மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 11

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 11

 

முறைப்படி சொல்லிவந்த பாலின் கதையைத் தான் இப்போது தொடர வேண்டும். இருந்தாலும் அவர் அங்கேயே கொஞ்சம் நிற்கட்டும். நாம் கொஞ்சம் சுற்றி வர வேண்டியிருக்கிறது.

பத்மராஜனின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு அம்மாவாக வருகிற யாரையும் அவர் வெறுமனே அலங்காரத்துக்கு அல்லது அடையாளங்களுக்கு வந்து போகிறவர்களாக நிறுத்திக் கொள்ளுவதில்லை. பறன்னு, பறன்னு,பறன்னு படமும், திங்களாழ்ச்ச நல்ல திவசம் படமும், மேலும் வரிசையாக பல படங்களையும் அதற்கு ஆதாரமாக சொல்ல முடியும். முக்கியமாக படத்தின் நாயகர்கள் சொல்லுவதற்கு அவர்கள் தலையாட்டுவதில்லை. இதை நான் ஏதோ உற்று கவனித்து சொல்லுவதாக கருத வேண்டாம், நாம் என்னடா என்று நினைத்துக் கொள்கிற அளவில் அவை வலிமையாகவே இருக்கும். சாலமன் இரவில் வந்து இறங்கி ராவுடி செய்வதால் அவனது அம்மா சற்று அசடு போல இருப்பதாக படும். மறுநாள் காலை மகனை அழைத்துக் கொண்டு அப்பாவின் கல்லறைக்கு அழைத்து சென்று இந்த வருடத்துக்குள் நான் ஒரு பெண்ணைக் கட்டிக் கொள்வேன் என்று அவருக்கு வாக்கு கொடு என்று கொஞ்சுவதில் நமக்கு பாவம் என்று தோன்றுவதில் கூட தப்பில்லை. ஆனால் வெகுளிகளுக்கு இருக்கிற மன வைராக்கியம் சாதாரணமானதல்ல. முதலில் பக்கத்து வீட்டில் இருக்கிற பெண்ணைக்  கட்டுகிறேன் என்பதற்கு மறுப்பு, அப்புறம் அதற்கு சம்மதித்து சென்றால், அந்தப் பெண்ணிற்கு பால் தகப்பன் அல்ல என்று தெரிந்தமைக்கு மறுப்பு என்று முட்டி மோதி சகல முரண்களையும் தன்னளவில் ஏற்று, விழுங்கி முன்னேறி, உற்சாகமாகக் கூட வந்து விடுகிற சாலமனின் அம்மா கதாபாத்திரம்  திரைக்கதையில் ஒளிரும் ஒரு அற்புதம்.

Namukku Parkkan Munthiri Thoppukal - Disney+ Hotstar

அப்படியாக சாலமனும் அம்மாவும் சோபியாவின் அம்மாவும் சோபியாவுமாக சர்ச்சில் திருமணம் நடத்தத் துணிகிறார்கள். இங்கே தான் பால் முழுவதுமாக தான் தோற்றவனாக நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறார். முழு அதிகாரமும் தன்னை சேர்ந்தது என்று நம்பிக் கொண்டிருந்த ஒருவர், இந்தக் குடும்பத்துக்கு தான் தேவையில்லை என்கிற உண்மையை புரிந்து கொள்கிறார். சீட்டுக்கட்டு மாளிகை அடியோடு சரிகிறது. எல்லோரும் வெளியே செல்வதற்கு காத்திருக்கிறார். வேலைக்கு கிளம்பிப் போவதாக சென்றிருந்தவர் பதுங்கியிருந்து, திரும்பி வருகிறார். ஒரு பெரிய மனிதன் நாணமின்றி தன்னை இழக்கிற இந்த சம்பவம் பார்வையாளரை திகிலடைய செய்கிறது. வீட்டில் தனியாக இருக்கிற சோபியாவால் அவரிடம் இருந்து தப்ப ஒரு வழியும் இல்லை.

பலாத்காரத்தில் அவர் வெற்றி பெறுகிறார்.

அங்கிருந்து கிளம்பியும் போகிறார்.

சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள்.

சோபியா கதறியழுது எல்லா உண்மைகளையும் எல்லோருக்கும் சொல்கிறாள்.

அதனால் தனிமையாகிறாள்.

சாலமனின் அம்மா அந்தக் குடும்பத்தை முழுமையாக வெறுத்தாயிற்று.

சாலமனும் தனது தோட்டங்களுக்கு திரும்ப பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அந்த பைக் சபதத்தை சோபியாவும் கேட்கிறாள்.

ஏற்கனவே நாம் பேசி இருந்தது தான். ஒரு மனிதன் தனக்குள் உறுதியாவது என்பது சமூக நடைமுறைகளைப் பற்றின தெளிவு அவனுக்குள் இருக்கிறது என்பதில் தான். வெறும் ஜாடைகளுக்கு வைத்துக் கொண்டிருக்கிற ஒழுக்க மதிப்பீடுகள் அவனுக்குள்ளே பாறைகளை வளர்த்து வைத்திருக்காது. எனது பக்கத்தில் நிற்கிறவன் கத்துகிறான் என்பற்காக நாம் தொண்டையைக் கிழிக்கிற வெறும் கூட்டத்தின் வாயாக இருக்கும்போது நாம் சும்மா போட்டு வைத்த பொருட்கள் போல ஒரு இடத்தில் கிடக்கிறோம். யார் என்ன கேட்டாலும் அதற்கு ரெடிமேடான பதில்களை அந்தக் கூட்டமே தயார் செய்து கொடுத்து விடும். அவனுக்கு சிந்தனைகளின் ரோதனையே தேவை கிடையாது. கூட்டமாக இருந்து அடையாளம் தேடி, கூட்டமாக இருந்து சில எலும்புத் துண்டுகளை பொறுக்கி, கூட்டமாக இருந்து வேறு பலவற்றையும் கொன்றொழித்து வெற்று முழக்கம் செய்தவாறு இருக்கிற ஒரு நிலபரப்பில் எப்போதுமே சந்தை இரைச்சல் மட்டுமே மிஞ்சும். சொல்லப் போனால் அங்கே பூத்து விடுகிற ஒரு அபூர்வ மலரை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு அசலான கவிதையை கண்டுபிடிக்கிற மனங்களும் இராது. நல்ல வேளையாக சாலமன் தனித்தவனாக இருந்தான்.

அவன் படித்து டிகிரி வாங்கினவன் தான். என்றாலும் டிரைவிங் மீதிருக்கிற ஆசையால் லாரி ஒட்டி ஊர் சுற்றினான். அப்படியே திராட்ஷை விவசாயம் செய்தான். நல்லது கெட்டது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பணத்தையும் பார்த்தான். அம்மா தன்னோடு இருந்து விடு என்று வற்புறுத்தும்போது கூட இங்கே இப்படியே இருந்து என்ன செய்வது என்று கேட்கிறான். ஒரு குட்டி பூர்ஷுவாவாக இருந்து, செய்வதற்கு எதுவுமில்லாமல் குடிக்க ஆரம்பித்து, தின்று தூங்கி தொப்பை வளர்த்து, முழுக் குடிகாரனாகவே வாழ்வைக் கழிக்க வேண்டியதுதான் என்கிறான். யாரையாவது சாதி மதம் பார்த்து கல்யாணம் செய்தால் ஒரு தொகை வரதட்ஷணையாக கிடைக்கும், நமக்கு அந்தப் பணம் கிடைக்கத் தான் வேண்டுமா என்று ஒருமுறை கேட்கிறான். அவன் தேவையெனில் சிகரெட் பிடிப்பான், மது அருந்துவான், அதை விளக்குவதற்கு நொண்டி சமாதானங்களைத் தேட மாட்டான். வரவேற்பறையில் முதுகு வளைத்து, பின்கட்டுக்கு சென்று காறித்துப்புகிற இரட்டைமுகம் அவனுக்கு பரிச்சயமே கிடையாது.

அவன் சோபியாவோடு திருமணம் பற்றி பேசும்போது நல்லபடியாக திருமணம் நடக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வோம் என்றிருந்தான். அப்படி ஒன்றும் நடைபெறாத பட்சத்தில் நான் உன் வீட்டுக்கு பைக்கில் வருவேன், முதல் ஹாரன் அடிப்பேன், இரண்டாம் ஹாரன் அடிப்பதற்குள் நீ வந்து விட வேண்டும் என்றுமே கூட அவன் சொன்னபோது, அவள் தான் பைக் வேண்டாம் என்பாள். அவனோடு அவ்வப்போது அவள் சுற்றி வந்த அந்த லாரியோடு தான் வர வேண்டும் என்று சிரித்திருப்பாள். அவளுக்கு அதைப் பற்றின சில கனவுகள் உண்டு.

Akashamake Kanimalar - Namukku Parkkan Munthirithoppukal - YouTube

சாலமன் லாரியை எடுத்துக் கொண்டு வந்து இறங்குகிறான்.

ஹாரன் அடிக்கிறான்.

சோபியாவின் வீட்டை நெருங்கி கதவைத் தட்டுகிறான்.

கதவு திறக்கிறது.

பம்மலுடன் வந்து கதவைத் திறப்பவர் பால் தான்.

அவரைத் தள்ளி விட்டு சோபியாவை அழைத்து, அவள் ஓடி வந்ததும் அவளை அணைத்துக்கொண்டு  சாலமன் கிளம்பும்போது, பால், இதற்கு மேல் நீ அவளை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்பதாக தன்னுடைய வெற்றியைக் கொக்கரிக்கிறார். அவரை தனது வெறி தீருமட்டும் அடித்துப் போட்டு விட்டு, இரண்டு வீட்டாரும் பார்த்திருக்க காதலர்கள் லாரியில் ஏறுகிறார்கள்.

அது இந்த பிரதேசத்தை விட்டு தாண்டி, நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறது.

ஐயம் எதுவுமில்லாமல் இது ஒரு நாயகனின் கதைதான். கண்டிப்பாக ஒரு பெண்ணைக் காப்பாற்றக் கூடிய கதையும் கூட.  அட என்னய்யா, பெண்களைக் காப்பாற்ற இந்த ஆம்பளைத்தடியங்கள் தான் வரணுமா, அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்களா என்று சிலர் கேட்கக் கூடும்.  அப்படிப்பட்ட படங்களை கேட்கிறவர்கள் எடுக்க வேண்டும். இதற்கு இதுதான் கதை, நீங்கள் சொல்லுவதை அடுத்த படங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எனது பதில். பத்மராஜனே பெண்கள் தங்களைப் பார்த்துக் கொள்ளக் கூடிய படங்களை எடுத்து இருக்கிறார் என்பதை இங்கே சொல்லி முடித்து விடுகிறேன். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக சொல்லுவதற்கு வேறு ஒன்று கூட இருக்கிறது. இந்த மாதிரி ஹீரோக்களின் கதை இதுவரை அவ்வளவாக சொல்லப்படவில்லை. இனி மேலும் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அதை மக்களை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மனோநிலைகளை தேடித் தருவிக்க வேண்டியிருக்கிறது. அதாவது இப்படம் வெளிவந்து இத்தனை வருடங்களுக்கு அப்புறம் அதன் தொடர்ச்சி நிகழவில்லை என்பதைத் தான் நான் சொல்ல வருகிறேன்.

periplo's jottings: Namukku Parkkan Munthiri Thoppukal (Malayalam ...

அதன் மூலம் நாம் அதன் தனித்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.

நான் அவருடைய படங்களில் நடித்திருக்கிறேன், அதில் அவரது கதையும், திரைக்கதையும் தான் ஸ்டார் வால்யு கொள்ளும், நான் இருப்பதால் அல்லவென்று லால் ஒரு பேட்டியில் சொன்னதையும் இவைகளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பி பத்மராஜன் ஆலப்புழையில் உள்ள முத்துக்களம் என்கிற ஊரில் 1945 இல் பிறந்திருக்கிறார். குடும்பத்தின் ஆறாவது பிள்ளை என்று படித்தேன். கல்வி கற்று தேறி ஒரு டிகிரி வாங்கி ஆல்
இந்தியா ரேடியோவில் வேலை பார்த்திருக்கிறார். கலை சார்ந்த ஈர்ப்புகளும், நடவடிக்கைகளும் இருந்த போதிலும், வேறு ஒரு கோணத்தில் மௌனியாக இருந்து மக்களை கவனிப்பதில், அவர்களை அறிவதில், அவர்களை அனுமானிப்பதில், அவர்களோடு ஆர்வத்துடனும் ஆழத்துடனும் இருந்து அவர்களை தனக்குள் எடுத்துக் கொள்வதிலும் தீவிரமாக இருந்திருக்க வேண்டும். தனக்குள் இருந்த இடைவிடாத கேள்விகளுடனும், பதில்களுடனும், தர்க்கங்களுடனும், தீர்வுகளுடனும் இருக்கிற போக்கை வாழ்வாகவே கற்பித்துக் கொண்டிருக்க வேண்டும். தான் இறங்கின எழுத்துக்கு அவருடைய மனமும், அதன் அன்பு வயப்பட்ட குண நலன்களுமே சொற்களாக, வாக்கியங்களாக, வரிகளாகத் திரண்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எவ்வளவு மறக்க முடியாத முகங்கள்?

தமிழில் மொழிபெயர்ப்பாக வெளிவந்த ஆக்கங்களின் மூலம் அவரை என்னால் முழுமையாக அறிய முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் அவரது சினிமா அவருடைய உள்ளத்தின் ஒளியை அழைத்துக் காட்டுவதாக இருந்தது. அவர் முரடனுக்கும், திருடனுக்கும், வேசிக்கும், மற்றும் பலர் என்பார்களே, அவர்களுக்கும் நாம் சந்தோஷமாக அறிமுகம் செய்து கொள்ளும் அளவிற்கு சமத்துவம் கொண்ட முகங்களைக் கொடுத்தவர்.

Namukku Parkkan Munthiri Thoppukal (1986), a Siemens VCR and ...

அதைப் போலவே இன்ன சினிமா தான் எனது என்பதை அவர் வகுத்துக் கொள்ளவேயில்லை என்பது மிக முக்கியம்.

ஒரு அநீதிக்கு எதிராகவும் வாள் ஏந்தி நின்று முழக்கமிட்டு அப்புறம் அதிலேயே நின்று சீரழிகிற நிலைமைக்கு அவர் ஆளாகவில்லை. ஆயின் அவரது கதைகள் மனிதரைப் பற்றிதான் பேசின. அவனுக்குள் இருந்த நீதி அநீதிகளின் பரிமாணம் பற்றிதான் அவர் சொல்லிக் கொண்டும் இருந்தார். அதேநேரம் மனிதனை வாழவிடுமாறு உள்ள சுதந்திரத்தை வற்புறுத்திக் கொண்டுமிருந்தார்.

நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள் 1986 இல் வந்த படம்.

அந்தப் படத்தின் ஒரு போஸ்டரைப் பலரும் பார்த்து இருப்பீர்கள்.

என் அனுபவத்தில் பார்த்ததைத் தான் சொல்லுகிறேன், அதைப் பார்க்கப் பிடிக்காமல் நிறைய பேர் அந்தப் பக்கம் திரும்பாமல் கூட கழுத்தை வெட்டிக் கொள்வார்கள்.

Namukku Parkkan Munthiri Thoppukal Cast and Crew Malayalam Movie ...

ஒரு லுங்கிக்குள் சாலமனும் சோபியாவும் நிர்வாணமாக இருந்து கொண்டு திராட்ஷைக் கொடிகளின் காம்புகளில் பூ விரிந்து வந்திருக்கிறதா என்று பார்க்கும் காட்சி.

ஆண்டனிக்கு பியர் குடிக்கக் கொடுத்து, அவனுக்கு படம் பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு வெளியே வந்து சோபியா அனுப்பின பைபிள் வார்த்தைகளுடன் தனிமையில், குளிரில் தனது கற்பனையை விரிக்கிற கனவுப் பாட்டு அது .

இந்த நாளில் கூட முற்றிலுமாக நேரிட முடியாத ஒரு காட்சியை கனவு காண்பதற்கு அந்த சாலமனுக்கு எவ்வளவு ஆன்மபலம் தேவையாக இருந்திருக்க வேண்டும் என்பதை யோசிக்கும்போது அவைகளை உருவாக்கி முடித்த பத்மராஜனை வியக்காமல் இருக்க முடியாது.

 

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *