பத்மராஜன் தான் எழுதிய சிறுகதையை விரிவு செய்தார். அதுதான் அரப்பட்ட கெட்டிய கிராமம் என்கிற படமாக வந்தது.

ஒருநாள் இரவு, இந்தப்படம் வெளிவந்த சமயம் சென்னை ஈகா தியேட்டர் முன்னால் நின்று நானும் நண்பர்களும் இதன் போஸ்டரைப் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். என்ன படம் இது? எனக்கு தேறி வராத மலையாளத்தில் நான் எழுத்து கூட்டினேன். நண்பர்கள் நான் என்ன சொல்வேன் என்று காத்திருந்தார்கள். ஆர்யபட்டா கேற்றிய கிராமத்தில் என்று கடைசியாக கண்டுபிடித்து தியேட்டருக்குள் போனோம். தலைப்பின் வினோதம் தாங்கவில்லை. படத்தின் விநோதமும் தான். பிற்காலத்தில் தலைப்பின் புதிர் தீர்ந்து விட்டாலும், இன்று வரையில் படம் என்னைத் திகைக்க வைப்பதாகவே இருக்கிறது. இப்போது பார்க்கும்போதும் இமைக்காமல் பார்த்தேன். எவ்வளவோ கதைகள், திரைக்கதைகள் ! கதை விவாதங்கள் ! அதன் இடை வழிகள், நடை வழிகள் ! இன்று இருக்கிற தொழில் நுட்பங்களால் கிடைக்கக் கூடிய உலகத் திரைப்படங்களின் மனப் போக்குகள் ! இவ்வளவுக்கு அப்புறமும் கூட அவருடைய திரைக்கதை இன்றுமே எனக்குத் திகைப்பாயிருக்கிறது.

Arappatta Kettiya Gramathil - Malayalam Full Movie - YouTube

தமிழில் ஆங்கிலப் படிப்பாளிகள் இல்லை, அதனால் அறிவியல் வசப்பட்ட புனைகதைகள் சாத்தியமாகவில்லை என்று ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறவர்களிடம் புகார் சொல்லுகிறார். காப்பி பேஸ்ட் அடிக்கிற சில பத்தி எழுத்தாளர்கள் பிரபஞ்சத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா என்று புன்முறுவலிக்கிறார்கள். ஸ்டார் வார்ஸ், அவ்தார், அவெஞ்சர்ஸ், டார்க் போன்ற சினிமாக்கள் காட்டுகிற வேற்றுலகத்தை சொல்லி, அங்கே எப்போது நமது காலடித் தடங்களைப் பதிக்கப் போகிறோம் என்று கண்ணீரே விடுகிறவர்களை நீங்களும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் இங்கே நிலவுகிற சினிமாவில் நாம் இன்னும் நம்மையே அடையவில்லை என்பது தான் மிக சரியான உண்மை. நாம் ஆர்டிக் கண்டத்துக்கு போன் மூலம் பேசிக் கொண்டிருந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் நம்மை உதைக்க வருவதற்கான அவனது மனப்போக்கை அறியாமலிருப்போம். நாம் அறியாத பிரதேசங்களில் தான் நமது வாழ்க்கையே நடக்கிறது. அந்த பிரம்மாண்டத்தின் ஒரு துளியை மக்களுக்கு காட்டிக் கொடுக்கிற வித்தையை அந்த புகார் மனிதர் அறிந்தவரில்லை. இன்று படம் பார்க்கையில் மேற்சொன்னவைகள் முழுவதும் ஓடின. உலகம் முழுக்க பத்மராஜன் போன்றோர் அவைகளை இடைவிடாமல் தேடி நம்மை கடைத்தேற்ற முயன்றிருக்கிறார்கள் என்பது தான் கடைசியாக தெளிந்து வந்தது.  

நாம் நமது வீட்டுக்குப் பின்னால் காய்கறித் தோட்டங்களைப் போட்டு பூச்செடிகள் வைத்து அழகு பார்ப்பது போல வாழ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமாவையும் கூட.

Arappatta kettiya gramathil..a Padmarajan classic movie | Cinema ...

இந்தப் படமே ஒரு காபரே பாரில் துவங்குகிறது. செக்ஸைப் பேசுகிறார்கள். நாளைக்கு மறுநாள் விஷுப் பண்டிகை. அன்றைய  பொழுது விடியும்போது ஒரு விபச்சார விடுதியில் பெண்களுடன் இருக்க வேண்டும் என்று அப்படியே புறப்படுகிறார்கள். இது ஒரு படத்தின் ஆரம்பம். குடும்பம் குடும்பமாக அமர்ந்து பார்க்கக் கூடிய வாகில் கட்டம் கட்டமாக செய்யக்கூடிய நீதிக்கதைகளின் காலத்தில் ஒருத்தன் நிலாவிற்கு புறப்படுவதை விட இது முக்கியமானது அல்லவா? அநேகமாக இவை எல்லாம் யாருக்கோ இருப்பவை என்று பெரும்பான்மை ஜனங்கள் நினைத்திருக்கக் கூடியவை அல்லவா?

இந்த ஆபாசத்தை நாங்கள் எதற்கு பார்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். குழந்தைகள் கூட பார்க்கிற படத்தில் ஒரு குத்துப்பாட்டில் சதிர் போடுகிற அங்கங்களின் அழைப்பு இதில் ஆடுகிற பெண்ணிடம் இருக்காது. அவள் டான்சராக இல்லாமல் பெண்ணாக இருப்பதையே தான் எழுதி இருக்கிறார் பத்மராஜன். அங்கிருந்தே எனக்கு ஆபாசம் இலக்கில்லை என்று அவர் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடியும். யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் அதை விட்டுவிட்டு அவரை தொடர முடியும்.  அவர் நாமறியாத மனப்பரப்புகளை காட்டித் தர முடிவெடுத்து விட்டார்.

Arappatta Kettiya Gramathil - Unnimary Deepa Memorabilia

இரவெல்லாம் பெரிய பயணம் செய்து வந்து அப்படியாக விடிந்த பிறகு சக்கரியாவும், கோபியும், ஹிலாலும் அந்த வீட்டுக்கு வந்து சேருகிறார்கள். நிசப்தமாக இருக்கிறது வீடு. ஒருவர் ராமஜெயம் எழுதிக் கொண்டிருக்கிறார். நிமிர்ந்து பார்ப்பதில்லை. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. சட்டை பண்ணுவதில்லை. உள்ளே நுழைந்து, பல அறைகளைக் கடந்து, படியேறி, பால்கனியில் உட்கார்ந்தே விடுகிறார்கள். மலைப்பாக இருக்கிறது. இதுதானா அந்த இடம் என்பதில் கூட உறுதியில்லை. ஆனால் உடலெல்லாம் எண்ணை புரட்டிக் கொண்டு ஒரு வாய் பேசாத பெண் வந்து அவர்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி பண்ணி, கூட்டத்தில் இருக்கிற கோபியுடன் குழந்தை போல ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பிக்க எல்லோர்க்கும் ஒரு ஆசுவாசம் கிடைக்கிறது. அது நீடிக்கவில்லை. யாரோ கொல்ல வருகிறார்கள் என்று அவர்களை ஓட வைக்கிறான் பாசி. 

படத்தின் பிரச்சினை இதுதான். ஒருபக்கம் முஸ்லீம்கள். மறுபக்கம் இந்துக்கள். அவர்களுடைய தலைவர்கள் தங்களுடைய அதிகாரங்களை நிலைநிறுத்தக் கூடிய இடங்களில் இந்த விபச்சார விடுதியும் ஒன்று. ஸ்ரீதேவி என்கிற ஒரு புதிய பெண் தொழிலுக்கு இறக்கப்பட்டிருக்கிறாள். அவள் முரண்டு பிடிப்பதால் இரண்டு தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கவில்லை. எனவே ஒருவருக்கு மற்றவர் மீதுள்ள பகையாலும், சந்தேகத்தாலும் குத்தும் கொலையும் நடப்பதாக இருக்கிறது. மாலு அம்மா முஸ்லீம் தரப்பான மூப்பனிடம் சமாதானம் பேசி தனது வாடிக்கையாளர்களை தனது வீட்டிற்கு திரும்பவும் கொண்டு வருகிறாள். ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த சண்டைகளுக்கெல்லாம் காரணமான பிரச்சினைக்குரிய ஸ்ரீதேவியை ஹிலால் பார்க்கிறான். அவளிடம் காதல் வசப்படுகிறான் என்பது கதை.

Arappatta Kettiya Gramathil Resource | Learn About, Share and ...

ஹிலால் ஸ்ரீதேவியின் கதையைக் கேட்ட பிறகு அவளைக் காப்பாற்றுவதாக வாக்கு கொடுக்கிறான்.

சக்கரியாவையும், கோபியையும் அந்த பொறியில் அவன் சிக்க வைக்கிறான்.

திரைக்கதையில் குறைந்தது அறுபது சதவீதம் அந்த விபச்சாரம் நடக்கிற வீட்டில் தான் நிகழ்கிறது. மாலு அம்மாவின் மகன் பாசி பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டு சரக்கையும், சிகரெட்டையும் வாங்கி வருகிறான். இரண்டு கோழிகள் வாங்கி பொரிக்கப்பட்டு தட்டில் கொடுக்கப்படுகின்றன. கோபி வாய் பேசாத பெண்ணைக் கொஞ்சுகிறான். விளையாடி, விளையாடி ஒரு கட்டத்தில் இருவரும் காணாமல் போகிறார்கள். பெண்களை அடைய விருப்பமில்லாமல், பையன்களை கூட்டி வந்த ஒரு பொறுப்பான தலைமைப் பதவியுடன் இருக்கிற சக்கரியாவிடம் தேவகி ஒரு தாதிப் பெண்ணைப் போல நடப்பதாக தோன்றினாலும், கவனித்துப் பார்த்தால் அவள் அவனிடம் அன்பாயிருக்கிறாள். எல்லோரும் சிரித்து களித்து கொண்டு சந்தோஷமாகவே இருக்கிறார்கள். மாலு அம்மா, பாசி, ராமஜெயம் பெரியவர், காவல் காக்கிற முஸ்லீம் தரப்பு ஆள் எல்லோரிடமும் மனிதத்தன்மை வெளிப்படுகின்ற இடங்கள் தாராளமாக இருக்கின்றன.

அது நமக்கு சந்தோஷமாகவும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த செல்வாக்கில் இருந்து சரிந்து அதன் வீழ்ச்சியில் தான் மாலு இந்த விடுதியை நடத்திக் கொண்டிருக்கிறாள். அவனது மகன் பாசி தனது குடும்பத்துக்கு சோறு போடுவதற்கு தான் அந்தப் பிழைப்பில் இருக்கிறான். மகளை போர்டிங்கில் படிக்க வைக்கிற தேவகிக்கு ஆண்களிடம் நம்புவதற்கு எதுவுமில்லை என்கிறவள். இருந்தாலும் வருகிற ஆண்களுக்கு அவர்களுடைய மனம் கோணி விடாமல் கனிவையும் உடலையும் கொடுத்து மகளுக்காக உயிர் வளர்க்கிறாள். உண்மையில் வருகிற ஆண்களிடம் அன்பு செலுத்தி தான் தனது வெறுமையை வென்று கொண்டிருக்கிறாளோ? அந்த ஊமைப் பெண்ணுக்கெல்லாம் ஒரு நாதியும் கிடையாது. கோபியை போன்றவர் வந்து அவளுக்கும் அவனைப் பிடித்து விட்டால் அவன் போகிறவரை அவனுடைய காலைச் சுற்றிக் கொண்டு அலைவாள். தனது காதலியின் நினைவில் கோபி அவளது கூந்தலை இரட்டை சடை போட்டு விடுவதில் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்? அவன் விட்டு செல்லும்போது எவ்வளவு கண்ணீர்? இந்த கண்ணியமான உலகம் இருட்டில் தனது திருட்டுத்தனத்துக்கு இறங்கும்போது அவர்களுக்காக செய்து வைக்கப்படுகிற சௌகர்யங்களுக்கு தான் எவ்வளவு பலி?

Arappatta Kettiya Gramathil Malayalam Full Movie ...

தங்களால் ஒருத்தியைக் காப்பாற்ற முடிந்தால் அவள் ஒருத்தியைக் காப்பாற்றி விடுவோம் என்றுதான் சக்கரியா அந்த பெரும் சண்டைக்கு இடையில் சாகசம் செய்ய இறங்குகிறான். அது மட்டுமல்ல. வருங்காலத்தில் அந்தப்பெண் ஸ்ரீதேவி ஹிலாலுக்கு மனைவியாகப் போகிறவள். அவர்கள் மனமொருமித்த காதலர்களாகி விட்டார்கள். இரண்டு பக்கமும் கூட்டம் கூடி யுத்தம் நடக்கிறது.

அப்பாவியான அந்தப் பாசியைக் கத்தியால் குத்தி மாலு அம்மாவை திசை திருப்பி காதலர்களை ஓட வைக்கிறான் சக்கரியா. அவர்களோடு கோபியையும் அனுப்பி வைக்கிறான்.

இந்து தரப்பின் ஒரு அடியாளுடன் சண்டை நடக்கிறது.

சக்கரியா கத்தியால் குத்தப்படுகிறான்.

படத்தில் கோபி ஒரு வக்கீல் என்று சொல்லப்பட்டது போல சக்கரியா யாரென்று சொல்லப்படவில்லை. ஆனால் முதல் காட்சியிலேயே அவனது வருகை அவன் எதற்கும் அடங்குகிறவன் இல்லை என்பது தெளிவாகும். அதாவது அனுபவங்களால் உலகை தெரிந்து கொண்டவனின் செருக்கு மற்றும் டோன்ட் கேர் என்கிற விட்டேத்தியும் இருக்கும்.  பாரில் இம்மூவருக்கும் பொதுவான ஒரு பணக்கார நண்பன் இருப்பான். அவனை சக்கரியா மதிப்பதில்லை. அவன் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டவே சாலக்குடியில் இருக்கிற ஊரின் பெயரை சொல்லி இந்த விடுதி பற்றி சொல்லி நால்வருமாக பயணம் கிளம்பியிருப்பார்கள். சக்கரியாவின் ஆளுமை அந்த நண்பனின் அகங்காரத்தை சகித்துக் கொள்ளாமல் போகவே அவனை அனுப்பி விட்டு நண்பர்கள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காக இங்கே கூட்டி வந்தான். அவனுக்கு ஏறக்குறைய பெண் ஆர்வம் தணிந்து விட்டிருக்கிறது. ஒரு முறை தேவகியிடம் கோபி சக்கரியா பற்றி சொல்லும்போது பெரும்பாலும் குடித்துக் கொண்டிருப்பது தவிர வேலை என்று எதுவுமே இல்லை என்பான். பரம்பரை சொத்திருக்கலாம். வியாபாரமோ விவசாயமோ ஓய்வாக இருக்கிற ஒரு முதலாளியாக இருக்கக் கூடும். மிகவும் விரிந்த பார்வை கொண்டவனை புரிந்து கொள்ள முடியாமல், அல்லது ரசிக்க முடியாமல் அல்லது சகிக்க முடியாமல் குடும்பம் நொறுங்கி விலகியிருக்கலாம்.

உலகம் எப்படியோ போகட்டும் என்கிற அலட்சியத்துக்கு கீழே அவனுக்கான நியாயங்களை அவன் அடைவதும் உண்டு என்பதை திரைக்கதை முழுவதும் தொகுத்திருப்பார் பத்மராஜன். ஸ்ரீதேவியின் மீது கொண்ட காதலால் அவள் சொன்ன பிளாஷ்பேக்கை ஹிலால், சக்கரியாவிடம் சொல்ல முற்படுகையில் எனக்கு இதுகளைப் போன்றவர்களின் கதைகள் எல்லாம் தெரியும் என்று அவன் அதிலிருந்து விலகி செல்வான். அவள் சம்மதமில்லாமல் தான் இந்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வந்ததும் அவளைக் காப்பாற்ற முடிவெடுப்பதும் அவனுக்கு இதிலுள்ள கதைகள் தெரிய வருவதால் தான். மாலு அம்மாவின் மகன் பாசியை சக்கரியா கத்தியால் குத்தியது சந்தேகமில்லாமல் ஒரு குருரமான காரியம். அதற்கு சப்பைக்கட்டுகள் வைக்கவே முடியாது. ஆனால் அவன் அதைதான் செய்கிறான். எந்தக் கலவரங்கள் நிகழும்போதும் தனது மகன் மீதே கண்ணாக இருக்கிற மாலு அம்மாவிற்கு இது பயங்கரமான அடி. ஒருவேளை அவன் இறந்து போயிருந்தால் அந்த அம்மா தனது துயரிலிருந்து எழவே முடியாது, ஆயினும் அவர்களை நினைத்து பரிதாபம் கொள்ளாமல் இருக்க முடியாது. மற்றவர் உயிரை எடுக்கத் துணிந்த சக்கரியா தனது உயிரைக் கூட  பொருட்படுத்துகிறவன் அல்லன் என்பதுதான் இந்தக் கதையை நிறைவு செய்கிறது.

ARAPPATTA KETTIYA GRAMATHIL | malayalaulagam

பாசியைப் போல சக்கரியாவும் இப்போது உயிரோடு இருக்கிறானா தெரியவில்லை.

இரவுக் கலவரங்கள் முடிந்திருக்க வேண்டும். மறுநாள் பொழுது புலர்ந்து வந்துவிட்டது.

காதலர்களை பத்திரமான இடத்துக்கு சேர்த்து விட்டு, கோபி திரும்பி வந்து விட்டிருக்கிறான். சக்கரியாவின் பெயரை சொல்லி தேடியவாறு அழைத்துக் கொண்டிருப்பது பார்க்கிறோம். அந்தக் குரல் திரும்ப திரும்ப எதிரொலிக்க படம் முடிகிறது.  

ஒரு அச்சில் வார்த்த கோடி மனிதர்கள் இருக்கலாம். ஆயினும் சக்கரியாக்கள் அபூர்வமானவர்கள். அவர்களை நாம் விட்டு வைப்பது கிடையாது.

 

***     

 

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

 

One thought on “மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *