சீசன் . இதுதான் படத்தின் பெயர்.

இந்தப் படத்தை நான் ஒரு தடவை தான் பார்த்திருந்தேன். இம்முறை பார்க்கும்போது முதல் முறை பார்த்ததை சரியாகப் பார்த்திருக்கவில்லை என்று புலனாகியது. ஒரு நல்ல படமாக அது எனக்குள் பதிவாகி இருக்கவில்லை. படம் முழுக்க மிக மெல்லிய குரலில் ஓடிக்கொண்டிருக்கிற உரையாடல்களை நான் அடைந்திருக்கவில்லை என்பதை இம்முறை அறிந்து கொண்டேன். ஒரு பார்வைக்கு மிக சாதாரணமாக தோற்றமளிக்கக் கூடிய இந்தப் படம் உண்மையில் வலுவானது. அவரது மற்ற எந்த படங்களைக் காட்டிலும் அடர்த்தி கொண்டது. புதுமையைப் பற்றிப் பேசப்போனால் இம்மாதிரி திரைக்கதையை அடித்துக் கொள்ள இதுவரைக்கும் ஒரு படம் கூட வரவில்லை. அதாவது பார்வையாளர்களுக்கு மதிப்பளிக்கிற திரைக்கதை.

இந்தத் திரைக்கதையை ஒருவர் வேறு ஒரு மாதிரி எதிர்கொள்ளலாம். அவர் பழைய காலத்தின் எச்சமாக இருப்பார். கோட்பாடுகளை முழுங்கி மலசிக்கல் மனப்பான்மை கொண்டிருப்பார். திரைக்கதையில் எங்கும் அழுத்தமே இல்லையே? இந்த வியாதிக்கு யாரிடமும் மருந்து கிடையாது.

Season malayalam full movie | Mohanlal Gavin Packard movie | malayalam  action movie | upload 2016 - YouTube

பத்மராஜனும் பரதனும் ஒரு படத்துக்கு கதைக்கேற்ற நிலபரப்புகளில் தங்களை வலிமையாக நிறுத்திக் கொண்டு திகழ்வார்கள். ஜியாகரபி படத்தில் வரவில்லை என்றாலும் இயக்குனர் மனதில் அது இருப்பது கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தரம் பிரித்து அவர் அந்த இடங்களை அந்த பிரதேசத்தின் யதார்த்தத்தை கொண்டு தேர்வு செய்திருப்பார். ஏனெனில் அவருக்கு என்ன தேவை என்பதை எழுதும்போதே முடிவு செய்திருக்கிறார். சீசனில் இம்மாதிரி கண்டடைதல்கள் ஒரு உச்சத்துக்குப் போயிருக்கிறது என்பதால் இதை எல்லாம் குறிப்பிடுகிறேன். தாமஸ் மன் எழுதின டெத் இன் வெனிஸ் நாவலை விஸ்காண்டி படமாக செய்திருந்தார், எனக்கு அப்படத்தின் நிலக்காட்சிகள் தான் இப்படம் பார்க்கும்போது முதலில் நினைவுக்கு வந்தன. ஒரு தாவுதல் இல்லாத திரைக்கதை மட்டுமே ஒரு படத்திற்கான தொடர்ச்சியுள்ள ஒரு போக்கைத் தருவிக்க முடியும். திருவனந்தபுரத்தின் கோவளம் கடற்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் தான் படத்தின் களம். உண்மையாகவே டூரிஸ்டுகளின் படம். 

அவர்களை சார்ந்திருப்போரைப் பற்றின படம்.

பயணிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அவர்களை சுற்றி நின்றுப் பிழைப்பவர்கள் அங்கேயே இருக்க வேண்டும். சீசன் வரும். சீசன் போகும். சீசன் இல்லாத போது வற்றி வறண்டு கடன் பெருக்கி அரைத் தூக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் சீசனுக்கு சுதாரித்துக் கொள்ள வேண்டுமல்லவா? வாய்ப்பு இருப்பது கொஞ்ச நாளைக்கு. அப்படி, மக்கள் சம்பாதிக்க அலைபாய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் கழுத்தைப் பிடிக்கிற நெருக்கடிகள் தேவைகள் இருக்கின்றன. வாழ்வைக் கொண்டாட வருகின்ற கூட்டத்துக்கு எவ்வளவோ,  இருப்பதும் இல்லாததும் எல்லாம் வேண்டும் என்பதால் இவர்கள் அதை நிறைவேற்றிக் கொடுத்து நாலு காசு பாக்க மாட்டோமா என்பதில் வாழ்வின் துடிப்பு பொங்கிக் கொள்ளுகிறது. அது கஞ்சா விற்கவோ, பவுடர் சப்ளை செய்யவோ, பெண்களைக் கூட்டிக் கொடுக்கவோ கூட செய்யத்தான் செய்யும், வேறென்ன செய்ய முடியும்? இந்தப்படம் இந்த தரித்திரவாசிகளின் கதையை சொல்லி அவர்களை அதிகாரம் பண்ணவும் அவர்களின் பிழைப்பை சுரண்டவும், அவர்களுடைய பணத்தைக் கொள்ளையடித்துப் போகவும் செய்கிற எதிர்தரப்பு பற்றியும் பேசுகிறது.

சோப்ராஜ் என்கிற ஒரு வெள்ளை கிரிமினல் பற்றி அக்காலத்தில் பேச்சாக இருந்தது. கண்டிப்பாக இது அவனைப் பற்றின மேட்டர் படம் அல்ல.

ஜீவன் கோவளத்தில் ஒரு சிறிய ரெஸ்டாரெண்ட் வைத்திருக்கிறான். அவனது பாஷையில் அது வெறும் சாயாக்கடை தான். கேமிரா, எலக்ட்ரானிக் பொருட்கள், இன்ன பிறவையை வாங்கி விற்று கொஞ்ச சம்பாத்தியம் உண்டு. அவனுக்குப் பழக்கமான முன்னம் சொன்ன எவ்வளவோ தரித்திரவாசிகள் சுற்றிலும். அவர்கள் கரையேற்ற வேண்டிய குடும்பங்கள் அவர்களின் பின்னணியாக இருக்கின்றன. அதில் இரண்டு இளைஞர்கள் ஜீவனிடம் கொஞ்சம் பண உதவி கேட்கிறார்கள். சில்லறையாக பவுடர் விற்கப் போன இடத்தில் ஒரு வெள்ளைக்காரன் மொத்தமாகக் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறான். ஒரு நல்ல வியாபாரம், நல்ல லாபம் என்கிற கணக்கு.  பொருளாதார நெருக்கடியில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள யாருக்கு தான் ஆசை இல்லை? ஜீவன் அவர்களுக்கு உதவுகிறான். அவர்கள் கம்பம் போன்ற இடங்களில் எல்லாம் சரக்கு கிடைக்காமல் கோவாவிற்கு சென்று அதை வாங்கிக் கொண்டு வருகிறார்கள். வியாபாரம் முடிக்கப் போனவர்கள் ஒரு வெள்ளையனால் கொலை செய்யப்படுகிறார்கள். சரக்கைப் பறித்துக் கொண்டதுடன், அந்த நேரத்தில் அவனுடைய பெண் தோழியை அனுப்பி ஜீவனின் சேமிப்பையும் திருடிக் கொள்கிற அவன் அவளையும் விட்டு வைக்கவில்லை. கட்டிப் போட்டு விட்டு பணத்துடன் சென்று விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். பழிகள் முழுவதும் ஜீவன் மீது விழுகின்றன. இறந்தவரில் ஒருவனின் காதலி ஆற்ற முடியாத துக்கத்துடன் ஜீவனைத் தூற்றி சாபமிடுகிறாள். ஜீவன் சிறைக்கு செல்லுகிறான். 

அடுத்தமுறை அவன் சிறை செல்லுவது நஷ்டப்பட்டு நின்ற குடும்பங்களைக் கரைத் தேற்றுவதற்கு.

வெள்ளைக்காரனைக் கொன்று விட்டு மூன்றாம் முறையாக அவன் சிறை செல்லும்போது படம் முடிவடைகிறது.

நான் சொல்லி வந்தது படத்தின் சாரம். நீங்கள் படம் பார்க்கும்போது பத்மராஜனின் திரைக்கதை  பிரம்மாண்டம் தெரியும்.

Vishal Krishnamoorthi on Twitter: "Season ???? #Mohanlal @Mohanlal A  Padmarajan padam ♥️ #Drishyam2 #Marakkar #Lalettan @Mohanla… "

இந்தக் கதைக்கு ஒவ்வொருவரையாக அவர் அணுகும் விதமே அவ்வளவு அழகாக இருக்கும். ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டு போவது போல தோன்றுகிற கதாபாத்திரத்துக்கு அவர் ஒளிரும் தருணம் ஒன்றை வைத்திருப்பார். சில்லு சில்லாக நாம் காணுகிற உண்மைகள் மெல்ல மெல்ல பெருகியவாறே இருக்கும். பூச்சி போல இருக்கக் கூடிய ஒரு ஆசாமி இரவு நேரத்தில் மலிவு விலையில் பவுடரை விற்று மறுநாள் காலையில் வெளிநாட்டவரிடம் அடி வாங்கும்போது பணக்காரனாகிற அவனது கனவுகளும் எவ்வளவு மலிவாக முடிகிறது என்பதை காண்கிறோம். அந்தப் பூச்சி கொண்டு வருகிற வம்பினால் தான் ஜீவன் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிகிறோம்.

உண்மையில் ஜீவன் யார்?

எனக்குத் தெரிந்து பத்மராஜனின் அத்தனைத் திறமையும் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியதில் தான் இருக்கிறது.

அவன் நல்லவன் கெட்டவன் என்கிற பிரிவுகளுக்கு கீழே வரப் போவதில்லை என்பதை அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொண்டு விடுவோம். சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தொழிலை செய்கிறான். அதே நேரம் பவுடர் போன்ற பொருட்களை விற்க அவனுக்கு சம்மதமில்லை. தன்னை தேடி வந்து ஆபத்து நிரம்பிய பணிக்கு பணம் கேட்பவர்களை அவன் முகம் சுழிப்பதே இல்லை. எதற்கு இதெல்லாம் என்று கேட்கும்போது அவர்கள் சொல்லுவது தங்களுடைய குடும்பக் கஷ்டங்களை தான். அதையும் கூட கேட்காத பாவத்தில் முகத்தை வைத்துக் கொண்டு அவன் அவர்களுக்கு உதவி செய்கிறான். பின்னால் அடாத பழிகள் எல்லாம் வந்து சேருகிறது. அதற்கு அவன் கடுமை கொண்டு தன்னை வருத்திக் கொள்ளுவது கிடையாது. சேர்த்த சேமிப்பு அப்படியே காணாமல் போகிறது, சகித்துக் கொண்டு அடுத்த காரியத்தைப் பார்க்கிறான். இறந்து போன யாருக்காகவோ பல திட்டங்களைத் தீட்டி துரோகித்தவனைக் கொன்று அவனிடம் அடைந்த பணத்தை பாதிப்படைந்தவர்களுக்கு கொடுத்து மீண்டும் அவன் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் தான் என்ன? படத்தில் அது சொல்லப்படவில்லை. அது போகட்டும். யாரவது ஒருவர் ஒரு பாராட்டு போல நீ ஒரு தியாகி அல்லவா என்கிற கருத்தை உதிர்க்கவில்லை. படம் முடியும் போது பாதிப்படைந்த அந்த குடும்பங்கள் ஜீவனிடம் பணம் வாங்கிக் கொள்ளுகிற காட்சியே கூட படத்தில் இல்லை. ஜீவன் பற்றி அங்கே இங்கேயோ அவன் அங்கிருந்து வந்தான், இங்கிருந்து வந்தான் என்று ஓரம் சாரமாக பேசுகிறார்கள். பெரிய கதையே இருக்கிறது என்றும் கூட சொல்லுகிறார்கள். அதற்கு அப்புறம், மூச் !

ஏன்?

தெரியவில்லை.

அவன் எங்கிருந்தோ வந்தான். பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். கஷ்டம் உள்ள சக மனிதர்களுக்கு சகாயம் செய்து கொண்டிருந்தான். அவர்களுக்காக இறுதியில் ஜெயிலுக்கும் சிரித்தபடி செல்கிறான்.

அவன் அவனுக்குள் யாராக இருக்கக் கூடும்?

அவனுக்கு யாருமில்லையா? படத்தில் காதலி என்றும் ஒரு பெண் இல்லை. எப்படி அவன் ஒரு அனாதையானான்? அவன் மெல்ல மற்றவர்களைக் கவனித்து அவர்களுக்கு உதவி செய்து அவன்  அணைந்து கொண்ட ஆறுதலுக்கு காரணம் இருந்திருக்கும். இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நடுவில் அவன் ஏற்றுக் கொண்டிருந்த சமநிலைக்கும் அப்படி ஒரு காரணம் இல்லாமல் முடியுமா?  படத்தில் ஒரே ஒரு முறை அவன் எதுவோ சிந்தனையில் லயித்து அமர்ந்து கொண்டிருக்கிற காட்சி சொல்லப்படுகிறது. அவன் துக்கித்திருந்தது என்னவாக இருக்கலாம் என்பதை தெரியாமல் போகிறபோது நமக்கொரு துக்கம் தோணுகிறது என்றால் அதுதான் புதிர்கள் பலவும் செய்கிற பத்மராஜனின் வெற்றி.

Storyteller beyond compare - The Hindu

மேலும் இதைப் போலவே வேறு ஒன்றை சொல்லலாம். படத்தில் வில்லனுக்குப் பெயர்  Fabien Ramirez. அவனுக்கும் முகம் கிடையாது. முதல் முறை ஜீவனும் அவனும் சந்திக்கிற காட்சியில் இருவருக்குமே நமது மனதைத் தொடும் ஒரு பார்வையிருக்கும். அவர்களுடைய நட்பு வளர வேண்டும் என்பதாகக் கூட இருக்கும். ஆனால் அவன் ஒரு கில்லர். எந்தப் பணத்தையும் அவனால் விட்டு வைக்க முடியாது. அதைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை சாகடிக்காமல் முடியாது. அவன் தனது வாழ்க்கை முழுக்க ஓடியவாறு இருக்கிறான் என்பதை அவனது காதலி சொல்வதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவனது மனம் எப்போதுமே ஒருவிதமான பதைப்பில் இருந்து பழகி வாழ்வை சூதாட்டம் போல எடுத்துக் கொண்டு விட்டானோ? அவனுக்கும் யாராவது இருப்பார்கள் என்று யோசிக்க முடியவில்லை. அவனது கவலை, துக்கம் இதெல்லாம் எந்த அளவு என்பதை கற்பனையே பண்ண முடியாது. அவனுடன் நல்லபடியே இருந்து கொண்டு வருகிறவர்களையும் வெறுத்து அவர்களை கொலை செய்து விட்டு அவன் நழுவிப் போவது இந்தப் பணத்திற்காக மட்டும்தான் என்று வைத்துக் கொள்ள முடியுமா? இப்படி வருகிற பணம் எந்த செலவுகளின் சேமிப்புகளின் மூலம் தன்னை அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியும்?

நாயகனையும், வில்லனையும் அவர்களை எழுதிய பத்மராஜன் அறிவார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் இந்தப் படம் மிகுந்த கனம் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அந்த இரு பாத்திரங்களைப் பற்றின விவரணை உங்களுக்கு எதற்கு என்று தான் அதன் மிச்சத்தை அவர் எழுதியிருக்கிறார். ஒருவனில் தேவன் கனிவதையும், மற்றவனில் சாத்தான் முறுகுவதையும் நீங்கள் அறிந்தால் போதாதா? இதே படத்தில் இவர்களைத் தவிர முகமற்று அலைகிற கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அவர்களின் மனம் நமக்கு தென்பட்டவாறு இருக்கும். மெர்லின் என்று ஒரு பெண் ! நீ எனக்கு அடிமை என்று சொல்கிறவனின் கூட இருந்து உயிர் பிழைக்கிறாள். திருடப் போகிறாள். பணத்தை இழந்து அவமானப்படுகிறாள். பெற்றோரில் ஒருவர் மராட்டி, ஒருவர் கேரளா என்கிற அவள் மும்பையில் இருந்திருக்கிறாள். ஒரு கொலைகாரனோடு அவளுடைய வாழ்க்கை சுற்றிக் கொண்டு இருந்ததற்கு லாஜிக்கே இல்லையென்று சிலர் கூறக்கூடும். ஆனால் வாழ்வின் லாஜிக் அதுதான். அவள் மாத்திரைகளை முழுங்கி செத்துப் போகும்போது நாம் பலவற்றையும் யோசித்து ஒரு கதையை வைத்துக் கொள்ளாமல் முடியாது, பத்மராஜனுடைய தேவையும் அதுதான்.

5 Malayalam movies that featured the dark world of narcotics | malayalam  movies | drugs | narcotics | crime | mammootty | mohanlal | Entertainment  News | Movie News | Film News

நான் இந்தத் தொடரில் நடிக நடிகையர் பற்றியோ, தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றியோ பேசவில்லை. கட்டுரையின் முடிவில் அவைகளைப் பற்றி எழுதலாம் என்பதற்காக வெறும் திரைக்கதைகளை மட்டுமே பேசியவாறு வந்தேன். அந்த ஒழுங்கைக் குலைக்க வேண்டியிருக்கிறது. படத்தில் இசையமைத்த இளையராஜாவைப் பற்றி சொல்லியாக வேண்டும். இப்படி ஒரு திரைக்கதை எழுதி அதற்கு ராஜா வேண்டும் என்று பத்மராஜன் முடிவு செய்தது எவ்வளவு சரியென்று அதற்கு இசைக்கப்பட்டவை முடிவு செய்கிறது. அதிர செய்திருக்கிறார் ராஜா.

கோவளம் என்கிற கடல்பரப்பில் மனிதர்கள் வருவதும் போவதுமாக இருக்கையில் அங்கே பிழைப்பு செய்யும் மனிதர்களுடன் வாழ்க்கை துடிதுடித்துக் கொண்டிருப்பதை  ’ போய் வரு   ‘  என்கிற ஒற்றைப் பாடல் சொல்லி முடித்து விடும். 

அநேகமாக அந்தப் பாடலில் அந்தப் படமே இருக்கிறது.

தொடர் 1ஐ வாசிக்க

 https://bookday.in/padmarajan-screen-stories-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/padmarajan-screen-stories-3/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/padmanaban-thiraikadhaikal-part-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-12/

தொடர் 13ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-13/

தொடர் 14ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-14/

தொடர் 15ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-15/

தொடர் 16ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-16/

தொடர் 17ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-17/

தொடர் 18ஐ வாசிக்க

https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-18/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *