிடையாது. நம்பிக் கொண்டிருப்பதெல்லாம் சரி, நாம் மிருகமாக மாற நேரும்போது மறுத்துக் கொள்வோம் என்கிற எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்? இப்போது வந்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் சிறிய அதிகாரத்தின் பலத்தில் பெருமையாக வாழ்ந்து வந்த பகத் கதாபாத்திரம் எவ்வளவு நிறைவுடனும் கண்ணியத்துடனும் இருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அது ஒரு சீட்டுக் கட்டு கோட்டை என்பதே யாரோ அடிசீட்டை பிடுங்க வரும்போதுதான் திடுக்கிட்டது.  அப்புறம் அங்கே மிஞ்சியது எல்லாம் பதற்றம் தான்.

அவன் பாய்ந்தது போலவே, பாலும் ஒரு பாய்ச்சல் பாய்கிறார்.

அது இந்த முறை என்னை வெற்றி கொள்ள முடியாது என்கிற மூர்க்கமான பாய்ச்சல்.

அடுத்த வாரம் தொடர்வோம் .

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *