இதை எழுதுவதற்கு முன்னால் கொஞ்ச நேரம் சில வீடியோக்கள் பார்த்தேன். பத்மராஜனைப் பற்றிய எவ்வளவோ இருக்கின்றன. என்றாலும் இந்தக் கட்டுரைத் தொடர் முடியும் வரையில் அவைகள் வேண்டாம் என்று பட்டது. அவருடைய படங்களில் நான் அறிவதை துல்லியமாக சொல்ல அவைகள் இடையூறாகக் கூட வந்துவிடும் என்று பட்டது. பத்மராஜன் படத்தின் கதையை நான்கு வரியில் சொல்லி விடலாம் என்று சொல்கிற ஜெகதி அதற்கு அப்புறம் அவருடைய திரைக்கதை மற்றும் பாத்திரப் படைப்புகள் பற்றி சொல்லி தனது திரைக்கதை வசனத்தில் ஒரு வரியைக் கூட மாற்ற சம்மதிக்காத அவருடைய நிச்சயத்தன்மையுள்ள கலை பற்றி சிலாகிக்கிறார். கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது, ஏறக்குறைய இது பற்றியெல்லாம் இத்தொடரில் நான் விவரமாகவே எழுதியிருக்கிறேன்.
ஒரே மாதிரித் தோற்றமுள்ள இருவர் பற்றி வந்து விட்ட படங்களை எண்ணிப் பார்த்து விட முடியுமா? அதன் லீலைகளை தொகுத்துக் கொள்ளப் போனால் மண்டைக்குள் புளிப்பு வந்து நாம் சட்டையை கிழித்துக் கொள்ள நேரிடும். அவ்வளவு பிழிந்து வெறுப்பேற்றி முடித்து விட்டார்கள். உண்மையில் ஒரு நகரத்தில் ஒருவர் மாதிரி இன்னொருவர் சுற்றிக் கொண்டிருந்து அவர் நமக்கு எதிரான குணங்களைக் கொண்டிருந்தால் அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? இது அதைப் பற்றின கதை. இது விழுங்கி விட முடியாத ஒரு அவஸ்தையைப் பற்றிப் பேசுகிறது. சொல்லப்போனால் அதன் பதட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. முன்பு எப்போதோ நான் இந்தப் படத்தைப் பார்த்திருந்தேன், எனக்கு இப்படத்தை பற்றின ஒர்மையாக பதட்டம் தான் இருந்தது. எப்போது நினைத்துக் கொள்ளும்போதும் அந்தப் படத்தை மறுபடி பார்க்க முடியாது என்கிற தப்பித்தல் ஏன் வருகிறது என்பது கூட நினைவில்லை. இம்முறை பார்த்த போதும் எனக்கு தோன்றுவது இதுதான், மீண்டும் இப்படத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு நம்மை தொல்லை செய்கிற ஒரு திரைக்கதை. ஒன்றுமே இல்லை போல தோன்றும் சிக்கலில் எல்லாம் வந்து நிறைவதை அவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தவாறு எழுதியிருக்கிறார்.
படித்தவர்கள் வேலையில்லாமல் அலைந்து திரிந்த காலம் அது. காத்திருந்து, சலிந்து தன்னைத்தானே வெறுத்துக் கொண்டு அன்னியமாகிற இளைஞர்கள் எங்கெங்கும் நிறைந்திருந்தனர். விஸ்வநாதன் ஒரு நல்ல குடும்பத்தின் அடக்கமான பிள்ளை என்றாலும் விரக்திக்கு வந்து முடிந்த பின்னரே ஒரு வேலை கிடைக்கிறது. அதற்கு முன்பே மனதை உறுத்திக் கொண்டவாறே இருக்கப் போகிற ஒரு தொல்லை அவனுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டது, உன்னைப் போல ஒருவன் இங்கே இருக்கிறான் ! அவனது இருப்பு அவனை அடிவாங்க செய்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் உட்கார வைத்து விட்டது. தங்கையின் கல்யாணம் நிற்க காரணமாகி விட்டது. அலுவலகத்தில் கண்டதும் காதல் கொள்ளுமாறு இருந்த அம்பிளி என்கிற பெண்ணே கூட அவனை சந்தேகப்பட்டு குற்றம் சொன்னது சகிக்க முடியாமல் இருக்கிறது. நடந்ததை குமைவது இருக்கட்டும், இதற்கு மேல் நடக்கப் போவது என்ன என்கிற பயம் சும்மா இருக்க விடாதல்லவா?
பத்மராஜனின் திரைக்கதைக்கு ஒரே ஒரு காட்சியை மட்டும் உதாரணமாக சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

வெகு நாளைக்கு அப்புறம் கிடைத்த நல்ல வேலை. எதிர்காலத்தைப் பற்றின கற்பனைகளுக்கு உத்திரவாதம் தருகிற நாட்களாக இருக்கின்றன அவை. விஸ்வநாதன் தனது பிரமோஷன்களுக்குக் காத்திருக்கிறான். தங்கையின் கல்யாணம், தனது கல்யாணம் என்கிற நியாயமான கனவுகள். கணக்கு கூட்டல்கள். காத்திருப்புகள். அதைப் போல அவனது பணியில் எல்லோருக்கும் திருப்தி என்கிற சந்தோஷமும் உண்டு. ஒரு நாள் சாதாரணமாக அவன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும்போது ஒரு கார் அவனை வட்டமிட்டு உளவு பார்க்கிறது. ஒரு பெரிய மனுஷ தோற்றத்தில் ஒருத்தன் இறங்கி வந்து விஸ்வநாதனின் சட்டையைப் பிடிக்கிறான். ஒரு பெண்ணைக் கூட்டிக் கொடுப்பதாக சொல்லி வாங்கின பணத்தை இப்போது எடுத்து வை என்று கூச்சல் போடுகிறான். அடிக்கிறான். ஜனங்கள் சுற்றி சூழ்ந்து வேடிக்கை பார்க்க விஸ்வநாதன் நான் அவனில்லை என்பதை எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். இறுதியாக தான் இந்தக் கம்பனியில் வேலை செய்வதாகக் கூறி அதன் கார்டைக் காட்ட அந்த ஆளே அவனை தனது காரில் அழைத்து செல்லுகிறான். அலுவலகத்தில் விஸ்வநாதன் தனது இடத்தில் அமர்ந்து கொள்ள, வந்தவன் அதைப் பார்த்து விட்டு கடைசியாக எம்டி யின் அறைக்குள் சென்று விட்டான். சிறிது நேரத்தில் வெளியே வந்து கிளம்பியும் போகிறான். எம் டி அவனை அழைக்கிறார். திட்ட கொள்ள இல்லை. இரவு ஏழு மணி அளவில் தான் தங்கியிருக்கக் கூடிய ஓட்டல் அறையின் எண்ணை சொல்லி அங்கே வந்து விடு என்கிறார்.
எம் டி பார்வையாளர்களுக்கு நம்பிக்கையளிப்பவர். விஸ்வநாதனின் எதிர்கால முன்னேற்றங்களுக்கு அவரது தூண்டுதல்கள் முக்கியமானவை என்பது நமக்குத் தெரியும். வா, உட்காரு என்கிறார். சடங்குகள் பேசுகிறார். அவர் விஷயத்துக்கு வருவதற்குள் சார், நான் அவனில்லை என்பதை கூச்சல் போட்டும் பலனில்லை. தாக்குதல் நிகழ்கிறது. அவரோடு அதே அறைக்குள் காரில் வந்த பெரிய மனிதனும் இருக்கிறான். இருவரும் சேர்ந்து அடிக்கிறார்கள். விஸ்வநாதனை ஓட விடுகிறார்கள். பெண்ணைக் கூட்டிக் கொடுப்பதாக ஏமாந்த பணத்தில் பாதி எம்டியுடையதும் கூட.
நாளைக்கு அலுவலகம் பக்கமாக வந்து விடாதே என்று நறநறக்கிறார் எம்டி.
எனினும், மறுநாள் விஸ்வநாதனின் நண்பனான போலீஸ் அதிகாரி எம்டிக்கு போன் செய்து நிலைமையை தெளிவுபடுத்துவது காட்சியில் இல்லை. பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் விஸ்வநாதனின் முன் தனது உண்மை சொருபத்தைக் காட்டிவிட்ட அவமானம் இப்போது எம்டிக்கு இருக்க வேண்டும். உன்னை நேரிடுகிற முகம் அவருக்கு இருக்காது, அதனால் போன வேலை திரும்பக் கிடைக்காது என்று சிரிக்கிறாள் அதிகாரியின் மனைவி.
திரைக்கதையில் இது ஒரு சம்பவத்தை சொல்லுவது மட்டும் தான்.
இப்படி பல சம்பவங்கள் இருக்கின்றன.
அட்டகாசமான திருப்பமும் இருக்கிறது.
யாரால் வேலையிழந்து கனவுகள் நொறுங்கிப் போயிற்றோ, ஒரு வைராக்கியத்தில் அவனைத் தேட ஆரம்பிக்கிறான் விஸ்வநாதன். அவன் உலாத்தக் கூடிய நிழல் தெருக்களில் நிழல் மனிதர்களை கண்டடைந்து அவர்களிடம் உரையாடிவாறு இருப்பதில் இவனை அவனாக நினைத்து ஒரு ஆசாமி இவனிடம் ஒரு பெருந்தொகையைக் கொடுத்து விடுகிறார்.
நான் சொன்ன திருப்பம் என்பது, விஸ்வநாதனின் குணநிலையில் வருகின்ற மாற்றம் தான்.
அந்த விஷயம் தான் அப்புறம் கிளைமாக்சுக்கு நீளுகிற திரைக்கதை.
படம் மொத்தத்தையும் ஆள் மாறாட்டத்தில் இருந்து அடையாள சிக்கலாக மாற்றும்போது நமக்கு படத்தின் பிரம்மாண்டம் புரிந்து விடும்.

ஒரே மாதிரி இருவர் என்கிற பிரச்சினையில் விஸ்வநாதன் தனது தந்தையிடம் சந்தேகம் கேட்கும்போது, ஒருவேளை அவனது பிறப்புக்கு நீங்கள் காரணமோ என்கிற கேள்விக்கு அவர் பதில் கூறாமல் தப்பிப்பதைப் பார்க்கலாம். அதில் அவரது அலட்சியத்தைக் கூட எழுதியிருக்கிறார் பத்மராஜன். எவ்வளவு யோசித்தாலும் இப்படியெல்லாம் வேறு படங்களில் நான் பார்த்ததேயில்லை. ஒரு விஷயம் உண்டு. பிறந்த குழந்தையை சர்ச்சில் கொண்டு சென்று போட்டு விட்டு சென்றது யாரானாலும், அந்தக் குழந்தை தனிமையை வெறித்துக் கொண்டு வளருகிறது. அன்பு செலுத்தும் முகங்களை அறியக்காணாது, விழுங்க வேண்டியிருக்கிற கசப்புகளை எல்லாம் திரட்டிக் கொண்டு அது வெறுப்பை மட்டுமே வாழும் கலையாகக் கொண்டு விடுகிறது. தனது உயிரை வளர்த்தவாறு அது தன்னை உடலையும் வளர்த்துக் கொண்டு வரும்போது இன்னுமின்னும் பலம் பெற்ற பிறகு யாரைப் பொருட்படுத்த வேண்டும்? அவனுக்கு சற்றேனும் இரக்கம் உருவாகி வர எந்த பின்னணியுமில்லை, எந்த முன்னுதாரணமும் இல்லை. அவன் யாரிடம் திருடக்கூடாது? யாரிடம் வழிப்பறி செய்யக் கூடாது? யாரிடம் பிக் பாக்கெட் அடிக்கக் கூடாது? கூட்டிக் கொடுப்பதாக சொல்லி பணத்தைத் தட்டிக் கொண்டு போகக் கூடாது? இறுதியாக கூலிக்கு கொல்லும்போது அவன் எதற்கு சாகப் போகிறவனின் முகம் பார்த்து தனது கத்தியை வீசாமல் தாமதிக்க வேண்டும்?
இது எதுவுமே படத்தில் இல்லை. விஸ்வநாதனைப் போலிருக்கிற உத்தமன் எங்கேயாவது தன்னை நியாயம் செய்து கொள்ள இப்படிப் பேசவுமில்லை. சொல்லப்போனால் திரைக்கதையில் உத்தமன் வருகிற காட்சி எழுதப்படவில்லை. அவன் முதன்முதலாகக் காட்டப்பட்டு விஸ்வநாதன் அவனது முகத்தைப் பார்க்கும்போது அவன் உயிரோடும் இல்லை.
எங்கோ சர்ச்சில் வளரத் துவங்கி வாழ்ந்திருக்கும் ஒருவனால் நிரபராதியாக நல்ல வாழ்க்கை வாழ்ந்தவனின் வாழ்க்கை மாறுகிறது.
அவனது மரணமே கூட விஸ்வநாதனை வேறு பக்கத்துக்கு செலுத்தி அவனது வாழ்வை மாற்றப் போகிறது எனும்போது படம் முடிகிறது.
இனி இதில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்பதெல்லாம் வராது.
படம் முடிந்த பின்னர் நான் ஆழ்ந்த பிரமிப்பையடைந்தேன்.

பத்மராஜன் தன்னுடைய திரை வாழ்வை வெகுஜன தளத்தில் தான் வைக்க வேண்டியிருந்தது. ஒரு நிறுவனத்துக்கு கதை கூறி, அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று அதற்கான நடிகர்களை பொருந்த செய்து அப்படத்தை முடிக்கும் வரையில் எத்தனையோ அபத்தங்களை சந்தித்தாக வேண்டும். அதற்கு நடுவில் தனது திரைக்கதைகளுக்குள் எவ்வாறு இவ்வளவு பெரிய விஷயங்களை வைக்க முடிந்தது என்பதின் வியப்பு முடிந்து போவதே இல்லை. மேம்போக்காக பார்த்து விட்டு நல்ல படம் என்று போது சமூகம் ஒப்புக் கொள்வதற்கான ஒரு தந்திரத்தை அவர் எல்லாப் படங்களிலும் மேற்கொண்டிருக்கிறார்.
தூவானத் தும்பிகள் படத்தை என்னைக் காட்டிலும் முன்பாக பார்த்திருந்த ஒருவன் கேரளாவில் இருந்து இங்கே வந்து தங்கியிருந்தபோது எனக்கு அதன் கதை சொன்னான். முக்கியமாக கிளாரா பற்றி என்னென்னவோ சொன்னான். உருகி உருகி சொன்னான். அந்த மாதிரி மனம் கொண்ட ஒரு பெண்ணை அவன் தேடிக் கொண்டிருந்தான் என்பதையும் வைத்துக் கொள்வோம். படத்தை நான் பார்த்ததும் கண்டிப்பாக முதலில் அவனை தான் நினைத்துக் கொண்டேன். அந்த கிளாரா ரசிகனுக்கு கிளாரா என்பவள் யாரென்று புரிந்திருக்கவில்லை. பல ஆண்களையும் அன்றாடம் பார்க்கிற ஒரு வேசி ஒரு ஆணை மேலுமே விரும்புகிறாள் என்றால் அவள் விரும்புகிற ஜெயக் கிருஷ்ணன் யாரென்று அவன் விளங்கிக் கொள்ளவில்லை. வாழ்க்கை முழுவதும் சடங்குகளில் ஒழுகிக் கொண்டு, எந்தக் கோட்டைப் பார்த்தாலுமே தாண்டி விடாமல் நின்று விடுகிற, உலகு விசிறி விசிறி குளிர வைக்கிற நல்லப் பிள்ளையாகவே தொடர மொத்த வாழ்வையும் சக மனிதர்களையும் பலி கொடுக்கிற லட்சம் முகங்களில் ஒரு முகம் அவனுக்கு. அவன் பத்மராஜனின் படத்தைப் புரிந்து கொண்ட விதமே வேறு. குடும்பப் பெண் ஒரு பக்கம் காதலிக்க, எல்லாம் வல்ல அழகியான வேசி ஒருத்தி இன்னொரு பக்கம் காதலிக்க ஜெயக் கிருஷ்ணன் ஒரு ஜாலிலோ ஜிம்கானா என்று அவன் நினைத்துக் கொண்டு விட்டான். வாழக்கை முழுவதும் தழும்பின் வலியில் அனத்த வேண்டிய அன்றாடங்களைப் பற்றின ஐடியா எதுவும் வராமல் படத்திற்கு அவன் ஒரு ஹாப்பி எண்டிங் போட்டுக் கொண்டு விட்டான்.
அது இருக்கட்டும், பத்மராஜன் இப்படத்தில் கூறியிருக்கிற மங்களம் மிகவும் பயங்கரமானது. ஒரு படம் முடியும்போது வேறு ஒன்று துவங்கும் என்பார்களே, அப்படிப்பட்டது.
![]()
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/
தொடர் 4ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/
தொடர் 5ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/
தொடர் 6ஐ வாசிக்க
தொடர் 7ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/
தொடர் 8ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/
தொடர் 9ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/
தொடர் 10ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/
தொடர் 11ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/
தொடர் 12ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/
தொடர் 13ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/
தொடர் 14ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/
தொடர் 15ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/
தொடர் 16ஐ வாசிக்க
https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

