மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 15

 

நான் எழுதியவாறு தொடர்கிற கட்டுரைகள் பத்மராஜன் படங்களைப் பற்றின விமர்சனம் அல்ல. ஒரு படம் வெளியாகி பல வருடங்களுக்குப் பின்னர் எழுதப்படுகிற இவைகளில் நான் இதன் கதையைக் கூறாமல் தலையொன்றும் வாலொன்றுமாக சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது. அப்புறம் இதன் நோக்கமானது முக்கியமாக, படம் பண்ண யாரொருவரும் கதை சொல்லவே செய்வார்கள், பத்மராஜனின் கோணம் என்ன, அவருடைய திரைக்கதையின் முற்றிலும் வேறொன்றாக இருக்கிற மனப்பான்மை மற்றும் குணநலன் என்ன என்பதை சொல்லுவது தான். அவரிடம் அது விசேஷமாக இருக்கிறது என்பதை எங்கோ நுழைந்து, எப்படியோ வெளியேறி நான் அடைவதை சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.எனவே இதில் கதை சொல்லப்பட்டு விடுகிறது என்கிற கண்டுபிடிப்பை முடித்துக் கொள்ளலாம், இந்தப் படம் நல்ல படம் பார்த்து விடு என்று போனிலோ, நேரிலோ சொல்லி முடித்து விட  வேண்டியதை கட்டுரையாக எழுதுவதின் பலன் வேறு என்பதால், இக்கட்டுரையைப் படித்த பிறகு படம் பார்க்க வேண்டி வந்தால் வேறு விதமான பரவசங்கள் கிடைக்கும் என்கிற திட்டமிடல் கண்டிப்பாக இருக்கிறது. பலரும் அதைக் கண்டுபிடித்திருக்கலாம், அல்லது இனியும் முயலலாம்.

டிரெண்டில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிற இன்றைய பல குறும்படங்களை பலரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். வறண்ட நிலத்தில் ராட்ஷச மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுப்பதைப் போல நமது அடிப்படை உணர்வுகளை கசக்கிப் பிழிந்து கொண்டு போகிற போக்கு அவமானம் விளைவிப்பதாக உள்ளது. நாலாவது ரீல்ல அந்த பைட்டுக்கு முன்னால அம்மாவை க்ளோஸ் பண்ணிட்டேன்னு வெச்சுக்கோங்க,அங்க எமோஷன் வர்க் அவுட் ஆயிடும் சார் ! போலிகள் கலையில் உலவுகிற இந்த அபாயம் முன்பே கூட இருந்திருக்கிறது. அதைப் பிரித்துப் பார்க்கிற தருணங்களில் இந்த  “ நொம்பருத்திப் பூவு “ போன்ற படங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை யாரும் அறியலாம்.

Flowers of selfish, but poignant relationships - Nombarathi Poovu

விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பத்மினி, தன்னைப் போலவே ஒரு விபத்தில் அம்மாவை இழந்த ஜீஜி என்கிற குழந்தையோடு வாழ முயல்வது தான் கதை. அந்த ஜீஜி என்கிற சிறுமியும் இறந்து விடுகிறாள். பிணத்தைப் பார்க்க அழைக்கிறார்கள். வேண்டாம் என்கிறாள் பத்மினி. அவள் ஓடிக்கொண்டிருப்பதை எனது மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அது போதும் என்கிறாள். 

ஓடுவது என்றால் என்ன?

முதல் காட்சியே சிறுமியான ஜீஜி பத்மினியின் முகவரி எழுதின ஒரு துண்டுக் காகிதத்துடன் பத்மினியைத் தேடி வருவது தான். அனாதையாக முழ்கிக் கொண்டிருக்கும்போது அந்த சிறுமி  அறிந்த அன்பின் ருசி பத்மினி. இத்தனைக்கும் அந்த சிறுமிக்கு முழுமையான வளர்ச்சி கொண்ட அறிவு கூட கிடையாது. வந்து சேர்ந்து விட்டாள் என்பது அவ்வளவு அதிசயமான விஷயம், அந்த நேரத்தில் வந்த சிறுமியை அள்ளி அணைத்துக் கொள்கிற இடத்தில் பத்மினி இருந்தாள் என்பது அதைக்காட்டிலும் அற்புதமான விஷயம். மேற்கொண்டு விவரிக்க அவசியமே இல்லாமல் சொல்லுவது என்றால், இரண்டு ஆத்மாக்கள் ஒன்றையொன்று அறிந்து கொண்டு பிணைந்து கொண்டு விட்டன.  இருவருக்கும் அடுத்த நாள் பொழுது விடிவது அர்த்தமுள்ளது என்று தோன்றுவதற்கான காரணம் பிறந்து விட்டது.

பிள்ளைகள் இரண்டும் விபத்தில் இறந்ததும் பத்மினி தனது கணவனான சேதுவை விட்டுப் பிரிந்திருந்தாள். இந்தக் குழந்தை இப்போது இருவரும் சேர்ந்து வாழக் காரணமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் தான் அவனது வீட்டில் ஜீஜியுடன் குடிபோகவும் செய்கிறாள். அதற்கு சேது உத்திரவாதம் அளிக்கிறான். ஆனால் அதில் ஒட்டுறவு நீடிக்கவில்லை. சேதுவின் மனம் முதலில் நடித்துக் கொண்டிருக்கிறது, அதற்கு எதிர்விளைவுகள் உண்டல்லவா? அவன்  தனது மனைவியை மட்டும் உட்படுத்தின பல்வேறு எதிர்காலக் கனவுகளுடன் ஜீஜியை நிராகரிக்கப் போகிற காலத்துக்குக் காத்திருக்கிறான். அதன் முகமூடி ஒருநாள் அவிழ்ந்து தொங்குகிறது. நான்கு நாள் பட்டினி போட்டால் தானாக நம் வழிக்கு வந்து விடுவாள் என்றுமே பேசத் துணிந்து விட்ட அவனை பத்மினியே கூட விட்டு விலக முடிவு செய்தாயிற்று. ஆனால்  அது போதாதே? ஜீஜி தனது அன்பிற்குரிய பத்மினி தன்னால் வாழ்வை இழக்கப் போவதை விரும்பவில்லை, ஓடுகிறாள்.

படத்தில் டாக்டர் பத்மநாபன் என்கிற அழகான ஒரு கதாபாத்திரம் உண்டு.

சொந்த வாழ்வின் அனுபவங்களில் கிடைத்த தீர்க்கமான அறிவு அவரை மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான பள்ளியை நடத்த வைத்திருக்கிறது.

Nombarathi Poovu (The sorrowful flower) – It's all in the Mind.

ஜீஜியை பத்மினி ஒரு அடி முன்னால் உந்திக் கொண்டு சென்றாள் என்றால், டாக்டர் அதை மேலும் கொண்டு செல்ல காரணமாயிருந்தார்.

அவர் ஒரு குழந்தையின் மனம் வாடிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காக தன்னை சிரமப்படுத்திக் கொள்ளுவதைப் பார்ப்போம். அந்த அளவிலேயே இந்தப் படமும் அதற்காக சிரமம் கொள்ளுகிறது என்பதை நான் முக்கியமாக சொல்லுகிறேன். எனினும் மனிதர்கள் தங்களுடைய இஷ்டத்துக்கு தான், தன்னுடைய சுய நலத்துக்காக மட்டுமே வாழ்கிறார்கள் என்பதை டாக்டரால் மட்டுமல்ல, இந்தத் திரைக்கதையாலும் தடுக்க முடியவில்லை. எனவே தான் ஜீஜி ஓடுகிறாள்.

அன்பு என்பது ஒரு ஆற்றல்.

இந்தப் பூமியில் இனம், மதம், தேசம்,மொழி, என்று மனிதன் ஒன்றுபடுவதற்கான நூறு காரணங்கள் இருக்கும்போது, அவன் பிரிந்து கொண்டு விடவும் அவைகளே போதுமானதாக இருக்கின்றன. ரத்தபாசம், குடும்ப வெறிகள் போன்றவை எல்லாமே கூட மற்றமையை வேட்டையாடக்கூடியது. எனில் இலட்சியமாகவாவது மிச்சம் இருப்பது என்ன? மனிதன் சக மனிதனை அன்பு செய்வது தான். அதற்கு தான் நான் சொல்கிற இந்த ஆற்றல் தேவைப்படுகிறது. அதற்கு அளவில் சிறந்த பெரிய மனசு விரிவில் வேண்டும். அதன் சமத்தன்மை பேணப்ப்படும்போது அதில் ஆழ்ந்த நீதி அதன் அடிப்படையாக இருக்க வேண்டும். அது இல்லாமல் நாம் யாருமற்றவர்களின் நெஞ்சில் பால் வார்க்க முடியாது. அவர்கள் உயிர் பிழைத்துக் கொண்டு போகிற கருணையை எவ்வளவு வாரிக் கொட்டினாலும் அணையாத அந்த ஏக்கத் தீயில் விழுவதற்கு தேவை ஒரு சொட்டுக் கண்ணீராக இருக்கலாம் கூட. அதற்கு நாம் பெருமளவில் கனிவை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும். பத்மினி இயல்பில் அப்படிபட்டவளாக இருந்தாள். அவளை மற்றவர்கள் புரிந்து கொள்ளுவது கடினம். அவளுக்கு அந்தத் தனிமையின் துயர் விதிக்கப்பட்டிருக்கிறது, அதை அவள் அனுபவித்துதான் ஆக வேண்டும், அதற்கு ஜீஜி ஓடித்தான் ஆக வேண்டும்.

இப்படத்தில் டாக்டர் பத்மநாபன் தவிர்த்த ஆண்கள் யாவருமே நாம் தான்.

அவர்கள் பெரும்பாலும் மூடர்களாயிருக்கிறார்கள். 

அவர்கள் தாங்கள் கதவை அடைத்துக் கொண்டு கற்பனை செய்கிற சொர்கங்களுக்காக பிடிவாதம் கொண்டு வாழுகிறார்கள். அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மற்றவர்களை இழுத்துக் கொண்டு அவர்களுடைய ஆத்மாவை சேதாரம் பண்ணிக் கொண்டு சுற்றுகிறார்கள். சோதனையில் பிடிபடுவான் என்றால் அவன் ஒவ்வொரு திருப்பத்திலும் வெளிப்படுவது கோமாளியாக தான். அவனுக்குப் பாருங்கள் எப்போதுமே அதில் வெட்கமிராது. நானும் உள்ளிட்ட ஆண்களில் எல்லோரிடமும் இருக்கிற ஒரு பொதுதன்மை என்னவென்று பார்த்தால் யாருக்குமே பெண்களோடு வாழ பிடிபடவில்லை என்பதுதான். அவனுக்கு சௌகர்யமாக இருந்த திருமணம் என்கிற ஏற்பாடும் இப்போது கலகலத்துக் கொண்டு வருவதால் இன்றைய வாழ்விலிருந்து அவன் வெளித்தள்ளப்படுவது ஒரு நடைமுறையாகவே மாறிக்கொண்டு வருகிறது. படத்தில் ஒரு ஹவுஸ் ஓனர், அவர் ஏன் அப்படியிருக்க வேண்டும், அவரது மனைவி பிள்ளை குட்டி இல்லாமல் அவர் ஈடுபடுகிற விவகாரத்தை எல்லாம் மறுத்து எதற்கு அவரது நிழலாகவே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கேள்வியை படம் பார்த்தவர்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே பத்மினியின் ரூம் மேட் அனிதாவின் புருஷனுக்கு அந்தக் குடியை விட்டால் தானென்ன என்பதையும் யோசிக்காமல் இருக்க முடியாது.

அந்த ஆண்களை செல்லம் கொடுத்து தங்களை விடுவித்துக் கொள்ளாத பெண்கள் படத்தில் உண்டு. தான் விடுவித்துக் கொண்டதில் உள்ள சுதந்திரம் குரூரமானது என்பதை அறியாத ஒரு பெண்ணும் படத்தில் இருக்கிறாள், டாக்டரின் மனைவி.

Old Malayalam Movie Scenes - OLD MALAYALAM MOVIE STILLS

இந்த துணைக்கதாபாத்திரங்கள் அனைத்தும் பத்மராஜன் எழுதின திரைக்கதையின் மகாநதிக்கு வந்து சேருகிற கால்வாய்கள். சொல்லப் போனால் அனைவரின் மூலமாகவே ஜீஜி ஏன் ஓடினாள் என்கிற கதையை அவர் சொல்லுகிறார்.

டாக்டர் பத்மநாபனின் ஏற்பாட்டில் பள்ளியில் உள்ள யாவருமே எஸ்கேஷன் போகிறார்கள். படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் அதில் இருக்கிறார்கள்.  பெரிய ஆறும், மலைகளும், சுற்றிலும் காடுகளுமாக உள்ள பகுதி அது. எல்லோரயும் குடிக்க அழைக்கிற அனிதாவின் புருஷனை ஒதுக்கி விட்டு டாக்டரிடம் பேச அமருகிற சேது பிற்காலத்தில் ஜீஜி எப்போது தங்களை விட்டு விலகுவாள் என்று தர்க்க பூர்வமான நியாயத்தைப் பேசும்போது ஜீஜி அதைக் கேட்கிறாள். சேது நாங்கள் எப்போது எங்களுடைய வாழ்வைத் துவங்கப் போகிறோம் என்கிற கேள்வியைத் தான் முன் வைக்கிறான். படகு சவாரியின் போது பத்மினியிடம் விவாதித்து படகு வேகத்தை அதிகரித்து இருவரையும் பயப்படுத்தி அவர்களை வெல்ல முயல்கிறான். முன்னம் ஒரு தினம் பைக் விபத்தில் நமது குழந்தைகள்இறக்கும்போது அவர்களுக்கு அருகே நான் இல்லை, இம்முறை அப்படியல்ல,  எனது இந்த மகள் தண்ணீரில் விழுவாள் என்றால் நானும் அவளோடு சேர்ந்து சென்று விடுவேன் என்கிறாள் பத்மினி. அந்த அளவில் ஒட்டுதல் கொண்டு விட்ட அவளது அன்புக்கு பதிலாக என்ன தர முடியும் அந்த சிறுமியால்? அன்பைத் திருப்பி தருவது தவிர? வந்த இடத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சேதுவிடம் நீ கிளம்பு என்று திருப்பி அனுப்பிவிட்ட பத்மினி மகளிடம் வந்து பல சமாதானங்கள் சொல்லுகிறாள். என்னால் புருஷன் மனைவி பிரிந்து விடக் கூடாது என்று நினைக்கிற ஜீஜியின் ஆசைக்காக அவள் சேதுவின் கால்களில் கூட விழக்கூடும். அவளது நிம்மதிக்காக நாம் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அழுது அரற்றி, கதறி கண்ணீர் பொழிந்து அவன் சொல்லுகிற நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவும் கூடும். அவர் உன்னை வெறுக்க மாட்டார் என்று பத்மினி ஜீஜிக்கு வாக்கு கொடுக்கிறாள்.

என்னைப் பிடி என்று ஜீஜி ஓட ஆரம்பிக்கிறாள்.

அவள் ஓடுவது அவ்வளவு அழகாக இருக்கிறது.

ஒரு விளையாட்டு போல பத்மினி அவளை பின் தொடர்ந்து ஓடுகிறாள்.

இருவரும் ஓடியவாறு இருக்கிறார்கள்.

மனித சஞ்சாரங்கள் இருப்பது முடிந்து அவர்கள் இருக்கிற இடம் எப்படி காடாயிற்று என்பது தெரியவில்லை,  இந்த திரைக்கதையைப் போலவே. ஒரு தாயல்லாத தாயும், ஒரு மகளல்லாத மகளும் தாயும் மகளுமாக வாழுவதில் இப்படி எப்படி சிக்கல்களாக வந்து சூழ்ந்திருக்க முடியும்?

பத்மினிக்கு ஜீஜி வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை மட்டுமே கிடைக்கிறது.

Old Malayalam Movie Scenes - OLD MALAYALAM MOVIE STILLS

விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பத்மினி, தன்னைப் போலவே ஒரு விபத்தில் அம்மாவை இழந்த ஜீஜி என்கிற குழந்தையோடு வாழ முயல்வது தான் கதை. அந்த ஜீஜி என்கிற சிறுமியும் இறந்து விடுகிறாள். பிணத்தைப் பார்க்க அழைக்கிறார்கள். வேண்டாம் என்கிறாள் பத்மினி. அவள் ஓடிக்கொண்டிருப்பதை எனது மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அது போதும் என்கிறாள்.

ஓடுவது என்பது என்ன?

அன்பு கிடைக்கப் பெறாமல் நமக்கு முன்னே சும்மா சிரித்துக் கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள்.

நமது மனக்கண்ணில் அவர்கள் ஓடிக் கொண்டிருப்பது தெரியும்.

 

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர்13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர்14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/