மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 16 ( தூவானத் தும்பிகள்)

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 16 ( தூவானத் தும்பிகள்)

 

அது ஒரு குன்றுப் பகுதி.

மனித சஞ்சாரம் குறைவு.

பின்னணியில் சற்று தூரத்தில் அவர்கள் தங்கிக் கொள்கிற சிதிலமடைந்த குடிசை தெரிய, ஜெயக் கிருஷ்ணனும் கிளாராவும் வெட்டவெளி இரவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை மீறி ஒரு மனித வீறிடல் கேட்டுக் கொண்டிருக்கிறது. கிளாரா என்னவென்று வினவுகிறாள். அங்கிருந்து தள்ளி எங்கோ இருக்கிற ஒரு வீட்டில் மூளை பிசகிய ஒருவன் இருக்கிறான். பல காலமாக அவனைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அவன் முட்டி மோதுகிற  சங்கிலிகள் உண்டாக்கின காயங்களில் அதே சங்கிலிகள் உரசும்போது உண்டாகிற வலியால் அவன் கூச்சலிடுவதாக ஜெய கிருஷ்ணன் சொல்லுகிறான். இருவர் தம்மிலும் ஒரு அமைதி உண்டாகிறது. பெருமூச்செறிந்து கொள்ளுகிறார்கள்.

இந்தப் படம் நாம் பாதுகாக்கிற காயங்களைப் பற்றின கதை தான்.  

Amazon.com: Thoovanathumbikal: Mohanlal, Sumalatha, Parvathi, Asokan

பத்மராஜனின் படங்களிள் ஸ்டார்கள் இருப்பதாலோ, வெகுஜனப்படங்களாகக் கூட இருந்து விடுவதாலோ அவர் தனது பாத்திரங்களில் எந்த பவித்ரத்தன்மையையும் பேணுவதில்லை. அதில் இருக்கிற குறை குற்றம் போன்ற குணநலன்களை சாமர்த்தியம் கொண்டு பூசி மெழுகி நிலவுகிற கோட்பாடுகளின் பிண்டங்களாக ஒரு பாத்திரத்தையும் பிண மனிதராக படைப்பதுமில்லை. அதைப் போல இவரிடம் இந்தக் குறையிருக்கிறது என்று குறைந்த பட்ஷம் வெளிச்சம் போட்டுக் காட்டுவது கூட கிடையாது. ஜெயக் கிருஷ்ணன் அவனே சொல்லிக் கொள்கிற மாதிரி கொஞ்சம் மூட நம்பிக்கையும், கொஞ்சம் கெட்ட சுபாவங்களும் உள்ள ஒரு ஆள். அவன் தனக்கென்று சில விளையாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். பல விதமான நண்பர்கள். அதில் ஒருவர் பெண் புரோக்கர். அவருடைய வேண்டுகோளுக்காக விபச்சாரத்தில் ஈடுபட விரும்புகிற ஒரு கிறிஸ்துவப் பெண்ணுக்கு, சர்ச்சின் மதர் சுப்பீரியர் எழுதுவதாக ஜெயக் கிருஷ்ணன் ஒரு கடிதம் எழுதி அவளை வரவழைக்கிற அளவிற்கு கதை போகிறது. மேலே சொல்லியிருந்த கிளாரா என்கிற அவளை கன்னி கழித்த குற்றவுணர்வாலும், தான் முதன்முதல் தொடுகிற பெண் தன்னுடைய மனைவியாக இருக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருந்ததாலும், அவளை மனதளவில் நெருக்கம் கொண்டு அவளை தனது ஆத்மார்த்தமான இணையாக உணர்ந்ததாலும் அவன் அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான்.

சிரித்தவாறே சம்மதித்திருந்தாலும் கிளாரா அங்கிருந்து ஓடிப்போகவே செய்கிறாள்.  

வந்தது போயிற்று என்று முடியாமல் இந்த திரைக்கதை முறுக்கம் கொள்ள இதற்கு முன்னே சொல்லப்பட்டிருந்த சில விஷயங்கள் காரணம்.

ஜெய கிருஷ்ணன் முடிந்திருந்த காலம் முழுக்க ஒரு பெண்ணையும் நெருங்காதிருந்தவன். அப்படி காணாத பெண்ணை கண்ட அனுபவம் கிடைத்தது தனது உறவில் பட்ட ராதா என்கிற ஒருத்தியை அணுகியபோதுதான். ஒரு நாள் கூட தாமதிக்காமல் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள பாய்ந்த ஒரு பாய்ச்சல் இருக்கிறதே, அதற்கு பார்வையாளர்களான நாமே மிரண்டாக வேண்டும். ராதா போடா சரிதான் என்று விடுகிறாள். வாழ்வில் இவ்வளவுக் கட்டுப்பாட்டுடன் இருந்து, முதல் முறையாக சொன்ன காதலில் அந்தப் பெண்ணுக்கு விருப்பமில்லை என்கிற அதிர்ச்சிக்கு நிலை குலைந்திருந்த போதுதான் அவனுக்கு கிளாராவுடன் சந்திப்பு உண்டாயிற்று.

ராதா எனக்கு அப்படி ஒரு தோல்வியை கொடுக்காமல் இருந்திருந்தால் நீயும் நானும் சந்தித்திருக்க மாட்டோம் என்று ஜெயக் கிருஷ்ணன் சொல்லியிருந்த போது ராதா கண்டிப்பாக உனது வாழ்வில் வருவாள் என்று கிளாரா சொல்லியிருந்திருப்பாள். அதுதான் இப்போது நடக்கும். பல்வேறு வழிகளில் ஜெயக் கிருஷ்ணனின் முகத்தை சித்திரம் காணுகிற ராதா அவனைக் காதலிக்கத் துவங்குகிறாள். இருவரும் சந்திக்க ராதாவே காரணமாக இருக்கிறாள். தன்னை ஸ்னேகிக்கிறவளிடம் அத்தனை உண்மைகளையும் சொல்கிறான் அவன்.

முடிந்த வரையில் நடந்தவைகளை விழுங்கிக் கொண்டு இதற்கு மேல் கிளாரா வர மாட்டாள் என்கிறாள் ராதா.

ஆனால் அவனை மறக்காமல் கிளாரா இரண்டு முறை வருகிறாள் என்பதுதான் படம்.

இந்தத் திரைக்கதை வினோதம் நிரம்பிய ஜெயக் கிருஷ்ணன் என்கிற அசலான ஒரு நல்லவனை மெல்ல மெல்ல உருவாக்கி வந்து சொல்லி முடித்தது இருக்கட்டும். அவனது பூர்ஷ்வா அசட்டுத்தனங்களில் இருந்து, முரட்டுத்தனங்களில் இருந்து, பழக்கவழக்கங்களில் இருந்து எங்கு அவனால் ஒளிர முடிந்தது என்பதை எல்லாம் சொல்லி முடித்திருந்த போதுமே இன்னமுமே மேதமையுடன் சொல்லப்பட்டது கிளாராவைப் பற்றி.

Thoovanathumbikal movie: unknown facts about padmarajan's ...

மதர் சுப்பிரியரின் கடிதத்தை வீட்டில் காட்டி விட்டு தனது சித்தியுடன் விபச்சாரம் செய்ய கிளம்பி வந்து விட்ட கிளாராவைப் பற்றின குறிப்புகள் மிகக் குறைவு. சிக்கனமாக கொஞ்சம் கோடுகள் போட்டிருக்கிறார் பத்மராஜன். அவ்வளவு தான். அவள் யார், அவளை எந்த விதி நரகத்துக்குப் போ என்று தள்ளியது? அவள் ஜெயக் கிருஷ்ணனை வெறுக்கக் காரணம் இல்லை, எதற்கு ஓடிப் போயிருக்க வேண்டும்? அப்புறம் எதற்கு அவனைத் தேடி வந்து அவனை அணைந்து கொள்ள வேண்டும்? இதற்கெல்லாம் சிற்சில வரிகளால் அவளது மனம் சொல்லப்படாமல் இல்லை. நன்றாக யோசித்துப் பார்த்தால் பத்மராஜன் போட்டு விட்ட கோடுகளில் இருந்து ஓவியத்தை பூரணம் செய்வது பார்க்கிற பார்வையாளன் தான். அவள் தனது கழுத்துப் பிடியை நாளுக்கு நாள் நெருக்கியவாறு வந்த மூச்சுபிடிப்பை வெறுத்தவாறு இருந்திருக்க வேண்டும். யாருமே தன்னை தடை செய்து தடுக்காத, கை வீசி நடக்கும் ஒரு உலகை அவள் தனது கற்பனையில் வளர்த்திருக்க வேண்டும். ஜெயக் கிருஷ்ணன் என்கிற ஒரு குடும்ப கௌரவம் உள்ள ஆளை மனம் விரும்புவது வேறு, அங்கே வாழப் போவது வேறு. மேலும் ராதா என்கிற ஒரு பெண் கொஞ்சம் கலங்கலாக மறைந்து கொண்டிருந்தாலும் காலப் போக்கில் அவள் உதித்து வரக்கூடும். ஜெயக் கிருஷ்ணனின் நிர்மலத்தில் கல்லை வீசக்கூடும் அது. அங்கிருந்து அவளை உந்தியது அதுதான். அப்புறம் அவள் ஊரு சுற்றி உலகம் சுற்றி ஜெயக் கிருஷ்ணன் தன்னை விரும்பி விட முடியாத கறையுடன் துணிச்சலாக வந்து திரும்பிப் போக நினைக்கிறாள். ஆனால் மனம் கடக்கிற காலங்களை எப்படி நொந்து கொள்ளுவது? என்ன தான் நிலவும் காலத்தில் ராதா ஒளியுடன் வலுவடைந்து உதித்து வந்து இருந்தாலும் அவன் இந்த தடவை நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்கிற பழைய கேள்வியைக் கேட்கவில்லை என்பது துயர். கிளம்புகிறாள். அப்புறம் அவளால் வேறு ஒரு முடிவைத்தான் எடுக்க முடியும். என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு இதை செய்கிறேன் என்று தற்போது வேறொரு வாழக்கை முறைக்கு சென்றிருக்கிறாள்.

வாடிக்கையாளர்கள் நான்கு பேரின் பெயர்களை சொல்லக் காண்போம். தெலுங்கு பேசுவதைக் கேட்போம். அவள் தனது தொழிலின் துயர்களைக் கூட புகாராக சொல்லுவதில்லை. 

ஆயின், அவள் பார்த்துக் கொண்டேயிருக்கிற விதம் விதமான சுவர்களைப் பற்றி சொல்லுவது படுகிற பாடுகளை சொல்லி முடித்து விடும்.

கிளாரா மொத்தமுமே அப்படி, அவளை பத்மராஜன் விவரணைகளின் மூலம் நமது சுரணைகளை கெடுத்துக் கொள்ளாத ரீதியில் நிறுத்தி வைத்திருந்தார்.

இரண்டு பெண்களுக்கு நடுவில் உண்மையைப் பேசியவாறு மலை விளிம்பில் தத்தளிப்பது போன்ற அவஸ்தையை சுவாசித்து வாழ வேண்டிய ஒரு அசல் ஆளாக ஜெய கிருஷ்ணன் படைக்கப்பட்டிருந்தான். எவ்வளவோ பலவீனங்கள் அவனது பலமாக மாறியவாறு இருந்தன, ஏன், பத்மராஜன் அவன் மூலம் பேச விரும்பின ஒரு நேர்மையிருக்கிறது. படத்தில் நீங்கள் லாலை கவனிக்கும் தோறும் அவர் சில்லு சில்லாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது தெரியும். இந்த உலகில் நிஜமான புதுமைகளை செய்து போவதற்கு அவன் என்னவோவெல்லாமாக வாழ்ந்து உலகின் பல இருட்டு சந்துகளை எல்லாம் தனது அனுபவங்களால் அறிந்திருக்க வேண்டும். நன்மை தீமை மனப்பாடங்கள் அல்ல அவை. மனிதர்களைப் பற்றி இருந்திருந்து அறிந்தவை. நமக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகளில் இருந்தவன் தான் இவன். இவன் எப்படிப்பட்ட ஒரு கில்லாடி என்று சொல்லுவதற்கு அந்தப் படத்தில் பிரயோகித்த முதல் காட்சி ஏறக்குறைய இதிலும் இருக்கிறது.

ஒ, இவனா, இவன் என்னவும் செய்வான் என்கிற ஆழ்ந்த நம்பிக்கை முதலிலேயே விழுந்து விட வேண்டுமல்லவா?

പ്രണയത്തിന്‍റെ തൂവാനത്തുമ്പികള്‍ ...

ரிஷி ஜெய கிருஷ்ணனின் நண்பன். புதிதாக ஜங்கஷனில் கடை துவங்கி இருக்கிறான். ஜெய கிருஷ்ணனுக்கு பொருட்கள் வாங்கி வந்து தருவதுண்டு. பேச்சில், ரிஷி உலகை அனுபவிக்கிற பையன்களைப் பற்றி சொல்லி பொருமுகிறான். இதை தொட்டு வருகிற அடுத்த காட்சியில் நகருக்கு வருகிற ஜெயக் கிருஷ்ணன் ரிஷியையும் கூட்டிக் கொண்டு கஞ்சப் பிசுக்கு பண்ணிக் கொண்டு வீட்டுக்காக ஆட்டுத்தலை வாங்குகிறான். காய்கறிகள் வாங்குகிறான். உக்கிரமான வெயில் வறுத்தெடுக்க, ஆளுக்கு ஒரு லைம் ஜூஸ் குடிப்போமா என்று ரிஷியிடம் கேட்கும்போது அவன் அதற்கு செலவாகிற தொகையை சொல்லுகிறான்.

நாமும் கொஞ்சம் வாழ்வை அனுபவிக்க வேண்டாமா என்று கேட்கிறான் ஜெயகிருஷ்ணன்.

ஜூஸ் வருகிறது. 

அதில் ஐஸ் இல்லை.

கடைக்காரனுடன் சண்டை.

நமக்கு ஜில்லென்ற ஜூஸ் கிடைக்காமல் போய் விடுமா பார்த்து விடுவோம் என்று ஆட்டோவைக் கூப்பிட்டு, விழித்துக் கொண்டு நிற்கிற ரிஷியை இழுத்துப் போட்டுக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்குள் ஆவேசமாக செல்லுகிறான். அது ஹோட்டலின் பார் என்று ரிஷி சொல்ல முயலுவதை எதுவும் லிட்ஷியம் பண்ணாமல் ஆர்டர் செய்கிறான் ஜூசை. இருவரும் வந்தவுடன் அதை குடிக்கிறார்கள்.

நாமும் வாழ்வைக் கொஞ்சம் அனுபவிக்க வேண்டாமா என்று மறுபடியும் கேட்கிறான் ஜெயக் கிருஷ்ணன்.

ரிஷிக்கு கொஞ்சம் புரியவில்லை.  இதுதான் வாழ்வை அனுபவிப்பதா என்று புரியாமல் தான் கேட்கிறான்.

அது சரி, அனுபவிப்பது என்றால் முழுமையாக அனுபவித்து விட வேண்டுமில்லையா, அப்படியென்றால் ஆளுக்கொரு பீரை வாங்கிக் கொள்வோமா?

பீர் வருகிறது. இருவரும் குடிக்கிறார்கள். நீ குடிப்பாயா என்று ரிஷி சந்தேகம் கேட்டுக் கொள்ளும்போது, பாரில் உள்ள மொத்த பேரும் சிரிக்கிறார்கள். ஜெயக் கிருஷ்ணனின் ஏராளமான நண்பர்கள் அந்நேரத்தில் நமக்கு அறிமுகமாகிறார்கள். சரியான குடி சடங்கு முடிந்து படுப்பதற்காக ரிஷி ஒரு அறைக்குள் அனுப்பப்படுகையில் அங்கே அவர்கள் இருவரும் முன்பு சிலாகித்த ஒரு பெண்ணிருக்கிறாள். நண்பனுக்குக் கூட்டிக் கொடுத்து விட்டு வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கூட எடுக்காமல் ஆடிக் கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பி செல்கிறான் ஜெயக் கிருஷ்ணன். 

Thoovanathumbikal

மறுநாள் தானிருந்த அறையில் இருந்து ரிஷி கிளம்பும்போது அவனது சந்தேகத்துக்கு பதில் சொல்கிறார் புரோக்கர். எனக்குத் தெரிந்து எந்தக் காலத்திலும் அவன் எந்தப் பெண்ணோடும் படுத்தது கிடையாது. அவனது ஏதோ ஒரு விதமான மூட நம்பிக்கையை நமக்கு செய்தியாக சொன்ன பின்னரே திரைக்கதையின் விவகாரங்கள் ஆரம்பிக்கின்றன.  

பத்மராஜனின் திரைக்கதையை வரிசைப் பிரகாரம் சொல்லி யாரேனும் படம் பார்க்கிறவர்களின் சுவாரசியத்தை கெடுக்கவில்லை. விலகியிருந்து தான் மிக சுருக்கமாக சொல்லியிருக்கிறேன். படம் அமோசான் பிரைமில் இருக்கிறது, பார்க்கலாம். ஜெயக் கிருஷ்ணன் தன்னால் மீட்க முடியாமல் போன கிளாராவின் நினைவில் துயர் கொண்டேயாக வேண்டும். கிளாரா ஜெய கிருஷ்ணன் ராதாவுடன் வாழும்தோறும் பெருகுகிற கற்பனைகளை சந்தித்து அதைத் தட்டி விட்டுக் கொண்டு புதிய வாழ்க்கையை தொடரவே வேண்டும். ராதா இதற்கு மேலும் கிளாராவின் நினைவுகளால் இருக்கக் கூடிய கணவனை துப்பறிந்து கொண்டு அது தெரியாதது போல புன்னகைத்தவாறு தொடர வேண்டும். மூவருமே யாரும் யாரையும் நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதாக நிருபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்ன என்று குமைந்து கொள்ளுவீர்கள் என்றால் அதற்கு பதில் ஒன்று தான்.

காயங்களை ஊதிக் கொண்டிருப்பது தான் வாழ்க்கை.

அதற்கு அனத்திக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை.

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

Show 1 Comment

1 Comment

  1. Sajeev

    பலமுறை தூவான தும்பிகள் பார்த்திருக்கேன், எத்தனை முறை பார்த்தாலும் புதியதாக இருக்கும் படம், உங்கள் எழுத்தை படித்த உடனே மீண்டும் பார்க்க தூண்டுகிறது, அருமை மணி சேட்டா 👍❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *