என்ன தான் கண்ணியமான நோக்கங்கள் கொண்டு வயோதிகம் என்கிற நிலையை புனிதம் செய்து வைத்திருந்தாலும், அதன் தனிமை ஈடு இணையற்றது. உடலும், மனமும் தன்னுடைய அவதிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்போது, தன்னோடு இருந்தவர்கள் ஒவ்வொருவராக விடை பெற்று சென்று விட்டதை ஜெப மாலையை உருட்டுவது போல அதன்  நெருடலை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போது அடுத்து விழப் போகிற சீட்டு நம்முடையது தானா என்கிற ஒரு சில்லிடும் எதிர்பார்ப்பு இருந்தவாறு இருக்கும். இப்படத்தின் வயோதிகரான தம்பி தன்னோடு இருக்க வந்த பேரப்பிள்ளையிடம் ஒன்றை சொல்லுகிறார். 

“ என்னடா ஒரு காரணமும் இல்லாமல் அந்த கடவுள் என்னை விட்டு வைத்திருக்கிறாரே என்கிற யோசனை எனக்கு இருந்தவாறு இருந்தது. இப்போ அது புரிந்து விட்டது. நீ. நீ வந்து என்னோடு இருந்தது. நாம் ஒன்றாக இருந்த இந்த இரண்டு வாரங்களின் சந்தோஷம். இதற்கு மேல் எனக்கு செத்தாலும் கவலையில்லை ! “

தம்பி தன்னுடைய வீட்டில் உள்ள சிறிய குளத்தில் குளிக்கிறார். முன்னிரவு நேரம். அந்த ஊர்காரர்களான பத்ராவும் அவளுடைய தாத்தாவும் வருகிறார்கள். அவர் ஒரு டாக்டர். குறுப்பும் அவருடைய மனைவியும் வருகிறார்கள். தம்பியின் வீட்டில் உறவில் பட்ட ஒரு பெண்ணும் ஒரு பணிக்காரியும் இருக்கிறாகள். எல்லா பெண்களும் சேர்ந்து சமையல் வேலையைப் பார்ப்பது தெரிகிறது. தம்பிக்கு உதவியாக இருக்கிற கவல சரக்கு குப்பியுடன் வந்து சேருகிறான். பார்ட்டி துவங்குகிறது. அப்போது தான் தம்பி தனது பேரன் வரப்போகிற சந்தோஷமான விஷயத்தை சொல்லுகிறார். அப்படித்தான் படம் துவங்குகிறது.

தம்பி சொன்னது போல அந்த நாட்களின் சந்தோசம் !

அதை படம் பார்க்கிறவர்களுக்கு தன்னுடைய வரிசையில் இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் அலுப்பூட்டிவிடாமல் காட்சிகளை வைத்திருக்கிறார் பத்மராஜன்.

ഇളയരാജയുടെ ഭാഗത്ത് നിന്ന് ഒരു പൊട്ടിത്തെറിയാണ് പ്രതീക്ഷിച്ചത്; എന്നാല്‍ | Moonnam Pakkam Movie Padmarajan Ilayaraja Jayaram Thilakan songs paatuvazhiyorathu

அவை அனைத்தும் மிக இயல்பாக இருக்கின்றன. மிகையான ஒரு காட்சியைக் கூட அவர் எழுதி இருக்கவில்லை என்பதினூடே நாம் நெகிழ்வான காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாசி என்கிற அவருடைய பேரனும் மற்றும் அவனுடைய மூன்று நண்பர்களும் வந்திருக்கிறார்கள். தாத்தாவும் பேரனும் வெகு காலத்துக்கு அப்புறம் நேரிட்டுக் கொள்ளுவதே உளவியல் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது. தம்பி அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப்படுவதில் தானும் சந்தோசம் கொள்ளுகிறார். இந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டிக் கொள்ளும் வண்ணம் அந்த வீடு, அந்த வீடு அமைந்திருக்கக் கூடிய சுற்றுசூழல் இவைகள் எல்லாம் தத்தம் பாத்திரங்களை சிறப்பு செய்திருக்கின்றன. டென் கமான்ட்மென்ட்ஸ் ஓடி முடிந்து அடுத்த கேசட்டை மாற்றும் போது நீலப்படம் ஓட ஆரம்பிக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறவர்கள் யாருக்கும் அதை நிறுத்தத் தெரியவில்லை. கிழவர் வேறு வழியில்லாமல் டிவியின் மீது ஒரு பெட்ஷீட்டைப் போட்டு மூடுகிறார். வீட்டின் பின்னால் வைக்கோல் போருக்குப் பக்கத்தில் பையன்கள் தண்ணியடித்துக் கொண்டிருந்ததை நிறுத்தி ஓடி வந்து பிரச்சினைகளை முடித்து வைக்கிறார்கள். படம் தனது போக்கில் எல்லாவற்றையும் சகஜம் பண்ணிக்கொள்வதில் நாம் அதை உவந்தவாறு இருக்கிறோம். 

பத்ராவும் பாசியும் காதலர்கள்.

கடிதம், புகைப்படங்கள் என்பதாக தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.

அதற்கொரு வரிசையை பத்மராஜன் அடுக்கிக் காட்டியிருக்கிறார். அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார். சிறு துளி பேரு வெள்ளம் என்பது ஒரு திரைக்கதையின் அடிப்படை பலம். படத்தில் அது நடந்து கொண்டிருக்கும்.  சிறிய பார்வைகளில் இருந்து துவங்கி மெல்ல மெல்ல அவர்களின் அன்னியோன்னியம் நமக்கு புரிந்து வருவது மட்டுமல்ல, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், அவர்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது ஊருக்கே தெரியும் என்பது நமக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தெரியும். 

தம்பி தன்னுடைய வயதால் உணர்ச்சி வசப்படுகிறவராக தானே இருக்க முடியும்? 

தன்னுடைய சொத்துக்களை பேரனின் பெயரில் அதிகாரபூர்வமாக எழுதுகிறார்.

இந்த குழந்தைக் கதைகளில் எல்லாம் கேட்பது போல, எங்கிருந்தோ ஒருவன் வந்தான். அங்கிருக்கிற இளவரசியை கட்டிக் கொண்டு அரசாளுகிற ராஜாவானான் என்பது போல நீ லக்கி என்று பாசியை நண்பன் கிண்டல் செய்யும் போது அவன் உள்ளிட்ட பையன்கள் நால்வரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advaid അദ്വൈത് on Twitter: "Director Padmarajan alongwith Jayaram and Thilakan on the sets of 1988 Malayalam movie Moonnam Pakkam (The Third Day) Sometimes, death brings to surface the depth of a relationship.…

வீடும், வீட்டின் சுற்றுசூழலும் பாத்திரங்களாக படைக்கப்பட்டிருப்பது சொன்னேன். மறந்தது ஒன்றுண்டு. கடல். படத்தின் எந்தப் பாத்திரத்தை விடவும் கடல் தான் இப்படத்தில் முக்கியமான பங்கை வகித்திருந்தது.

குளித்துக் கொண்டிருந்த பையன்களில் பாசியை கடல் எடுத்துக் கொண்டு விட்டது.

அவன் திரும்பி வரவில்லை.

பத்மராஜனின் மனைவி இப்படத்தைப் பற்றிப் பேசும்போது குறிப்பிட்ட அந்த பகுதியில் விழுந்து இறந்த சிலரைப் பற்றி யாரோ சொல்லி பத்மராஜன் கேட்டுக் கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார். ஆமாம், அப்படி நாமெல்லாம் எவ்வளவோ விபத்துக்களை கேள்விப்படுகிறோம். படிக்கிறோம். செய்திகளாகப் பார்க்கிறோம். பத்மராஜனின் உள்ளில் இருந்த ஒன்றை எதுதான் தாக்கியிருக்கும் என்று பலமுறையும் நான் யோசித்துக் கொண்டு இருந்திருக்கிறேன். எந்த ஒன்று அவரை அசைத்து அவரை வெறித்தனமாக இப்படி எழுத வைத்திருக்கும்? பாசியின் மரணம் நடந்து முடிந்த பிறகு படத்தின் போக்கே வேறு. ஒரு பேச்சில் ஏதாவது ஒரு மரண வீட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அந்த வீடே விதும்பிக் கொண்டு நின்றிருந்தது என்று யாரேனும் சொல்லுவதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம். படம் சர்வ நிதானத்துடன் அப்படி துடித்துக் கொண்டிருக்கும். நமது மனமும் தான் !

விபத்தில் இறந்த யாரோ ஒருவனை வரித்துக் கொண்டு, அவனது குடும்பமாக உணர்வுள்ள ஒரு பின்னணியை சொல்ல ஆரம்பித்து அவன் இறந்து போனதற்கு அப்புறம் பத்மராஜன் நுழைகிற விவரணைகள் துல்லியமானவை.

ஒருவனைக் கடல் கொண்டு போன பிறகு மூன்றாம் நாள் அவனது சடலத்தைக் கடல் கொண்டு வரும் என்பது அங்கே நிலவுகிற விதி. மற்ற பையன்கள் மூவரும் குற்றவுணர்வுடன் சமைந்திருக்கிறார்கள். கிழவர் பாசி மறைந்த திசையை நோக்கிக் குமுறி விட்டு காரில் ஏறிப் போனதற்குப் பிறகு அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார்கள். மரணம் நடந்த வீட்டுக்கு செல்ல அவர்களுக்கு துணிச்சல் இல்லை. அங்கிருந்தே அவரவர் ஊருக்குக் கிளம்பி சென்று விட முனைவதா? துக்கமும் அதன் கூட சேர்ந்து விட்ட அவமானமும் அவர்கள் முகங்களில் அப்படி ததும்பி வழியும். ஆனால் கிழவர் வருவார். அவர்களை அணைத்துக் கொள்வார். அவர்களின் சோகங்களில் அவரும் பங்கு பெறுவார். துக்கம் அழுத்தியதில் அவர்களை மறந்து அவர் கிளம்பி சென்று விட்டதற்கு மன்னிப்பும் கேட்பார். பாசியின் அம்மா டில்லியில் இருந்து வந்து இறங்கி திக்பிரமையுடன் ஆட்களை அறைகளைக் கடந்து அழைத்து செல்கிறவர்களுடன் பெண்களிருக்கிற அறையில் மறைந்த பிறகு அவள் வீறிடுகிற அலறல் அவரது முகத்தில் கேட்கும், அப்போது வயதில் முதிர்ந்த அந்த மனிதர் குலுங்குவதைப் பார்க்க வேண்டும். தன்னுடைய பேரன் நீந்தி நீந்தி உயிரோடு வருவதை அவர் கனவில் காண்கிறார். அதை நம்ப விரும்புகிறார். பாசியின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் கூட, அவர் அவன் வருவார் என்கிறார். அவனுடைய நண்பரகளுக்கு அவர் அதை ஆறுதலாகக் கூறும்போது அவர்கள் திகைத்திருக்கிறார்கள். என்ன பதில் கூற முடியும், அதெல்லாம் நடக்கிற கதை இல்லை என்றா?

மரணத்துக்குப் பிறகு நாம் ஒருவரைக் காணாமலிருக்கிறோம். 

அவனைக் கண்ணுள் வைத்துக் காதலித்தவாறு இருந்த பத்ரா.

அவளுடைய தாத்தா அவளை தேற்றவே முடியவில்லை என்று சொல்லுவது அதன் முதல் காட்சி. அவளிடம் யார் என்ன பேச முடியும் என்பதற்கு நான் பேசுகிறேன் என்று தம்பி புறப்படுகிறார். படத்தில் அவர் காரில் போகிற காட்சி மறக்காமல் வைக்கப்பட்டிருக்கிறது. கோலம் கலைந்து படுக்கையில் வீழ்ந்து விட்டிருக்கிறாள் அவள். தம்பியுடன் சேர்ந்து புத்தகங்களை படித்துத் தள்ளுபவள் அல்லவா, அவர் ஏதோ நாவலில் இருந்து பல சம்பவங்களை சொல்லி நினைவுபடுத்துகிறார். திரும்பி வந்திருக்கிறார்கள் என்கிறார். அப்படி பல ஆச்சரியங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்கிறார். இதை எல்லாம் நம்புவதற்கு நான் என்ன சின்னக் குழந்தையா என்று பத்ரா கேட்கிறாள் தான், ஆனால் அவள் மனதும் மெல்ல அந்த நம்பிக்கைக்கு தான் சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Moonnam Pakkam Cast and Crew Malayalam Movie Moonnam Pakkam Cast and Crew | nowrunning

அவன் வருவான், கண்டிப்பாக வருவான் !

மனித வாழ்வே ஒரு விதமான குருட்டு நம்பிக்கையில் தான் சென்று கொண்டிருக்கிறது எனபதை வாழ்வைப் பற்றி யோசிக்கக் கூடியவர்கள் அறிவார்கள். அப்படி இல்லாதவர்கள் கூட எங்கேனும் நகர்வதற்கு வழியில்லாமல் திகைத்துக் கொண்டு நிற்கையில் அது பற்றி யோசித்து இருந்திருக்கக் கூடும். இந்த தற்செயல் வாழக்கையில் எது ஒன்றை உறுதியாக கூற முடிகிறது?

மரித்தவனாக நம்பபட்டவன் திரும்பி வந்ததில்லையா?

ஒரே நேரத்தில் லட்சம் சாத்தியக்கூறுகளைக் கொண்டதல்லவா இந்த வாழ்க்கை?

பாசி ஏன் திரும்பி வரக்கூடாது?

ஒரு மனதையும் நோகடிப்பது தெரியாமல் பழகுபவர் நெஞ்சில் எல்லாம் அன்பை முளைக்க செய்பவன் அல்லவா அவன்? 

இந்தப் படத்திலேயே பல மடிப்புகள் இருந்தன. கவல, அவனது மனைவி அவனை விட்டு வேறு ஒருவனுடன் சென்று விட்டிருக்கிறாள். பத்ராவின் அம்மா அப்பா டைவர்ஸ் வாங்கி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள். அப்பாவை இழந்த பாசி எதோ ஒரு ஹாஸ்டலில் படிக்கிறான். அவனுடைய அம்மா டில்லியில் இருக்கிறாள், வேலையில் பிசி. எல்லோரும் மரணத்துக்கு முன்பு நின்றவாறே தத்தம் பிடிவாதங்களுடன், முரண்களுடன், சுயநலங்களுடன் வாழவே செய்கிறார்கள். அப்படி பாசி திரும்பி வந்து அவனுக்குக் கூட ஒரு வாழக்கை கிடைக்கட்டுமே? 

மூன்றாம் நாள் சடலம் கிடைக்கிறது.

“ என்னடா ஒரு காரணமும் இல்லாமல் அந்த கடவுள் என்னை விட்டு வைத்திருக்கிறாரே என்கிற யோசனை எனக்கு இருந்தவாறு இருந்தது. இப்போ அது புரிந்து விட்டது. நீ. நீ வந்து என்னோடு இருந்தது. நாம் ஒன்றாக இருந்த இந்த இரண்டு வாரங்களின் சந்தோஷம். இதற்கு மேல் எனக்கு செத்தாலும் கவலையில்லை ! “  இது தம்பி சொன்னது தான்.

அவர் தனக்கு சாவு வருவது பற்றி சொன்னார். 

யார் தனது இவ்வளவு சந்தோஷங்களுக்குக் காரணமோ அவனே செத்துப் போவதென்றால்? அதைப் பார்ப்பதற்குத் தான் அந்தக் கடவுள் அவருடைய விதியை நீட்டித்து வைத்திருந்தானா?

ഇളയരാജയുടെ ഭാഗത്ത് നിന്ന് ഒരു പൊട്ടിത്തെറിയാണ് പ്രതീക്ഷിച്ചത്; എന്നാല്‍ | Moonnam Pakkam Movie Padmarajan Ilayaraja Jayaram Thilakan songs paatuvazhiyorathu

மனித துக்கங்கள் அலையாகப் புரண்டு பாறைகளில் மோதுகின்றன. திரும்பிப் போகின்றன. எவ்வளவு எவ்வளவு வந்து மோதினாலும் காலம் காலமாக இவற்றுக்கு எந்தப் பதிலும் இல்லை. 

சடங்கு செய்ய கடலில் இறங்கி பாசியைப் போலவே காணாமல் போகிறார் தம்பி. அவருக்கு அந்த பதில்கள் அங்கேயாவது கிடைத்திருக்குமோ என்னவோ? 

 

***

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-17/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *